காங் – ஆம் ஆத்மி – பாஜக

15
காங் – ஆம் ஆத்மி – பாஜக

டெல்லியில் ஆம் ஆத்மி எதிர்பாராத பெரிய வெற்றி பெற்றதால், தற்போதைய அரசியல் சூழலே திடீர் என்று மாறி விட்டது.

காங் பாஜக என்று இரண்டு பெரிய லாரி சென்று கொண்டு இருந்த சாலையில் தற்போது ஆம் ஆத்மி நடுவில் ஆட்டோ ஓட்டி இருவரையும் தடுமாற வைத்துக்கொண்டு இருக்கிறது.

இதனால் ஆட்டத்தில் தள்ளாடிக் கொண்டு இருந்த காங் ஓரங்கட்டப்பட்டு தற்போது அனைவராலும் பாஜக, ஆம் ஆத்மி பற்றியே பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. Image Credit – http://quotes.lifehack.org

குறிப்பு: எனக்கு அரசியல் பற்றி ஆழ்ந்த அறிவு கிடையாது. எனவே இதன் பிறகு வருவதை ஒரு சராசரி பொதுஜனம் பார்வை என்ற அளவிலே எடுத்துக்கொள்ளவும்.

காங் செய்த ஊழல்

காங் செய்த ஊழலால் பலரும் தலை கிறுகிறுத்து இருக்கின்றனர்.

இவர்கள் செய்வதைப் பார்த்தால், நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஆட்சிக்கு வந்தார்களா அல்லது இந்தியாவை காலி செய்து விட்டுத் தான் மறுவேலை என்று கங்கணம் கட்டிக்கொண்டு பணி புரிகிறார்களா என்று நினைக்கும் அளவிற்கு இந்திய மக்களை தலை சுற்றலில் விட்டு இருக்கிறார்கள்.

இனி எந்தத் துறையில் ஊழல் செய்ய முடியும் என்று கண்டுபிடிக்க புதிதாக ஒரு துறை துவங்காதது ஒன்று தான் பாக்கி மற்றபடி அனைத்தும் செய்து விட்டார்கள்.

A – Z எந்த எழுத்தை எடுத்தாலும் அதில் ஒரு ஊழல் ஆரம்பிக்கிறது!!

மாநில மக்கள் என்றாலும், நாட்டு மக்கள் என்றாலும் இந்திய மக்களுக்கே உள்ள சாபம், இருப்பதில் சுமாராக கொள்ளை அடிப்பவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புத் தான்.

மாநிலம் என்றாலும் தேசியம் என்றாலும் இரு கட்சிகளே இருக்கும், இவர்களையே மாற்றி மாற்றி எடுக்க வேண்டிய பரிதாப நிலையில் மக்கள்.

ஆட்சியில் உள்ள கட்சி செய்யும் ஊழலை, திறமையின்மையை கணக்கில் கொண்டால், அடப்போங்கப்பா! இதுக்கு முன்பு இருந்தவர்களே பரவாயில்லை போல இருக்கு! என்று நினைத்து அடுத்த முறை இன்னொரு கட்சியைக் கொண்டு வந்தால், இவர்கள் அதை விட ஊழல் செய்பவர்களாகவும் திறமையற்றவர்களாகவும் உள்ளனர்.

இரண்டு கட்சிகளும் போட்டி போட்டு கொள்ளை அடிக்கின்றன என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

சுருக்கமாகக் கூறுவதென்றால் மக்களுக்கு இரு வாய்ப்பு மட்டுமே எப்போதும் கிடைக்கிறது / வழங்கப்படுகிறது. தூக்கில் தொங்கி சாகலாம் அல்லது விஷம் குடித்து சாகலாம்.

தற்போது காங் செய்த மெகா ஊழல்களால் நமக்கு இருக்கும் வாய்ப்பு, அடுத்த பெரிய கட்சி பாஜக.

மோடி

மோடி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தாலும் இன்று இந்திய அளவில் பலரிடையே அவருடைய நிர்வாகத் திறமை குறித்து அறியப்பட்டு இருக்கிறார்.

காங் இடம் இருந்து தற்போது நாட்டைக் காக்க இருக்கும் மாற்றாக மோடி தெரிகிறார்.

மோடி ஏன் பிரதமராக வர வேண்டும் என்பதைப் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன்.. திட்டுக்களையும் வாங்கி விட்டேன் 🙂 .

தற்போதும் என் முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

Read: மோடி பிரதமர் ஆவதை நான் ஆதரிக்கிறேன்! ஏன்?

இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்தது போல மாநிலத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

இது காங் கிற்கு எதிரான வாக்குகளாகவும் கருதலாம் அல்லது பாஜக மோடிக்கு கிடைத்த வரவேற்பாகவும் கருதலாம்.

இது குறித்து இணையத்தில் கடும் சண்டை அவரது எதிர்ப்பாளர்கள் ஆதரவாளர்களால் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. அதற்கு நாம் போக வேண்டாம்.

ஆம் ஆத்மி

இவர்கள் வெற்றியோடு காங் பாஜக இரு கட்சியினருமே எதிர்பார்க்காத அளவில், கருத்து கணிப்பையும் பொய்யாக்கி அனைவரும் எதிர்பார்த்ததை விட அதிகமாக 10 இடங்கள் ஆம் ஆத்மி வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

தற்போது இது தான் பாஜக க்கு தலைவலியாகி விட்டது.

காங் எதிர்ப்பு ஓட்டு முழுவதும் தனக்கு என்று இருந்த பாஜக கணக்கில் பங்கிற்கு வந்து விட்டது, ஆம் ஆத்மி.

கிடைத்த வெற்றியால் பாராளுமன்றத் தேர்தலிலும் அதிக அளவில் போட்டியிடப் போகிறோம் என்று கூறி இருக்கிறார்கள்.

இதனால் கடுப்பான பாஜக ஆதரவாளர்கள் ஆம் ஆம்த்மியை கரித்துக்கொட்டிக் கொண்டு இருக்கிறார்கள். ஆம் ஆத்மி தவறுகளை தேடித் தேடி கண்டு பிடிக்கிறார்கள்.

எவர் ஒருவரை முக்கிய எதிரியாக / போட்டியாளராக கருதுகிறார்களோ, அவரைப் பற்றித் தான் அதிகம் பேசுவார்கள்.

இதன்படி பார்த்தால் பாஜக ஆதரவாளர்கள் தற்போது காங் ல் இருந்து ஆம் ஆத்மி க்கு திரும்பி விட்டதாகத் தான் அவர்களது நடவடிக்கை காட்டுகிறது.

நம்மவர்கள் எப்போதுமே உணர்ச்சி வசப்பட்டவர்கள்.

எதுவாக இருந்தாலும் உடனடியாக அப்போது இருக்கும் சூழ்நிலையை வைத்து அதை தூக்கி வைத்துப் பேசி பெரிய விஷயமாக்கி, பின்னர் சரியில்லை என்று கருதினால் உடனே டமாலென்று குறைந்த பட்ச கருணை கூட இல்லாமல் கவிழ்த்து விடுவார்கள்.

ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஒரு மாற்று அரசு அமைதிவதில் நிச்சயம் எனக்கு சந்தோசமே, அதில் உள்ள காங் ஆதரவு சர்ச்சை போன்றவற்றை எல்லாம் ஒதுக்கி விட்டு பார்த்தால் எனக்கு உடன்பாடே.

யூனியன் பிரதேசம்

டெல்லி என்பது யூனியன் பிரதேசம்.

ஒரு மாநில அரசாக இருந்தாலும் சில விஷயங்கள் இன்னும் மத்திய அரசிடமே உள்ளது, காவல் துறை உட்பட (தவறு இருந்தால் திருத்தவும்).

இந்தப் பகுதிக்கு முதல்வர் ஆக புதிய கட்சியான ஆம் ஆத்மி முயற்சிப்பது என்பதில் எனக்கு எந்தத் தவறும் காண முடியவில்லை.

ஆரம்பம் என்பது இது போல துவங்குவது சரியான ஒன்று தான் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து.

ஆட்சிக்கு வரும் முன் வாய்க்கு வந்த வாக்குறுதி எல்லாம் கொடுப்பது எளிது ஆனால், நடைமுறையில் அவற்றை நிறைவேற்றுவது அத்தனை எளிதில்லை. எதையும் ஒரே நாளில் மாற்றி விட முடியாது.

ஆம் ஆத்மி கொடுத்த வாக்குறுதியை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

வாக்குறுதி

700 லிட்டர் தண்ணீர் இலவசமாக கொடுப்பதாகக் கூறி இருந்தார்கள். டெல்லியில் அனைத்து வீடுகளுக்கும் இதைக் கொடுக்க அதற்கு தகுந்த கட்டமைப்பு இருக்கிறதா!

அப்படியில்லை என்றால் அவர்களுக்கு எப்படி உடனே கொடுக்க முடியும்?

அப்படி கொடுக்க முடியவில்லை என்றால், அவர்களின் வாக்குறுதி என்ன?

ஆட்சிக்கு வரும் முன் அது இது என்று பேசியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு எதையும் உடனே செய்து விட முடியாது என்று கூறுகிறார்கள்.

இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என்றாலும் இதை ஏன் முன்பே கூறவில்லை.

நடைமுறை பிரச்சனைகள் பற்றி புரிந்து கொள்ளாமல் வாக்களித்தவர்களை ஏமாற்றுவது போலத்தானே இது!

தற்போது இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் போட்டி போடப் போவதாகக் கூறி இருக்கிறார்கள்.

எந்தக் கட்சியுமே தனக்கு இது போல வெற்றி கிடைத்தால் இப்படித் தான் நினைப்பார்கள்.

அதில் தவறு எதுவும் காண முடியவில்லை ஆனால், இவர்கள் இன்னும் எதையும் நிரூபிக்கவில்லை.

தற்போது தான் ஆட்சிக்கு வந்து இருக்கிறார்கள். ஊடகங்களும் இதே வேலையாக ஆம் ஆத்மி பற்றிய செய்திகளாகவே தொடர்ந்து வெளியிட்டு வருகின்றன.

இவருக்கு காய்ச்சல் என்பது கூட வழக்கம் போல “Breaking News” ஆக வருகிறது.

நாட்டு மக்கள் அனைவருக்கும் இருக்கும் எதிர்பார்ப்பு, ஏதாவது ஒரு நல்ல கட்சி ஆட்சிக்கு வந்து நம் பிரச்சனைகளை தீர்க்காதா, கொள்ளை அடிக்காமல் ஊழல் செய்யாமல் மக்கள் நலனில் அக்கறை காட்டாதா, உலக அரங்கில் இந்தியாக்கு மரியாதையை பெற்றுத் தராதா என்ற நியாயமான எதிர்பார்ப்புகள் தான்.

இதில் ஏதாவது தவறு இருக்கிறதா?

தமிழ்நாட்டிலும் இதையே அனைத்து மக்களும் நினைப்பார்கள். புதிதாக வருகிறவர்கள் நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவார்கள் என்று நினைத்து ஏமாந்து போகிறார்கள்.

தமிழகத்தில் விஜயகாந்த் அறிமுகம் ஆகிய போது அப்பாடா! திமுக அதிமுக விற்கு ஒரு நல்ல மாற்று கிடைத்தது என்று பலர் நினைத்தார்கள்.

நான் அம்மாவை கேப்டனுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கூறி போடவைத்து இன்று வரை என் அம்மாவால் கிண்டலடிக்கப்பட்டு வருகிறேன்.

சமீபமாக இவர் செய்ததை பேசியதை எல்லாம் பார்த்து அடச்சே! இவருக்கா ஓட்டுப் போடக் கேட்டோம் என்று வெறுத்து விட்டேன்.

இப்படியும் கூட ஒரு கட்சித் தலைவர் பேசுவாரா என்று கடுப்பாகும் அளவிற்கு நடந்து கொண்டு இருக்கிறார்.

கோடரி

இதே போல ஏமாந்தது சென்னையில். “கோ” படம் போல மாணவர்கள் சிலர் “மாற்றங்களை நாங்கள் கொண்டு வருகிறோம்” என்று தேர்தலில் நின்றார்கள்.

இவர்கள் சின்னம் “கோடரி”. செய்தித் தாளில் Axe Effect (பாடி ஸ்ப்ரே விளம்பரம் போல) என்று அப்போது இவர்களைக் கூறிக்கொண்டு இருந்த காலம்.

சென்னையில் இருந்த போது என் நண்பர்களுடன் சென்று இவர்களுக்கு ஓட்டுப் போட்டேன். 30000 வாக்குகள் வரை பெற்று இருந்தார்கள்.

இவர்கள் வெற்றி பெறவில்லை என்றாலும் புதிய முயற்சியை ஆதரித்த அளவில் மன நிம்மதி ஏற்பட்டது.

“பாஸு அப்படியெல்லாம் நீங்க நிம்மதியாக இருந்து விடாதீங்க” என்று கொஞ்ச நாட்களிலே ஜாதி ரீதியாக சண்டை போட்டு பிரிந்து வாக்களித்தவர்களை காமெடி பீஸ் போல ஆக்கி விட்டார்கள்.

ச்சே! இவனுகளுக்கு போய் ஓட்டுப் போட்டோமே! என்று செம காண்டாகி விட்டது.

இந்த லட்சணத்தில் நான் போட்ட முதல் வாக்கு இது.

இவனுக தோற்றது கூட பரவாயில்லை ஆனால், இது போல ஜாதிப் பிரச்சனை செய்து பிரிந்து, எதிர்காலத்தில் ஒழுங்காக செய்ய நினைப்பவர்களையும் இதே போல நினைக்க செய்து விட்டார்கள்.

இனி இது போல யாராவது மாணவர்கள் நின்றால் இனி காலத்துக்கும் “கோடரி” கதையையே சொல்வார்களே!

இதைத் தான் “உதவி செய்யவில்லை என்றாலும் உபத்திரவம் செய்யாமல் இரு!” என்று கூறுவார்கள் போல.

அண்ணா ஹசாரே

இதன் பிறகு ஊழலுக்கு எதிரான போராட்டம் அண்ணா ஹசாரே.

போராட்டத்தை அருமையாக கொண்டு சென்று, சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்து செயல்படுத்தி இருந்தால், அருமையாக முடிந்து இருக்கும் ஆனால், இவரும் சொதப்பி விட்டார்.

காங் கட்சியும் தன்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவோ செய்து இவரது போராட்டத்தை நீர்த்துப் போக வைத்து விட்டது.

இவரும் சரியான பேச்சு என்றில்லாமல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை உளறிக்கொண்டு இருந்தார்.

ஆரம்பத்தில் இவருக்கு லட்சத்தில் கூடிய கூட்டம் கடைசியில் முக்கி முக்கி 2000 பேரில் வந்து நின்றது.

இவரையும் நம்பி நான் அந்த சமயத்தில் ஏதாவது நல்லது நடந்து விடாதா என்று பல கட்டுரைகள் நம்பிக்கையாக எழுதி இருந்தேன் ஆனால், ஏமாற்றமே மிஞ்சியது.

இவரது போட்டத்தால் நடந்த ஒரு நல்ல விஷயம் இவரைப் போல பேசிக்கொண்டே இராமல் செயலில் இறங்கி நடத்திக் காட்டிய அர்விந்த் கெஜரிவால்.

அந்த சமயத்தில் “உணர்ச்சிவசப்பட்டு ரொம்பப் பொங்கிட்டோமோ!” என்று நினைத்தேன். இனி அவசரப்பட்டு எதையும் எழுதக்கூடாது என்ற எண்ணத்தை கொடுத்ததே அண்ணா ஹசாரே போராட்டம் தான்.

இதன் காரணமாகத் தான் ஆம் ஆத்மி பற்றி எதையும் உடனடியாக எழுதவில்லை.

ஒப்பீடு

தற்போது ஆம் ஆத்மி. இவர்களை மேற்கூறிய இருவருடன் (விஜயகாந்த் + மாணவர்கள்) ஒப்பிட முடியாது.

நன்கு படித்து இருக்கிறார்கள், அரசுப் பணியில் இருந்து இருக்கிறார்கள், அனுபவம் பெற்று இருக்கிறார்கள், போராட்டங்களில் கலந்து கொண்டு இருக்கிறார்கள் என்று குறிப்பிடத்தக்க அளவில் தகுதியைப் பெற்று இருக்கிறார்கள்.

தற்போது தான் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்துள்ளார்கள். இன்னும் இவர்கள் மக்களுக்கு நிரூபிக்க வேண்டியது உள்ளது. இதற்கு சரியான இடம் டெல்லி, சிறிய தொகுதி.

எனவே, தங்களை இங்கு நிரூபித்து பின் 2019 ல் நடக்கும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கலாம். இது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும்.

இவர்கள் தற்போது பாராளுமன்ற தேர்தலில் நின்றால், நிச்சயம் சில தொகுதிகள் வெற்றி பெறலாம், குறிப்பாக நகர்ப் புறங்களில் ஆனால், மத்தியில் ஆட்சி அமைக்கக் கூடிய அளவிற்கு தொகுதிகளைப் பெற முடியாது.

வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும்.

நகர்ப்புறங்களில் இவர்களுக்கு கிடைக்கும் அதே ஆதரவு கிராமங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.

எனவே அடுத்தது பாஜக விற்கு கிடைக்கும் தொகுதிகளை குறைத்து தொங்கு பாராளுமன்றம் தான் அமைய முடியும்.

முன்னரே கூறியபடி மூன்றாவது அணி / தொங்கு பாராளுமன்றம் அமைந்து நாடு நாசக் கேடாகப் போவதற்கு காங் கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்கலாம்.

பெரிய வித்யாசம் இல்லை.

எனவே, ஆம் ஆத்மி அடுத்து வரும்சட்டமன்ற தேர்தலுக்கு தன்னை தயார் படுத்தி, தன்னை நிரூபித்து பின் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம்.

இது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும்.

என்னால் வாக்களிக்க முடியாது என்றாலும் ஓட்டுப் போட வேண்டிய நிலை வந்தால், இந்த முறை பாராளுமன்ற தேர்தலுக்கு என்னுடைய ஆதரவு பாஜக க்குத் தான்.

அதில் இன்று வரை மாற்றமில்லை.

இடைப்பட்ட காலத்தில் ஆம் ஆத்மி தங்களை டெல்லியில் நிரூபித்து இருந்தால், அடுத்து வரும் மற்ற மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி க்குத் மக்களிடையே வரவேற்பு இருக்கும்.

எனவே, படிப்படியாக உயர்ந்து வரட்டும்.

வந்தவுடன் பிரதமருக்கு முயற்சிப்பது எதிர்விளைவை உண்டாக்கி பிரபலமான அதே வேகத்தில் அனுபவமின்மையால் வீழ்ச்சியடையவும் வாய்ப்பு இருக்கிறது.

எப்போதும் நிதான வளர்ச்சியே நிலையான இடம். தலைவர் சொல்ற மாதிரி “கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது. கஷ்டப்படாம கிடைக்கிறது என்றைக்குமே நிலைக்காது”.

மக்கள் அவசரப்பட்டு ஆதரவு கொடுத்து பின் நொந்து போன சம்பவங்களை ஏற்கனவே மேலே கொடுத்து இருக்கிறேன். அதே தவறை திரும்ப செய்ய எனக்கு விருப்பமில்லை.

மக்கள் எதிர்பார்ப்பு

ஒரு நல்ல ஆட்சியாளராவது நமக்கு கிடைக்க மாட்டார்களா என்று நொந்து போய் எதிர்பார்த்து மக்கள் காத்திருக்கிறார்கள்.

எனவே நல்ல முறையில் ஆட்சி செய்தாலே போதும் வேறு எதுவும் தேவையில்லை. காஞ்சு போன நிலத்தில் தண்ணீர் இறங்குவதா சிரமம்!

காங் ஊழல்களை, அவர்களுடைய திறமையின்மையை தொடர்ந்து கூறி பாஜக பிரச்சாரம் செய்தது போதும், தொடர்ந்து ஒன்றையே பேசுவது சலிப்பையே ஏற்படுத்தும்.

இனி தாங்கள் ஆட்சிக்கு வந்தால், என்ன செய்வோம் என்பதைப் பற்றி மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும்.

காங் ஊழல் உலகத்திற்கே தெரிந்த விஷயம் ஆகி விட்டது. சன் டிவி விமர்சனத்தில் வருவது போல போதுமான அளவிற்கு பேசியாகி விட்டது.

தற்போது புதிதாக ஆம் ஆத்மியையும் தொடர்ந்து விமர்சித்துக் கொண்டுள்ளார்கள்.

இது எதிர்மறை விளைவையே பாஜக க்கு ஏற்படுத்தும், ஏனென்றால் பாஜக விற்கு ஆதரவு கொடுப்பவர்களில் பலர் “ஆம் ஆத்மி” க்கும் ஆதரவு கொடுப்பவர்கள்.

எனவே பாஜக பாசிடிவான பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும்.

முடிவாக, ஆம் ஆத்மி அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வருவது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி வரவேற்கத்தக்க ஒன்றாகும்.

எனவே தற்போது வெற்றிபெற்றுள்ள டெல்லியில் தங்களை அவர்கள் நிரூபிக்கட்டும், பின்னர் மற்றதை பார்ப்போம்.

ஆர்வக் கோளாறில் கண்மூடித்தனமாக ஆதரித்தது போதுமான அனுபவத்தை கொடுத்து விட்டது. இனியும் அவசரப்படத் தயாராக இல்லை.

அதிமுக காரங்க சும்மா இல்லாம “அம்மா பிரதமர்” என்று கூறி கூறி “ஜெ” வும் பிரதமர் கனவில் இருக்கின்றார்.

ஜெ பிரதமரானால்… “இந்தியாவின் பிரச்சனைகளுக்கு பாகிஸ்தானும் சீனாவும் தான் காரணம் ” என்று அறிக்கை விட்டுக்கொண்டு இருப்பார்.

ஐயையோ நினைத்தாலே கலவரமாக இருக்கிறது. ஆட்சியே முடிந்த பிறகும் திமுக தான் மின் வெட்டிற்கு காரணம் என்று கூறிக்கொண்டு இருப்பார் போல!

தமிழ்நாடே தற்போது தள்ளாடிக் கொண்டு இருக்கிறது… இதில் இந்தியாவா! நினைத்தாலே கண்ணை கட்டுகிறது.

“ஜெ” 40 இடங்களையும் கைப்பற்ற கடைசி நேரத்தில் அதிரடியாக தமிழகத்தில் மதுவை தடை செய்து திருப்பத்தைக் கொண்டு வர வாய்ப்பிருக்கிறது.

பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஐந்த மாதம் இருக்கிறது… இந்த ஐந்து மாதத்தில் பல திருப்பங்களை நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. //ஜன்லோக்பாலாக இருந்தாலும், ஏற்கனவே இருக்கும் சட்டமாக இருந்தாலும் உறுதியாக நிறைவேற்றும் தலைவர் இல்லாதவரை எந்த சட்டங்களாலும் இந்தியாவில் பயனில்லை.//

    மிகச்சரியா சொன்னீங்க கிரி…

  2. சுருக்கமாகக் கூறுவதென்றால் மக்களுக்கு இரு வாய்ப்பு மட்டுமே எப்போதும் கிடைக்கிறது / வழங்கப்படுகிறது. தூக்கில் தொங்கி சாகலாம் அல்லது விஷம் குடித்து சாகலாம். இ லைக் திஸ்

  3. //மோடி ஏன் பிரதமராக வர வேண்டும் என்பதைப் பற்றி ஏற்கனவே நான் விரிவாக எழுதி விட்டேன்.. திட்டுக்களையும் வாங்கி விட்டேன் . தற்போதும் என்னுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை.//

    (நீங்கள் வசிக்கும்) சிங்கப்பூரில் சமீபத்தில் லிட்டில் இந்தியா பகுதியில் நடந்த கலவரம், கலவரத்திற்கு மூல கர்த்தாவான தமிழர்களுக்கு / இந்தியர்களுக்கு எதிராக மாறாதது ஏன்? சமுதாய ஒற்றுமையை பேண வேண்டிய அரசு அங்கு இருந்ததனால் கலவரம் சில மணி நேரத்துக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. சமுதாய பேதம் அங்கு பார்க்கப்படவில்லை, நீங்களெல்லாம் சுகமாக இருக்கின்றீர்கள்.

    ஆனால், குஜராத்தில் நடந்ததென்ன? கலவரம் எத்தனை நாட்கள் நடந்தது? சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளால் கலவரத்தை சில மணி நேரத்தில் ஒடுக்கமுடியும்போது, வல்லரசு என்று பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் கலவரத்தை இரண்டு வாரங்களுக்கு மேலாக தடுக்க முடியாமல் போனது எதனால்? அரசும், காவல் துறையும் என்ன செய்து கொண்டு இருந்தது?

    மோடிக்கும் குஜராத் கலவரத்திக்கும் தொடர்பில்லை என்றே வைத்துக்கொள்வோம், கலவர நேரத்தில் ஒரு சிறந்த ஆட்சியாளராக மோடி எப்படி செயல்பட்டிருக்கவேண்டும்? ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

    சிந்தித்தால் உண்மை புரியும்.

    //மோடி பற்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு இருந்தாலும் இன்று இந்திய அளவில் பலரிடையே அவருடைய நிர்வாகத் திறமை குறித்து அறியப்பட்டு இருக்கிறார்.//

    ஒரு சிறிய கலவரத்தையே ஒழுங்க அடக்க முடியாத இவரா, எதிர்காலத்தில் சீனா / பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் ராணுவம் அத்து மீறும் போது தடுத்து நிறுத்துவார்? இதுவா நிர்வாக திறன்?

    //எனவே ஆம் ஆத்மி அடுத்து வரும்சட்டமன்ற தேர்தலுக்கு தன்னை தயார் படுத்தி, தன்னை நிரூபித்து பின் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம். இது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும்.//

    By the way, எதையாவது சொல்லி / செய்து / குழப்பி 2014 பாராளுமன்ற தேர்தலில் மோடி ஜெயிக்கணும், அது தானே அஜெண்டா? அதுக்கு போட்டியை குறைக்கணும், ஏதாவது காரணம் சொல்லி ஆம் ஆத்மியை போட்டியிடாமல் செய்துவிட்டால் காங்கிரசை சுலபமாக சமாளித்துவிடலாம், கணக்கு சரிதானே? வாழ்க உங்கள் “சராசரி பொதுஜனம் பார்வை”.

    • //ஒரு சிறிய கலவரத்தையே ஒழுங்க அடக்க முடியாத இவரா, எதிர்காலத்தில் சீனா / பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளின் ராணுவம் அத்து மீறும் போது தடுத்து நிறுத்துவார்? இதுவா நிர்வாக திறன்?// தடுக்க விரும்பவில்லை என்பது மட்டுமே உண்மை இயலவில்லை என்பது தவறு. குஜராத்தில் முஸ்லிம் சிறுபான்மை என்பது தமிழகத்தைபோல் இல்லை 40 க்கு 60 இங்கு குஜராத் அமைந்திருப்பது பாகிஸ்த்தான் பார்டர் என்பதையும் நினைவில்வைக்க வேண்டும். மற்றபடி சீனா பாகிஸ்தானிடம் அத்துமீறும்போது சும்மா இருப்பார் என்று கூறுவது எல்லாம் தவறு. என்னை பொருத்தவரை ஆம் ஆத்மி மிகச்சிறந்த கட்சிதான்.

      • மோடிக்கும் குஜராத் கலவரத்திக்கும் தொடர்பில்லை என்றே வைத்துக்கொள்வோம், கலவர நேரத்தில் ஒரு சிறந்த ஆட்சியாளராக மோடி எப்படி செயல்பட்டிருக்கவேண்டும்? ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை?

        “சஹா” கலவரம் நடந்தபோதில் குஜராத்தில் நீங்கள் இருந்த மாதிரியே எழுதுகிறீர்கள். கலவரத்திற்கு காரணமே காங்கிரஸ் MP தான், “புரட்சி தமிழன்” கூறியமாதிரி குஜராத் பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. கலவரத்திற்கு கொம்புசீவிட இப்படி நெறைய கரணங்கள் இருக்கும்போது, ஒரு வாரம் கலவரம் முடியாமல் இருப்பது ஆச்சர்யம் இல்லை. சிங்கப்பூர் கலவரத்தையும், குஜராத் கலவரத்தையும் ஒப்பிடவே முடியாது. தீவிரவாதிகள் மும்பை ஹோட்டலில் நடத்திய தாக்குதலை ஒடுக்குவதர்க்கே (மிலிடரி கமாண்டோக்களால்) 3 நாட்கள் ஆனா இந்தியாவில், ஒருமதகலவரத்தை ஒடுக்க ஒருவாரம் ஆவது சகஜம்தானே. அவ்ளோஏன், பரமக்குடி ஜாதி கலவரத்தை அடக்க நம் தமிழ்நாட்டு காவலுக்கு எத்தனை நாட்கள் ஆகின? சும்மா மோடிய பத்தி குரசொல்லன்னுமுனு, குஜராத் கலவரம், குஜராத் கலவரம்னு யோசிக்காம பேசக்கூடாது.

        • இதுல நம்ப “Mani” வேற, “சஹா” உண்மைய உரக்க சொல்லி இருக்காராம். யோசிச்சு எழுதுங்க. முதல்ல யோசிக்க ஆரம்பிங்க.

          • // கலவரத்திற்கு காரணமே காங்கிரஸ் MP தான், //

            அட, பார்ரா, யாரு அவரு? எனக்கு தெரியாம போச்சே. கலவரத்துல பலபேர கொன்று, அத பெருமையா பேட்டி கொடுத்த பாபு பஜ்ரங்கி, மாயா கோட்னானி, எல்லாம் காங்கிரசா?

            //ஒரு வாரம் கலவரம் முடியாமல் இருப்பது ஆச்சர்யம் இல்லை.//

            என்னது ஒரு வாரமா? விக்கி-ல படிச்சு பாருங்க, அகமதாபாத்-ல மட்டும் “மூணு வாரம்” நடந்திருக்கு, குஜராத் மாநிலம் முழுதும் குறைந்தது மூன்று மாதம் “இன சுத்திகரிப்பு” நடந்திருக்கு.

            http://en.wikipedia.org/wiki/2002_Gujarat_violence#cite_note-Ghassem-Fachand_2012-4
            http://press.princeton.edu/chapters/i9755.pdf

            //அவ்ளோஏன், பரமக்குடி ஜாதி கலவரத்தை அடக்க நம் தமிழ்நாட்டு காவலுக்கு எத்தனை நாட்கள் ஆகின? //

            நீங்க சொல்ற அந்த பரமக்குடி கலவரம் மூணு நாள் நடந்துச்சு, ஆனா, பரமக்குடி தாண்டி மாநிலத்தின் எந்த பகுதிக்காவது பரவுச்சா? மற்ற பகுதிகள் அமைதியா தான இருந்துச்சு? அந்த கலவத்துல எத்துண பேரு செத்தாங்க? ( 7 பேரு,)
            http://en.wikipedia.org/wiki/Paramakudi_Riots

            குஜராத்துல அப்புடியா நடந்துச்சு? அந்த மாநிலமே தீப்புடிச்சு எரிஞ்சுச்சே? கொறஞ்சது 2000 பேரு கொல்லப்பட்டார்களே? கலவரத்த பரவாமல் தடுக்க வேண்டிய உள்துறை, உளவுத்துறை, காவல்துறை எல்லாம் தூங்கிகிட்டு இருந்துச்சா? இல்ல, அந்த துறைகளை எல்லாம் சரியாக வழிநடத்தி கட்டுக்குள் கொண்டு வரக்கூடிய, ஆபத்து காலங்களில் சிறப்பாக முடிவெடுக்க கூடிய நல்ல முதலமைச்சர் அங்கு பதவியில் இல்லையா?

            நான் இங்க சொல்ல வருவது, கலவத்தை மோடி தான் நடத்துனார்னு இல்ல, அது வேற விஷயம், அவரது நிர்வாக திறன் பற்றி மட்டுமே. அமெரிக்காவின் மிகப்பெரிய பேரழிவான 9/11 போது, அந்நாட்டை ஆண்டவர்கள் / அதிகாரிகள் நடந்து கொண்டதையும், அது போன்று இந்தியாவில் ஒரு மாநிலம் முழுவதும் கலவரம் நடந்த பேரழிவின் போது ஆளும் தலைமையும் / அதிகாரிகளும் நடந்து கொண்ட முறைகளையும்
            ஒப்பிட்டு பாருங்கள். கையாலாகாத அரசு என்பது புலப்படும்.

            நீங்க திரும்ப திரும்ப ஒன்னும் ஒன்னும் மூணுன்னு சொன்னா அது உண்மை ஆயிடாது. நல்லா யோசிங்க புரியும்.

          • “அட, பார்ரா, யாரு அவரு? எனக்கு தெரியாம போச்சே”

            – இப்போ ஹைதராபாத்ல மோடிக்கு ஆதரவா ஒரு கேஸ்ல தீர்ப்பு வந்ததே அது என்ன கேஸ், யாரு போட்டாங்க மற்றும் அந்த கேஸ் detail-ச, அதபத்தி தெரிஞ்சவங்ககிட்ட கேட்டுப்பாருங்க. அப்புறம் தெரியும் நான் என்ன சொல்றேன்னு.

            “பரமக்குடி கலவரம் மூணு நாள் நடந்துச்சு” / “அகமதாபாத்-ல மட்டும் ‘மூணு வாரம்’ நடந்திருக்கு”

            – பாஸ், அது மத கலவரம் பாஸ். பரமக்குடி ஜாதி கலவரம். பரமக்குடி தாண்டி ஒரு 50 KM வரைக்கும் தான் அந்த ஜாதி இருக்கும். அதுக்கே 3 நாளாச்சு, பிளஸ் 7 death. இது ஹிந்து முஸ்லிம் பிரெச்சனை, மாநிலம் முழுவதும் பரவத்தான் செய்யும். இந்தியா முழுவது பரவாமல் இருந்தது ஆண்டவன் செயல்.

            “அவரது நிர்வாக திறன் பற்றி மட்டுமே”
            – மத கலவரத்துக்கும் நிர்வாக திறமைக்கும் சம்பந்தமே இல்லைங்க. கலவரம் நடக்கறது மக்களின் உணர்சிகளை தூண்டிவிடுவதினால்தான். அதுவே இந்து முஸ்லிம் கலவரமாக இருந்ததினால் அது மாநிலம் முழுவதும் பரவியது. அது குஜராத் மட்டுமல்ல தமிழ்நாட்டி கூட நடக்கும். அப்படி நடந்தால் கண்டிப்பாக “ஜெ”வால் கூட ஒருவாரத்தில் கட்டுப்படுத்த முடியாது. மேலும் குஜராத்தின் வரலாறை நீங்க இங்கு பார்க்க வேண்டும். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பிருந்தே, அது ஹிந்து முஸ்லிம் பிரச்சனைகளால் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு மாநிலம். நம்ப ஊர்ல இந்து முஸ்லிம் பிரச்சனை இல்ல பாஸ், அதுனால அதன் வீர்யம் தெரியவில்லை. அங்க அதெல்லாம் காட்டு தீ மாதிரி. பத்துசுனா அவ்ளோதான்.

  4. நல்லதொரு பகுப்பாய்வு. இப்பொழுது இருக்கும் சூழ்நிலையில் படித்த, நடுத்தர வர்க்கத்தின் மனநிலையை தங்களின் பதிவு தெளிவாக படம் பிடித்து காட்டுகிறது. குறிப்பாக சகாயம் அவர்களின் திறமையால் கோ ஆப்டெக்ஸ் வருவாய் முன்னேறியது குறித்து எழுதி இருந்தது பாராட்டிற்குரியது. இவரை போன்ற நேரமையான அதிகாரிகள் அநேகம் பேர் இருந்தாலும் அரசியல்வாதிகளுக்கு அடி பணியாமல் தங்கள் கடமையை செய்பவர் மிக சிலரே . அப்படி பலரும் மாறுவதற்கு ‘கேஜ்ரிவல் போன்ற ஆட்சியாளர்களும் அவசியம். அதற்கான மாற்றத்தை வரும் தேர்தலில் நமது வாக்குரிமையை முறையாக செலுத்துவதன் மூலம் ஏற்படுத்தலாம். நன்றி!.

  5. //கோபி ஏற்கனவே ரொம்ப அருமையான மற்றும் அமைதியான ஊர் தான்.// இல்லைன்னா செங்கோட்டையன் பட்டைய கிளப்பி இருப்பாரு. கோபி அமைதியா இருக்கறதால கோபியின் நிரந்தர எம் எல் ஏ செங்கோட்டையன் சும்மா இருக்காப்ல அல்ல அவரு பண்ற திள்ளாலங்கடியல்லாம் வெளிய தெரியல.

    //எனவே ஆம் ஆத்மி அடுத்து வரும்சட்டமன்ற தேர்தலுக்கு தன்னை தயார் படுத்தி, தன்னை நிரூபித்து பின் 2019 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம். இது தான் சரியான ஒன்றாக இருக்க முடியும்.// அவர்களால் ஆட்சி அமைக்கமுடியாது தான். சந்தேகமே வேண்டாம். 100 இடத்தில் போட்டியிட்டாலே அதிகம். ஆனால் அவர்கள் மக்களுக்கு நம்பிக்கையை இப்போது அளிக்கிறார்கள். இராதபுதினத்தில் அரசி ஊழலில் ஊறிய வசுந்தரா சிவப்பு விளக்கில் நிற்பது போன்ற செயல் எல்லாம் ஆம் ஆத்மி இராதபுதினத்தில் மக்களவையில் போட்டி போடுமோ என்ற பயம் தான். நீங்க பிஜேபிக்கு வாக்கு போடுங்க போடாம இருங்க மக்கள் வைத்திருக்கும் சிறு நம்பிக்கையை கெடுக்காதிங்க.

  6. இன்று நடந்த நிருபர்கள் கூட்டத்தில் மன்மோகன் பேசியது அவர் மீது இருந்த கோவத்தை அதிகம் தான் செய்திருக்கிறது. எதை வைத்து ராகுல் காந்திக்கு best credentials இருப்பதாக சொல்கிறார் என்று தெரியவில்லை . ஊழல் விஷயத்தில் அவர் பேசியது நல்ல தமாஷ்.

  7. கிரி பதிவு ஒரு different angle ல வந்து இருக்கு உங்க பதிவை படிச்சா நியாயம் தான நு நினச்சேன் அடுத்து “சஹா” வோட பதில்ல படிச்சா அதுலயும் நியாயம் இருக்குறதா தான் தோணுது

    தமிழருவி அவர்கள் சொன்ன மாதிரி இங்க போட்டியே greater vs lesser evil தான்
    காங்கிரஸ் ஊழல் பலருக்கு greater evil
    மோடி யோட கலவரம் வேற பலருக்கு greater evil

    ஒன்னு மட்டும் உறுதி அடுத்த 5 மாசம் இந்திய அரசியல் கல கட்ட போகுது

    காங்கிரஸ் எதிர்ப்பு வாக்கு ஆம் ஆத்மி கு பிரிய வாய்ப்பு அதிகம் அவங்க பேர்ல சின்ன மோகம் இருக்கு .. தமிழ் நாட்டு ல பெருசா ஆம் ஆத்மி இப்ப வர வாய்ப்பு இல்லை ஆனா வடா தோசா இடங்கள் ல நல்லா பிரியும் நு நினைக்குறேன். அப்படி பிரிஞ்சா மறுபடியும் காங்கிரஸ் சா நினச்சாலே தல சுத்துது. இந்த காரணத்துக்கு தான் மோடிய நீங்க support பண்ணுவதா நான் நினைக்குறேன்

    – அருண்

  8. //தமிழருவி அவர்கள் சொன்ன மாதிரி இங்க போட்டியே greater vs lesser evil தான்
    காங்கிரஸ் ஊழல் பலருக்கு greater evil
    மோடி யோட கலவரம் வேற பலருக்கு greater ஏவி//

    Exactly…

  9. சுப்பர் நா ஆம் ஆத் மி தங்களை நிருபிக்க வேண்டும் ஆனா எபோ கை கூட கூட்டு வச்சாங்களோ அப்பவே அவங்க மேல இருந்த நம்பிக்கை கொஞ்சம் குறைஞ்சிடிச்சி … இருந்தாலும் இன்னமும் எனக்கு அவங்க மேல நம்பிக்கை இருக்குது ….

    இந்த விஜயகாந்த பாத்தா வாந்தி தான் வருது ,,, கல்யாண மண்டபம் இடிச்சிட்டங்கன்னு கட்சி ஆரம்பிச்சவருக்கு ,, இப்போ தன் கட்சி கொள்கையே இப்ப மறந்து போன நிலை அவருக்கு

    அவர் செய்த மகா திருத்த முடியாத தவறு கூட்டணி வைத்தது ,, மாற்று கட்சியாக சக்தியாக நினைத்தோம். ஆனா அதி மு க கூட சேர்ந்து தானும் சாதா அரசியல் வாதி என நிருபித்துவிட்டார்,,,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here