Raavan: Enemy of Aryavarta | I’m a Monster

2
Raavan: Enemy of Aryavarta

Ram Chandra Series புத்தகங்களில் முதல் புத்தகம் Ram இரண்டாவது Sita மூன்றாவது Raavan: Enemy of Aryavarta. முதல் புத்தகத்துக்கு விமர்சனம் எழுதி விட்டேன்.

இரண்டாவது புத்தகம் Sita: Warrior of Mithila கிட்டத்தட்ட முதல் புத்தகத்தில் வருபவையே இதிலும் வருகின்றன. எனவே, அதற்கு விமர்சனம் எழுதவில்லை.

முதல் இரண்டு புத்தகங்களுமே சீதையைக் கடத்துவதோடு துவங்கி, முடியும்.

எனவே, மூன்றாவதாக Raavan: Enemy of Aryavarta புத்தகத்தில் சண்டை துவங்கும் என்று நினைத்தால், ராம், சீதாக்குத் தனித்தனியாக அவர்கள் பிறந்தது முதல் விளக்குவது போல இராவணனுக்கும் வருகிறது.

Raavan: Enemy of Aryavarta

சண்டை, சீதா கடத்தல் அதன் பிறகு என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பில் தான் படிக்கத் துவங்கினேன் ஆனால், இது இராவணன் கதையை விளக்குகிறது. இப்பாகமும் சீதா கடத்தலோடு முடிகிறது.

அடுத்தப் பாகத்தில் தான் போர்கள் வரும் போல.

குபேரன்

இலங்கையை ஆட்சி செய்யும் மிகப்பெரிய வர்த்தகர் குபேரன்.

குபேரன் பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்போம். மிக அதிக செல்வம் கொழிக்கும் நபர். வீடுகளில் இன்னமும் கூடக் குபேரன் பற்றிய தகடுகள் உள்ளன.

இதை வைத்து இருந்தால், செல்வம் வரும் என்ற நம்பிக்கை இன்று வரை உள்ளது.

இராவணன் குபேரனிடம் ‘எதற்காகச் சப்த சிந்துகளுக்கு வியாபாரத்தில் அதிக இலாபம் கொடுக்கிறீர்கள்?‘ என்று கேட்பார்.

குபேரன் இராவணனிடம் ‘ஏன் சப்த சிந்துகள் வியாபாரத்தில் நம்மிடம் அதிக இலாபம் பெற்றும் பணப்பற்றாக்குறையால் சிரமப்படுகிறார்கள் தெரியுமா?!

அவர்கள் அடிக்கடி போர் செய்கிறார்கள். எனவே, அவர்கள் சேர்த்து வைத்த செல்வம் கரைந்து விடுகிறது ஆனால், நாம் போருக்காகச் செலவு செய்வதில்லை. எனவே, நம்மிடம் செல்வம் பெருகிக்கொண்டே செல்கிறது.

நம் மீது அவர்கள் போர் தொடுக்காமல் இருக்கத்தான், அவர்களுக்கு அதிக இலாபம் கொடுக்கிறேன். இறுதியில் நானே அதிகம் செல்வம் சேர்க்கிறேன்‘ என்று கூறுவார்.

இவர் கூறுவது ஏற்றுக்கொள்ளும்படி உள்ளது. சிங்கப்பூரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். சிங்கப்பூர் எந்த நாட்டுடனும் பிரச்சனை செய்ய முயற்சிப்பதில்லை.

தங்கள் உள் நாட்டை மட்டுமே மேம்படுத்தி, சிறப்பாகக் கட்டமைத்து, சுற்றுலாவை மையப்படுத்தி மிகச்சிறப்பான நிலையை அடைந்துள்ளார்கள்.

இராவணன்

சிறுவயதிலே வாழ்க்கையில் கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ளும் இராவணன் துவக்கத்தில் தன் மாமா மாரீசன் மூலமாகவும், பின்னர் தன் தம்பி கும்பகர்ணன் மூலமாகவும் எப்படிப் படிப்படியாக உயர்கிறார் என்பதே இந்நாவல்.

நேர்மையான வழிகளைப் பின்பற்றாமல், வன்முறையாக அனைத்தையும் அடைகிறார். யாரும் எதிர்க்கத் துணியாத அளவுக்கு முரட்டு நபராக வளர்கிறார்.

தாய் கைகேசி மீதுள்ள வெறுப்பில் பெண்கள் என்றாலே வெறுக்கும் இராவணன், பெண்களை நம்பவும், மரியாதை கொடுக்கவும் மறுக்கிறார்.

இராவணன் சாதாரண குடிமகனாக இருந்து அரசனாகப் படிப்படியாக உயர்வது சிறப்பாக எதார்த்தமாக நம்பும்படி அமைக்கப்பட்டுள்ளது.

அசுரன் நாவலில் சீதா இராவணின் மகளாக விவரிக்கப்பட்டு இருக்கும், இந்நாவலிலும் கிட்டத்தட்ட அதே நிலை வருகிறது. இராவணன் கொடூரமானவராக இருந்தாலும், அவரிடமும் உள்ள ஒரு மென்மையான பக்கம் விளக்கப்பட்டுள்ளது.

அதுவே பின்பு, இந்தியாவை இராவணன் வெறுக்கவும், போர் தொடுத்து அழிக்க நினைக்கவும் முக்கியக்காரணமாக மாறுகிறது.

போர்

குபேரன் கேட்கும் வர்த்தக விலைக்குத் தசரதர் மறுக்க, குபேரனுடன் வரும் இராவணன் தரசரதரை கோபப்படுத்த, போருக்கு இருவரும் சவால் விடுகிறார்கள்.

சக்ரவர்த்தியான தசரதர் இராவணனை குறைத்து மதிப்பிட்டுப் போரில் தோல்வியடைகிறார். தசரதர் போரில் தோற்கும் நாளில் தான் ராமன் பிறக்கிறார். எனவே, இராமன் அதிர்ஷ்டமில்லாதவர் என்று அனைவராலும் கூறப்படுகிறார்.

அப்படியென்றால் என் போர் திறமையால் நான் வெற்றி பெறவில்லை! இராமன் பிறந்ததால் தான் வெற்றி பெற்றேனா?!‘ என்று இராவணன் கிண்டலாகக் கூறுகிறார்.

கும்பகர்ணன்

தான் நாகா என்பதால் (வித்யாசமான உடலமைப்பு), பிறந்தவுடனே கொல்லப்படும் நேரத்தில், இராவணனால் காப்பாற்றப்படும் கும்பகர்ணன், அண்ணன் மீது அளவுகடந்த அன்பு மரியாதை வைத்து இருப்பார். அண்ணன் தான் எல்லாமே!

கும்பகர்ணன் இராவணன் போல அவசரப்படுபவர் அல்ல, தர்மத்தின் மீது மரியாதை கொண்டவர். தம்பி என்றாலும், அண்ணனுக்கு ஆலோசனை சொல்வார். இராவணன் தவறான முடிவு எடுக்கும் போதெல்லாம், அதைச் சுட்டிக்காட்டுவார்.

அதோடு இராவணனின் அனைத்து செயல்களிலும் உடனிருந்து இராவணனுக்கு மிகப்பெரிய பலமாக இருக்கும் கதாப்பாத்திரம்.

கும்பகர்ணன் ஏன் தூங்கிக்கொண்டே இருக்கிறார் என்பதற்கு நம்பும்படியான காரணத்தை ஆசிரியர் கூறியுள்ளார்.

புத்தகம் எப்படியுள்ளது?

தனிப்புத்தமாகப் படித்தால் சிறப்பான புத்தகம் ஆனால், பாகமாகப் படித்தால், கடத்தப்பட்ட சீதா என்ன ஆனார்? போர் எப்படி நடக்கும்? என்ற ஆர்வம் இருப்பவர்களால் பொறுமையாக இராவணன் கதையைப் படிக்க முடியாது.

இறுதியில் மிகப்பெரும் சண்டைக்காரர்களான விஸ்வாமித்திரர் மற்றும் வசிஷ்டர் பற்றிய குறிப்புகளுடன் முடிகிறது.

அடுத்தப் பாகத்தில் தான், சீதா மீட்பு, போர் ஆகியவை வரும் போல.

அமேசானில் வாங்க –> Raavan: Enemy of Aryavarta – Link (தமிழிலும் உள்ளது)

தொடர்புடைய கட்டுரைகள்

Ram – Scion of Ikshvaku

அசுரன் | வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, பொதுவாக வரலாற்று புத்தகங்கள் மீது அதிக ஆர்வம் கொண்டவன் நான் .. ஆனால் என்னுடைய தற்போதைய சூழ்நிலையால் என்னால் என் கவனம் முழுவதையும் புத்தகங்கள் படிப்பது மீது ஆர்வம் செலுத்த முடியவில்லை .. ஆனால் நல்ல நல்ல புத்தகங்கள் குறித்து யாராவது சொன்னால் குறிப்பு மட்டும் வைத்து கொள்வேன் .. சூழ்நிலைகள் மாறும் போது மட்டும் தான் என் ஆசைகளை நிறைவேற்ற முடியும் .. பகிர்வுக்கு நன்றி கிரி

  2. @யாசின் சூழ்நிலைகள் ரொம்ப முக்கியம். அவை அமைந்தால் மட்டுமே எதுவும் நடக்கும். சில நேரங்களில் சூழ்நிலைகளை நாம் உருவாக்கலாம் ஆனால், அனைத்து நேரங்களிலும் சரியாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here