தற்போது பல்வேறு காரணங்களுக்காக நாம் KYC (Know Your Customer) க்கு நம்முடைய அடையாள அட்டையைக் கொடுக்க வேண்டியது உள்ளது. Image Credit
KYC
பலரும் ஆதார், PAN அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு (Passport), வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றைக் கொடுக்கிறார்கள்.
சமீபத்தில் ஆதார் பற்றிய விதிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இனி, அரசு மானியம் பெறும் சேவைகளுக்கு மட்டுமே ஆதார் கட்டாயம்.
அதாவது எரிவாயு (LPG) மற்றும் அரசாங்க மானிய சலுகைளுக்கு மட்டுமே!
மற்ற இடங்களில் நீங்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கொடுக்கலாம், இது வங்கிக்கும் சேர்த்து. கட்டாயப்படுத்தினால் நீங்கள் புகாரளிக்கலாம்.
ஆதார்
ஆதார் என்பது மிக முக்கிய ஆவணம். எனவே, இதை நாம் எங்குமே முடிந்தவரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். நம்முடைய ஆதார் விவரங்களை மற்றவர் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
அடையாள அட்டைக்குக் கொடுப்பது ஆதார் எளிதாக உள்ளது என்பது உண்மை தான் என்றாலும், இதைக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஒருவேளை உங்கள் ஆதார் பிரதியை (Xerox) கொடுக்க நேர்ந்தால், அதில் எதற்காகக் கொடுக்கிறீர்கள் என்பதைக் காரணத்துடன், தேதியுடன் குறிப்பிட்டு கொடுக்க வேண்டும்.
இல்லையென்றால், அந்தப் பிரதியை மற்றவர்கள் வேறு தேவைக்குப் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
இப்படிக் கொடுத்தாலும் ஏமாற்ற முடியும் என்றாலும், இது கூடுதல் பாதுகாப்பு அவ்வளவே!
முடிந்த வரை ஆதார் விவரங்களை எங்கும் கொடுக்க வேண்டாம்.
PAN அட்டை கடவுச்சீட்டு வாக்காளர் அடையாள அட்டை
PAN விவரங்களும் முக்கியம் என்பதால், இதையும் எங்கும் கொடுக்க வேண்டாம். இதையும் மற்றவர்கள் பணச் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தவறாகப் பயன்படுத்தி உங்களுக்குச் சிக்கலை ஏற்படுத்தலாம்.
கடவுச்சீட்டும் இந்த வகையே! எனவே, இவற்றையும் எங்கும் அடையாள, முகவரி சான்றாகத் தர வேண்டாம்.
வாக்காளர் அடையாள அட்டையைக் கொடுக்கலாம், இதையும் முடிந்தவரை தவிர்க்கப் பாருங்கள்.
ஓட்டுநர் உரிமம்
இருப்பதிலே பிரச்னையில்லாத / குறைவான RISK உள்ள அடையாள / முகவரி அட்டை என்றால், அது ஓட்டுநர் உரிமம் தான்.
எனவே, நீங்கள் எங்காவது KYC செய்ய வேண்டியிருந்தால், அடையாள அட்டை கொடுக்க வேண்டி இருந்தால், ஓட்டுநர் உரிமம் மட்டும் கொடுங்கள்.
“”சமீபத்தில் ஆதார் பற்றிய விதிமுறைகளை உச்சநீதிமன்றம் அறிவித்தது உங்களில் சிலருக்கு தெரிந்து இருக்கலாம். இனி, அரசு மானியம் பெறும் சேவைகளுக்கு மட்டுமே ஆதார் கட்டாயம்.”” – நன்றி கில்லாடி