பிண அரசியல்

7
NEET பிண அரசியல் உணர்ச்சிக் குவியலாக்கப்படும் NEET தேர்வு!

வ்வொரு வருட நீட் தேர்வின் போதும் தமிழகத்தில் சர்ச்சையாவது வழக்கமாகி விட்டது. இந்த ஆண்டும் (2020) வழக்கம் போலப் பிண அரசியல் துவங்கி விட்டது.

மருத்துவம் படிப்பது சிலருக்கு சிறு வயது விருப்பமாகவும், பெற்றோருக்குக் கௌரவமாகவும் இருப்பதால், அதிகளவில் வரவேற்பு காணப்படுகிறது. Image Credit

பிண அரசியல்

அடுத்த ஆண்டுப் பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், இந்த வருடம் நீட் தேர்வை வைத்து அரசியல் செய்வது உக்கிரமாக உள்ளது.

மாணவன் தற்கொலை செய்துகொண்டபின் அவனது குடும்பத்துக்கு உதவித்தொகையை அரசியல் கட்சிகள் வழங்கினார்கள். தற்கொலை செய்ததுக்கு நிதி உதவி செய்வது தவறான எடுத்துக்காட்டாக உள்ளது.

ஊடகங்கள் தங்கள் TRP க்காக இதையே நிமிடத்துக்கு ஒரு முறை கூறி, மாணவர்களையும், பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர்.

அரசியல்வாதிகளும், ஊடகங்களும் போட்டிபோட்டு எதிர்மறை செய்திகளையே கொடுத்தால், மக்கள் மனமும் எதிர்மறை எண்ணங்களுக்கே செல்லும்.

நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் பலர், நேர்மறையாகக் கூறும் கருத்துகளைத் தவிர்த்து, தேடிப்பிடித்து எதிர்மறை கருத்துகளையே கூறி மக்களை ஊடகங்கள் சோர்வடைய வைக்கின்றன.

மாணவர்களின் வாழ்க்கையில் விளையாடும் அரசியல்வாதிகள்

திமுக ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு நீக்கப்படும்‘ என்கிறார் ஸ்டாலின். மாநில அரசு எப்படி நீட் தேர்வை நீக்க முடியும்? இதை ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி ‘மத்தியில் காங் ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வை ரத்து செய்யும்‘ என்கிறார். அதாவது இவர்களே பாம் வைப்பார்களாம், இவர்களே அதையும் எடுப்பார்களாம்.

நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதே காங் அரசு தான் ஆனால், காங் ஆட்சிக்கு வந்தால் நீட்டை நீக்கும் என்கிறார். இவர் கட்சிக்காரர் ப.சிதம்பரம் அவர்களின் மனைவியே (நளினி சிதம்பரம்) நீட்டுக்காக வாதாடியவர்.

இவர்களது தலைவர் ராகுல் காந்தி அவர்களே நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார் என்பதை நாராயணசாமி அவர்கள் கவனிக்கவில்லை போல.

உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்றமே முடியாது என்று கூறிய பிறகும், தமிழகத்தைத் தவிர மற்ற மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பதால் மத்திய அரசும் இதை நீக்காது என்று நன்கு தெரிந்தும் மக்களை ஏமாற்றிக்கொண்டு உள்ளார்கள்.

கேரளாவை பாருங்கள்! கேரளாவை பாருங்கள்!! என்று இங்குள்ளவர்களால் எடுத்துக்காட்டுக் காட்டப்படும் கேரளாவே நீட்டுக்கு ஆதரவை தெரிவித்து விட்டது.

தற்கொலை செய்துகொண்டவர் குடும்பத்துக்கு வழங்கும் நிதியை, வெற்றிபெற நினைக்கும், ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு ஆரம்பித்து ஏன் உதவக்கூடாது?

இதே போலச் சுர்ஜித் என்ற குழந்தை ஆழ்குழாய் கிணற்றில் விழுந்த போது, இக்குழந்தையின் பெற்றோருக்கு நிதியும் அரசு பணியும் கொடுக்கப்பட்டது.

இக்குழந்தை விழுந்து இறந்தது பெற்றோரின் அஜாக்கிரதையால் ஆனால், அக்குழந்தையின் தாய்க்கு அரசுப் பணி!

இதைப்போல உதவும் அரசியல்வாதிகளின் எண்ணம் பொதுமக்கள் மீதான அக்கறையினால் அல்ல என்பது பலருக்கும் தெரிந்த உண்மை ஆனால், இவை தான் பேசப்படுகிறது. எதிலும் பிண அரசியல்.

மாறிய பாடத்திட்டம்

சமச்சீர் கல்வித்திட்டம் தோல்வியடைந்த கல்வித்திட்டம். இக்கல்வி முறையால் மாணவர்கள் கல்வித்திறன் மேம்படவில்லை, மற்ற மாநிலங்களின் கல்வித்திட்டத்தோடு ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கி இருந்தது.

தற்போதைய தமிழகக் கல்வித்துறையால் திருத்தப்பட்ட பாடங்கள் இந்தியாவில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இந்தாண்டு (2020) தேர்வு எழுதிய மாணவர்கள் பலரும் குறிப்பிட்டது, ‘11 மற்றும் 12 ம் வகுப்புப் பாடங்களை நன்கு படித்தாலே போதுமானது. கேள்விகள் அனைத்தும் 11 & 12 ம் வகுப்புப் பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டது‘ என்று கூறினார்கள்.

Blue print எனப்படும் முக்கியக் கேள்விகளை மட்டுமே படித்துத் தேர்வை எழுதும் மனப்பாட கல்வி முறை மாறி, புத்தகத்தைப் புரிந்து படித்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற நிலை வந்துள்ளது.

இந்நிலை மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தியுள்ளது. மனப்பாடம் செய்து எழுதுவதைத் தவிர்த்துப் பாடங்களைப் புரிந்து படிப்பதால், நீட்டை எளிதாக எதிர்கொள்ளும் நிலை வந்துள்ளது.

தமிழக மாணவர்கள் மிகத்திறமையானவர்கள் ஆனால், பாடத்திட்டம் சரியில்லை என்பதால், பிரச்சனைகளை எதிர் கொண்டார்கள்.

தற்போதைய பாடத்திட்டங்கள் அனைத்து தேர்வுகளையும் எதிர் கொள்ளும் மன வலிமையை மாணவர்களுக்குக் கொடுத்துள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் மிகச்சிறப்பான தேர்வு முடிவுகளைத் தமிழகம் பெறும்.

பொய் வாக்குறுதிகள்

தற்போது மாணவர்களுக்குத் தேவை உற்சாகமான வார்த்தைகளும், நம்பிக்கையூட்டும் செய்திகளுமே! ஆனால், இதற்கு அப்படியே எதிராகத் தமிழகத்தில் நடந்து கொண்டுள்ளது. பார்க்கவே வெறுப்பாக உள்ளது.

தற்போதைக்கு நடக்காது, நடைமுறையில் சாத்தியமில்லை என்று நன்கு தெரிந்தும் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மாணவர்களை நம்பிக்கை இழக்க வைத்து, பயமுறுத்தி அரசியல் செய்து வருகிறார்கள்.

தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள்

பிற்காலத்தில் நீட் தேர்வில் தமிழகமே முன்னணியில் இருக்கும், பயனைப் பெறும். தமிழக மாணவர்களின் கல்வித்திறனை இந்தியாவே கண்டு வியக்கப்போகிறது.

கடந்த வருடங்களில் இருந்தே இவற்றைக் கூறி வருகிறேன். கால அளவில் வேண்டும் என்றால் கூடுதல் குறைவு இருக்கலாம் ஆனால், நிச்சயம் நடக்கும்.

அரசியல்வாதிகளின் எதிர்மறை பேச்சுகளை ஒதுக்கி, திருத்தப்பட்ட பாடத்திட்டத்தைச் சரிவரப் படித்தாலே ‘நீட் வெற்றி’ மாணவர்கள் கைவசம்.

மாணவர்களே!

தயவு செய்து எதிர்மறை பேச்சுகளைக் கேட்காதீர்கள், முக்கியத்துவம் கொடுக்காதீர்கள், பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள்.

மிகப்பெரிய மருத்துவக் கல்லூரிகள் கோடிகளில் சம்பாதிக்க முடியாது என்பதால், எதிர்ப்புகளை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழகத்தில் பெரும்பாலான மருத்துவக்கல்லூரிகள் அரசியல்வாதிகளுடையது தான்.

நீட் தேர்வு என்பது மாற்ற முடியாதது என்ற நிதர்சனத்தை உணருங்கள். எனவே, நீட் தேர்வு ரத்து என்று ஒரு காலத்தில் வந்தால்! அப்போது பார்த்துக்கொள்ளலாம்.

நடைமுறை எதார்த்தம் புரிந்து அதன்படி நடந்து படிப்பில் வெற்றிப் பெறுங்கள்.

மருத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல

இவையெல்லாவற்றையும் விட மருத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல, இதில் தோல்வியடைந்தால் வேறு எதோ பெரிய வெற்றி உங்களுக்காகக் காத்துள்ளது என்று நேர்மறையாக எண்ணுங்கள்.

பெற்றோர்களும் உங்கள் கனவை பிள்ளைகள் மீது திணித்து நெருக்கடிக்கு உள்ளாக்காதீர்கள். சிறப்பாக எழுதும் மாணவரைக் கூட மன அழுத்தம் சுமாராக எழுத வைக்கும்.

விரும்பியது கிடைக்காமலே வாழ்க்கையைத் தொடர்பவர்கள் தான் உலகில் பெரும்பான்மையினர். எனவே வெற்றி பெற்றால் மகிழ்ச்சி அடையுங்கள், தோல்வி என்றால் துவண்டு விட வேண்டாம்.

இது போலக் கூறுவது எளிது ஆனால், கனவாகக் கண்டவர்களின் வலியை எங்களால் உணர முடியாது. எனவே, நிதர்சனத்தை உணர்ந்தால் வெற்றியையும் தோல்வியையும் கடந்து வரலாம்.

எண்ணம் போல வாழ்க்கை.

Read : தவறு செய்தால் 30+ இலட்சம்

7 COMMENTS

  1. கடைசி இரண்டு (தமிழக மாணவர்கள் சாதிப்பார்கள், மாணவர்களே! & மருத்துவம் மட்டுமே வாழ்க்கையல்ல) இந்த பாராவில் நீங்கள் குறிப்பிட்டது தான் யதார்த்தம் , நிதர்சனம் , உண்மை … ரொம்ப, அழகா, தெளிவா, அற்புதமா சொல்லி இருக்கீங்க ..

    படிச்ச படிப்புக்கு ஏத்த வேலை கிடைப்பது இல்லை, ஏதோ ஒரு வேலை என்று ஆரம்பித்து கல்வி கடன் , திருமணம் ,குழந்தைகள் , மருத்துவ செலவு , குடும்பம் என வாழ்க்கை வெவ்வேறு திசையில் பயணிக்க வைக்கிறது.. நாள்பட, நாள்பட வேலை மீதான பயம் அதிகரித்து, எந்த முடிவையும் எடுக்க முடியாமலே ஆயுள் முடிந்து போகிறது ..

    ஒரு விஷியம் ரொம்ப நாளா புரியில கிரி, யாரோ ஏதோ ஒரு காரணத்துக்காக இறந்து போன உடனே அரசியல் கட்சிகள் உடனே போட்டி போட்டு கொண்டு நிவாரண தொகையை அறிவிக்கின்றனர் .. அந்த நிவாரண தொகை பாதிப்படைந்தவர்களுக்கு சரியாக செல்கிறதா இல்லையா என்பது என் நீண்ட நாள் சந்தேகம் ..

    அதுமட்டும் இல்லாமல் அரசாங்கமும் உடனே வேலை வாய்ப்பையும் அளிக்கிறது .. இங்கு படித்து விட்டு 20 / 30 வருடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களின் நிலை என்ன சொல்ல ??? எந்த அரசியல்வாதியும் அவருடைய சொந்த கணக்கிலிருந்து உதவிகள் புரிவதை நான் செய்திகளில் பார்த்ததில்லை ..

    (தற்போதைய பாடத்திட்டங்கள் அனைத்து தேர்வுகளையும் எதிர் கொள்ளும் மன வலிமையை மாணவர்களுக்குக் கொடுத்துள்ளது. எனவே, இனி வரும் காலங்களில் மிகச்சிறப்பான தேர்வு முடிவுகளைத் தமிழகம் பெறும்.) நானும் நம்புகிறேன் கிரி .. பகிர்வுக்கு நன்றி கிரி ..

  2. ஆறாவது வரைக்கும் IPS ஆகணும்னு நினைச்சி அதையே சொல்லிட்டு இருந்தேன் .. வைஜெயந்தி IPS பாத்து 7 – 10 ஜுரம் வந்து விழுந்து அப்புறம் நோ ஆம்பிஷன்.. Aeronautical Engineer ஆக ஆசைப்பட்டு பீஸ் கேட்டு மயக்கம் வந்து டிப்ளோ படிச்ச வரை போதும் ஆகிடுச்சு…
    இப்போ திரும்பி பார்த்த என்கூட படிச்ச 50 friends நல்லா சூப்பர் அஹ தான் இருக்குங்க…
    parents தான் பசங்களுக்கு பக்க பலமா இருக்கணும்… அத விட்டுட்டு டாக்டர் ஆகிடுனு நீ படிச்சா டாக்டர் தான்னு எல்லாம் சொல்லி குழந்தைகளை பிரஷர் குடுக்க கூடாது …

  3. @யாசின் நமக்குப் பிடித்தது கிடைத்தால் தான் வாழ்க்கை என்றால், இந்தியாவில் பெரும்பாலோனோர் தற்கொலை தான் செய்ய வேண்டும்.

    “இந்த நிவாரண தொகை பாதிப்படைந்தவர்களுக்கு சரியாக செல்கிறதா இல்லையா என்பது என் நீண்ட நாள் சந்தேகம்”

    இது போல அரசியலுக்காகச் செய்யப்படும் உதவிகள் சரியாகச் செல்லும் ஆனால், மக்களுக்கு நியாயமாகச் செல்லும் உதவிகள் செல்லாது. இது தான் வித்யாசம்.

    “இங்கு படித்து விட்டு 20 / 30 வருடம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து விட்டு காத்திருப்பவர்களின் நிலை என்ன சொல்ல ?”

    இவர்களை முட்டாள் ஆக்கி விடுகிறார்கள். தவறு செய்தவருக்கு அரசு வேலை!

    “எந்த அரசியல்வாதியும் அவருடைய சொந்த கணக்கிலிருந்து உதவிகள் புரிவதை நான் செய்திகளில் பார்த்ததில்லை”

    ஏனென்றால் அவர்கள் அரசியல்வாதிகள் 🙂 .

    @சீதா “parents தான் பசங்களுக்கு பக்க பலமா இருக்கணும்… அத விட்டுட்டு டாக்டர் ஆகிடுனு நீ படிச்சா டாக்டர் தான்னு எல்லாம் சொல்லி குழந்தைகளை பிரஷர் குடுக்க கூடாது”

    சரியா சொன்னீங்க. மற்ற பிரச்சனைகள் ஒரு பக்கம் என்றால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு நெருக்கடி கொடுக்கக் கூடாது.

    டாக்டர் டாக்டர் என்று கடும் மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகிறார்கள். மருத்துவம் அல்லாது எத்தனையோ பல சிறப்பான துறைகள் உள்ளது.

    இவர்களோ இது தான் வாழ்க்கை என்பது போல ஒரு மாயையில் இருக்கிறார்கள்.

    @Ranjith Ramadasan நன்றி

  4. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல நம்பிக்கைகளை தரவேண்டும்.மருத்துவம் இன்றி வேறு பல நல்ல துறைகள் உள்ளன. கல்விக்கூடங்களும் 11&12 வகுப்பு மாணவர்களுக்கு மருத்துவம் அன்றி வேறு துறைகளில் இருக்கும் வாய்ப்புகளை விளக்கலாம். இங்கிருக்கும் அரசியல்வாதிகளும் ,கட்சிகளும் தவறான முறையில் மாணவர்களையும் , பொதுமக்களையும் வழிநடத்துகின்றன.

    மேலும் நீங்க சொன்னது போல தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்களின் குடும்பத்திற்கு பணம் மற்றும் அரசாங்க வேலை வழங்குவது தவறான உதாரணம் என நானும் உணர்ந்துள்ளேன்.

    – பயபுள்ள

  5. @பயபுள்ள அரசியல்வாதிகள் எதிர்ப்புகளைத் தெரிவிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை, மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதலுக்கு பயன்படுத்தினாலே பிரச்சனை இருக்காது ஆனால், அரசியல்வாதிகள் விரும்புவது பிரச்சனை என்பதால் தொடர்ந்து கொண்டே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here