பயணக் குறிப்புகள் [நவம்பர் 2017]

4
Bairavi Temple Gobi

ங்கள் கிராமம் அருகே உள்ள இன்னொரு கிராமம் ஆண்டிபாளையம். இங்கே எங்க தாத்தா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பத்துக்குக் கட்டுப்பட்டவர்கள்.

எந்த ஒரு முக்கிய நிகழ்வு என்றாலும் எங்கள் அப்பாவைக் கலந்தாலோசிக்காமல் செய்ய மாட்டார்கள்.

இங்கே கடந்த 16 மகாமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது.

என்னுடைய அப்பாக்கு உடல்நிலை சரியில்லை. மிகவும் பலகீனமானதால், தற்போது ஓய்வில் இருக்கிறார்.

எனவே, கும்பாபிஷேகத்துக்கு அப்பாவால் செல்ல முடியாததால், எங்கள் குடும்பத்தில் யாராவது செல்ல வேண்டும் என்பதால், விடுமுறை போட்டுச் சென்று இருந்தேன்.

அம்மாவையும் அழைத்துச் சென்று இருந்தேன். பரிவட்டம் எல்லாம் கட்டி,  கும்பாபிஷேகம் நடக்கும் போது மேலே அழைத்துச் சென்று விட்டார்கள்.

“பில்டிங் ஸ்ட்ராங் பேஸ்மெண்ட் வீக்” போல மேலே செல்லும் போது ஆகி விட்டது.

வேட்டி வேற கட்டி இருந்தேன், மடித்துக் கட்டாமல் கையிலேயே பிடித்துச் சென்றதால், கிடுகிடு என்றாகி விட்டது.

நான் உயரம், மேலே இருந்த தட்டி உயரம் குறைவு என்பதால், ஒரு வித பயத்துடனே நின்று கொண்டு இருந்தேன்.

வாழ்க்கையிலேயே முதல் முறையாகக் கும்பாபிஷேகத்தை அருகில் இருந்து பார்த்தேன்.

அனைவரும் மிக மரியாதையாக நடத்தினார்கள், கூச்சமாகவும் இருந்தது.

கவுண்டர் சொல்ற மாதிரி “டேன்ஸ் எல்லாம் ஆட சொல்லுவாங்க போல டோய்” என்பது மாதிரி எங்காவது மைக்கை கொடுத்து பேச சொல்லிவிடுவார்களோ என்று பீதியாகி விட்டது.

நல்லவேளை அப்படி எதுவும் நடக்கவில்லை 🙂 .

பெண்கள் நகைகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள் என்று மைக்கில் அறிவிப்புச் செய்து கொண்டே இருந்தார்கள், இருப்பினும் யார் கேட்கிறார்கள்.

கூட்ட நெரிசலை பயன்படுத்தி இரண்டு பெண்களிடம் 5 + 4 பவுன் நகையை அடித்து விட்டார்கள்.

பாவம் அவர்கள்.. ஒரே அழுகை. 5 பவுன் என்றாலும் 1 லட்சம் மேலே வருகிறது. இனி திரும்ப வாங்குறது எல்லாம் எவ்வளவு கடினம்!

அன்னதானம் முடித்து வழியனுப்பிய பிறகே நகர்ந்தார்கள். ஆண்டிபாளையம் மக்களுக்கு நன்றி.

வெளிநாட்டில் (சிங்கப்பூரில்) இருந்து இருந்தால், இது போல அப்பாவை பார்ப்பதோ, மற்ற பணிகளில் உதவியாக இருப்பதோ முடியாத காரியம்.

எனவே, சென்னை வந்ததைத் திரும்ப ஒரு முறை நினைத்து மகிழ்ச்சி அடைந்து கொண்டேன்.

சதாபிஷேகம்

அப்பாக்கு நாங்கள் பெரியளவில் எந்த மகிழ்ச்சியையும் கொடுக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனவே, அக்காக்கள் உடன் பேசி அனைவரும் சேர்ந்து சதாபிஷேகத்தை அப்பாவுக்குச் சிறப்பாகச் செய்வோம் என்று விழாவாகச் செய்தோம்.

அதன் பிறகு தான் அப்பா மிகத் தளர்ந்து விட்டார்.

தனக்கு வயதாகி விட்டது என்று அவரே மனதளவில் நினைத்துக்கொண்டாரா?! அல்லது விழா போல நடத்தியதால் கண் பட்டு விட்டதா? என்று தெரியவில்லை.

ஏனென்றால், அதற்கு முன் வரை மிக உற்சாகமாகத் திடமாக இருந்தார். யாருமே அவருக்கு 80 வயது என்றால் நம்ப மாட்டார்கள்.

எது எப்படி இருந்தாலும், உங்கள் குடும்பத்தில் அறுபதாம் திருமணம், சதாபிஷேகம் செய்தாலும் எளிமையாகச் செய்து முடித்து விடுங்கள், பெரியளவில் வேண்டாம்.

இது எனக்குத் தோன்றியது. நான் கூறுவது தவறாகக் கூட இருக்கலாம்.

8 போடுங்க

தியான நண்பர்களின் பரிந்துரையில் என்னுடைய அக்கா உடல் எடையைக் குறைக்கவும், உடலுக்குப் பயிற்சி அளிக்கவும், தினமும் 8 வடிவில் அரை மணி நேரம் நடக்கிறார்கள்.

பயிற்சி மிக எளிதாகவும், உடலுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதாகவும் அதோடு உடல் எடையும் குறைந்து, வேலைகளைச் செய்ய எளிதாக உள்ளதாகக் கூறினார்.

என்னுடைய அம்மா 8 போட்டே சக்கரையைக் குறைத்து விட்டார். பின்விளைவுகள் இல்லாத பயிற்சி எனவே, அனைவரும் முயற்சியுங்கள் குறிப்பாகப் பெண்கள்.

நிச்சயம் வித்யாசத்தை உணர்வீர்கள்.

ஈஷா

என்னோட அண்ணன் (பெரியப்பா பையன்) கூட இரு சக்கர வாகனத்தில் சத்தியில் உறவினரின் திருமண வீட்டுக்குச் சென்று வந்தோம்.

வரும் வழியில் கொடிவேரி அணைக்கு முன்பு புதிதாக “லிங்க பைரவி” கோவில் ஒன்றை ஈஷா யோக மையம் ஆரம்பித்து இருக்கிறார்கள், சென்று வரலாம் என்று கூறினார்.

எனக்கு ஈஷா பிடிக்காது, ஜக்கியை சுத்தமா பிடிக்காது. எனக்குச் செல்ல விருப்பமில்லை இருப்பினும் அண்ணனுக்காகச் சென்று வந்தேன்.

கோவில் ஒரே மண்டபம் மட்டுமே! மிக எளிமையாக அழகாக இருந்தது.

விரைவில் தியான மண்டபம் அப்படி இப்படி என்று அந்தப் பகுதி முழுக்க வளைத்து விடுவார்கள் இன்னும் ஐந்து அல்லது பத்து வருடங்களில்.

கோவிலில் நீங்கள் சுற்றிப்பார்க்க ஒன்றுமில்லை. ஒரே ஒரு சிறிய மண்டபம் (மேலே படத்தில் உள்ளது) எனவே, ஒரு சுத்தலில் முடிந்தால், அடுத்தது என்ன என்று மனம் யோசிக்கும்.

சரி தியான மண்டபம் போலாம், மற்றவற்றைப் பார்க்கலாம் என்று தோன்றும்.

இடமும் சரியான தேர்வு. கொடிவேரி அணைக்கு வருகிறவர்கள் ஒரு எட்டு இங்கேயும் சென்று பார்த்து வரலாம் என்ற தொலைவில் கோவில் உள்ளது.

எனவே, அணைக்கு வரும் கூட்டம் இங்கேயும் வரும்.  அதோடு சத்தி கோபி முதன்மை சாலையிலேயே கோவில் அமைந்துள்ளது.

ஏற்கனவே, ஈஷா யோகா தங்களுக்கான சந்தையைக் கோபியில் பிடித்து விட்டார்கள். அதை மிகச் சாமார்த்தியமாகச் சந்தைப் படுத்தி வருகிறார்கள், மற்றவர்கள் அறியாமலே!

ஊழியர்களுக்குத் தியானம் இலவசமாகச் சொல்லித் தருகிறேன் என்று நிறுவனங்களில் அனுமதி கேட்கிறார்கள். பின்னர் அப்படியே அவர்களை ஈஷா க்கு பக்தராகச் சந்தை படுத்துகிறார்கள்.

தற்போது தியானம் மட்டும் போதாது, மக்களைக் கவர வேண்டும் என்றால் கோவில் வேண்டும் என்று “லிங்க பைரவி” கோவில் வைத்து இழுக்கிறார்கள்.

தியானத்துக்கு ஆர்வம் காட்டாதவர்கள் கூடக் கடவுள் என்றால் வந்து விடுவார்கள்.

இதைத் தான் இவர்களும் எதிர்பார்க்கிறார்கள். இதன் பிறகு நன்கொடை, லிங்க பைரவி சிலை விற்பனை, ஈஷா பொருட்கள் என்று தலையில் மிளகாய் அரைக்கிறார்கள். இதைப் பெருமையாக நினைத்து வாங்குபவர்களே அதிகம்.

ஜக்கி சில நல்ல கருத்துகளையும் கூறுகிறார், தியானம் நல்லது என்பதில் மாற்றுக்கருத்தில்லை அதற்காக இவரின் கேடித்தனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.

நான் மிகவும் வெறுப்பவர்களில் ஜக்கியும் ஒருவர். என்ன செய்தால் மக்கள் வந்து விழுவார்கள் என்பதைத் தெரிந்து வைத்து இருக்கும் திறமையான வித்தைக்காரர்.

பவானி சாகர் அணை

பவானி சாகர் அணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், கோபி மூன்று வருடங்களுக்குப் பிறகு பச்சை போர்வை போத்தியுள்ளது. பார்க்கவே மனதுக்கு நிறைவாக இருந்தது.

விவசாயிகள் நீண்ட மாதங்களுக்குப் பிறகு விவசாயப் பணிகளில் தீவிரம் அடைந்துள்ளார்கள்.

கோபியில் பெரியளவில் மழை பெய்யவில்லை, இருப்பினும் பவானி சாகர் அணை தண்ணீர் பசுமையை, விவசாயத்தை மீட்டுள்ளது.

அக்காக்கள் உடையான்….

சென்னை கிளம்பும் போது வீட்டில் மிளகாய் குழம்பு செய்து இருந்தார்கள். செம்ம சுவையாக இருந்தது.

நிறையச் சாப்பிட்டு போகிற வழியில் பிடிங்கிடுச்சுன்னா என்ன பண்ணுறதுன்னு பீதியானதால், அரைகுறை மனதோடு கொஞ்சமாகச் சாப்பிட்டேன்.

அப்பாவை கவனித்துக் கொள்ள இரண்டு அக்காவும் மாற்றி மாற்றி வீட்டில் தான் இருக்கிறார்கள். நேரமின்மை காரணமாக அதிகம் பேச முடியவில்லை என்றாலும்  உடன் இருந்தது மகிழ்ச்சி.

நான் அப்பாக்குச் செய்ய வேண்டியதை இவர்கள் இருவரே செய்து வருகிறார்கள். அப்பா அம்மா மீதான இவர்களின் அன்பு அளவில்லாதது.

[பிரச்சனைகள் செய்யாத 😀 ] அக்காக்கள் உடையான் படைக்கு அஞ்சான் 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. ஆண்டிபாளையம் நிகழ்வு நிச்சயம் ஒரு வித்தியாசமான அனுபவம். தேவர்மகன் சிவாஜி அய்யா, கமல் சார் நியாபகம் வருகிறது.. வெளிப்புறம் இது தேவையா??? என்று மனதிற்கு தோன்றினாலும் உங்களின் உள்மனது கண்டிப்பாக ஒரு வித பரவசம் அடைந்து இருக்கும். எங்கள் தாத்தா வீட்டின் வயலுக்கு இப்பவும் செல்லும் போது இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு.. அவர்களின் கனிவும், பாசமும், மரியாதையும் இதற்கு விலையில்லை… ஸ்டார்ட் மியூசிக்!!!

    சதாபிஷேகம் நிகழ்வு : அனுபவம் கொஞ்சம் வேதனையான ஒன்று.. 2015 வீடு கட்டி குடியேறிய பின் 10 நாட்கள் படுத்த படுக்கையில் இருந்தேன். அம்மாவும், உறவினர்களும், நண்பர்கள் சொன்னது கண் திஸ்டி என்று.. இது போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. இருப்பினும் என்றுமே உடல் சரியில்லையென்று படுத்தது கிடையாது.. பேய் இருக்கா??? இல்லையா????

    ஈஷா : உங்கள் கருத்துடன் ஒத்து போகிறேன். எங்க ஊர் பக்கம் 20 / 25 வருடம் முன்பு கிருத்துவர்கள் கிட்டத்திட்ட இதே நோக்கில் வந்து 80 % மக்களை மதமாற்றம் செய்தனர். இன்று எல்லோரும் கிருத்துவதையே பின்பற்றுகின்றனர். ஒரு மதத்தின் கொள்கைகள் பிடித்துப்போய் அதன் மீது ஈர்ப்பு கொள்வது வேறு!!! திணிப்பது வேறு!!!

    பாதைகள் வேறு மாதிரி இருந்தாலும் கிட்டத்திட்ட அதன் நோக்கம் பணத்தை நோக்கியே இருக்கும். இது போன்று எல்லா மதத்திலும் பல குழுக்கள் உண்டு.. இவற்றை நம்பி ஏமாறும் பண முதலைகளை பற்றி கவலை இல்லை.. ஆனால் அப்பாவி ஏழை மக்களின் நிலை?????

    பவனி சாகர் : புகைப்படம் அட்டகாசமாக இருக்கிறது.. பழைய நினைவுகளை கிள்ளுகிறது.. நிச்சயம் அடுத்த விடுமுறையில் சக்தியுடன் ஒரு பயணத்தை மேற்கொள்வேன் என நம்புகிறேன்.

    அக்காக்கள் உடையான் : இந்த பாக்கியம் எனக்கு குடுத்து வைக்கவில்லை.. நீங்கள் அதிஷ்டசாலியே!!! நல்ல பசியான நேரத்தில் நமது உணவை உறவுகளுடன் சேர்ந்து, நாம் உண்ணாமல் அவர்களை உண்ண வைப்பதில் வரும் ஆனந்தம்… வார்த்தைகளால் கூற முடியாது. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. ரசிக்கக்கூடிய பதிவு.

    சதாபிஷேகம்- ‘கண்ணேறு படுவது’ இதை நான் நம்புகிறேன்.

    ஈஷா – யாசின் அவர்கள் சொன்னதைப்போல கிறித்துவர்கள் மதமாற்றம் செய்ததால், ஜக்கி செய்வதற்கு அரசு ஆதரவு இருப்பதுபோல் தெரிகிறது. இருந்தாலும் உங்கள் கருத்துடன் ஒத்துப்போகிறேன்.

    எட்டுப்போட்டு பார்க்கிறேன். பிரயோசனம் இருந்தால் சொல்கிறேன்.

  3. @யாசின் பேய் இருக்கா??? இல்லையா???? என்று தெரியாது ஆனால், எதிர்மறை எண்ணங்களுக்கு வலு அதிகம் என்று தெரியும். அவ்வகை எண்ணங்களே நம்மை இதுபோல சமயங்களில் பாதிப்படைய செய்கின்றன. அதுவே கண்திருஷ்டி என்று அழைக்கப்படுகிறதோ என்னவோ

    வாய்க்கால் படம் கடந்த வருடம் சென்ற போது எடுத்தது. இப்பவும் இப்படித்தான் உள்ளது.

    @தமிழன் & கார்த்திக் கண்டிப்பா 8 போட்டுப்பாருங்க, மாற்றம் தெரியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!