தீரன் அதிகாரம் ஒன்று [2017] | பேய் துரத்தல்

7
Theeran Athigaram Ondru movie தீரன் அதிகாரம் ஒன்று

மிழகத்துக்கு வந்து கொள்ளையடிக்கும் வடமாநில கொள்ளையர்களைத் தனிப்படை அமைத்துப் பிடித்த உண்மைக் கதையே “தீரன் அதிகாரம் ஒன்று”

தீரன் அதிகாரம் ஒன்று

படம் பார்க்கும் முன்பே பலர் நன்றாக இருக்கிறது என்று ரொம்பக் கூறி விட்டதால், துவக்கத்தில் கார்த்தி ப்ரீத்தி சிங் காட்சிகளைப் பார்த்த போது “என்னடா இது இப்படிப் போகுது, எப்ப முதன்மை கதை வரும்?” என்று தான் இருந்தது.

கார்த்தி ப்ரீத்தி சிங் காட்சிகளை மட்டும் சுருக்கி இன்னும் முதிர்ச்சியாக எடுத்து இருந்தால், படம் தாறுமாறாக இருந்து இருக்கும். மற்றதில் கவனம் செலுத்திய இயக்குநர் இதில் எப்படிக் கோட்டை விட்டார் என்று புரியவில்லை.

அதோடு இயக்குநர்களுக்கு மீண்டும் அதே வேண்டுகோள். தயவு செய்து நாயகிகளைக் கிறுக்கு நாயகிகளாகக் காட்டாதீர்கள்.

தமிழ் பொண்ணுக நீங்க நினைக்கிற மாதிரி மங்குணிக கிடையாது. நல்ல விவரமானவங்க, உஷாராக இருப்பவங்க. இயல்பாகக் காட்ட முயற்சியுங்கள்.

கார்த்தி

கார்த்தி புத்திசாலி காவல் அதிகாரி, உடனுக்குடன் சுறுசுறுப்பாக முடிவெடுக்கக்கூடிய திறமையுள்ளவர்.

2003 ல் இருந்து நடக்கும் கதையாக வருகிறது. எனவே, அப்போது இருக்கும் தொழில்நுட்பம், வசதியை வைத்துக் கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.

கொள்ளை அடிக்க வருபவர்களின் வன்முறை தாக்குதல்களைத் துப்பறிந்து அதன் தொடர்ச்சியாகக் கதை வட மாநிலங்களில் பயணிக்கிறது.

தமிழ்ப் படங்கள் எல்லாம் நம்ம ஊருக்குள்ளேயே சுற்றிக்கொண்டு இருந்து வட மாநிலங்கள் சும்மா தொட்டுக்கொள்ள இல்லாமல் முழுமையாக இப்படம் பயணிப்பது பார்க்கும் தமிழ் பார்வையாளர்களுக்குப் புது அனுபவமே!

இப்படிப்பட்ட காட்டுத் துரத்தல் படத்துக்குப் பின்னணி இசை சரியில்லை என்றால், படத்தோட வேகமே போய் விடும்.

அதோட கதையை மிரட்டலாகக் கொண்டு செல்ல மிக உதவும் காரணங்களில் பின்னணி இசைக்கு மிக மிக முக்கியத்துவம் உண்டு.

படம் பார்க்கும் போதே யாருயா பின்னணி இசை என்று நினைக்க வைத்து தேட வைக்கணும். இதில் ஜிப்ரான் மிரட்டி இருக்கிறார் குறிப்பாகக் காட்சிகளுக்குத் தகுந்த பின்னணி இசை.

வட மாநில கொள்ளையர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற பின்னணி இசை செம்ம மிரட்டலாக இருக்கிறது. பின்னணி இசைக்காவே இன்னொரு முறை பார்க்க நினைக்கிறேன்.

ராஜஸ்தான்

கார்த்தி குழுவினர், ராஜஸ்தானில் கொள்ளையர்கள் கிராமம் செல்லும் போது அங்கே நடக்கும் சம்பவங்கள் செம்ம மிரட்டலாக இருக்கிறது.

அங்கே இருந்து தப்பிப்பது என்பது கனவிலும் நடக்கும் என்று தோன்றவில்லை, மிகைப்படுத்தப்பட்டது.

காவலர்கள் குடும்பத்தை விட்டு, சரியான உணவு இல்லாமல், மேலதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் இரவு பகலாகச் சிரமப்பட்டுக் கடும் வெயிலில் மாட்டிக் கொள்ளையர்களைத் தேடி அலையும் போது..

நாம் போகிற போக்குல காவலர்களை ஒட்டுமொத்தமாகக் கேவலப்படுத்தி விடுகிறோம் ஆனால், இது போன்ற காவலர்களின் அர்ப்பணிப்பை பார்க்கும் போது கண்கலங்குவது என்னவோ உண்மை.

ஆனால் ஒன்றுமே தெரியாமல் பல நிகழ்வுகள் “கொள்ளையர்கள் பிடிக்கப்பட்டார்கள்” என்ற செய்தியோடு தின வாழ்க்கையில் கடந்து விடுகின்றன.

இடைவேளைக் காட்சிகள் “High Voltage” போலச் சரவெடியாக இருக்கிறது. இது போல இடைவேளையைப் பார்த்து நீண்ட காலமாகிறது. அதே போல இறுதி காட்சிகள் நெருங்கும் போதும்.

பேருந்து தூரத்தல்

பேருந்து தூரத்தல் காட்சிகளில் சண்டை இயக்குநர் நாசம் செய்து இருக்கிறார். இதை எழுதும் போதே உடல் சிலிர்க்கிறது. செம்ம செம்ம.

ராஜஸ்தான் காட்சிகள், பாலைவனம், புழுதி, மழை என்று ஒளிப்பதிவாளர் அப்படியே கண்முன் நிறுத்துகிறார்.

சதுரங்க வேட்டை என்ற படத்தைக் கொடுத்த போது அட! முதல் படத்திலேயே திரைக்கதைல கலக்கி இருக்காருப்பா மனுசன் என்று நினைத்தேன்.

இதில் யம்மாடி! பின்னிட்டாரு.. அடி தூள்.

வில்லனாக வருபவர் மிரட்டி உள்ளார். தாங்கள் துரத்தப்படுவதை உணர்ந்து, துரத்தப் பட வேண்டியது நாமல்ல, காவல்துறை என்று கார்த்திக் குழுவினரை திட்டம்போட்டு சிக்க வைக்கும் காட்சிகள் வயிற்றைப் புரட்டுகிறது.

படம் பேய் துரத்தல்! Liam Neesan படமான Taken படத்தை இத்துரத்தல் நினைவுபடுத்தியது.

சுருக்கமா படம் பச்சை மிளகாயை நறுக்குன்னு கடிச்ச மாதிரி ஜிவ்வுனு இருக்கு.

நடித்த அனைவருக்கும், இயக்குநர் மற்றும் அனைத்து தொழில்நுட்ப குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். இது உண்மை கதை என்பதையே நம்பச் சிரமமாக உள்ளது.

சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் அனைவருக்கும் மரியாதை கலந்த வணக்கங்கள்.

கொசுறு

நல்ல படம் வந்தால், இப்படித் தொடர்ச்சியாக வருகிறது. இல்லையென்றால், எதுவுமே வருவதில்லை. அவள், அறம் தற்போது தீரன். ரொம்ப வருடங்களுக்குப் பிறகு மூன்று திரைப்படங்கள் திரையரங்கில்.

பரிந்துரைத்த அனைவருக்கும் நன்றி. எதிர்பார்ப்பு வீணாகவில்லை.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. என்ன கிரி ஒன்னும் புரியல??? சென்ற வாரம் நண்பன் ஒருவன் இந்த படத்துக்கு போவதாக சொல்லி கூப்பிட்டான்… வேறுவேலை இருந்ததால் செல்லவில்லை. மறுநாள் படத்தை பற்றி விசாரித்தேன். படம் ஓகே.. என சாதாரணமாக சொன்னான். ஆனால் உங்க விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது.. இந்த பதிவுல படத்தை பற்றிய அடிக்குறிப்பு எழுதல??? நடிகர், இயக்குனர், இசை…. etc

  உண்மை சம்பவமாக இருப்பினும் கூட சினிமாவுக்காக சில மாறுதல்கள் செய்வது இயல்பு.. காவல் துறையில் திரை மறைவில் இருக்கும் பல சோகமான நிகழ்வுகளும் உண்டு. கல்லூரியில் பயின்ற நெருங்கிய நண்பன் தந்தையும் காவல் அதிகாரி, என் நண்பனின் அண்ணனும் காவல் துறையில் பணிபுரிபவர். இறுதியாண்டு முடிக்கும் முன்பே என் நண்பனும் காவல் துறையில் சேர்ந்து விட்டான்.

  இன்னும் தொடர்பில் தான் இருக்கிறான். சில நேரங்களில் பணியினை பற்றி விசாரிக்கும் போதுதான் அவனின் இரண்டாம் பாகம் தெரியும்… நாம் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறோம் என்று… பகிர்வுக்கு நன்றி கிரி.

 2. “படத்தில் வட மாநிலத்தார் தமிழ் பேசுவது உறுத்தலாக இருந்தாலும், அதைச் சரியாகக் காட்ட வேற மாதிரி காட்சிகள் வைத்து, இன்னும் மோசம் தான் ஆகிறது.”
  .
  .
  படத்தை நீங்க ஆரம்பத்தில் இருந்து பார்க்கவில்லை
  டைட்டில் போடும் போது வெளி மாநில /மொழி உரையாடல்கள் புரிதலுக்காக தமிழில் பேசுவது போல் அமைத்திருக்கின்றோம் என்று போட்டார்கள்

 3. @யாசின் உங்க நண்பர் கூறியதை விட்டுத்தள்ளுங்க.. அவசியம் பாருங்கள். உங்களுக்கு பிடிக்கும்.

  @சுரேஷ் நலமா? 🙂

  @காளிதாஸ் நான் முதலில் இருந்து தான் பார்த்தேன், தாமதமாக வருகிறவர்கள்
  இந்த அறிவிப்பை போடும் போது மறைத்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  இதில் முழுக்க தமிழ் பயன்படுத்தவில்லை (சிறுத்தை படம் போல) சிலர் அந்த மாநில மொழிகளை பேசுகிறார்கள்.

 4. கிரி… இந்தப் படம் நல்ல படம்தான்.

  “அங்கே இருந்து தப்பிப்பது என்பது கனவிலும் நடக்கும் என்று தோன்றவில்லை” – இது கொஞ்சம் நம்பகத் தன்மை இல்லாமல் எடுத்ததுபோல் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். ஊர் முழுக்க சண்டைபோடும்போது, இவர்கள் தப்பிக்க வாய்ப்பே இல்லை.

  பெண் பத்தாவது ஃபெயில். ஆனால் குரூப் 1 பாஸ் செய்த இளைஞன் விரும்புவதாகவும், அதற்குள்ளேயே ஏடாகூடக் காட்சிகளையும் வைத்துள்ளது கொஞ்சம் டீசன்டாக இல்லை.

  மற்றபடி, வடவர் தமிழ் பேசுவதுபோல் படம் இல்லையென்றால் புரிந்துகொள்வதில் சிரமம் ஏற்பட்டிருக்கும். (படம் வெற்றிபெறாது). ரோஜா படம் போல், ‘அவர்’ தமிழ்னாட்டில் சில மாதங்கள் (வருடங்கள்) இருந்ததால் தமிழ் பேசுவதுபோல் வைத்தது ஒரு டெக்னிக். இதை எல்லாருக்கும் பயன்படுத்த முடியாது.

  எப்போவுமே, நாம சர்வ சாதாரணமாக, அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும், போலீஸையும் குறைகூறிவிடுகிறோம். (அரசியல்வியாதி என்றுதான் எழுதுகிறோம்). அது பாதிக்குப் பாதி, இல்லை கொஞ்சத்துக்குக் கொஞ்சம் நல்லவங்களாக இருப்பவர்களையும், ‘என்ன செய்தாலும் கெட்டபேர்தான், ஏன் வாழ்க்கையை கஷ்டப்பட்டு வாழ்ந்து எதையும் அடிக்காமல் நேர்மையாக இருந்து, குடும்பத்திடமும் ரொம்ப நல்லபேர் இல்லாம, பார்க்கிற மக்களும் நம்மைக் கெட்டவனாகவே சொல்லும்போது, நாமும் மற்றவர்கள்போலவே இருந்துவிடுவோமே என்று யோசிக்க வைக்கும்.

 5. @நெல்லைத்தமிழன்

  “பெண் பத்தாவது ஃபெயில். ஆனால் குரூப் 1 பாஸ் செய்த இளைஞன் விரும்புவதாகவும், அதற்குள்ளேயே ஏடாகூடக் காட்சிகளையும் வைத்துள்ளது கொஞ்சம் டீசன்டாக இல்லை.”

  உண்மை.

  இது போல காட்சிகளே இல்லாமல், ஏற்கனவே இவர்கள் இருவரும் காதலித்து இருந்தார்கள் என்று கதையை கொண்டு சென்று இருந்தால், 15 நிமிடத்தை குறைத்து இருக்கலாம்.

  அவ்வளோ சிறப்பாக படம் எடுத்துவிட்டு இது போல சின்ன விஷயங்களை எப்படி கவனிக்க மறக்கிறார்கள்!

  “நாமும் மற்றவர்கள்போலவே இருந்துவிடுவோமே என்று யோசிக்க வைக்கும்”

  சரியா சொன்னீங்க.

 6. ராட்சசன் விமர்சனம் படித்துக் கொண்டு வந்த போது இந்தப் பதிவு இணைப்பு கண்டு உள்ளே வந்தேன். ஒரு படத்தை புத்தகம் போல பாடமாக பல முறை பலமுறை இன்னமும் பார்த்துக் கொண்டே இருப்பது இந்தப் படம் தான். அந்த அளவுக்கு இந்தப் படத்தில் இயக்குநர் அவரைச் சார்ந்தவர்கள் இந்தப் படத்தில் உழைத்துள்ளார்கள். இயக்குநர் வினோத் அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here