வீட்டில் அனைவரும் கோடை விடுமுறைக்கு ஊருக்குச் சென்று விட்டார்கள். எனவே, வார இறுதியில் வீட்டுல பசங்க பஞ்சாயத்து இல்லாமல் படம் பார்க்கலாம் என்றால், வெய்யில் பொளக்குது, சாப்பிட வெளியே செல்லவே கொடூரமாக உள்ளது.
அதை விடத் தண்ணீர் பிரச்னை உச்சத்தில் உள்ளது. இங்கே தண்ணீருக்கு சிரமப்பட்டு இருப்பதை விட, ஊருக்கே போய்டலாம் என்று வார இறுதியில் ஊருக்கு சென்று விடுகிறேன்.
இதன் காரணமாகவே அதிகம் எழுத முடியவில்லை, திரைப்பட விமர்சனமும் குறைந்து விட்டது.
தண்ணீர் பிரச்னை காரணமாக வார இறுதியில் ஊருக்கு செல்வது, இனி வரும் வாரங்களிலும் மனைவி பசங்க வந்தாலும் தொடரும்.
எழுத நேரமில்லாததால், இனி வரும் சில மாதங்கள் குறைவாகவே எழுதுவேன்.
ரயில் கூட்டம்
50 நாட்கள் முன்பு ரயிலில் முன்பதிவு செய்தாலும், RAC தான் கிடைக்கிறது. படுக்கை உறுதியாகவில்லை என்றால், அமர்ந்து கொண்டே வந்தால், இடுப்பு கழண்டு விடுகிறது, தூக்கமும் இல்லை.
எனவே, திங்கள் அலுவலகம் வந்தால், தூக்கமாக வருகிறது.
ஜூலை மாதம் முழுக்க வார இறுதியில் முன்பதிவு செய்ததில் 80% நாட்கள் படுக்கை உறுதியாகி விட்டது. அப்பாடா! 🙂 .
ஒரு மாதத்துக்கு 12 முறை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும் என்பதால், சிக்கலாக உள்ளது. மனைவி கணக்கில் இருந்து அடுத்து வரும் மாதங்களுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.
நான் எப்போதும் ரயில் தான். பேருந்தில் பயணிக்க மாட்டேன், எனக்கு அது வசதியாக இல்லை.
வெய்யில் மழை
இரண்டு வாரங்களுக்கு முன்பு கோபியில் மழை பெய்தது, தற்போது வெய்யில் செம்ம காட்டுக் காட்டுகிறது. 10 மணிக்கு மேல் 5 மணி வரை எங்கும் வெளியே செல்ல முடியாது போல.
கடந்த வாரங்களில் சத்தி, அந்தியூர் பகுதிகளில் மழை பெய்தது. தற்போது கோபியில் மழை வேண்டாம் என்று தான் வேண்டிக்கொண்டுள்ளார்கள்.
நெல் அறுவடைக்குத் தயார் நிலையில் உள்ளதால், மழை வேண்டாம் என்று உள்ளார்கள்.
வாய்க்காலில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. இதை அப்படியே சென்னைக்குத் திருப்பினால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறது 🙂 .
சென்னை மற்றும் மற்ற இடங்களில் ஏற்படும் தண்ணீர் பிரச்சனையை நேர்மறையாகத் தான் பார்க்கிறேன். இப்பிரச்சனையால், அதிகாரிகள் தண்ணீரை சேமிக்க, ஏரி குளங்களைத் தூர்வார ஒரு பாடமாக எடுத்துக்கொண்டால் நல்லது.
சிலருக்கு அதிர்ச்சி வைத்தியம் தான் சரிப்பட்டு வரும். தண்ணீரின் முக்கியத்துவம் தெரியாதவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கட்டும்.
தண்ணீர் பிரச்சனை தீர்ந்தால், வழக்கம் போலப் பழையபடி ஆகி விடுவார்கள் என்றாலும், ஒன்றுமே செய்யாததற்குச் சிறு மாற்றம் நடந்தாலும் நல்லது தானே!
நேர்மறை எண்ணங்கள்
நேர்மறை பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது. நான் தொடர்ச்சியாக நேர்மறை எண்ணங்களால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி எழுதி வருகிறேன்.
ஆனால், அது குறித்துப் படிக்கும் ஒருவர் கூட மாற்றம் உள்ளது என்று கூறியதில்லை.
அது பற்றி நானும் எதிர்பார்ப்பதில்லை ஆனால், தொடர்வேன் என்பதில் சந்தேகமில்லை.
ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்குச் சென்ற போது என் அண்ணனின் நிறுவனத்தில் பணி புரியும் பெண் சோகமாக இருந்தார்.
என்ன பிரச்னை என்று கேட்ட போது, “அண்ணா! வீட்டுல பிரச்னை, குழந்தைகளிடம் அதிகம் கோபித்துக்கொள்கிறேன்” என்று கூறினார்.
அவரிடம் “கோபப்படுவதால் பிரச்சனைகளே அதிகரிக்கும், அதோடு அனைத்தையும் பிரச்சனைகளாகக் கருதினால் மனதில் நிம்மதியே இருக்காது, அதனால் நேர்மறை எண்ணங்களை வளர்ப்பது எப்படி” என்று அவரிடம் பேசினேன்.
புரிந்தது போலத் தலையாட்டினார். “உங்க கிட்ட பேசினத்துக்குப் பிறகு கொஞ்சம் மனம் பாரம் குறைந்து, கொஞ்சம் தெளிவானது போல உள்ளது” என்றார்.
பொதுவாக என்னிடம் பேசுபவர்கள் இப்படிக் கூறுவார்கள் ஆனால், நான் கூறியதை பின்பற்ற மாட்டார்கள். அதனால், நானும் கூறியதோடு மறந்து விட்டேன்.
ஆனால், கடந்த வாரம் ஊருக்குச் சென்ற போது “அண்ணா! தற்போது நீங்க சொன்னபடி உள்ளேன், நேர்மறை எண்ணங்களால் பிரச்சனைகள் குறைந்துள்ளது. முன்பு போல மன அழுத்தம் இல்லை” என்றார்.
நான் சொன்னதைக் கேட்டு ஒருத்தராவது இப்படிச் சொன்னாரே என்று உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தது 😀 .
எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ள பலருக்கு நான் கூற விரும்புவது என்னவென்றால், உங்களுக்கெல்லாம் நேர்மறை எண்ணங்களின் வலிமை தெரியவில்லை, அதன் சிறப்புப் புரியவில்லை.
யாரெல்லாம் எதிர்மறை எண்ணங்களை கொண்டுள்ளீர்களோ அவர்கள் எல்லாம் நல்ல வாழ்க்கையை இழந்து கொண்டு இருக்கிறீர்கள் என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.
நீங்கள் புரிந்து கொள்ளும் போது பல காலங்களை வீணடித்து இருப்பீர்கள், நான் வீணடித்தது போல. எனவே, நல்லதையே நினையுங்கள், நல்லதே நடக்கும்.
நீங்கள் எப்படியோ, நான் வழக்கம் போல எதிர்மறை எண்ணங்களை, செய்திகளை எழுத மாட்டேன். நேர்மறை எண்ணங்கள் குறித்த என் அனுபவங்களை எழுதிக்கொண்டே இருப்பேன்.
தேவைப்படுகிறவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள், மற்றவர்கள் புறக்கணித்து விடுங்கள்.
மீடியன்
கோபி சாலையில் மீடியனை போக்குவரத்து நெரிசல் காரணமாக விரிவுபடுத்தியுள்ளார்கள். தற்போது தான் வாகனம் ஒட்டவே நிம்மதியாக உள்ளது.
இல்லையென்றால், எந்தப் பக்கம் இருந்து யார் குறுக்கே வருவார்கள் என்று திகிலாகவே இருக்கும்.
அதோடு கண்டபடி நடுவில் நுழைந்து கொண்டு இருந்தவர்களுக்குக் கட்டுப்பாடு அவசியமாகிறது.
கோபி சாலையைப் பார்த்துள்ளீர்களா? அட்டகாசமாக இருக்கும் 🙂 . ஒரே நேர் சாலை, மிக அகலமானது. இரவில் பயணித்தால் அவ்வளவு அழகாக இருக்கும்.
எனக்கு இரவில் கோபி சாலையில் பயணிப்பது மிகப்பிடித்தனமானது ஆனால், காவல் துறை சோதனை காரணமாகச் செல்ல முடிவதில்லை.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
பக்கத்தில் இருக்கும் சொந்த ஊருக்கு போவது, மழை இதையெல்லாம் வைச்ச்த்து பயண குறிப்பு எழுதி உங்க நேரத்தையும் வேஸ்ட் பண்ணி எங்களை கொலை செய்யாதீங்க
வெங்கட் என்பவர் பயண கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கார் . அது கட்டுரை,
ஒவ்வொரு பயண அனுபவத்தை படிச்சதுக்கு அப்புறம் வாழ்நாளில் ஒரு நாளாவது அப்படி நாங்களும் போகணும் என்று தோணும்
ஒவ்வொரு நாளும் எதாவது எழுதணும் என்று அவசியமில்லை . வருசத்துக்கு ஒரு தடவையோ ஒரு நல்ல, சுவாரசியமான விடயத்தை எழுதலாம்
உங்களுக்கு இந்த கட்டுரை படிக்க இஷ்டம் இல்லை என்றால் விட்டு விடுங்கள் . உங்களை யாரும் கட்டாய படுத்த வில்லை, கிரி சொன்ன நேர்மறை எண்ணங்கள் வளருங்கள்
கிரி உங்கள் அணைத்து பயண கட்டுரைக்கும் நான் ரசிகன் மற்றும் உங்கள் அழகு தமிழ் எழுத்துக்கு
நேர் மறை எண்ணத்தை என்னால் முழுமையாக கடை பிடிக்க முடியவில்லை ,முடிந்தளவு முயற்சி செய்கிறேன்
Prabhu Kalidas அவர்கள் உங்கள் நேர் மறை எண்ணத்தை சோதிக்கிறாரோ ?
@சந்திரசேகர் “நேர் மறை எண்ணத்தை என்னால் முழுமையாக கடை பிடிக்க முடியவில்லை ,முடிந்தளவு முயற்சி செய்கிறேன்”
பாஸ் நீங்க நினைக்கும் அளவெல்லாம் சிரமம் இல்லை. சில நாட்கள் மட்டும் எப்படியாவது பின்பற்றி விட்டீர்கள் என்றால், அப்படியே தொடர்ந்து விடலாம். பிறகு எளிதாகி விடும்.
இக்கட்டுரைக்கு பிறகு பலர் இது குறித்து கேட்கிறார்கள், விரைவில் எழுதுகிறேன் என்று கூறி இருக்கிறேன்.
“Prabhu Kalidas அவர்கள் உங்கள் நேர் மறை எண்ணத்தை சோதிக்கிறாரோ ?”
அவர் இப்படித்தாங்க எப்போதும் சொல்றாரு.. இதே சில வருடங்களுக்கு முன்பு என்றால், வருத்தப்பட்டு இருப்பேன் ஆனால், தற்போது அப்படி எதுவும் தோன்றுவதில்லை. அந்த நொடியோடு / நிமிடத்தோடு முடிந்து விடுகிறது.
பயணக்குறிப்புக்கும் பயணக்கட்டுரைக்கும் வித்யாசம் தெரியாம பேசிகிட்டு இருப்பவரை நான் என்னங்க சொல்றது?
அப்படியே நான் எழுதுவது அவருக்கு ஏற்புடையதாக இல்லையென்றால், யார் அவர் எதிர்பார்ப்பை ஈடு செய்கிறார்களோ அவரை படிக்க வேண்டியது தான் 🙂 .
@பிரபு காளிதாஸ்
ஒரு வருடத்துக்கும் மேலாக படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய முதல் கருத்தே நக்கலுடன் தான் வந்தது.
நான் என்னமோ உங்க காலை பிடித்து கெஞ்சி ஐயா! தயவு செய்து படிங்க என்று சொல்லிட்டு இருக்கிற மாதிரி பேசிட்டு இருக்கீங்க 🙂 .
அவ்வளோ கஷ்டப்பட்டு உங்களை யார் படிக்க சொன்னது.. நீங்களே சொன்ன மாதிரி என்னை விட எவ்வளவோ பேர் நல்லா எழுதறாங்க.. அவர்களை படிங்க.
உங்கள் எதிர்ப்பார்ப்பை என் மீது திணித்து என்னை கொலை செய்யாதீங்க.
நான் இப்படித்தான் எழுதுவேன்.
@Ansi நன்றி 🙂