SBI வங்கி கொடுத்த அதிர்ச்சி!

6
SBI வங்கி

ல்லோரும் SBI வங்கி சேவையை திட்டிட்டு இருக்காங்களேன்னு நானும் திட்டிட்டு இருந்தேன், வங்கியைப் பயன்படுத்தாமலே! மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

SBI வங்கி

20 வருடங்களுக்கு முன்பு கோபி SBI வங்கியில் கணக்கு திறக்க சென்ற போது, நான் என் கிராமத்தில் இருந்ததால், அங்கே உள்ள SBI வங்கிக் கிளையில் (அப்போது அங்கே கூட்டம் அதிகம்) கணக்கு திறக்கக் கூறி, கோபியில் அனுமதிக்க மறுத்து விட்டார்கள்.

பின்னர் தமிழகத்தில் மூன்றாவது கிளையாக கோபியில் ICICI வங்கி துவங்கிய போது அங்கே முதல் வங்கிக்கணக்கை துவங்கிக்கொண்டேன்.

பின்னர் SBI வங்கியை பற்றி மறந்தே போனேன், அதோடு பலரும் புகார் கூறியதால், கணக்கு துவங்க வேண்டும் என்ற ஆர்வமும் இல்லாமல் போனது.

கடந்த வருடம் கோபி IDBI வங்கிக்கணக்கை தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக மூடி விட்டு SBI வங்கியில் கணக்கு துவங்கலாம் என்று முடிவு செய்தேன்.

 கோபி SBI 

SBI வங்கிக்கணக்கு துவங்க ஏகப்பட்ட இடங்களில் நிரப்ப வேண்டியிருந்தது. ஒரு வழியாகப் பல தவறுகளுக்கு இடையே நிரப்பிக் கொடுத்தேன்.

அங்கே இருந்த பெண் ஊழியரை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. கோபி, கிராமங்கள் சூழ் நகரம் என்பதால், எப்போதுமே கூட்டம் வரிசை கட்டி நிற்கும்.

வங்கி ஊழியர்களைப் போகிற போக்கில் நாம் திட்டி விடுகிறோம், கிண்டல் செய்து விடுகிறோம் ஆனால், சிலரின் உழைப்பு அபரிமிதமானது.

உண்மையாவே மிகப்பொறுமை இருந்தால் மட்டுமே இவ்வளவு கூட்டத்தை, அவசரத்தை, கேள்விகளைச் சமாளிக்க முடியும். அந்த அளவுக்கு வேலை உள்ளது.

கோபப்படாமல் அனைவருக்கும் பதில் அளித்தார்.

வங்கிப்பணி என்பது முன்பு சொகுசான பணியாக இருந்தது, கவுரவமாகவும் பார்க்கப்பட்டது ஆனால், தற்போது அப்படியில்லை.

வேலை பிழிந்து எடுக்கிறார்கள் அதுவும் மேலாளராக இருந்தால் Target அது இது என்று வைத்து துவைத்து எடுத்து விடுகிறார்கள்.

இவர்கள் அவ்வப்போது செய்யும் வேலை நிறுத்தத்தால் மட்டுமே மக்கள் இவர்கள் மீது கோபத்தில் உள்ளனர் ஆனால், இவர்களில் பலர் மிகவும் மன அழுத்தத்தில், கடுமையான பணி நெருக்கடியில் பணி புரிகிறார்கள் என்பதை பலர் உணர்ந்து கொள்ள வேண்டும்.

சிலரின் தவறுக்கு ஒட்டுமொத்தமாக அனைவரையும் குறை கூறுவது தவறு.

பழைய காலத்து நிலையெல்லாம் தற்போது கிடையாது.

இணைய வங்கிக்கணக்கு

ஒரு வழியாக அனைத்து விவரங்களையும் கொடுத்த பிறகு, ஒரு வாரத்தில் உங்களுக்குத் தகவல் வரும் என்றார்கள். சொன்னது போலவே ஒரு வாரத்தில் பற்று அட்டை (Debit Card) வந்தது.

இணையக் கணக்கை பெற வங்கி சென்று வரிசையில் நிற்க வேண்டுமோ! என்று நினைத்தேன் ஆனால், அதிசயமாக இவர்கள் கொடுத்த விவரங்களை வைத்தே இணையக் கணக்கை திறக்க முடிந்தது.

SBI வங்கியில், வங்கிக்கு செல்லாமலே இதைச் செய்ய முடியுமா? என்று வியப்பாக இருந்தது. இது தான் என் முதல் வியப்பு.

Net Banking & App

இணையக் கணக்கில் நுழைந்தால், தனியார் வங்கிகளின் இணையத் தள வடிவமைப்புக்கு கொஞ்சமும் குறைந்ததாக இல்லாமல், அட்டகாசமான எளிமையான வடிவமைப்பாக இருந்தது.

அதாவது, எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையில், எளிதாக அனைத்து சேவைகளுக்கும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

எந்தக் குழப்பமும் இல்லை.

இதன் பிறகு அடுத்ததாக SBI Anywhere என்ற அவர்கள் செயலியை நிறுவினேன், இங்கே தான் ரொம்ப வியப்பாகி விட்டேன்.

ஏனென்றால், இணையச் சேவையை விட இது மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மிக எளிதாக இருந்தது.

மூன்று வங்கிகளைப் பயன்படுத்துகிறேன். ICICI, HDFC தற்போது SBI. சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் SBI செயலி தான் சிறப்பாக உள்ளது என்று கூற முடியும்.

எனக்கு மிக வியப்பாக இருந்தது, யாருடைய ஆலோசனையில், மேற்பார்வையில் இதை வடிவமைத்து இருப்பார்கள் என்று!

தற்போது அதை “Yono Lite SBI” என்று புதிய வடிவமைப்பில் மாற்றி இருக்கிறார்கள். இது முன்பை விட UI அட்டகாசமாக இருக்கிறது.

மிக முக்கியமாக, எனக்கு வியப்பளித்த இன்னொரு விஷயம், தளத்தில் இந்தித் திணிப்பு இல்லை. இந்திக்கு என்று தனித்தளம் உள்ளது.

Credit Debit Alert

அனைத்தும் சரி.. ஆனால், நான் இக்கட்டுரை எழுதக் காரணம் என்ன? 🙂 . இருக்கிறது.

எல்லாமே சரியாக இருந்தது ஆனால், Credit Debit Alert குறுந்தகவல் மட்டும் வரவில்லை, அது தானே முக்கியம்.

செயலியில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்றாலும், ஒவ்வொரு முறையும் சென்று பார்ப்பது, நடைமுறையில் சாத்தியமில்லை.

என்ன பண்ணலாம்னு இணையத்தில் தேடிய போது புகார் சேவை இருந்தது.

பலரும் SBI வங்கியை பற்றி எதிர்மறையாகவே கூறி இருந்ததால், நம்பிக்கை இல்லையென்றாலும், “புகார் அளித்துப் பார்ப்போமே” என்று புகார் அளித்தேன்.

மாலையே SBI வங்கி மேலாளர் அழைத்தார், நம்ப முடியவில்லை. HDFC, ICICI வங்கியில் புகார் அளித்தால் கூட, இரு நாட்களுக்குப் பிறகே பதில் அளிப்பார்கள்.

அதுவும் வாடிக்கையாளர் சேவை மையத்தில் இருந்து தான் அழைப்பு வரும்.

சார்! இப்பிரச்சனை ரொம்பக் காலமாக உள்ளது குறிப்பா ஜியோ வந்த பிறகு, நாங்களும் மேலிடத்தில் கூறி இருக்கிறோம், நீங்க வாங்க பேசலாம்” என்றார்.

சில சோதனைகளைச் செய்தார் (SMS Reset) ஆனால், குறுந்தகவல் வரவில்லை.

நான் சென்னையில் இருந்ததால், “சரி சார் பிறகு சந்திக்கிறேன்” என்று கூறி மறந்து விட்டேன். ஒரு வாரம் கழித்து நினைவு வந்து, புகார் என்ன நிலையில் உள்ளது என்று பார்க்க முடியுமா? என்று தேடினால், ஆம்! அதற்கு வசதி இருந்தது.

பார்த்தால், புகார் முடிக்கப்பட்டு இருந்தது.

என்னடா இது.. பிரச்சனையே சரியாகாமல் மூடி விட்டார்களே” என்று திரும்ப பழைய புகார் எண்ணை குறிப்பிட்டு இன்னொரு புகார் அளித்தேன்.

திரும்ப உடனே கோபி மேலாளர் அழைத்தார்.

சார்! நான் அன்னைக்கே சொன்னேனே சார், எங்களுக்கு இதைச் சரி செய்யும் அதிகாரமில்லை சார்” என்றார்.

எனக்கும் மேலாளர் கூறியது புரிந்தது, இவரால் இப்பிரச்சனையைச் சரி செய்ய முடியாது என்று தெரியும், பிரச்னை இவர் சம்பந்தப்பட்டது இல்லை.

வங்கிக் கணக்கில் பிரச்சனை என்றால், இவர் சரி செய்ய முடியும். குறுந்தகவலில் பிரச்னையென்றால், இவர் எப்படி சரி செய்ய முடியும்?!

தொழில்நுட்பப் பிரச்னை

சார் இதை உங்களுக்கு ஏன் சார் அனுப்புறாங்க.. தொழில்நுட்ப குழுக்கு அனுப்புங்க! நான் அவங்க கிட்ட பேசிக்கிறேன், இது உங்கள் தவறு இல்லை” என்றேன்.

சார் நீங்க புரிந்து கொள்கிறீர்கள், மற்றவர்கள் புரிந்து கொள்ளாமல் பேசுவார்கள் சார்” என்றார், அவரின் நிலையை உணர்ந்து கொள்ள முடிந்தது.

இல்ல சார்.. புகார் அளிப்பவர் எந்தக் கிளையோ அந்தக் கிளைக்குத் தான் புகாரை அனுப்புவார்கள்” என்றார்.

சரி.. இதை எப்படித் தான் சார் சரி செய்வது?” என்றேன்.

சார் நீங்க சென்னை தலைமை அலுவலகத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க, அவங்க நடவடிக்கை எடுப்பாங்க” என்று அறிவுறுத்தினார்.

மிகத் தன்மையாக பேசினார். வழக்கமாக, அரசு அதிகாரிகள் சிலர் தெனாவெட்டாகப் பேசுவார்களே… அது போல இல்லாமல், மிகவும் பொறுப்புடன் நடந்து கொண்டார்.

இவருடைய Attitude ரொம்பப் பிடித்தது, அவர் மீதான மரியாதையும் அதிகரித்தது.

ஓகே சார் நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று கூறி விட்டேன்.

Escalation Matrix

இணையத்தில் சென்று “Escalation Matrix” பார்த்தேன், “மும்பை சேர்மேன்” தான் முதன்மையாகக் காட்டியது. சரி புகார் அளிப்பது என்று முடிவாகி விட்டது, எதற்கு சென்னை, அதற்கும் மேலே உள்ள தலைமை.. மும்பைக்கே அனுப்புவோம் என்று..

ஒரு ஒன்றரை பக்கத்துக்குக் கடிதம் எழுதினேன்.

அதில் குறையாக மட்டுமே இல்லாமல், அவர்களின் மற்ற சேவைகளையும் பாராட்டி, கோபி கிளையின் மேலாளர் செய்த உதவிகளையும், குறுந்தகவல் வராததால், கிராம மக்கள் படும் சிரமங்களையும் எடுத்துக்கூறி விரிவாகக் கடிதம் எழுதினேன்.

குறுந்தகவல் Credit Debit க்கு மட்டுமே வரவில்லை, மற்ற சேவைகளுக்குச் சரியாக இருந்தது. எனவே,  “Mobile Vendor” பிரச்சனையில்லை என்பதையும் குறிப்பிட்டேன்.

பிரச்சனையோடு அவர்களின் நிறைகளையும், தொழில்நுட்ப காரணங்கள் ஆகியவற்றையும் சேர்த்து விரிவாக எழுதி Speed Post ல் அனுப்பினேன்.

Blog எழுதுவதால் எனக்கு ஒரு நன்மை என்றால், புகார் கடிதம் செமையாக எழுதுவேன். எவர் படித்தாலும், பத்தோட பதினொன்றுன்னு கடந்து செல்ல முடியாது.

யார்ரா இவன்?!” என்று கவனித்தே ஆக வேண்டும்.

இரண்டு வாரங்கள் ஆனது, ஒரு பதிலும் இல்லை. அரசுத்துறை என்பதால், அவசரப்பட வேண்டாம், மெதுவாகத்தான் வரும் என்று பொறுமையாக இருந்தேன்.

அதை விட, “என்னுடைய கடிதத்தை படித்து இருப்பார்களா?” என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. படித்தால் புறக்கணிக்க முடியாது ஆனால், படிக்கணுமே!

ஒரு சனிக்கிழமை திரும்பக் கோபி மேலாளர் அழைத்தார்.

கடிதம்

சார்.. என்ன சார் நிஜமாவே கடிதம் போட்டுட்டீங்களா?!” என்றார்.

நீங்க தானே சார் சொன்னீங்க!” என்றேன்.

சார், உங்கள் புகார் குறித்து விசாரிக்க ஒரு கமிட்டி அமைத்து இருக்கிறார்கள்” என்றார்.

எனக்குக் குபீர்னு ஆகி விட்டது. “என்னது கமிட்டியா..!” ன்னு!

ஆமாம் சார், கமிட்டி அமைத்து இருக்கிறார்கள், தற்போது இப்புகார் குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டுள்ளார்கள்” என்றார்.

சார், என்னைப் பற்றியும் எழுதி இருக்கிறீர்கள், நன்றி” என்றார்.

உண்மையில் அரசுத்துறையில் சரியாகப் பணி புரியாதவர்களைத் திட்டும் அளவுக்குச் சரியாகப் பணி புரிகிறவர்களைப் பாராட்டுவதில்லை.

ஒருவரை தவறுக்காக விமர்சித்தால், அதே சமயம் நன்றாகச் செய்தால், பாராட்டவும் செய்ய வேண்டும். இதைப் பலர் பின்பற்றுவதில்லை.

திட்ட மட்டும் வரிசைகட்டி நிற்பார்கள், அவர்கள் வேலை முடிந்து விட்டால், ஒரு நன்றி கூடச் சொல்வதில்லை.

இவர் நடந்து கொண்ட விதம், ஆலோசனை கூறிய விதம், எனக்காகக் குறுந்தகவல் பிரச்சனையில் அவர் அளவில் என்ன முயற்சி எடுக்க முடியுமோ எடுத்தார்.

அவ்வப்போது அழைத்துத் தற்போதைய நிலையைக் (Status Update) கூறினார் அதனால் அவர் குறித்துப் பாராட்டி எழுதி இருந்தேன்.

மரியாதைக்குறைவாக நடந்து இருந்தால், நிச்சயம் புகார் அளித்து இருப்பேன்.

மற்றவர்களிடம் எப்படியோ எனக்குத் தெரியாது. என்னிடம் மிக மரியாதையாக நடந்து கொண்டார். இவ்வளவுக்கும் அவரை நேரில் கூடச் சந்திக்கவில்லை.

பின்னர் ஒரு நாள் கழித்து அழைத்து “சார்! இப்ப செக் பண்ணிப் பாருங்க” என்றார்.

சரி சார். எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க. நான் எப்படி வேலை செய்யுதுன்னு பார்த்துட்டு பிறகு சொல்றேன்” என்றேன்.

ஏனென்றால், இவர்கள் சரியாகி விட்டது என்பார்கள், பின்னர் ஓரிரு நாட்களில் பழைய பிரச்சனையே தொடரும்.

இதன் பிறகு பல பரிவர்த்தனைகளைச் செய்து பார்த்தேன், உண்மையாகவே பிரச்னை சரியாகி விட்டது 🙂 .

அது நடந்தே விட்டது

நம்பவே முடியவில்லை. இது மிகப்பெரிய வேலை அதனால், நடக்காது என்றே நினைத்தேன். இவர்கள் எங்கே சரி செய்யப்போகிறார்கள்! என்று நினைத்தேன்.

அதுவும் SBI வங்கி என்பது மிகப்பெரிய அமைப்பு, அதில் ஒரு பொதுவான தொழில்நுட்ப பிரச்சனையை சரி செய்ய வைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல.

எனவே, எனக்கு நம்பிக்கையே இல்லை. ஆனால், அது நடந்தே விட்டது 🙂 .

என்ன தான் ஆகிறது என்று பார்த்து விடுவோம் என்று தான் முயற்சித்தேன், இருப்பினும் சந்தேகம் இருந்தது உண்மை தான்.

ஏனென்றால், இது என்னுடைய தனிப்பட்ட ஒருவரின் கணக்குப் பிரச்சனையில்லை. ஒட்டுமொத்த கோபி வாடிக்கையாளர்களின் பிரச்சனை.

பின்னர் ஒருவாரம் கழித்து மேலாளர் அழைத்து, “சார் இப்ப சரியாகி விட்டதா, டிக்கெட் க்ளோஸ் பண்ணிக்கலாமா?” என்றார்.

சரியாகி விட்டது சார்.. நீங்க டிக்கெட் க்ளோஸ் பண்ணிக்குங்க” என்றேன்.

ஒரு மின்னஞ்சல் அனுப்பக் கூறினார்.

அப்போது தான் கேட்டேன்.. “சார் உங்க பெயர் என்ன?” என்று 🙂 . இருவருமே பல முறை பேசிக்கொண்டும் அவர் பெயரை கேட்க மறந்து விட்டேன்.

ராதாகிருஷ்ணன் சார்” என்றார் சிரித்துக்கொண்டே… “கோபி வந்தால், வங்கிக்கு வாங்க” என்றார்.

சரிங்க சார்” என்றேன்.

அவருக்கு மீண்டும் நன்றி தெரிவித்து, இதை மிக விரைவாகச் சரி செய்த தொழில்நுட்ப குழுவினருக்கும் நன்றி தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பினேன்.

கதம் கதம் 🙂 .

இதன் பிறகு என்னுடைய பெயர் திருத்தத்துக்கு ஒரு முறை சென்றேன், இரு வாரங்களில் சரி செய்து கொடுத்தார்கள்.

மேலாளர் விடுமுறையில் இருந்ததால் சந்திக்க முடியவில்லை.

அதனால், SBI வங்கியை திட்டாதீங்கப்பா 🙂 . உங்களுக்குப் பிரச்னை இருந்தால், சரியான வழியில் சென்றால், பிரச்சனையைச் சரி செய்து கொள்ளலாம்.

அனைத்துக்கும் பொறுமை, நிதானம், சரியான வழி, Follow Up வேண்டும் அவ்வளவே!

தற்போது அனைத்து பிரச்சனைகளும், தேவைகளும் நிறைவேறி விட்டதால், இனி திரும்ப SBI வங்கி செல்ல வேண்டிய தேவை “தற்போதைக்கு” இல்லை.

ஏனென்றால், அனைத்தும் நான் இணையத்திலேயே செய்து கொள்வேன், வங்கிக்கு செல்லும் வழக்கம் எனக்கில்லை.

அங்கே உள்ளவர்கள் நினைக்கலாம், “அப்பாடா! இனி வரமாட்டான்யா” ன்னு 😀 .

பிற்சேர்க்கை (ஜூலை 2022) – திரும்பக் குறுந்தகவல் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

கொசுறு 1

முன்னரே கூறியபடி, இது போல நம் உரிமையைப் போராடி பெற்றுக்கொள்ளும் எண்ணத்தை என்னில் விதைத்தவர் மாயவரத்தான் ரமேஷ்.

இவர் அளவுக்கு முடியாது என்றாலும், என்னளவில் அவ்வப்போது இது போல முயற்சி செய்கிறேன் 🙂 . அது வேலையும் செய்கிறது.

எனவே, அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது, கிடைக்கவில்லை என்றால் விடாதீர்கள், கிடைக்கும் வரை சலிக்காமல் போராடுங்கள்.

துவக்கத்தில் உங்களுக்குச் சலிப்பாக இருக்கலாம் ஆனால், ஒரு சில சம்பவங்களுக்குப் பிறகு நீங்களே ஆர்வமாகி விடுவீர்கள்.

கொசுறு 2

தற்போது நம் புகார் மீது வங்கிகள் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் “Ombudsman” Link சேவையின் மூலம் புகார் புகார் அளிக்கும் வசதியை RBI அறிமுகப்படுத்தியுள்ளது.

விளம்பரத்தில் 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இதில் புகார் அளிக்கக் கூறி இருந்தார்கள். தளத்தில் 30 நாட்கள் என்று காட்டுகிறது.

எனவே, உங்கள் புகாரை இதில் அளிக்க வேண்டும் என்றால், நீங்கள் எழுத்துப்பூர்வமாக வங்கிக்குக் கடிதம் கொடுத்து இருக்க வேண்டும்.

கடிதம் கொடுத்த நாளில் இருந்து 30 நாட்களுக்குள் பிரச்சனை சரி செயயப்படவில்லை என்றால், இங்கே நீங்கள் புகார் அளிக்கலாம்.

நான் ஏர்டெல், ICICI, HDFC இவர்களைத் திட்டினாலும், எனக்குப் பிடித்தவர்களும் இவர்கள் தான். இதுவரை எனக்குப் பெரியளவில் பிரச்சனை வந்ததில்லை, வந்தாலும் சண்டை போட்டு பெற்று விடுவேன்.

இன்னொரு விசயம், எங்கே என்ன கோரிக்கை வைத்தாலும், புகார் அளித்தாலும், மறக்காமல் Acknowledgement வாங்கிக்கொள்ளுங்கள். இது மிக மிக முக்கியம்.

இதை வைத்துத் தான் உங்களால் சண்டை போட முடியும்.

எதற்கும் ஆதாரம் வேண்டும். மறவாதீர்கள்.

தொடர்புடைய கட்டுரை

மொபைல் எண்ணை ஸ்பாம் செய்த SBI வங்கி

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

 1. உண்மைதான். நான் 12 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு துவங்கி விட்டு 4 ஆண்டுகள் வரை மிக மிக அரிதாகவே பயன்படுத்தி வந்தேன். பிறகு 2014ல் ஒரு தனியார் வங்கியின் குறைந்த பட்ச இருப்புத் தொகை, கட்டண விகிதம் என்னுடைய பட்ஜெட்டுக்கு தாங்காததால் மீண்டும் எஸ்.பி.ஐ கணக்கை முழுமையாக பயன்படுத்த தொடங்கினேன். அப்போதுதான் இன்டர் நெட் பேங்கிங் ஆக்டிவேட் செய்ய சொல்லி வாங்கிக்கொண்டேன்.

  நான் நெட் பேங்க் டெக்ஸ்டாப் கணிணியில் மட்டும் தான் இது நாள் வரை பயன்படுத்திக்கொண்டு வருகிறேன். இது வரை பிரச்சனை இருந்ததில்லை.

  போன வாரம் ஒரு ஆன்லைன் டிரான்சாக்சன் பேமண்ட் சக்ஸஸ் ஆனாலும் அந்த சேவை பெயிலியர் ஆகி விட்டது. அவர்கள் பணத்தை திருப்பி அனுப்பி விட்டதாக சொல்லி பேமெண்ட் கேட்வே ஐ.டி யை குறிப்பிட்டு பதில் அனுப்பினார்கள். நேற்று முன் தினம் மெயில் அனுப்பினேன். அவர்கள் துறையை சேர்ந்த பிரச்சனை இல்லை என்று தெரிவித்ததுடன் வேறு ஒரு ஐ.டி கொடுத்து, என்னை இதே கடிதத்தை இந்த முகவரிக்கு அனுப்ப சொல்லியிருந்தார்கள்.

  நேற்று காலையில் 11 மணிக்கு விபரம் குறிப்பிட்டு மெயில் அனுப்பினேன். மாலை 4 மணிக்குள் தீர்க்கப்பட்டு விட்டது.

  எதையும் முயன்று பார்க்காமல் குறை சொல்லிக்கொண்டிருப்பது சரியில்லை என்று புரிந்து கொண்டேன்.

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்று தோன்றுகிறது.

 2. எனக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் பிரச்னை இருந்தது. எவ்வளவு தடவை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை

 3. @சரவணன்

  “எதையும் முயன்று பார்க்காமல் குறை சொல்லிக்கொண்டிருப்பது சரியில்லை என்று புரிந்து கொண்டேன்.

  ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லா இடத்திற்கும் பொருந்தாது என்று தோன்றுகிறது.”

  நச்சுனு சொன்னீங்க. முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

  @தெய்வா அடுத்த லெவல் எஸ்கலேசன் யாருன்னு பாருங்க.

  @காயத்ரிநாகா எப்படி இருக்கீங்க? ரொம்ப வருசமாச்சு ஆளையே காணோம் 🙂

 4. ஜி, சூப்பர் ஜி…ரொம்ப நாள் ஆச்சு, இந்த மாதிரி பதிவு படிச்சு…மிக்க நன்றி…

 5. ஹாய் கிரி,
  எனக்கும் இப்போது அதே பிரச்சனை . OTP வரமாட்டிங்குது . நானும் கஸ்டோமீர் கேர் புகார் செய்துள்ளேன் . ஒன்னும் நடக்க மாட்டேங்குது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here