பயணக் குறிப்புகள் [மே 2018]

2
gobichettipalayam

ந்த மாத துவக்கத்தில் ஊருக்குச் சென்ற போது சென்னையே பரவாயில்லை என்பது போல வெய்யில் கொளுத்தியது. கடந்த வாரம் சென்றால் ஊரே குளுகுளுனு இருக்கு 🙂 .

தினமும் மழை பின்னி எடுக்குதாம். என்னுடைய கிராமத்தில் கடந்து ஐந்து வருடங்களுக்குப் பிறகு பலத்த மழையைக் காண்பதால், ஊரில் அனைவரும் மகிழ்ச்சி.

அலங்கார வளைவு

கோபிக்கு தனித்த அடையாளமாக இருக்கும் கோபி அலங்கார வளைவை லாரி ஓட்டுநர் தூக்கத்தில் மோதி உடைத்து விட்டார், அவரும் விபத்தில் இறந்து விட்டார்.

தற்போது வளைவை கட்டும் பணி நடைபெற்று வருகிறது, விரைவில் முடிந்து விடும்.

குட்டீஸ்

கோடை விடுமுறை, குடும்ப நிகழ்வு என்று என்னுடைய அக்காக்கள் பசங்க எல்லோரும் வீட்டில் இருக்கிறார்கள். ஒரு பெரும் படையே உள்ளது. பக்கத்து வீட்டில் எல்லாம் கிறுகிறுத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

வீட்டில் கிரிக்கெட், படம், Scooter, IPL என்று வீடே களேபரமாக இருக்கிறது. என்னுடைய அம்மாக்கு, அடுத்த மாதம் எல்லோரும் கிளம்பிடுவாங்களே என்று இப்பவே கவலை! 🙂 .

வருத்தமளிக்கும் மாற்றம்

கோபியில் புதிதாகத் திறன்பேசி கடை திறந்து இருக்கிறார்கள். என்னோட அக்கா பையன், “மாமா இங்கே போய் Ear headPhone வாங்கலாமா?” என்று கேட்டான் என்று சென்றோம்.

செண்டை மேளத்துடன் திறப்பு விழா நடைபெற்றுக்கொண்டு இருந்தது.

இது முடிய நேரம் ஆகும் என்று தோன்றியதால், மாலை பார்த்துக்கலாம் என்று கூறி விட்டேன்.

மாலை வேறு வேலையாக அந்த வழியாகச் செல்லும் போது பார்த்தால், இன்னமும் மேளம் அடித்துக்கொண்டு இருந்தார்கள், திறப்பு விழா முடியாமல் இருந்தது.

அடேங்கப்பா! மிக நீண்ட திறப்பு விழா போல இருக்கு! செண்டை மேளம் அடித்தவர்கள் அநேகமாகக் கிறுகிறுன்னு ஆகி இருப்பார்கள் என்று நினைக்கிறேன் 🙂 .

இந்த வாரம் செல்லலாம் என்று திட்டமிட்டு இருக்கிறேன்.

தற்போது தமிழக விழாக்களில் ஒரு மாற்றம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது, சிலர் கவனித்து இருக்கலாம்.

நம்முடைய கலாச்சாரம் போய் விழாக்களில் கேரள செண்டை மேளம் ஆக்கிரமித்து வருகிறது. வருத்தமளிக்கும் மாற்றம்.

நாய்க்குட்டி

என்னுடைய உறவினர் பையன் அவங்க நாய்க்குட்டியை எடுத்து வந்து இருந்தார்.

நாய் கூடப் பசங்க மூன்று பேர் ஓடி விளையாடிட்டு இருந்தாலும், குட்டி சளைக்காமல் அனைவரையும் துரத்தி, கெத்துக் காட்டியது.

எனக்கு நாய் என்றால் ரொம்பப் பிடிக்கும் என்பதால், நானும் அது கூட விளையாடிட்டு இருந்தேன். படத்தில் இருக்கும் நாய் தான் அது 🙂 .

நிழற்படம் எடுக்கலாம் என்றால் ஒரு இடத்தில் நிற்கமாட்டேன் என்கிறது, எப்படியோ ஓடி ஓடி களைத்து ஒருவழியா அமர்ந்த நொடியில் எடுத்துட்டேன்.

VU

சமீபத்தில் தொலைக்காட்சி பழுதானதால் அதிக விலையில் செல்லாமல் நண்பர்கள் பரிந்துரைத்த VU தொலைக்காட்சி வாங்கினேன் (₹ 23,000). ஏற்கனவே, இது குறித்து எழுதி இருந்தேன்.

தற்போது சில மாதங்கள் ஆகி விட்டது, சிறப்பாக வேலை செய்கிறது.

எங்கள் ஊரில் தற்போது VU தான் அதிகம் விற்பனையாகிறது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here