பயணக் குறிப்புகள் [மார்ச் 2017]

4
பயணக் குறிப்புகள் [மார்ச் 2017]

டந்த வாரம் சனி ஞாயிறு விடுமுறையில் ஊருக்கு சென்று இருந்தேன். அதில் சில குறிப்புகள்.

ஈரோட்டில் இருந்து கோபி செல்லும் வழி தற்போது காய்ந்து போய் இருக்கிறது. பல தென்னை மரங்கள் மொட்டையாக உள்ளது. எத்தனை வருடங்களாக வளர்த்தார்களோ! 🙁

ணகளத்திலும் கிளுகிளுப்பாகச் சனி இரவு கோபியில் கொஞ்ச நேரம் மழை பெய்தது. தற்போதெல்லாம் மழையைக் கண்டாலே மனம் குதூகலமாகி விடுகிறது.

சத்தியில் இரு வாரங்கள் முன்பு பெய்த 4 உழவு மழையால் இரண்டு மாதங்களுக்குத் தண்ணீர் பிரச்சனை இல்லை என்று அக்கா கணவர் கூறினார்.  

தேவையான மழை, மாட்டுக்கு தீவனம் கூட இல்லை. பில்லை விலைக்கு வாங்கி மாட்டுக்குப் போடுகிறார்கள்.

கோபியில் பெய்த மழையைப் பாருங்கள்.. கொளுத்தற வெயிலுக்கு சில்லுனு இருக்கும் 🙂 .

ரோடு ரயில் நிலையத்தில் மின் தூக்கி (Lift) அல்லது நகரும் படிக்கட்டோ பல காலமாக வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் 20% கூட முடிந்தது போலத் தெரியவில்லை.

தமிழ்நாட்டில் சுத்தமான ரயில் நிலையம் என்ற பெயர் பெற்ற ஈரோடு ரயில் நிலையத்தில் அனைத்து நடைமேடைக்கும் படி ஏறித்தான் செல்ல முடியும்.

பெரியவர்களுக்கு மிகச் சிரமமான ஒரு வேலை.  இதற்கு எப்போது தான் விடிவோ!

ங்கள் கிராமத்தில் குளம் தூர்வாருகிறார்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. இதை எந்த அளவுக்குச் சிறப்பாகச் செய்கிறார்கள் என்பதைக் காண ஆர்வமாக இருக்கிறேன்.

Readஏரி குளம் தூர்வாருவது எளிதல்ல!

கோபி “இந்திரா” திரையரங்கை இடித்து விட்டு மூன்று சிறிய திரையரங்குகள் வருவதாக என்னுடைய அக்கா பையன் கூறினான். கோபிக்கு இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது.

ஏற்கனவே “ஜெயமாருதி” திரையரங்கம் புதுப்பிக்கப்பட்டு அசத்தி வருகிறது.

நன்றாகப் பரமாரிக்கப்படுவதால் மக்கள் இதற்குப் பேராதரவு தருகிறார்கள் என்பதால், மற்ற திரையரங்கங்களும் இதைப் பின்பற்றி மேம்படுத்த முடிவு செய்துள்ளனர்.

Gobi

கோபியில் இருந்து அந்தியூர் செல்லும் வழியில் புதுக்கரைப் புதூர் என்ற இடத்தில் பாலம் அருகே உள்ள இடம் வயல் சூழ்ந்து பச்சை பசேல் என்று இருக்கும்.

இந்த முறை தண்ணீர் இல்லாததால் வறட்சியால் பசுமையைக் காணோம்.

இது பற்றி முன்பே தெரியும் என்பதால் அதிர்ச்சியாக இல்லை ஆனால், அங்கே ஒரு இடத்தில் மண் கொட்டி வருவதைக் கண்டு என் அப்பாவிடம் கேட்ட போது Plot போடுகிறார்கள் போல என்று தலையில் இடியை இறக்கினார்.

மனசே சரியில்லை. இது உண்மையாக இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொள்கிறேன்.

தண்ணீர் பஞ்சத்தை வரவேற்கிறேன்

ங்கள் கிராமத்தில் தற்போது தண்ணீர் பிரச்சனை உள்ளது. ஏப்ரல் மாத நடுவில் இருந்து தண்ணீரே இருக்காது. மிகப்பெரிய தண்ணீர் பிரச்சனையை எதிர்கொள்ளப்போகிறார்கள்.

நான் இந்தத் தண்ணீர் பஞ்சத்தை வரவேற்கிறேன், இதனால் நானும் தான் பாதிக்கப்படப்போகிறேன் என்றாலும்.

சில நேரங்களில் மக்களுக்கு நல்லது சொன்னால் புரியாது, அடிபட்டால் தான் புரியும். கசப்பு மருந்து தான் சில வேளைகளில் சரிப்பட்டு வரும்.

இது போலப் பஞ்சத்தை எதிர்கொண்டால் தான் தண்ணீரின் முக்கியத்துவம், ஆறு ஏரி குளங்களின் முக்கியத்துவம் புரியும்.

இப்படியே அவ்வப்போது மழை பெய்து காப்பாற்றிக்கொண்டு இருந்தால், எதிர்காலத்தில் ஆறு ஏரி குளங்களைக் காண்பதே மிகப்பெரிய விசயமாகவும், அதிசயமான ஒன்றாகவும் மாறிவிடும்.

மக்களும் அப்போதைக்குப் பிரச்னை தீர்ந்தது என்று கண்டு கொள்ளாமல் விட்டு விடுவார்கள்.

தற்போது தான் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்பட்டு ஏரி குளங்களை மீட்டு வருகிறார்கள். அதன் முக்கியத்துவம் உணர்ந்து வருகிறார்கள்.

நெருக்கடி வராமல் இதை உணர முடியாது. இப்பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது.

எனவே தான் கூறுகிறேன், நான் இந்தத் தண்ணீர் பஞ்சத்தை வரவேற்கிறேன். இந்தத் தண்ணீர் பஞ்சம் தூங்கிக்கொண்டு இருக்கும் மக்களை விழிப்படைய செய்யட்டும்.

மணலை திருடும், ஏரி குளங்களை ஆக்கிரமிப்பு செய்யும் அரசியல்வாதிகளுக்கு பயத்தைக் கொடுக்கட்டும். இனி வரும் காலம் முன்பு போல எளிதாக இவற்றை செய்ய முடியாது என்று அரசியல்வாதிகளுக்கு உணர வைக்கட்டும்.

இன்று [மார்ச் 22] உலக தண்ணீர் தினம்!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, சிறு வயதில் அடிக்கடி மழை பெய்யும் போது தெருவில் கிரிக்கெட் விளையாட முடியாததால் மழை வருகிறது என்றாலே வெறுப்பாக இருக்கும். அதே மழை கல்லூரிப் பருவதில் ஒருவித சந்தோஷத்தையும், ஒரு ரம்மியமான ஓட்டத்தையும் மனதிற்கு கொடுத்தது. வேலைத்தேடி ஓடி அலைந்த காலத்தில் மழை ஒரு வித தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது… ஆனால் இன்று எங்கு போய் தேட மழையை ????

    தண்ணீர் பஞ்சத்தை வரவேற்கிறேன் :-
    நீங்கள் குறிப்பிடுகின்ற விஷியங்கள் உண்மையாக இருந்தாலும், பொதுமக்களின் முயற்சியை விட அரசாங்கத்தின் பங்கு அதிகம் தேவை. சில குறிப்பிட்ட இடங்களில் தன்னார்வ அமைப்புகளும், பொதுமக்களும் இந்த சீரமைப்பு பணியை மேற்கொண்டாலும், எல்லா இடங்களிலும் இது சாத்தியம் இல்லை.

    இதற்கான நிதி ஆதாரங்களை திரட்டி, அனைவரையும் ஒன்று கோர்த்து செல்வதில் பல சிக்கல்கள் உள்ளது. சென்ற கட்டுரையில் இதை நீங்களே குறிப்பிட்டுள்ளீர். எதிர்காலத்தில் நமது அடையாளமான விவசாயம் முற்றிலும் அழிந்து விடுமோ என்ற அச்சநிலை உள்ளது. பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. // சில நேரங்களில் மக்களுக்கு நல்லது சொன்னால் புரியாது, அடிபட்டால் தான் புரியும்.//

    2013/14 மிக மோசமான வறட்சியை எங்க ஊர் சந்தித்தது. தண்ணீருக்கு நாயா பேயா அலைந்தார்கள்.

    திருந்தினார்களா?

    2015 & 2016 நல்ல மழை. தெருக்குழாயில் குடத்தை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். குடம் நிரம்பி தண்ணீர் சாக்கடைக்குள் போகும். அப்போது அவர்கள் குடத்தை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டால் என்ன என்ற அளவுக்கு ஆத்திரம் பொங்கும்.

    விடுவானா ஆண்டவன்.

    2013/14 ஐக் காட்டிலும் கடும் வறட்சியை காட்டத் தொடங்கிவிட்டான்.

    இவர்களும் திருந்தப் போவதில்லை; ஆண்டவனும் விட்டு விடப் போவதில்லை.

    =====================
    “பூ” திரைப்படத்தில் “சூசூ மாரி” பாடலின் கடைசியில் வரும் பனைமர தோப்பு எங்க ஊரின் முக்கியமான அடையாளம்.

    இந்த வறட்சியின் காரணமாக அந்த பனந்தோப்பில் முக்கால்வாசி மரங்கள் பட்டுப்போய் மொட்டையாக நிற்கின்றன.

    இன்னும் எதையெல்லாம் இழக்க வேண்டியது வருமோ……….

  3. @யாசின்

    “சிறு வயதில் அடிக்கடி மழை பெய்யும் போது தெருவில் கிரிக்கெட் விளையாட முடியாததால் மழை வருகிறது என்றாலே வெறுப்பாக இருக்கும். அதே மழை கல்லூரிப் பருவதில் ஒருவித சந்தோஷத்தையும், ஒரு ரம்மியமான ஓட்டத்தையும் மனதிற்கு கொடுத்தது. வேலைத்தேடி ஓடி அலைந்த காலத்தில் மழை ஒரு வித தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் கொடுத்தது”

    கவிதை மாதிரி சொல்றீங்க 🙂

    அரசாங்கத்தின் பங்களிப்பு இல்லாமல் சிரமமே!

    @காத்தவராயன்

    “குடம் நிரம்பி தண்ணீர் சாக்கடைக்குள் போகும். அப்போது அவர்கள் குடத்தை தூக்கிப்போட்டு உடைத்துவிட்டால் என்ன என்ற அளவுக்கு ஆத்திரம் பொங்கும்.”

    அதே அதே!

    நான் பார்த்தால் வண்டியை நிறுத்தி தண்ணீரை நிறுத்தி செல்வேன். என் மனைவி “ஏங்க உங்க கடமை உணர்ச்சிக்கு அளவு இல்லையா?” என்பார்.. தற்போது அது போல கூறுவதில்லை.

    என்னுடைய பசங்க கிட்ட தண்ணீரின் முக்கியத்துவத்தை கூறிக்கொண்டே இருப்பேன். இவர்களும் பின்பற்றி வருகிறார்கள்.

    இருவரில் யாரவது தண்ணீரை வீண் செய்தால்.. “அப்பா! இவன் தண்ணீரை வீண் செய்கிறான்” என்று மற்றவன் போட்டு கொடுக்கிறான்.

    அரசாங்கம் வீண் செய்யும் தண்ணீரின் அளவு இருக்கிறதே.. ம்ஹீம்.. இதையெல்லாம் நினைத்தாலே…

  4. உங்களால் முடிந்த அளவு மரங்களை நடுங்கள். மீதத்தை அவன் பார்த்து கொள்வான்.

    நல்லோர் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
    எல்லோர்க்கும் பெய்யும் மழை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here