பயணக் குறிப்புகள் [ஜூலை 2017]

3
Gobichettipalayam

ம்மா அப்பாவை பார்க்கவும் மற்றும் சிறு வேலைக்காகவும் கடந்த வாரம் ஊருக்குச் சென்று இருந்தேன். Image Credit

தண்ணீர் தண்ணீர் தண்ணீர்

ஊருக்குச் சென்றால் அனைவரும் பேசுவது தண்ணீர், மழை, வறட்சி போன்றவை தான். மிக மோசமான நிலையில் கோபி சுற்றுப் பகுதிகள் உள்ளது.

எங்கள் வீட்டில் நிலத்தடி குழாய் இருப்பதால், தற்போது பெற்றோர் சமாளித்து வருகிறார்கள்.

வயல் பகுதிகளில் நிலத்தடி குழாய் போட்டுத் தண்ணீர் எடுக்கப்பட்டு, பச்சையாக இருக்கும் எங்கள் பகுதி வறட்சியாக இருப்பதைப் பார்க்கவே கொடுமையாக இருக்கிறது.

ஏர்டெல்

என் அம்மா அப்பா தொலைபேசி எண்ணை ஆதாரில் இணைக்க வேண்டி இருந்ததால், கோவை சென்று இருந்தேன்.

கோபியில் ஏர்டெல் அலுவலகம் இல்லை, ஈரோட்டில் உண்டு ஆனால், எனக்குக் கோவை தான் விருப்பம்.

Brook Field வணிக வளாகத்தில் உள்ள ஏர்டெல் அலுவலகத்தில் இவற்றை இணைத்தேன். அதோடு இருவர் எண்களையும் ஏர்டெல்லின் புதிய வசதியான குடும்பத் திட்டத்தில் கொண்டு வந்தேன்.

என் அம்மா பழைய நோக்கியா தொலைபேசி வைத்து இருக்கிறார்கள் (கிட்டத்தட்ட 10 வருடம் பழையது, தொடுதிரை பயன்படுத்தத் தெரியாது), தற்போது புதிய நோக்கியா 3310 வந்து இருப்பதால், அதை வாங்க முயற்சிக்கிறேன் ஆனால், கிடைக்கவே மாட்டேங்குது.

எப்போது கேட்டாலும் இருப்பு இல்லை என்றே கூறுகிறார்கள். இன்னும் ஒரு வாரம் பார்ப்பேன், கிடைக்கவில்லை என்றால் சாம்சங் வாங்கி விடுவேன்.

இதற்கு Mini SIM என்பதால், புது SIM கேட்டேன், உடனே கொடுத்தார்கள். ஏர்டெல், இரண்டு SIM களுக்கும் கட்டணம் வசூலிக்கவில்லை என்பது எனக்கு வியப்பு.

இங்கே சிவா என்ற வாடிக்கையாளர் சேவை அதிகாரி மிகச்சிறப்பான சேவையை வழங்கினார்.

வேறு SIM மாற்றிப் பின் அதன் இணைப்பு கிடைக்கும் வரை என்னைத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்கினார். இக்கிளையில் எப்போதுமே சிறப்பான சேவை.

ASM

கோவை – கோபி – அந்தியூர் வழி பிரபல பேருந்தான ASM விபத்தில் சிக்கி ஒரு மாணவி பலியாகி விட்டார். சிலர் மிக மோசமாகக் காயம்பட்டு இருக்கிறார்கள் என்று கூறினார்கள்.

நான் சிறு வயதில் இருந்து இந்தப் பேருந்தில் பயணித்து வருகிறேன். இது போலச் சில முறை விபத்து நடைபெற்று இருக்கிறது.

பேருந்து அடிபட்டு இருக்கும் நிலையைப் பார்த்தால், அங்கே அமர்ந்து இருந்தவர்கள் நிலையை நினைத்தாலே திகிலாக இருக்கிறது.

CKS பங்களா

கோபியின் அடையாளம், திரைப்படப் படப்பிடிப்புகளுக்குப் பிரபலமான, நாட்டாமை, சின்னத்தம்பி சமீபத்திய கலகலப்பு போன்ற திரைப்படங்களில் வந்த CKS பங்களா விற்கப்படப்போவதாகக் கூறினார்கள்.

நகரின் மிக முக்கியமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலையை எதிர்பார்த்தேன் என்றாலும், இவ்வளவு விரைவில் எதிர்பார்க்கவில்லை.

ஈரோடு ரயில்நிலையம்

ஈரோடு ரயில்நிலையம் சுத்தமான ரயில்நிலையம் என்று பெயரெடுத்து இருக்கிறது. மின்தூக்கி (Lift) அமைக்கும் பணி மிக மெதுவாக நடைபெற்று வருகிறது.

இங்கே வைத்து இருக்கும் மரக்கன்றுகள் தற்போது வளர்ந்து இருப்பதைக் காணும் போது மிக மகிழ்வாக இருந்தது.

கூண்டு அமைத்து சிறப்பாகப் பராமரித்து வருகிறார்கள். யார் இந்தப் பொறுப்பை எடுத்து செய்கிறார்கள் என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்டவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.

காஸ்மோபாலிடன் க்ளப்

மிகப் பழமையான க்ளப்களில் ஒன்று காஸ்மோபாலிட்டன் க்ளப். சென்னை அண்ணா சாலையில் இதன் ஒரு கிளை உள்ளது.

இதில் உறுப்பினராக இருப்பதே கவுரவம் என்று கூறப்படுகிறது. நினைத்தவுடன் இங்கே உறுப்பினராகி விட முடியாது, கட்டுப்பாடுகள் அதிகம்.

இவ்வளவு பழமையான சிறப்பு வாய்ந்த க்ளப் எங்கள் சின்ன நகரான கோபியில் எப்படி வந்தது என்று எனக்கு வியப்பு. நீண்ட காலமாக உள்ளது.

சிறு வயதில் ஒரு முறை சென்று இருந்தாலும், எப்படி இருக்கும் என்று நினைவில்லை.

இந்த முறை என் அண்ணன் உறுப்பினர் கணக்கைப் புதுப்பிக்கச் சென்றார், உடன் நானும் சென்று இருந்தேன்.

மிகப் பழமையான ஆனால், உறுதியான கட்டிடம். உள் அமைப்பு மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தது.

2000₹ ருபாய் வருட கட்டணத்தில் இருந்தது, தற்போது 50,000₹ என்று கூறினார்.

உட்புற சூழ்நிலை அழகாகவும் மனதுக்கு நிம்மதி அளிக்கும் இடம் போலவும் இருந்தது. பார்க்க எதோ கோபி அல்லாத வேறொரு மலைப்பிரதேச வீட்டில் இருப்பது போல இருந்தது.

இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் என்று நினைத்தேன் ஆனால், செல்ல வேண்டியதாகி விட்டது.

அடுத்த முறை கொஞ்ச நேரம் இருந்து வர வேண்டும் 🙂 . CKS பங்களா எதிரே உள்ளது.

மாதம் ஒரு முறை

சென்னை திரும்பும் போது அம்மா, “தம்பி வந்த உடனே கிளம்புற.. வீட்டிலேயே இல்லை.. மாசத்துக்கு ஒரு முறையாவது இதே போல வந்துட்டு போ.. வயசாகிட்டு வருது” என்றார்கள்.

நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்ததற்கான காரணங்களில் ஒன்று என் பெற்றோர்.

வயதாகி விட்டது, அவர்களுடைய இறுதிக் காலங்களில் உடன் இருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். பிறகு குற்ற உணர்வுடன் வாழ என்னால் முடியாது.

எனவே, மாதம் ஒரு முறை சனி ஞாயிறு வந்து செல்ல வேண்டும் என்பதை ஓரளவு பின்பற்றி வருகிறேன். ரயிலில் தற்போது ஒரு மாதம் முன்பே பதிவு செய்தாலும் கிடைப்பதில்லை.

முன்பே செய்தால், அலுவலகத்தில் சரியா அந்த வாரம் பார்த்து ஏதாவது வேலை வருகிறது. நான் பேருந்தில் ஊருக்குச் செல்ல மாட்டேன், எப்போதும் ரயில் தான்.

இதையெல்லாம் ஒரு காரணமாகக் கூறாமல் மாதம் ஒரு முறை கண்டிப்பாக வந்து செல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.

ஊருக்கு வந்தால், சொந்தக்காரங்க வீட்டுக்கு செல்லவே நேரம் சரியாக உள்ளது. பல நேரங்களில் சூழ்நிலை கைதியாகவே இருக்க வேண்டியுள்ளது.

இருப்பினும் சென்னை வந்த பிறகு அவ்வப்போது ஊருக்குச் சென்று பெற்றோரரை பார்க்க முடிவது மகிழ்ச்சி 🙂 . ஊருக்குச் செல்வது என்றாலே மனது குதூகலமாகி விடுகிறது 🙂 .

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி, தண்ணீர் பிரச்சனையை எதிர்காலத்தில் எவ்வாறு தீர்க்க போகிறோம் என்று நினைத்தாலே சற்று பயமாக இருக்கிறது. உங்களுக்கு விருப்பமாக இருப்பின் புதிய நோக்கியாவை 3310 நான் இங்கு விசாரித்து பார்க்கவா???? எனக்கு தெரிந்தவரை இந்த கைபேசி இங்கு கிடைக்கும் என்று எண்ணுகிறேன்.

    CKS பங்களாவை படங்களில் காணும் போது பிரமித்து இருக்கிறேன். காஸ்மோபாலிட்டன் இது போல கிளப்களில் என்றுமே ஆர்வம் இருப்பதில்லை. வெளிஊரில் வேலை பார்த்து விட்டு சிறு விடுமுறையில் ஊருக்கு செல்வதில் உள்ள மனநிறைவிற்கு அளவேயில்லை. கோவையில் பணிபுரிந்த தருணங்களில் இந்த மனநிறைவு பல சமயங்களில் எனக்கு கிடைத்துள்ளது.

    அந்த சமயங்களில் ஒரு முறை கூட ரயிலில் பயணித்தது இல்லை. பேருந்தை விட்டு இறங்கியவுடன் நண்பர்கள் மற்றும் உறவுகள் நலவிசாரிப்பு ஆரம்பித்து விடும். கோவையில் காலநிலை எப்படி இருக்கு??? ரொம்ப இன்னும் கலராகிட்டா??? எத்தனை நாட்கள் லீவு?? ஊட்டிக்கு போயிட்டு வந்தியா??? என்ன படம் பார்த்தா??? ரொம்ப நாள் இங்க லீவுல இருக்காதா???? அந்த கனிவான வார்த்தைகளும், விசாரிப்புகளும் இனி என்றுமே கிடைக்காது.

    குறைவான சம்பளமும், குறைவான தேவைகளும் இருந்த போது வாழ்க்கை இனித்தது… ஆனால் இன்று எல்லாம் இருக்கின்றது போல ஒரு மாயை தோன்றினாலும், ஏதோ ஒன்று எப்போதும் குறைவது போலவே ஒரு எண்ணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது… உங்கள் எழுத்துக்கள் பழைய நினைவுகளை அசை போட வைத்ததற்கு நன்றி கிரி..

  2. எங்கள் ஊர்களில் எல்லாம் ஆதார் எண்ணை மொபைல் போனுடன் இணைக்க 5 ரூபாய் முதல் 15 ரூபாய் வரை வாங்குகிறார்கள் கிரி.

    சென்னையில் இருந்தாலும் பெற்றோரை பார்க்க நேரம் செலவழிப்பது குறித்து மகிழ்ச்சி. மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பதை பின்பற்றி வருகிறீர்கள். வாழ்த்துகள்…

  3. @யாசின் தண்ணீர் பிரச்சனை உண்மையிலேயே மிக திகிலாக உள்ளது. அரசாங்கம் ஆட்சியை தக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. தண்ணீர் குறித்த எந்த கவலையும் இல்லை.. வெற்று அறிவுப்புகளாகவே உள்ளன.

    கோவை இப்பவும் சிலுசிலுன்னு தான் உள்ளது 🙂 .

    தேவைகள் குறைந்தால், பிரச்சனைகளும் குறைவாக இருக்கும்.

    @சரவணன்

    சரவணன் நீங்க நிறுவனத்தின் அலுவலகத்துக்கு சென்றால் கட்டணம் கிடையாது. சிறு கடைகளில் சென்றால், அவர்கள் கட்டணம் வசூலிப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!