நண்பர் தேவ் எழுதிய I YAAM A RAJINI FAN தலைப்பு என்னவோ ரஜினி பற்றிய புத்தகம் என்ற எண்ணத்தைத் தோற்றுவித்தாலும், புத்தகம் அப்படியில்லை.
ரசிகன் என்பதை ஒரு நூழிலையாகப் பயன்படுத்தித் தன்னுடைய இளமை முதல் தற்போதைய வயது வரை உள்ள தனது கதையைக் கற்பனை கலந்து கூறியுள்ளார்.
தலைப்பு
ரஜினி பற்றிய புத்தகம் என்று படித்தால் சிலருக்கு ஏமாற்றமாகலாம். இன்னும் சிலர் தலைப்பைப் பார்த்து இது ரஜினி பற்றிய புத்தகம் என்ற எண்ணத்துக்கு வரலாம். இரண்டுமே தவறு.
தேவ் தீவிர ரஜினி ரசிகர். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், அதனால் என்ன பயன் / நட்டம் என்பதைப்பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னுடைய விருப்பத்துக்காகத் தலைப்பு வைத்துள்ளார்.
ஒரு ரஜினி ரசிகனாக அவரது உணர்வுகளை என்னால் உணர முடிகிறது.
தன்னுடைய பள்ளி வயதில் ஆரம்பித்து, பின்னர் வாலிப வயது, காதல், திருமணம் என்று ஒவ்வொரு பகுதியாக ரசனையாக எழுதியுள்ளார்.
தேவ் குறித்து நண்பர்கள் ‘எழுத்தாளர்’ என்று கிண்டலடிப்பார்கள். நன்கு எழுதுவார் என்று எனக்கும் தெரியும். முன்பு வலைப்பதிவாளராகப் பல கட்டுரைகள், தொடர்கள் எழுதியுள்ளார் ஆனால், இப்புத்தகம் மிகச் சிறப்பு.
முதல் புத்தகம்
நேரில் பார்த்த போது, ‘தேவ் நீங்க உண்மையாகவே எழுத்தாளர் தான்‘ என்று நகைச்சுவையாகப் பாராட்டுத் தெரிவித்தேன். ஏனென்றால், இவர் தன்னுடைய கதையைக் கூறிய விதம் அவ்வளவு அழகாக இருந்தது.
இவருக்கு முதல் புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் வரும் ஒரு கதாப்பாத்திரம் மட்டும் தேவ் கற்பனை என்பதும், நம்ப முடியாத மாதிரியும் உள்ளது. சில சம்பவங்கள் எதேச்சையாக நடப்பது போல இல்லை.
திருநெல்வேலி பகுதி நினைவுகள், அங்கே பள்ளி நண்பர்களுடன் சுற்றியது, சைக்கிள் பழக முயன்றது, அங்குக் கிடைத்த நண்பர்கள், கடைகள், வயதில் மூத்த நபர்களுடன் நட்பு என்று அப்பகுதியை, படிப்பவர்கள் மனதில் மிக நெருக்கமாக்கியுள்ளார்.
இப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்குத் தங்கள் நினைவுகளை மீட்டெடுப்பவையாக இருக்கும்.
சம்பவங்கள்
கமல் ரசிகர்களுடன் சண்டை, ரஜினி படத்துக்குச் சென்ற விதம், அவரை ரசித்தது, திரையரங்கு ஆர்வம், கிரிக்கெட், செலவுக்காக அரசியல் கட்சிகளுக்குப் பரப்புரை, திராவிட கட்சிகளின் மீதான அப்போதைய ஈர்ப்பு என்று இடையிடையே சுவாரசியமான சம்பவங்கள்.
தேவ் நண்பர்கள் பற்றிய பகுதி ஒவ்வொருவரும் தங்கள் நண்பர்களுடன் கொண்டாட்டமாக இருந்த நாட்களை நினைவுபடுத்துபவை.
பள்ளியில் நடந்த சம்பவங்கள் எல்லாம் செம்ம ரகளையாக இருக்கிறது. பள்ளி ‘பட்டப்பெயர்கள்’ அட்டகாசம்.
தேவ் இத்தனையை எப்படி நினைவு வைத்து இருக்கிறார்..?! என்னதான் சிலது கற்பனை என்றாலும், எனக்கெல்லாம் பல சம்பவங்கள் நினைவில் இல்லை அல்லது நினைவில் இருக்கும் அளவுக்குச் சுவாரசியமான சம்பவங்கள் இல்லை 🙂 .
ஆங்கிலம்
தமிழில் படித்தால் அதன் சுவையே தனி! ஆனால், ஆங்கிலத்தில் படிக்கும் போதும் சில சாதகங்கள் இருப்பதை உணர்ந்தேன்.
சில பகுதிகள் தமிழில் படித்தால் சுயபுராண எண்ணம் வர வாய்ப்புள்ளது ஆனால், அதையே ஆங்கிலத்தில் படிக்கும் போது மிகச் சுவாரசியமாக உள்ளது.
எனவே, தமிழில் படிப்பது சிறப்பு என்றாலும், ஆங்கிலமும் சிறப்பு என்பதைத் தேவ் புத்தகம் படிக்கும் போது உணர்ந்தேன்.
புத்தகத்தின் 80% ஜெட் வேகத்தில் சென்று, மீதி மெதுவாக உள்ளது. இதற்குச் சிறு வயது, இள வயது சம்பவங்கள் முடிந்து பக்குவப்பட்ட வாழ்க்கை துவங்குவதால் இருக்கலாம்.
ஏனென்றால், திருமணத்துக்கு முன்பு வரை பொறுப்புகள் அதிகம் இல்லை. எனவே, பல்வேறு சுவாரசியமான சம்பவங்கள், நண்பர்கள் கலாட்டா என்று இருக்கும்.
திருமணத்துக்குப் பிறகு இதற்கான வாய்ப்புகள் குறைந்து, வேறு மாதிரியான வாழ்க்கை முறையைக் கொண்டு வரும்.
இந்த வித்யாசத்தைக் காட்ட நினைத்தாரா! என்று தெரியவில்லை.
நான் தேவ் கிட்ட பேசும் போது ‘தேவ்! நீங்க வேறு தலைப்பைத் தேர்வு செய்து இருந்தால், இன்னும் பலரிடையே சென்று சேர்ந்து இருக்குமே!‘ என்று கேட்டேன்.
‘இல்லைங்க, இத்தலைப்பு தான் வைக்கணும் என்பது என் விருப்பம். நாளை நான் வேறு புத்தகம் எழுதினால், அதைப்படித்து மற்றவர்களும் இப்புத்தகத்தைப் படித்துப் பார்க்க வாய்ப்புள்ளது‘ என்றார், புன்னகைத்தேன்.
எளிமையான ஆங்கில நடையில் எழுதப்பட்ட, தேவ் வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், ‘Common Man’ புத்தகத்தை அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்:-) .
உங்கள் இளமை கால நினைவுகளை மீட்டெடுக்கும் புத்தகமாக இருக்கும். காதலித்து இருந்தால், கூடுதலாகப் பிடிக்கும். ஆளைப் பார்த்தால் அப்படித் தெரியலை ஆனால், செம்ம ரொமான்ஸாக எழுதியுள்ளார் 😀 . வீட்டுல என்ன பஞ்சாயத்து ஆனதோ! 🙂 .
இப்புத்தகத்தை அமேசானில் (Kindle) வாங்க –> I YAAM A RAJINI FAN Link. Kindle Unlimited ல் உள்ளது.
எங்கள் அனைவருக்கும் நல்ல எண்ணங்களையும், வழிகாட்டுதலையும் கொடுக்கும், இன்று பிறந்தநாள் காணும் தலைவர் ரஜினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
நீண்ட ஆயுளுடன், ஆரோக்கியத்துடன் இறைவன் ஆசீர்வாதத்தில் நலமுடன் வாழ வாழ்த்துகள்.
பின்வரும் பாடல் தலைவர் பிறந்தநாளுக்காக நண்பர் ஜீவதர்ஷன் (இலங்கை) குழுவினர் உருவாக்கிய பாடல்.
ரசிகர்களின் உணர்வுகளை அப்படியே பிரதிபலித்து உள்ளார்கள். அசத்தலான இசை, பாடல் வரிகள், குரல். தலைவரின் அந்தக் குரலை மறக்க முடியுமா!
இப்பாடல் அப்படி ஒரு மகிழ்ச்சியை கொடுத்தது. பாடல் இன்னும் கொஞ்சம் நீண்டு இருக்கக்கூடாதா என்று எண்ண வைத்தது! வாழ்த்துகள் ஜீவதர்ஷன் & குழுவினர் 🙂 .
கொசுறு
என்னுடைய முதல் புத்தகமும் தலைவர் புத்தகமே! அமேசானில் வாங்க, Kindle Unlimited ல் படிக்க –> தலைவர் ரஜினி