பயணக் குறிப்புகள் [டிசம்பர் 2017]

2
Gobi-Market

ப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை என்பதால், அவ்வப்போது ஊருக்குச் சென்று வருகிறேன். சென்னையில் இருப்பதாலே இது சாத்தியமாகிறது, ஒரு வகையில் மகிழ்ச்சியையும் அளிக்கிறது.

அப்பாக்கு Parkinson’s என்ற நோய் உள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வரக்கூடிய நோய் குறிப்பாக ஆண்களுக்கு.

நரம்பியல் சம்பந்தப்பட்ட இதன் பாதிப்பு என்னவென்றால்,

கைநடுக்கம், அதிகளவில் மறதி, நடக்கும் போது Balance இல்லாதது, மன அழுத்தம், அதிகத் தூக்கம், தலை கிறுகிறுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதைக் குணப்படுத்த முடியாது, மோசமாகாமல் ஓரளவு தடுக்கலாம்.

Parkinson James என்பவர் தான் இந்நோயை பற்றி முதலில் விரிவாகக் கூறியிருக்கிறார். எனவே, அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

ஒரு மாதத்துக்கு முன்பு சிறுநீர் தொற்றுப் பிரச்சனை ஏற்பட்ட போது மருத்துவர் அதிக வீரிய மருந்தை கொடுத்ததால், அப்பா கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.

தற்போது அதில் இருந்து மீண்டு வந்துகொண்டு இருக்கிறார்.

ஈரோட்டில் உள்ள மருத்துவரின் மருந்தால், தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது, தலை கிறுகிறுப்பு 90% நின்று இருக்கிறது.

அக்காக்கள் தான் உதவியாக இருக்கிறார்கள். அப்பா ஒரு குழந்தையாக மாறி விட்டார்.

அப்பாக்கு 84 வயதாகிறது எனவே, இது இயல்பான ஒரு நிலை தான் என்பதால், எங்களால் இதை ஏற்றுக்கொள்ள முடிகிறது ஆனால், அம்மா தான் ரொம்ப வருத்தப்படுகிறார்கள்.

சில காலம் சென்றால், (நான் தொடர்ச்சியாக உடன்யில்லையாததால்) என்னையே என் அப்பா மறந்து விடுவார் என்ற உண்மை உரைக்கும் போது வருத்தமாக உள்ளது.

குளிர்

செம்ம குளிராக இருக்கிறது. பொங்கலுக்கு ஊருக்குச் செல்லும் போது குளிர் செம்மையா இருக்கும். குளிராக இருந்தால், ஒரு வித பரவசமாக இருக்கிறது.

பாரியூர் கோவில் திருவிழா, பொங்கல் பண்டிகை என்று ஜனவரி மாதம் குளிருடன் களை கட்டும்.

குடும்பத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம்

அப்பா, வழக்கமான அப்பாக்கள் போலப் பலவற்றை எங்களுடன் பகிர்ந்து கொள்ள மாட்டார் குறிப்பாகப் பணச் சம்பந்தப்பட்ட விஷயங்கள்.

நாங்களும் மரியாதை காரணமாக நெருக்குவதில்லை, நான் சென்னை வந்த பிறகு (2015), அப்பாவிடம் பேசி அனைத்து தகவல்களையும் பெற்று முழுக்கடனையும் அடைத்தோம்.

ஒருவேளை இன்னும் கட்டாமல் இருந்து இருந்தால், பெரும் சிக்கலில் மாட்டி இருப்போம்.

ஏனென்றால், தற்போது மறதியால் அனைத்தையும் மறந்து விட்டார். யாரிடம் கடன் பெற்றார் என்று கூடத் தெரியாது. எனவே, பெரும் பிரச்சனையிலிருந்து கடவுள் அருளால் தப்பித்தோம்.

இதனால், இதைப் படிக்கும் அனைவருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், பண விசயம் குறித்துக் குடும்பத்தில் அனைவரிடமும் இல்லையென்றாலும், துணையிடமோ, உங்களுக்கு நம்பிக்கையுள்ள ஒருவரிடமாவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நாளை என்ன நடக்கும் என்று தெரியாது, இதனால் பாதிக்கப்படப்போவது குடும்பத்தினர் தான். எனவே, எதையும் ரகசியமாக வைத்துக்கொள்வது, தனக்கு மட்டுமே அனைத்தும் தெரியணும் என்பது போன்ற சுய கவுரவ எண்ணங்களைத் தவிருங்கள்.

கிறிஸ்துமஸ் நட்சத்திரம்

சின்னப் பையனாக இருந்த போது 9 முறையும் பெரியவனாக 1 முறையும் சபரிமலைக்குச் சென்று இருக்கிறேன்.

சபரிமலை செல்லும் போதெல்லாம் கேரளா கிறித்துவ வீடுகளில் “கிறிஸ்துமஸ் நட்சத்திரம்” மாட்டி வைத்து இருப்பார்கள்.

மின் விளக்கு ஒளியுடன் இரவில் மரங்களினூடே பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கும்.

இது போல நம்ம வீட்டிலும் மாட்டனும் என்ற ஆர்வம் என்னுடைய சிறு வயதில் இருந்து உள்ளது. ஏனோ அதற்கான சந்தர்ப்பம் அமையவில்லை, என்னுடைய விருப்பமும் குறையவில்லை.

இந்தமுறை கோபி தீயணைப்பு நிலையத்தின் அருகே ஒரு கடையில் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் விற்பனை செய்தார்கள், ரொம்ப அழகாக இருந்தது.

வாங்கலாம் என்று நினைத்தேன் ஆனால், நான் ஒரு நாள் தான் இருப்பேன், அடுத்த முறை வரும் போது பொங்கல் வந்துவிடும் என்பதால், வாங்கும் எண்ணத்தைக் கை விட்டுவிட்டேன்.

இருப்பினும் ஆர்வம் குறையவில்லை. என்றாவது ஒருநாள் வாங்கி மாட்டுவேன், உறுதியாக 🙂 .

அருவி

வீட்டில் பெரிய கூட்டமே இருந்தது, கலகலப்பாகவும் இருந்தது. அக்கா பசங்க “மாமா, படத்துக்குப் போகலாம்” என்று எப்போதும் அழைப்பார்கள் என்பதால், இந்த முறை “அருவி” படம் சென்றோம்.

படம் ரொம்ப நன்றாக இருந்தது. இறுதிக்காட்சி மட்டும் எனக்கு வழக்கமான சினிமாத்தனமாக தோன்றியது.

சத்தத்தில் திரையரங்கு அதிர்ந்து கொண்டே இருந்தது குறிப்பாக “ரோல்ல்ல்லிங் சார்” வசனத்துக்கு 🙂 .

தற்போது கோபி “வைரவிழா மேல்நிலைப்பள்ளி” “வெள்ளாளர் மாணவர் விடுதி”யின் நூற்றாண்டை கொண்டாடப்போகிறார்கள். நான் இங்கு தங்கித்தான் படித்தேன்.

எனவே, அங்குப் படித்த மாணவர்களை WhatsApp ல் முன்னாள் மாணவர் குழு ஒருங்கிணைத்து வருகிறார்கள்.

இதில் “அருவி” படத் தயாரிப்பாளர் பிரபுவும் இருப்பது முன்னாள் மாணவனாக எனக்கு மகிழ்ச்சி.

தாத்தா பேரன்

நான் மட்டுமே ஊருக்கு வர ரயிலில் முன்பதிவு செய்து இருந்தேன்.

அப்பா “வினய் & யுவன்” இருவரையும் கேட்டுக்கொண்டு இருந்ததால், யுவனுக்குப் பயணச்சீட்டு அவசியமில்லாததால் அவனை மட்டும் அழைத்துக்கொண்டு சென்றேன்.

பிரச்சனை செய்யாமல் வந்தான் 🙂 .

அப்பாக்கு இவனைப் பார்த்ததும் மகிழ்ச்சி. “தாத்தா நான் பிடிச்சுக்கிறேன் நீங்க நடங்க” என்றதுக்கு அனைவரும் சிரித்தார்கள்.

எப்போதுமே ஊருக்கு வந்து, திரும்பச் செல்லும் போது வினய் யுவன் இருவரையும் அம்மா அப்பாவிடம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கச் சொல்வேன். இந்தமுறையும் யுவன் வாங்கிக்கொண்டான்.

பெரியவர்களை மதிக்க நாம் நம் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்கவில்லை என்றால், அவர்கள் பெரியவர்கள் ஆனாலும் அதையே தொடர்வார்கள்.

எனக்குத் தாத்தா பாட்டி அன்பு கிடைக்காததால் (நான் பிறக்கும் முன்பே இறந்து விட்டார்கள்) எப்போதுமே வயதானவர்கள் மீது எனக்குக் கூடுதல் பாசம் இருக்கும்.

இதை என்னுடைய பசங்களுக்கும் கடத்த விரும்புகிறேன்.

சென்னை வந்ததும் இவன் அம்மாவிடம் “அம்மா, தாத்தா என்ன சொன்னாலும் சிரிச்சிட்டே இருக்காங்க!” என்கிறான் 🙂 .

அப்பா அதிகம் பேச முடியாது என்பதால், பெரும்பாலும் புன்னகையைப் பதிலாகக் கொடுத்து விடுவார், இவன் அதைச் சொல்றான்.

Read: வயதானவர்களின் நிலை என்ன?

அமாவாசை

எனக்கு அமாவாசை சாப்பாடு ரொம்பப் பிடிக்கும். ஏனென்றால், தண்டு, வாழைப்பூ, புளி குழம்பு, பருப்பு, மோர் குழம்பு, வடை, பாயாசம் என்று அசத்தலாக இருக்கும்.

சொன்னால் கேட்காமல் அம்மா இன்னும் முன்னோர்களுக்குப் படைப்பு என்று அனைத்தையும் செய்து பின்பற்றி வருகிறார்கள். கடந்த ஞாயிறு அமாவாசை.

அமாவாசை என்றால்,  ஏகப்பட்ட வேலை இருக்கும், குறைத்துக்கொள்ளுங்கள் என்றாலும் “சரி” என்கிறார்கள் ஆனால், தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இதற்கான பொருட்களை வாங்க சனிக்கிழமை மார்க்கெட்டுக்கு அழைத்துச் செல்ல கூறினார்கள் என்று “கோபி மார்க்கெட்” அம்மாவுடன் சென்றேன்.

அங்கே குறிப்பிடத்தக்க அளவில் வயதானவர்கள் காய்கறிகளை விற்றுக்கொண்டு இருப்பார்கள். அவர்கள் பேசுவதைக் கேட்கவே மிக மகிழ்ச்சியாக இருக்கும்.

ஏங்கண்ணு என்ன வேணும்.. இதை வாங்கிக்க சாமி..

ஏனுங்கா(ஆ)யா இது யாருங்கோ..  (ஆயா என்பது வயதானவர் என்பதால் மட்டுமல்ல, மரியாதை கொடுக்கும் நோக்கில் கூறப்படும் ஒரு கொங்கு வார்த்தையாகும்)

எம்பையனுங்

ஏங்கண்ணு! ஊர்ல இருந்து வந்தையாக்கு.. சரி இந்தா கண்ணு, பையில போட்டுக்க.

கொங்குத் தமிழ் போல ஒரு அழகான / மரியாதையான தமிழ் கிடையாது 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

 1. கொங்கு தமிழ் கேட்க்கும் போது “இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே” என்ற வரிகள் புரிந்தது போல இருக்கும்.
  சந்தை இவ்வளவு தூய்மையாக இருப்பது ஆச்சரியமளிக்கிறது!!!!!

 2. அப்பாவின் உடல் நிலை : கண்டிப்பாக வருத்தமான ஒன்று. ஆனால் நிச்சயம் நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். தற்போது நீங்கள் தமிழ்நாட்டில் பணிபுரிவது நன்மைபயக்கக்கூடிய ஒன்று. இந்த சூழ்நிலையில் வெளிநாட்டில் இருந்தால் ஒவ்வொரு கணமும் பதட்டமாகவும், இறுக்கமாகவும் இருக்கும். அம்மாவின் தவிப்பு, வலி யாராலும் உணர முடியாது. 60 ஆண்டுக்கும் மேலான மணவாழ்க்கை. வலியை வார்த்தைகளால் கூற முடியாது.

  குடும்பத்தில் வெளிப்படைத்தன்மை : உங்க அப்பாவின் அதே குணம் தான் எனக்கும். யாரிடமும் ஏதும் பகிர்வதில்லை, சக்தியை தவிர்த்து. கவுரவம், திமிர் அந்த மாதிரி எண்ணம் ஏதும் கிடையாது. சின்ன வயதிலிருந்து எல்லா முடிவுகளையும் சுயமாக எடுக்க அனுமதித்ததின் விளைவு தான். அம்மா இதுவரை எதுவும் கேட்டதில்லை, மனைவி வந்த பின் கேட்கும் போது நமக்குள்ள இருக்குற மிருகம் முழித்துக்கொள்கிறது. கடன் ஏதும் இல்லை, வரவேண்டிய பணம் இருக்குது… வருமா??? வராதா???.

  அருவி : படம் இன்னும் பார்க்கவில்லை.

  தாத்தா பேரன் : தாத்தா, பாட்டியின் அரவணைப்பு எனக்கு இல்லையெனில், இந்த உலகுக்கு வந்த சுவடே தெரியாமல் போயிருப்பேன். அம்மா, அப்பாவை காட்டிலும் இவர்களின் மீது பாசம் அதிகம். இவர்கள் இருவரும் இன்று உலகில் இல்லை. இவர்கள் நினைவாக எதிர்காலத்தில், ஒரு அறக்கட்டளை துவங்கி, இலவச கல்வியும், முதியோர்களுக்கு உண்ண உணவும், இருப்பிடமும் இலவசமாக அளிக்க ஒரு திட்டத்தை வகுத்துளேன். அதை நோக்கியும் பயணிக்கிறேன்..

  அமாவாசை : சிறு வயதில் எதிர் வீட்டில் இருந்த இந்து குடும்ப நண்பர்களின் வீடுகளில் உண்ணாத நாளில்லை. அடிக்கடி ஏதாவது கொடுத்து கொண்டே இருப்பார்கள். இன்று இரண்டு குடும்பமும் இல்லை, ஆனால் அவர்களின் வீட்டில் அன்று சாப்பிட்ட சுவை இன்னும் நாவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது..

  கொங்குத் தமிழ் : கொங்கு காற்றை நானும் இரண்டு ஆண்டுகள் சுவாசித்தத்தால் உங்கள் கருத்துக்கு தலை வணங்குகிறேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here