பயணக் குறிப்புகள் [21-11-2013]

16
பயணக் குறிப்புகள் [21-11-2013]

ந்த முறை தீபாவளி விடுமுறைக்கு ஊருக்கு செல்ல முடிவு செய்த போது, மூன்று அக்காவையும் கண்டிப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என்று கூறி இருந்ததால், அதற்கு தகுந்த மாதிரி விடுமுறையை மாற்றி வைத்து இருந்தார்கள் அதனால், குடும்பத்துடன் அனைவரும் இருக்க முடிந்தது.

மூன்று அக்கா, மச்சான்கள் (அக்கா கணவர்), குழந்தைகள், என்னோட பசங்க, அம்மா, அப்பா என்று சேர்த்து 15 பேர். வீடே இரண்டாகி விட்டது.

ஒரு நாளைக்கு (மூன்று வேளை) கிட்டத்தட்ட 40 பேருக்குச் சமையல் என்று அம்மா, மனைவி, அக்கா மூவரும் ஒரு வழி ஆகி விட்டார்கள்.

இதில் விருந்து அன்று மட்டும் தனியாக சமையலுக்கு ஆள் போட்டுக் கொண்டோம்.

இதற்கு என் சென்னை நண்பர்கள் மற்றும் மற்ற நண்பர்கள் உறவினர்கள் என்று அது தனியாக 20 பேர். கூட்டமாக இருந்ததால் ரொம்ப நன்றாக இருந்தது.

எனக்கு கூட்டம் பிடிக்காது ஆனால், இந்தக் கூட்டமல்ல :-).

ஆரம்பம்

நாங்கள் ஒன்றாக திரைப்படம் சென்று வருடங்கள் ஆகிறது என்று இந்த தீபாவளி படத்தில் ஏதாவது ஒன்று செல்லலாம் என்று முதலில் வந்த “ஆரம்பம்” படம் செல்லலாம் என்று முடிவானது. இதற்கு 15 பேர் சென்றோம்.

திரையரங்கம் ஒரு மொக்கை. நாற்காலி, ஒலி என்று எதுவுமே நன்றாக இருக்காது.

படத்தில் ரசிகர்களின் கூச்சல் ஒரு புறம் என்றாலும் ஒலி சரியாக இல்லாததால் ஒன்றுமே புரியவில்லை. இனிமேல் இங்கே படமே பார்க்கக் கூடாதுன்னு முடிவு செய்து விட்டேன்.

கூட்டம் வராததால் திரையரங்கம் படு மோசமாக பராமரிக்கப்படுகிறது.

என் அம்மாவிற்கு படம் / கதை சுத்தமாக புரியவில்லை. ஹேக்கிங், வெடிகுண்டு அது இது என்று இருந்ததும், “ஏன் தம்பி இந்தப் படத்திற்கு போய் என்னை கூட்டிட்டு வந்தே!” என்று அம்மா பரிதாபமாக பார்க்க… நானும் வேறு வழியில்லாததால் சிரித்து வைத்தேன்.

உண்மையில் படம் என்னைப் பொறுத்தவரை ரொம்ப சுமார். லாஜிக் சுத்தமாக இல்லை.. ஏகப்பட்ட கேள்விகள்.. அரத பழசான வசனங்கள் என்று இருந்தது.

படத்திற்கு பலம், ஸ்டைலிஷாக இருந்ததும்.. தல மட்டுமே.

படம் வெற்றி பெற்றதுக்கு இதைத் தவிர வேற எந்தக் காரணமும் எனக்குப் புரியவில்லை.

தரமான சாலைகள்

ந்த முறையும் நான், என் அண்ணன் [பெரியப்பா மகன்] காரில் கோவை சென்றோம், சத்தி வழியாக.

வழியில் ரொம்ப நன்றாக இருந்த சாலையின் மேல், திரும்பச் சாலை அமைத்துக்கொண்டு இருந்தார்கள். வயித்தெரிச்சலாக இருந்தது.

தரமான சாலைகள் தேவைப்படும் இடங்கள் ஏராளமாக இருக்க, ரொம்ப நன்றாக உள்ள சாலையின் மீது கமிசனுக்காக மட்டுமே போடப்படும் இந்த சாலையை பார்த்து வெறுப்பாவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

நம் நாட்டில் இது போல வீணடிக்கப்படும் பணத்தை மட்டுமே சரியாகப் பயன்படுத்தினால் நாட்டில் பணப் பற்றாக்குறையே வராது.

இதெல்லாம் நடக்கிற காரியமா…! வாங்க அடுத்த விசயத்துக்குப் போவோம்.

திண்டல் மலை முருகன்

ந்த முறை சென்னை நண்பர்கள் அனைவருடனும் திட்டமிட்டு மசினகுடி சென்று வந்தோம். இது எங்கள் வீட்டில் இருந்து 4 மணி நேர பயணத்தில் உள்ளது.

அப்படியும் இரு நண்பர்கள் வர முடியாதது வருத்தமாக இருந்தது.

ஒவ்வொருமுறையும் ஒருத்தராவது வர முடியாமல் போய் விடுகிறது. இந்தப் பயணம் பற்றி தனிப் பதிவாக எழுதுகிறேன்.

ன் அக்கா பையனை ஈரோடில் உள்ள பள்ளியில் ஹாஸ்டலிலிருந்து அழைத்து வர சென்று இருந்தோம். அருகிலேயே திண்டல் மலை முருகன் கோவில் இருக்கிறது.

ரொம்ப நாளாக செல்ல வேண்டும் என்று நினைத்துப் போகவில்லை.

இந்த முறை அனைவரும் இருந்ததால், இவனையும் அழைத்துக்கொண்டு சென்றோம். அன்று தான் சூரசம்ஹாரம் முடிந்து கடைசி நாள்.

இது எனக்குத் தெரியாது. நான் சும்மா போகலாம் என்று போனது தான்.

திட்டமிட்டு சென்று இருந்தால் கூட இவ்வளவு திருப்தியாக பார்த்து இருக்க முடியாது.

மாலை பூஜை அதன் பிறகு முருகன் ஊர்வலம் இவை எல்லாவற்றையும் விட கேரளாவில் அடிக்கும் மேளம் ஜண்டை (சரியா சொல்றேனா) அடித்தார்கள்.

பின்னி பெடலெடுத்துட்டாங்க.

அடிச்ச அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா! என்று கேட்பது போலவே இருந்தது 🙂 .

எனக்கு சும்மாவே இது போல மேளம் என்றால் ஆர்வம், அதிலும் இது போல என்றால்… முடியும் வரை பார்த்தேன்/தோம்.

இதன் பிறகு வெடியெல்லாம் வெடிக்க.. குழந்தைகள் அனைவரும் குஷி ஆகி விட்டார்கள்.

அவர்கள் அனைவரும் விளையாடி முடித்த பிறகு, கோவிலை சுற்றி வந்த பிறகு சிறிது நேரம் கழித்து பொறுமையாகக் கிளம்பினோம்.

ரொம்ப நாளைக்கு பிறகு ரொம்ப திருப்தியாக இருந்தது.

பஞ்சாயத்து

வாய்ப்புக் கிடைத்தால், இது வரை செல்லாமல் இருந்தால், நிச்சயம் திண்டல் முருகன் கோவில் சென்று வரவும்.

வினயை பள்ளிக்குச் செல்ல காலையில் எழுந்திருக்க வைப்பதற்குள் நாங்க பல முயற்சிகளை எடுக்க வேண்டி இருக்கிறது.

ஆனால், விடுமுறை நாளில் 7 மணிக்கு எழுந்து விடுகிறான். இதை விட பெரிய கொடுமை சாப்பிட வைப்பது.

சாப்பிட அழைத்தால் கட்டிலுக்கு அடியில் சென்று ஒளிந்து கொள்கிறான்.

இதை நிழல் படம் எடுத்து வைத்து இருக்கிறேன். பெரியவன் ஆனதும் இதைக் காட்டி என்னென்ன அட்டகாசம் செய்தான் என்று கூற வேண்டும் 🙂 .

இரண்டாவது பையன் யுவன், எதற்கும் அழ மாட்டான். கீழே விழுந்தால் மட்டுமே அழுவான், அதுவும் ஒரு நிமிடம் தான்.

வேறு பக்கம் கவனத்தை திருப்பினால் பழைய நிலைக்கு வந்து விடுவான். இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை…சேர் மற்றும் வாக்கர் தள்ளிக்கொண்டு போவான்.

இவனுக இரண்டு பேருக்கும் தற்போது தீர்க்க கூடிய பஞ்சாயத்து மட்டுமே நடக்கிறது. இன்னும் ஒரு வருடம் சென்றால் தான் என்ன நிலை என்று தெரிய வரும் 🙂 .

பிறந்த நாள்

ன்னோட அக்கா பையன் பிறந்த நாள் வந்தது. பிறந்த நாள் அன்று அவன் ஹாஸ்டல் சென்று விடுவான் என்பதால், முன்னரே கொண்டாட முடிவு செய்து கேக் வாங்கி வைத்தோம்.

இரவு 10 மணிக்கு, அனைவரும் இருக்கையில் பிறந்த நாள் கொண்டாடி கேக் கொடுக்கப்படும் போது முகத்தில் கேக் பூசி களேபரமாகி விட்டது.

குழந்தைகள் ஆளாளுக்கு துரத்தி கேக் பூச, இரவு அந்த ஏரியாவிலேயே எங்கள் வீட்டில் தான் சத்தமாக இருந்தது.

பசங்க, குழந்தைகள் என்று வினயுடன் சேர்த்து ஐவர் மற்றும் நாங்கள்.

என் அக்கா பெண்ணின் முகத்தில் கேக் அதிகம் பூசி விட, அவனை இவ துரத்த, என் அப்பா “டேய்! பார்த்து ஓடுங்க.. விழுந்துடாதீங்க…!” என்று அலற.. ஒரே கலாட்டாவாக இருந்தது.

அக்கா முகத்திலும் கேக் பூசியதால் முகம் கழுவிக் கொண்டு வந்த பிறகு, மறுபடியும் கேக் பூசி விடுவார்கள் என்று அக்கா பயந்து ஒதுங்கி விட்டார்.

வினய் சத்தம் இல்லாமல் வேறு பக்கம் சென்று கேக்கின் மேலே இருந்த க்ரீமை மட்டும் சாப்பிட்டுக்கொண்டு இருக்க, இதைப் பார்த்து அனைவரும் துரத்தினார்கள்.

அதில் எடுத்த படங்கள் தான் இவை. இவனை எப்படி எடுத்தும் சிக்காததால் அரைகுறையாக படம் வந்தது.

மொத்தத்தில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு அனைவரும் ஒன்றாக, சந்தோசமாக இருந்த நாட்கள்.

கோமாரி

மாடுகளை தாக்கும் “கோமாரி” நோயால் பல ஆயிரக்கணக்கான மாடுகள் இறந்து விட்டன.

என் அக்காவின் வீட்டில் ஒரு கன்றுக் குட்டி இந்த நோயால் இறந்ததால் அனைவரும் சோகம் ஆகி விட்டார்கள்.

எப்படி இது போல திடீர் என்று தீவிரமாக பரவியது என்று புரியவில்லை. மாட்டுக்கறி சாப்பிடுபவர்கள் கொஞ்ச நாள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

நோயால் இறந்த மாட்டையே விற்பனை செய்யும் நல்லவர்கள் நிறைந்த நாடு இது.

பொடுசுகள் சேனல் மாற்றிக்கொண்டு இருந்த போது, ஜெயா தொலைக்காட்சியில் கமல் நடுவராக ஒரு பட்டிமன்றத்தில் அமர்ந்து இருந்தார்.

என்னடாது கமல் நடுவராக எல்லாம் அமர நேரம் இருக்கிறதா! என்று ஆச்சர்யமாக பார்க்க.

தலைப்பு, உலகநாயகனின் உயர்விற்கு காரணம் கலைநயப்படங்களா.. அல்லது கமர்சியல் படங்களா என்று.

இந்த தலைப்பிற்கு கமல் நடுவரா! என்ன கொடுமை சார். எனக்கு இதைப் பார்த்ததும் கலைஞர் தான் நினைவிற்கு வந்தார்.

அனைவரும் பாராட்ட, கலைஞர் அதை காது குளிர கேட்டுக்கொண்டு அமர்ந்து இருப்பார்.

என்னதான் மற்றவர்கள் நம்மை புகழ்ந்தால் சந்தோசமாக இருக்கும் என்றாலும், இதுபோல தலைப்பு வைத்து அதில் பார்வையாளராக இல்லாமல் நடுவராக இருப்பது கூச்சமாக இருக்காதா!

கமல் இதற்கு எப்படி சம்மதித்தார்?

பண்ணாரி

தீபாவளி அன்று தொலைக்காட்சி பார்க்கக் கூடாது என்று கூறி இருந்தேன். பெரியவர்கள் கேட்பார்கள்… குழந்தைகள்…! அவர்கள் வழக்கம் போல போகோ, திரைப்படங்கள் என்று பிசியாகி விட்டார்கள்.

சரி! மாலை, “பண்ணாரி” கோவில் செல்லலாம் என்று முடிவானது.

சமையல் அது இது என்று அக்காக்கள் களைப்படைந்து விட்டார்கள். போவது சந்தேகமாக… திரும்ப வாய்ப்புக் கிடைக்காது என்று [மச்சான் மற்றும் அண்ணன்] காரில் பண்ணாரி சென்று வந்தோம்.

எங்கள் வீட்டிலிருந்து 35 – 40 நிமிடம் தான் ஆகும். ரொம்ப நன்றாக இருந்தது. மாலை, தாமதமாக சென்றதால் பவானிசாகர் அணை செல்ல முடியவில்லை.

காஞ்சனா

ன்னோட பெரிய அக்கா பையன் “காஞ்சனா” மற்றும் “நான் ஈ” DVD எடுத்துட்டு வர, அதில் உள்ள காமெடிக்காக இந்த பொடிசுகள் ஒரு நாளைக்கு நான்கு முறை இதே DVD யை போட்டு பாடாய் படுத்தி விட்டார்கள்.

வேறு எதையும் போடவும் விடவில்லை.

அதில் லாரன்ஸ் கூறும் “சம்ஜே” மற்றும் பல ஹிந்தி வார்த்தைகளுக்கு கோவை சரளா கொடுக்கும் பதிலைப் பார்த்து இவர்கள் கெக்கேபிக்கே என்று சிரித்துக்கொண்டே இருந்தார்கள்.

இந்தப் படத்தையே நாள் முழுக்க பார்த்து காஞ்சனா படத்தில் வரும் பேய் போல நாங்கள் ஆகி விடுவோம் போல இருந்தது.

யப்பா! கடைசியில் பொறுக்க முடியாமல் DVD யை ஒளித்து வைத்து விட்டோம். அதன் பிறகு, ஆத்தா வையும் சந்தைக்கு போகணும் காசு கொடுங்கற மாதிரி.. DVD கொடுத்தால் தான் ஆச்சு என்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டு இருந்தார்கள்.

எல்லாம் சரியாப் போச்சு ஆனால், காலக் கொடுமையாக எதோ தொலைக்காட்சியில் தீபாவளி சிறப்புப் படமாக “காஞ்சனா”. ஹோய்! என்று பெரிய சத்தம் திரும்ப “காஞ்சனா”… முடிய்ய்யல.

நன்றி

ப்புறம், இந்த விடுமுறை நாளில் அனைவரையும் சமாளித்து, ஒத்துழைப்பு கொடுத்துக் கடுமையாக வேலை செய்த அம்மா, அக்கா, மனைவி ஆகியோருக்கு பெரிய நன்றி.

இவர்களின் ஒத்துழைப்பு மற்றும் விருப்பமாக செய்த வேலைகளால் மட்டுமே எங்கள் விடுமுறை எங்கள் அனைவருக்கும் சந்தோசமாக முடிந்தது.

யணக் குறிப்புகளை இரண்டு பாகமாக எழுதலாம் என்று தான் இருந்தேன் ஆனால், எழுத எனக்கு விருப்பமாக இருந்தாலும், படிக்கும் உங்களுக்கு போர் அடிக்கும் என்பதால் ஒரே பகுதியாக முடித்து விட்டேன் 🙂 .

இந்த வாரம் “இரண்டாம் உலகம்” படம் வெளியாகிறது. விமர்சனத்தில் பார்ப்போம்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

  1. “படம் வெற்றி பெற்றதுக்கு இதைத் தவிர வேற எந்தக் காரணமும் எனக்குப் புரியவில்லை”
    ஒரு மொக்க threate-ல பார்த்ததுனால உங்களுக்கு அப்படி இருக்கு. படமே style-லுக்காகதான் ஹிட்டாச்சு.மத்தபடி, ரெண்டு மூணு இங்கிலீஷ் படத்துல இருந்து சீன்ஸ் (main-அ “SwordFish”), நயன்தார, அஜித் அவ்வளோதான். மறுபடியும் ஒரு நல்ல தியேட்டர்ல படத்த பாருங்க. புடிக்கும்.

  2. சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்வதில் உள்ள மகிழ்ச்சி போல் வேறு ஏதும் இல்லை கிரி.. நான் கோவையில் பணி புரிந்த புதிதில் போது வார விடுமுறைக்கெல்லாம் வீட்டுக்கு (கடலூர் TO கோவை) சென்று விடுவேன் (ஒரு நாள் விடுமுறைக்கு, ஒரு பிடி சோறுக்கு) . நண்பர்கள் அனைவரும் கேலி செய்வர்ர்கள்… (பேசமா பஸ் பாஸ் வாங்க்கி டா என்று).. இன்று நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது… பகிர்வுக்கு நன்றி கிரி.. JK என்னும் நண்பனின் கதை நாளை வெளி வரும் இன்று எண்ணுகிறேன்.. நேரம் இருப்பின் பார்த்தல் பதிவேழுதவும்…. ஓநாயும் ஆட்டு குட்டியும் பார்த்தீர்களே என்ன???? கிரி.

  3. // வாக்கர் தள்ளிக்கொண்டு போவான். //

    எங்கள் குடும்பத்தின் சிறார் மருத்துவர் வாக்கரில் நடை பழகினால் மழலைகளுக்கு தன்னம்பிக்கை குறையும். எனவே பழைய மூணு சக்கர மர வண்டியையே கொடுக்கப் பரிந்துரைக்கிறார்.

    //ஜெயா தொலைக்காட்சியில் கமல் நடுவராக ஒரு பட்டிமன்றத்தில் அமர்ந்து இருந்தார். என்னடாது கமல் நடுவராக எல்லாம் அமர நேரம் இருக்கிறதா! என்று ஆச்சர்யமாக பார்க்க. தலைப்பு, உலகநாயகனின் உயர்விற்கு காரணம் கலைநயப்படங்களா.. அல்லது கமர்சியல் படங்களா என்று. இந்த தலைப்பிற்கு கமல் நடுவரா! என்ன கொடுமை சார்.//

    விசுவரூபம் காட்டிய பயம்தான் காரணமோ?

    //இவை எல்லாவற்றையும் விட கேரளாவில் அடிக்கும் மேளம் ஜண்டை (சரியா சொல்றேனா) அடித்தார்கள். பின்னி பெடலெடுத்துட்டாங்க. அடிச்ச அடியில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா! என்று கேட்பது போலவே இருந்தது .//

    தவிலையும் நாதசுரத்தையும் தள்ளி வைத்து விட்டார்களோ?
    தமிழனின் அடையாளம் தொலைந்து வருகிறது.

  4. பட்டிமன்றம் பார்த்தேன் . Waste of time . KSR , கமல் பேச்சு மட்டுமே கேட்கும்படி இருந்தது.

  5. பயண குறிப்புகள் ரசிக்கும் படி இருந்தது அதாவது கூடவே இருந்த அனுபவத்தை தந்தது

  6. ஒரு ஜாலி பாமிலி ரீடே போய்ட்டு வந்த மாதிரி இருக்கு
    எனக்கு ஒரு சந்தேகம் இதனை விஷயங்கள் எழுதணும் நு ஞாபகம் வெச்சு பீங்கலா நடக்கும் போதே “இதெல்லாம் எழுதலாம்” இல்லேனா பதிவு ஆரம்பிச்சதும் ஞாபகம் வருமா ?

    “என்னோட பசங்க, அம்மா, அப்பா என்று சேர்த்து 15 பேர். வீடே இரண்டாகி விட்டது.”
    – எனக்கு வீடு ரெண்டாகி விட்டது நு யார் சொன்னாலும் விசு வோட சம்சாரம் அது மின்சாரம் ஞாபகம் வந்துடும். தப்பா நினச்சு க வேண்டாம்

    ரொம்ப சந்தோசம் தல உங்க அனுபவங்கள் சொன்னதுக்கு

    “கடுமையாக வேலை செய்த அம்மா, அக்கா, மனைவி”
    – நீங்களும் kitchen ல உதவி செஞ்சு இருப்பீங்க நு நம்புறேன் அப்படி இல்லேனா இன்னுமே செய்யணும் நு கேட்டுக்குறேன். தெரியல நு escape ஆகா கூடாது தெரியலேனா வேலை ல கத்து கிட்டு பண்ணுற மாதிரி இதுலயும் பண்ணனும்

    – அருண்

  7. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @சங்கர் ஆமாம். பதிவிலேயே கூறி இருக்கிறேனே!

    @கௌரிஷங்கர் ஐயையோ! மறுபடியுமா.. வாய்ப்பே இல்லை.

    @யாசின் படம் வெளிவர மாதிரியே தெரியலையே. இந்தப் படத்தை கூற ஏதும் காரணம் இருக்கிறதா?

    @ரீடர்

    இல்லை தவிலும் நாதஸ்வரமும் இருந்தது, உடன் இந்த இசையும் இருந்தது.

    @அருண் அப்படி எதுவுமில்லை. எழுத ஆரம்பிக்கும் போது அதுவே தானாக வரும். ஏதாவது ஒரு சில குறிப்பிட வேண்டும் என்று நினைத்து இருப்பேன் ஆனால், எழுதும் போது மறந்து விடுவேன். எழுதாமல் விட்டது ஏராளம்.

    இது அந்த இரண்டில்லை.. வேற இரண்டு 🙂

    சமையல் அறையில் நான் எதுவும் உதவி செய்யவில்லை. செய்தாலும் அனுமதிக்க மாட்டார்கள்.

  8. படம் ரீலிஸ் தள்ளி கொண்டே போகிறது… சேரன் படம் என்பதை விட இதற்கு தனி சிறப்பு இல்லை… கடந்த சில படங்கள் சரியாக போகததால் இந்த படத்தின் மீது சேரன் தனி கவனம் செலுத்தி எடுத்துள்ளார்… இது முற்றிலும் முந்தைய சேரன் படங்களை காட்டிலும் வேறுபட்டு புதுமையாக இருக்கும் என்று கூறி உள்ளார்… படம் அடுத்த மாதம் வருவது போல் தெரிகிறது.. Wait & See …

  9. நீதிநெறி விளக்கம்

    நோவது ஏன்?

    கற்றன கல்லார் செவிமாட்டிக் கையுறூஉம்
    குற்றம் தமதே பிறிதன்று – முற்றுணர்ந்தும்
    தாமவர் தன்மை உணராதார் தம்முணரா
    ஏதிலரை நோவ தெவன்? (பாடல்-24)

    பொருள்
    தாம் கற்ற நல்ல நூல்களின் கருத்துகளை, கல்லாத மாக்களின் செவியில் வலிந்து புகுத்தினால், அச்சான்றோர் அவரால் சிறுமை அடைவர். அக்குற்றத்திற்குக் காரணம் தமது அறியாமையே ஆகும்; வேறு பிறிதில்லை. கற்றார் தாம் முற்றும் உணர்ந்த பின்னரும் கல்லாதாரின் இயல்பை அறியாதவர் ஆகின்றனர். அவ்வாறு இருக்கையில், தம்மை இத்தன்மையான இயல்புடையவர் என்றறியாத அக்கல்லாதவரை வெறுப்பது என்ன காரணத்திற்காகவோ?

    பல நேரங்களில் நாம் படித்த நல்ல பலவற்றை சிலரிடம் அவர்கட்கே பயனுள்ளவற்றை சொல்லும்போது அவர்கள் செவிமடுப்பதில்லை .அப்போது நாம் வருந்துவோம் .

    இதை படித்தபின் அந்த வருத்தம் வருமா என்ன ?

    நண்பரே இதுதான் இலக்கியம் .
    இதனை நன்கு ஆய்வு செய்தால் அதுவே
    இலக்கிய ஆய்வு. இதனை நீங்கள் உங்கள் கோணத்தில்
    ஆய்வு செய்யவே வேண்டுகிறேன் .
    இதனை அத்கப்ரசங்கிதனம் என எண்ணாமல் தயவுகூர்ந்து
    என் வேண்டுகோளை சிந்திக்க வேண்டுகிறேன் .

    அன்புடன்
    அரசு

  10. அழகான எழுத்துக்கள்,
    ரசித்தேன் . வாழ்க .
    பொங்கல் வாழ்த்துக்கள் .
    தை திருநாள் வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here