ஏப்ரல் 1 2019 முதல் சுங்கச்சாவடிக் கட்டணம் ₹15 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது.
சுங்கச்சாவடிக் கட்டணம்
தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது எதிர்பார்த்ததை விடக் கூடுதல் செலவானதால், இது போலச் சுங்கச்சாவடி அமைத்து இச்சாலையைப் பயன்படுத்தும் பொதுமக்களிடமே மீதி தொகையை வசூலித்தவுடன் சுங்கச்சாவடியை எடுத்து விடுவதாகத் தான் திட்டம்.
ஆனால், அனுமதிக்கப்பட்ட தொகைக்கு மேல் பல்லாயிரம் கோடிகளை வசூலித்த பிறகும் இன்னும் தொடர்வது கொடுமை என்பதைத் தாண்டித் தொடர்ச்சியாக அக்கட்டணத்தை உயர்த்திக்கொண்டு செல்வது எந்த விதத்தில் நியாயம்?
சுங்கச்சாவடிக் கட்டணம் பொதுமக்களை வாகன போக்குவரத்தில் மட்டும் சிரமப்படுத்துவதில்லை. மறைமுக விலையுயர்வுக்கும் வழிவகுக்கிறது. Image Credit
இக்கட்டணம் அதிகரிப்பதால், இச்செலவை ஈடுகட்ட பொருட்களைக் கொண்டு செல்பவர்களும் தங்கள் பொருட்கள் மீதான விலையை உயர்த்துகிறார்கள்.
எத்தனை வரி தான் கட்டுவது?
பொதுமக்கள் ஏற்கனவே, சாலை, வாகன வரி கட்டி வருகிறார்கள், இதற்கு மேல் எத்தனை வரி தான் கட்டுவது?
சென்னையில் இருந்து கோபிக்குக் காரில் செல்வதென்றால், ₹500+ ஆகிறது.
அரசாங்கத்தின் பணி என்ன? அடிப்படை கடமையான தரமான சாலைகளை மக்களுக்குத் தருவது ஆனால் நடப்பது என்ன?
சுங்கக்கட்டணம் வசூலிப்பதோடு அல்லாமல், சில சாலைகளை மிக மோசமாகவும் பராமரிக்கிறார்கள். பணத்தையும் கொடுத்து இம்சையையும் அனுபவிக்க வேண்டியதாகவுள்ளது.
ஒரு மனுசன் எத்தனை தான் வரிகட்டுவான்? வாங்குற சம்பளத்தில் வரியைப் பிடித்துக்கொள்கிறார்கள், சரி நியாயம். அரசு நடக்கத் தேவையானது.
அதன் பிறகு ஒவ்வொன்றுக்கும் வரி என்று சம்பளத்தில் பாதிக்கு மேல் வரியாகவே கட்டிக்கொண்டு இருக்கிறோம். அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம் தான்.
மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, வாகனம் வாங்கும் போதே ஒரு கட்டணத்தை வசூலித்துக்கொண்டு சுங்கச்சாவடி கட்டணத்தை நீக்கும் திட்டம் பரிசீலிக்கப்படுவதாகக் கூறினார் ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
எந்த அரசு வந்தாலும் இதே பிரச்னை!
சுங்கச்சாவடி கட்டணம் மக்களை வதைத்துக்கொண்டு இருக்கிறது. மனசாட்சியே இல்லாமல் வரிகளால் மக்களை அரசு கசக்கி பிழிகிறது. எவ்வளவு அடித்தாலும் மக்கள் தாங்குவாங்க என்பது தான் மத்திய அரசு எண்ணமாக உள்ளது.
சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து நமக்கு எப்போது தான் விடிவு?!
சில நாட்களுக்கு முன் திமுக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். மறுநாள் அமித்ஷா அழைத்தார். பேசினார்கள். அமைதியாகி விட்டார்கள். ஒவ்வொரு முறையும் இப்படித்தான் இந்த விசயத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது.பங்கு பிரிப்பது பொறுத்து அமைதியாகி விடுவார்கள். இதற்குப் பின்னால் மிகப் பெரிய கொள்ளை இருக்கின்றது என்பது மட்டும் உண்மை. ஆனால் எவரும் வெளியே சொல்வதும் இல்லை.