Badhaai Ho (2018 இந்தி) | ஆமா.. இப்ப என்னங்குற?

2
Badhaai Ho

யுஷ்மன்  25 வயது வாலிபன், அவனுடய தம்பி பள்ளியில் படித்து வருபவன். ஒரு நாள் இவர்களது அப்பா நம்ம வீட்டுக்கு புது விருந்தாளி வருகிறார் என்று கூற, பின்னர் அது அவர்களது குழந்தை என்று அறிய வரும் போது ஆயுஷ்மன் அதிர்ந்து விடுகிறார்.

இந்த வயதுக்குப் பிறகு பெற்றோருக்கு குழந்தை என்றால், தன்னை நண்பர்கள் கேலி செய்வார்களே! என்ற கவலை.

இதோடு தான் காதலியுடன் சண்டை அப்படி இப்படி என்று செல்ல, இறுதியில் என்ன ஆகிறது என்பது தான் கதை.

Badhaai Ho

செம்ம படம்! 🙂 . இதில் யாருடைய நடிப்பை சிறப்பு என்று கூறுவது?!! ரொம்பக் கடினம்.

ஒவ்வொருவரும் அசத்தலாக நடித்து இருக்கிறார்கள்.

ஆயுஷ்மன்  அப்பா பட்டையைக் கிளப்பி இருக்கிறார். அவருடைய அப்பாவியான முகம், என்ன செய்வது என்று விழிப்பது, பேச முடியாமல் திணறுவது என்று கலக்கல்.

அம்மாவும் அவரது மாமியாருடன் சண்டை, கணவருடன் கோபம் என்று கலக்கியிருக்கிறார்.

பசங்க கிட்ட எப்படிச் சொல்வது என்று தெரியாமல், வீட்டுக்குப் புதுசா விருந்தாளி வரப்போகிறார் என்று அப்பா கூறியதும், என்ன சொல்ல வருகிறார் என்று புரியாமல் சின்னப் பையன் என் அறையில் சேர்க்க மாட்டேன் என்று கூறுவது கலகலப்பு 😀 .

மாமியாராக வருபவர் நடிப்பில் நொறுக்கி இருக்கிறார். வழக்கமான மாமியாராக மட்டுமல்ல, நக்கல் அடிப்பதிலும் உடல் மொழியிலும் அதகளம் செய்து இருக்கிறார்.

தன்னோட பையனிடம்.. “ஆமா! உனக்கு இதுக்கெல்லாம் எப்படி நேரம் கிடைத்தது?” என்றதும், அவர் திருட்டு முழி முழிப்பது சரவெடி.

ஒவ்வொரு காட்சியையும் ரசிக்க முடியும் குறிப்பாகத் திருமணமானவர்கள் 🙂 .

எல்லோரும் நம்மை விமர்சிக்கும் போது நம்மை அதிகம் திட்டிய மாமியாரே நமக்கு ஆதரவாக வரும் தருணம். சிலிர்ப்பானது. உண்மையிலேயே ரொம்ப ரசித்தேன்.

ஆயுஷ்மன்  காதலியாக வரும் சான்யா மிகப் பொருத்தம், இயல்பாக நடித்துள்ளார்.

சில பின்னணி இசை நிச்சயம் உங்களை ரசிக்க வைக்கும் 🙂 . இதில் தேவையற்ற காட்சி என்று எதுவுமே இல்லை, படத்தொகுப்புமிகச்சிறப்பு.

அழுத்தமான செய்தி

படம் நகைச்சுவையாக இருந்தாலும், இதில் ஒரு அட்டகாசமான செய்தியை இறுதியில் அழுத்தமாகக் கூறியிருக்கிறார்கள்.

அது!

நமக்காக, நம் குடும்பத்தினருக்காக வாழ வேண்டும்.. மற்றவர்கள் அது கூறுவார்கள் இது கூறுவார்கள்.. அப்படி நினைப்பார்கள் என்று நம்மை வருத்திக்கொள்ளாமல், நம் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். மிக நல்ல செய்தி.

நான் இதைச் சில காலமாகப் பின்பற்றுகிறேன். அடுத்தவர் விமர்சனத்துக்காகக் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தால், நம்மால் எதுவுமே செய்ய முடியாது.

அடுத்தவன் ஆயிரம் சொல்வான், அதற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுக்க முடியுமா?!

ஆமா! அப்படித்தான்.. இப்ப என்னங்குற?” என்ற ஒற்றைக் கேள்வியில் மொத்தக் குப்பையும் அடித்துச் சென்று விடும்.

கேள்வி கேட்பவர் வாயை மூடி விடுவார்.

செயல்படுத்திப் பாருங்கள்.. இதுவரை கிடைக்காத மன நிம்மதியைப் பெறுவீர்கள்.

கதையல்ல, நிஜம் 🙂 .

இதில் நடித்த அனைவரின் நடிப்பையும் பாராட்டினால், இந்தச் சிறு விமர்சனம் போதாது.

பரிந்துரைத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

Badhaai Ho படத்தை அனைவரும் பார்க்கத் தாறுமாறாகப் பரிந்துரைக்கிறேன்.

Directed by Amit Ravindrenath Sharma
Written by Shanatanu Srivastava , Akshat Ghildial, Jyoti Kapoor
Screenplay by Akshat Ghildial
Starring Ayushmann Khurrana, Neena Gupta, Gajraj Rao, Surekha Sikri, Sanya Malhotra
Music by Songs: Tanishk Bagchi, Rochak Kohli, JAM8, Sunny Bawra-Inder Bawra
Background Score: Abhishek Arora
Cinematography Sanu Varghese
Edited by Dev Rao Jadhav
Production company Junglee Pictures, Chrome Pictures
Release date 18 October 2018
Running time 123 minutes
Language Hindi

கொசுறு

இப்படம் Hotstar ல் உள்ளது.

ஆயுஷ்மன் நடித்த Andhadhun அட்டகாசம். இதுவரை பார்க்கவில்லையென்றால் அவசியம் பாருங்கள். செம்ம த்ரில்லர் படம், உங்களை நிச்சயம் ஏமாற்றாது.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி, வழக்கம் போல இந்த ஹிந்தி படத்தையும் பார்க்கவில்லை.. ஆனால் நீங்கள் ரொம்ப ரசித்தது பார்த்து இருப்பது உங்க எழுத்தில் தெரியுது.. கண்டிப்பாக பார்க்க முயற்சிக்கிறேன்.. எனக்கு 80 % ஹிந்தி பேச மட்டும் தெரியும்.. இங்கு வந்த பின் அவசியம் ஏற்பட்டதால் ஹிந்தி பேச கற்று கொண்டேன்.. நீங்க subtitle உதவியுடன் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறன்..

    ஆனால் உண்மையில் இதுபோல நகைச்சுவை அதிகம் இருக்கும் படத்தை அந்த மொழி தெரிந்து பார்த்தீங்கன்னா.. இன்னும் அதிகமாக ரசிப்பீர்கள்.. உதாரணமாக 3 இடியட் படத்தை ஹிந்தியில் பார்த்தேன்.. அதே படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் வந்தது.. சிறப்பாக எடுத்து இருந்தார்கள்..

    மனைவியோட திரையரங்கில் பார்க்கும் போது உண்மையில் படம் எனக்கு பிடிக்கவில்லை.. ஆனால் என் மனைவி முழுவதும் ரசித்து பார்த்தார்கள்.. படம் நன்றாக இருந்தாலும் ஒரு வசனத்தை மொழிபெயர்க்கும் போது சுவாரசியம் குறைந்து போகிறது..

    உதாரணம் : ஹிந்தியில் வந்த JAB WE MET தரமான படம்.. பாடல்கள் தாறுமாறு.. அதே படம் கண்டேன் காதலை என்று தமிழில் வந்தது.. என்னால் ரசிக்க முடியவில்லை.. இதுவரை ஹிந்தி JAB WE MET பார்க்க வில்லையென்றால் பார்க்கவும்… படத்துக்கு ஒளிப்பதிவு நட்டி நடராஜன் என்பது கூடுதல் தகவல்.. ஹிந்தியில் சில மெகா ஹிட் படங்களுக்கு இவர் ஒளிப்பதிவு அமைத்து இருப்பது பின்பு தான் தெரியவந்தது.. பகிர்வுக்கு நன்றி..

  2. “ஆனால் உண்மையில் இதுபோல நகைச்சுவை அதிகம் இருக்கும் படத்தை அந்த மொழி தெரிந்து பார்த்தீங்கன்னா.. இன்னும் அதிகமாக ரசிப்பீர்கள்.”

    மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன்.

    அந்தந்த மொழிக்கு என்று சிறப்பு வழக்கு இருக்கும்.. அதை அதில் கேட்டால் தான் ரசிக்க முடியும்.

    எடுத்துக்காட்டுக்கு மச்சி சொல்றா என்பதற்கும் Hey buddy tell me என்பதற்கும் உள்ள பிணைப்பு வேறு வேறு.

    இதுபோல ஏராளமாக எடுத்துக்காட்டு கூறலாம். subtitle ஒன்றும் இல்லாததுக்கு இதாவது இருக்குதே என்பது தான் 🙂 .

    எனக்கு subtitle தான் அனைத்து படங்களையும் பார்க்க உதவி வருகிறது.

    சில படங்கள் subtitle இருந்தாலும் கூட புரியாது. பல முறை பார்த்தாலும் புரியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here