டிஸ்கவரி, Nat Geo Wild, National Geographic சேனல் பார்ப்பவர் என்றால், நிச்சயம் மிருகங்களின் மருத்துவர் The Incredible Dr. Pol பற்றி அறியாமல் இருக்க முடியாது.
The Incredible Dr. Pol
எனக்கு மிருகங்கள் என்றால் ரொம்ப விருப்பம் அதிலும் நாய் என்றால் ரொம்ப ரொம்ப விருப்பம்.
தற்போது தமிழில் கேட்பதால் ரொம்ப நன்றாக உள்ளது அதோடு விருப்பமாகவும் பார்க்க முடிகிறது. Image Credit
ஒருவர் தன்னுடைய வேலையை எப்படி விருப்பமாக செய்ய வேண்டும் என்று Dr. Pol ஐ பார்த்தால் தெரிந்து கொள்ளலாம்.
உண்மையில் இவர் எனக்கு ஒரு முன்மாதிரி என்று தான் கூற வேண்டும். இவர் வேலையை கடமையாக செய்யாமல் விருப்பமாக செய்கிறார்.
இவருக்கு வயது 70 ஆகிறது. இந்த வயதில் இவரின் ஆர்வத்தைப் பார்த்தால், எனக்கு ரொம்ப வியப்பாக உள்ளது.
நீங்க சொன்ன நம்பமாட்டீங்க! இவர் கிட்ட வேலை செய்ய அனுமதி அளித்தால், உதவியாளராக சேர்ந்து விடுவேன்.
அந்த அளவிற்கு இவருக்கும், இவர் புரியும் வேலைக்கும் ரசிகராகி விட்டேன் 🙂 .
குடும்பத்தினர் ஆதரவு
இவருடைய மனைவியும் மகனும் இவருக்கு மிக ஆதரவாக உதவியாக இருப்பதால், இவரால் இன்னும் சிறப்பாக பணியை செய்ய முடிகிறது.
என்னதான் நமக்கு விருப்பம் என்றாலும் உடன் இருப்பவர்கள் ஆதரவாக இல்லை என்றால், அது சிரமமாகவே இருக்கும்.
அந்த வகையில் இவர் கொடுத்து வைத்தவர் என்று தான் கூற வேண்டும். பெரும்பாலான நேரங்களில் வேலை முடித்துத் தாமதமாகத் தான் வீட்டிற்கு செல்கிறார்.
இதை அவரது மனைவி புரிந்து கொண்டு அவருக்கு ஆதரவு தருவதால், அவரால் இன்னும் சுறுசுறுப்பாக பணி புரிய முடிகிறது என்று நினைக்கிறேன்.
மரியாதை மற்றும் மதிப்பு
யாருக்குமே கிடைக்காத ஒரு விஷயம் மருத்துவர்களுக்கு கிடைக்கும், அது உண்மையான மரியாதை மற்றும் மதிப்பு.
மக்கள் அரசியல்வாதிகளுக்கு, அரசு அதிகாரிகளுக்கு, காவல் அதிகாரிகளுக்கு மரியாதை கொடுப்பார்கள் ஆனால், அவை பெரும்பாலும் பயத்தில் / காரியம் ஆக வேண்டுமே என்ற அளவில் இருக்கும்.
இது போலப் பொறுப்பில் உள்ளவர்கள் கொஞ்சம் மக்களுடன் அன்பாக நடந்து கொண்டாலே மக்கள் அவ்வளவு சந்தோசமாகி விடுவார்கள்.
காரணம், தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி / மிரட்டியே நடந்து கொள்வதே இதற்கு காரணம்.
ஆனால், மருத்துவர்களைக் கடவுள் போல நினைப்பார்கள் காரணம் உயிரைக் காப்பாற்றுபவர்கள் என்பதால்.
மருத்துவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டாலும், அவர் திறமையானவராகவும் நம்மிடையே அன்பானவராகவும் நடந்து கொண்டால், அவருக்கு கிடைக்கும் மதிப்பே தனி தான்.
மருத்துவர்கள் அன்பான / உற்சாகமான வார்த்தைகளைக் கூறினாலே, அங்கு வந்துள்ள நோயாளிகள் மன ரீதியாக பலம் பெறுவார்கள்.
Appreciation
பல துறைகளில் என்ன தான் கடுமையான உழைப்பை / திறமையை வெளிப்படுத்தினாலும் Appreciation கிடைப்பது என்பது ரொம்பக் கடினம்.
ஆனால், மருத்துவத் துறையில் திறமையானவராக இருந்தால், பாராட்டுகள் பாதிக்கப்பட்டவர்களிடையே இருந்து உடனே அதுவும் உணர்வுப் பூர்வமாக கிடைக்கும்.
அந்த வகையில் இவர்கள் கொடுத்து வைத்தவர்களே!
மருத்துவர்களின் பணி மிகவும் சிரமமானது என்பதில் சந்தேகமில்லை.
ஆனால், இவர்கள் போலவே / இவர்களை விடக் கடுமையாக உழைப்பவர்கள் பலர் மற்ற துறைகளில் இருக்கிறார்கள், இருந்தும் மருத்துவர்களுக்கு கிடைக்கும் மரியாதை போல அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை.
இதற்கு மருத்துவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம் தான்.
எந்த நேரத்திலும் அழைப்பு வரும், தயாராக இருக்க வேண்டும். இவை எல்லாவற்றையும் விட முக்கியம் இவர்களின் பணியில் உயிர் சம்பந்தப்பட்டது உள்ளது.
ஓய்வு என்பதே கிடையாது
மேற்கூறிய அனைத்து சிறப்பு அம்சங்களும் கொண்டவர் தான் Dr Pol. இவருக்கு ஓய்வு என்பதே கிடையாது. இதில் முக்கியமானது இவர் இதை விருப்பமாக ஏற்றுக்கொண்டது தான்.
இவர் ஆர்வமாக ஒவ்வொரு பிரச்சனையையும் சென்று பார்ப்பதையும், அதைச் சரி செய்ய இவர் உற்சாகமாக எடுக்கும் முயற்சிகளையும் பார்க்கும் எனக்கு, இவர் ஒரு மாடல் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.
இந்த வயதில் இவரின் ஆர்வமும் உற்சாகமும் கொஞ்சம் பொறாமையையும் தருகிறது.
என் பணியை விருப்பமாக செய்கிறேன் என்று கூற முடியாது ஆனால் நேர்மையாக செய்வேன். இரண்டுக்கும் வித்யாசம் உள்ளது.
விருப்பம்
என் விருப்பமான விஷயம் ரயில், இயற்கை சம்பந்தப்பட்டது தான்.
இதில் பணி புரிந்தால் சலிக்காமல் விருப்பமாக செய்வேன் ஆனால், இந்த IT பணியில் என்னால், நிறுவனத்திற்கு நேர்மையாக வேலை செய்ய முடியுமே தவிர விருப்பமாக செய்கிறேன் என்று கூற முடியாது.
IT வேலை என்றில்லை எந்த வேலையைக் கொடுத்தாலும் அதில் என்னால் முழு உழைப்பையும் நேர்மையையும் கொடுக்க முடியும் ஆனால், விருப்பம் என்று வரும் போது அது வேறாகிறது.
என் விருப்பம் இதில் இல்லை, குடும்ப சூழ்நிலை மற்றும் பல்வேறு நடைமுறை பிரச்சனைகளால் வேறு வழி இல்லாமல் தொடர வேண்டியுள்ளது.
சொல்லப்போனால் என்னைப் போல, இதைப் படித்துக்கொண்டு இருக்கும் நீங்களும் இருக்கலாம் 🙂 .
Dr. Pol இந்த விசயத்தில் அதிர்ஷ்டக்காரர் என்று தான் கூற வேண்டும்.
அவருக்கு விருப்பமான இந்தத் தொழிலில் ஆர்வமாக இருக்கிறார், அனைவரிடமும் அன்பாகவும் அக்கறையாகவும் நடந்து கொள்கிறார்.
அதை விட முக்கியம் அவருக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைத்து இருப்பது.
அவருடைய பணி நேரம் முடிந்த பிறகும், மருத்துவர்களுக்கே உண்டான நெருக்கடியான அவசர அழைப்பு வரும்.
குதிரை, நாய், மாடு போன்றவற்றின் உயிருக்கு ஆபத்து என்று, உடனே சலிக்காமல் கிளம்பி சென்று அதைச் சரி செய்ய முயற்சி எடுப்பார்.
ஒவ்வொரு விசயத்திலும் புதிதாக தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவரிடம் வெளிப்படும்.
அனுபவம்
40+ வருட அனுபவம் இருந்தாலும் தான் இன்னும் ஒவ்வொரு நாளும் கற்றுக்கொண்டே இருப்பதாகக் கூறுகிறார்.
உண்மைதானே! அனுபவத்திற்கு என்றும் முடிவு என்பதே கிடையாது.
ஒரு முறை ஒரு பெண் தன் நாய், காலை நொண்டிக் கொண்டே இருப்பதாகக் கூறிக் கொண்டு வந்தார்.
இவர் நாயை Scan செய்து பரிசோதித்து, எலும்பு முறிவு எதுவுமில்லை ஆனால், வயிற்றில் மலம் கட்டி இருக்கிறது.
இதற்கு காரணம் பின்புறம் சரியாக பராமரிக்கப்படாத அதிகமான முடி தான் என்று கூறி அந்த நாயின் உடல் முழுவதும் உள்ள முடிகளை நீக்கினார்.
அப்போது இறுக்கமான முடியால் அந்த நாயின் காலில் காயம் ஏற்ப்பட்டு இருந்ததும் அதனால் அது நொண்டிக் கொண்டு இருந்ததையும் கண்டறிந்தார்.
இது பற்றி அவர் கூறும் போது, தான் இது போல ஒரு பிரச்னையைத் தற்போது தான் முதன் முதலாக எதிர்கொள்வதாகவும், தினமும் ஏதாவது கற்றுக்கொண்டு இருப்பதாகவும் கூறினார்.
இது போலப் பார்க்க எனக்கும் ரொம்ப ஆர்வமாக இருந்தது.
Troubleshoot
என் பணியிலும் பெரும்பாலும் தெரிந்த பிரச்சனைகள் வரும் அதே போல புதிது புதிதாக ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்.
அதை Troubleshoot செய்வது எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று. இதைச் சரி செய்கிற வரை வேறு எந்தச் சிந்தனையும் வராது.
கஷ்டப்பட்டு காரணத்தைக் கண்டு பிடித்த பிறகு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்கள்! அதன் திருப்தியே தனி தான்.
சில நேரங்களில் பிரச்னைக்கு மிகவும் அற்பமான காரணமாகவும் இருக்கும்.
ஏதாவது பிரச்சனை என்று அழைப்பு வந்தால், இவர் தன் வீட்டு பிராணிக்கு எதோ பிரச்சனை போல அவ்வளவு ஈடுபாடு காட்டுவார்.
இது தான் இவரிடம் எனக்கு ரொம்பப் பிடித்தது அதோடு இவரின் உற்சாகம்.
இவரிடம் இருந்தால் அந்த உற்சாகம் நமக்கும் தொற்றிக்கொள்ளும். சொல்லப்போனால் அவரோட வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியுமான்னே சந்தேகமாக உள்ளது 🙂 .
அமெரிக்காவில் உள்ள நீண்ட சாலைகள், வித்யாசமான இட அமைப்புகள், பண்ணைகள், காடுகள், வறண்ட பகுதிகள், மலை பகுதிகள், தோட்டத்தினுள் உள்ள வீடுகள், நெரிசல் இல்லாத பகுதிகள், நகர பரபரப்பு இல்லாத இடங்கள் என்று எனக்குப் பிடித்த நிறைய இடங்கள் உள்ளன.
இவை இந்த நிகழ்ச்சியில் வருவதும் விருப்பமாக பார்க்க ஒரு காரணம்.
வாய்ப்பிருந்தால் The Incredible Dr. Pol நிகழ்ச்சியைப் பார்க்கப் பரிந்துரைக்கிறேன் 🙂 .
கிரி, (நான் என்னுடைய பணியை விருப்பமாக செய்கிறேன் என்று கூற முடியாது ஆனால் நேர்மையாக செய்வேன்.) SAME BLOOD . என்னுடைய சிறு வயது விருப்பம் ஜிம்பாவே கிரிகெட் டீம்’ல FAST BOWLER ‘ரா சேர வேண்டும்,அதுவும் வேற டீம்’ல கிடையாது ஒன்லி ஜிம்பாவே. (இன்னைக்கு நினைத்தால் வியப்பா இருக்கு).
அதுக்கு அப்றம் பல கனவுகள், ஆசைகள்… இப்ப உள்ள ஒரே ஆசை எதிர்காலத்தில் பள்ளி ஆசிரியராக வர வேண்டும் என்பது.
நண்பர்களிடத்தில் பேசும் போது கூட சொல்வன்,கிரிக்கெட் கிரௌண்ட் ல ஒரு பால் பொறுக்கி போடுற வேலை கெடைகிரதுல்ல உள்ள சுகம் இன்னைக்கு பார்க்கிற வேலையில இல்லை என்பது தான் நிஜம்… இருந்தும் ஏதோ ஒரு விசை பின்புறமிருந்து அழுத்தி கொண்டு இருக்கிறது..
இயற்கையின் மீதும், பறவைகளின் மீதும் காதல் அதிகம் கொண்டதால் மிருகங்கள் மீது ஆர்வம் கொஞ்சம் குறைவு அதனால் இந்த நிகழ்ச்சிய இதுவரை பார்த்ததில்லை. எதிர்காலத்தில் பார்க்க முயற்சிக்கிறேன்.
“கஷ்டப்பட்டு காரணத்தை கண்டு பிடித்த பிறகு ஒரு திருப்தி கிடைக்கும் பாருங்கள்! அதன் திருப்தியே தனி தான்”
– Exactly.
“நான் என்னுடைய பணியை விருப்பமாக செய்கிறேன் என்று கூற முடியாது ஆனால் நேர்மையாக செய்வேன்” – இது செம மேட்டர் தல.
Dr. Pol பாத்தது இல்லை இன்னுமே பாக்குறேன்
– அருண்
@யாசின் பள்ளி ஆசிரியராக வர விரும்புகிறீர்களா? சூப்பர்.. பேசாம கல்லூரி விரிவுரையாளரா முயற்சி செய்யுங்க.
உங்க ஜிம்பாப்வே ஆசை ரொம்ப வித்யாசமா இருக்கும். ஆஸி க்கு முன்னாடி ஜிம்பாப்வே ரசிகரா இருந்தீங்களா! 🙂
@கௌரி & அருண் ரைட்டு