சென்னை மைலாப்பூர் லஸ், நாகேஸ்வரராவ் பூங்கா எதிரே உள்ளது தளிகை உணவகம். Image Credit
தற்போது ராதாகிருஷ்ணன் சாலையில் AVM ராஜேஸ்வரி திருமண மண்டபம் எதிரில் மாற்றப்பட்டுள்ளது.
தளிகை உணவகம்
நண்பர்கள் நால்வர் 2021 புத்தாண்டை முன்னிட்டு மதிய உணவுக்குச் சென்றிருந்தோம்.
கீழ் தளத்தில் இடம் இருந்தாலும், முதல் தளத்தில் தான் உணவு பரிமாறுகிறார்கள். நன்கு விசாலமான நெருக்கடியில்லாத இடம்.
உட்புற வடிவமைப்பு
நான்கு பேர் அமரக்கூடிய மேசை.
ஆடம்பர அலங்காரத்துடன் இல்லாத மிகச் சிறப்பான உட்புற வடிவமைப்பு. ஒரு உணவகம் என்ற உணர்வு இல்லாமல், வீடு போல உள்ளது.
காத்திருக்கும் இடமுள்ளது.
உணவு வகைகள் பட்டியல்
கிழமை, நேரத்துக்குத் தகுந்தபடி பல்வேறு வகையான உணவு வகைகள் உள்ளன. எனவே, தேவை, விலைக்குத் தகுந்த உணவைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
இணையத்தில் விலைப்பட்டியலுடன் தகவல்கள் உள்ளன.
சப்பாத்தி
சாதம்
பருப்பு
நெய்
அவியல்
இரு பொரியல்
ஊறுகாய்
புளி சாதம்
சாம்பார்
மோர் குழம்பு / வத்தக்குழம்பு
ரசம்
தயிர் சாதம்
பாயாசம்
பக்கோடா
தயிர் பச்சடி
அப்பளம்
மோர் மிளகாய்
வாழை இலை சாப்பாடு
அளவில்லா சாப்பாடு (Unlimited Meals)
சுவை
எதிர்பார்த்த அளவுக்குச் சுவையில்லை. காரம் குறைவாக இருந்தது.
புளி சாதம் எனக்குப் பிடிக்காது அதனால், சாப்பிடவில்லை. சாப்பிட்ட நண்பன் கோவிலில் செய்தது போல இருந்ததாகக் கூறினான்.
இவர்கள் கொடுத்துள்ள ஐட்டங்கள் மதிய உணவுக்கு மிகப்பொருத்தமானது. அதிகமும் இல்லை, குறைவும் இல்லை. எனவே, உணவு வீணாக வாய்ப்பில்லை.
வத்தக்குழம்பு & ரசம் சுவை பரவாயில்லை ரகம்.
தயிர் பச்சடி (தக்காளி கலந்து) சுவை மிகச்சிறப்பாக இருந்தது.
Unlimited Meals என்பதால், தேவைப்படும் அளவு வாங்கிக்கொள்ளலாம்.
இறுதியில் பழம், பீடா, ஐஸ்க்ரீம் எதுவும் கொடுக்கப்படவில்லை.
ஊழியர்கள் சேவை
எத்தனை முறை கேட்டாலும், சலிக்காமல் பரிமாறினார்கள். சிறப்பான சேவை.
ஓரமாக உள்ள மேசையில் ஒரு பக்கம் மட்டுமே பரிமாற முடியும் என்பதால், பரிமாறும் பெண்கள் சிரமப்படுகிறார்கள்.
இதை நிர்வாகம் கவனத்தில் எடுக்கலாம்.
விலை
GST சேர்த்து நால்வருக்கு ₹1400 (இலைக்கு ₹350) மிக அதிகம். இவர்கள் கொடுத்த உணவுக்கு இலைக்கு ₹150 சரியான விலை.
மைலாப்பூர், லஸ் என்பதால் இடத்தின் மதிப்பு, அமைந்துள்ள இடம் ஆகியவற்றுக்காக ₹180 வரை ஏற்றுக்கொள்ளலாம்.
கிரி, உணவகத்தோட பெயர் வித்தியாசமாக இருக்கிறது.. google இல் பொருளையும் தேடி பார்த்தேன்.. உணவகத்தோட வெப்சைட்ல் உணவிற்கான விலையையும் பார்த்தேன்.. எனக்கு எதிர்காலத்தில் உணவகம் துவங்க யோசனை இருப்பதால் இவர்களுக்கும் நமக்கும் குமரி முதல் இமயம் வரை உள்ள தூரம்.. கல்லூரி நாட்களில் நான் சைவ உணவு பிரியன் (வெறியன்).. அதுவும் சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர், மோர் எல்லாம் இருந்தாலும், சாம்பார் பிடித்து விட்டால் 5 முறை மறு சாப்பாடு வாங்கினாலும் சாம்பார் மட்டும் தான் வாங்குவேன்.. ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி சாப்பிட பிடிக்காது..
கல்லூரி நாட்களில் ஒரு முறை மதியம் நண்பர்களுடன் கட் அடித்து விட்டு “இயற்கை” படம் செல்ல திட்டம். போகும் வழியில் ஒரு சுமாரான ஹோட்டலில் 6 பேர் சாப்பிட உட்கார்ந்தோம். சர்வர் கிட்ட என் நண்பன் லிமிட்டா ? அன் லிமிட்டா என குரலை உயர்த்தி கேட்டான். சர்வர் அன் லிமிட் தான், நீ சாப்பிடு பார்ப்போம் என்றார். மச்சான் என்ன பத்தி இவனுக்கு தெரியல?? இன்னைக்கு காட்டுறேன் பார் என்றான் நண்பன்.
நான் முதல் முறை சாம்பார் வாங்கினேன்.. சுவை எனக்கு ஓகே. ஆனால் நண்பர்கள் யாருக்கும் பிடிக்க வில்லை.. அதிலும் சர்வர்ட்ட கேள்வி கேட்ட நண்பன் ஒரு முறைக்கும் மேல் போதும் வேண்டாம் என்றான்.. இன்னொரு நண்பன் ரொம்ப ஆச்சாரம்.. சர்வர் தண்ணி கிளாஸ் எடுத்து வந்த ஸ்டைல பார்த்தே பாதி சாப்பாட்டில் இலையை மூடி விட்டான்.. நான் நல்ல சாப்பிட்டேன்.. சாம்பார் மட்டும் தான். வேறு எதுவும் வாங்கவில்லை.. சாம்பார் + அப்பளம்.
பில் கொடுக்க கவுண்டருக்கு வரும் போது சர்வர், நண்பனை பார்த்து என்னமோ பெருசா கேட்ட லிமிட்டா, அன் லிமிட்டானு, “நீ லிமிட்டையே தாண்டவில்லை” இதுல பேச்சு வேறனு நக்கல் செய்தார்.. என்னை பார்த்து ஏதோ அந்த தம்பி தான் அன் லிமிட்ட தாண்டி நல்ல சாப்பிட்டார்னு எனக்கு சர்டிபிகேட் கொடுத்தார்.. வெளியில் வந்த செம்ம சிரிப்பு!!!! அந்த நண்பனை உண்டு இல்லை என்று செய்து விட்டோம்..
தற்போதும் புதிய உணவுகள் எதுவும் நான் சாப்பிட பழக மாட்டேன்.. குறிப்பாக மேற்கத்திய உணவுகள்.. வெகு அரிதான தருணங்களில் மட்டும் சாப்பிடுவேன்.. தற்போது உணவை குறித்து தேடும் போது முன்னோர்களின் உணவு முறை ஆச்சரியமளிக்கிறது.. அவர்கள் தான் சரியான உணவை சாப்பிட்டு உள்ளார்கள்.. நாம் நாகரீகம், வளர்ச்சி, அவசரம், நேரமின்மை என உணவு உண்ணும் பழக்கத்தை முற்றிலும் மாற்றி விட்டோம்..
“ஆயிரம் வார்த்தைகளை விடவும் ஒரு பிடி சோறு அதிக நெருக்கம் உண்டாக்கி விடக்கூடியது.” இது எனக்கு மிகவும் பிடித்த வரிகள்… 2005 இல் முதன்முதலில் சக்தியுடன் கோவையில் பஞ்சாபி தபாவில் சாப்பிட்ட நினைவுகள் வந்து போகிறது.. பகிர்வுக்கு நன்றி கிரி.
@யாசின் சாம்பார் என்றதும் என் நண்பன் தான் நினைவுக்கு வருகிறான் 😀
மூன்று சாப்பாட்டுக்கும் அவனுக்கு சாம்பாரே போதும். இங்கே கூட, சாம்பார் கேட்டு சர்வரை கதிகலங்க வைத்தான் 🙂 .
அப்படி சாம்பாரில் என்னத்தை கண்டானோ… வெறித்தனமா சாப்பிடுவான்.
“சர்வர் தண்ணி கிளாஸ் எடுத்து வந்த ஸ்டைல பார்த்தே பாதி சாப்பாட்டில் இலையை மூடி விட்டான்”
🙂 🙂 டம்ளருக்குள் விரலை விட்டு எடுத்து வந்து பீதி கிளப்பினாரா 🙂
சில உணவகங்களில் சர்வர் நடந்து கொள்ளும் முறை கொடுமையாக இருக்கும்.
யாசின் உணவகம் வைத்தால் சைவ உணவகமா? அசைவ உணவகமா? ஆரம்பிப்பது என்று முடிவாகி விட்டால், அதற்கான வேலைகளை ஆரம்பித்துச் சரியான நேரத்தில் துவங்கி விடுங்கள்.
சைவ உணவகமா / அசைவ உணவகமா என்று தெரியவில்லை கிரி.. ஆனால் எளிய உணவகம்.. சாதாரண எளிய மனிதனின் தேவையை பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்பது என் விருப்பம்.. விடுமுறையில் ஊருக்கு செல்லும் போது இன்னும் நிறைய தகவல்களை திரட்ட வேண்டும்..