பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் நடந்த சொதப்பல்களை வழக்கம் போல தமிழக ஊடகங்கள் மேலோட்டமாக கூறிச்சென்று கொண்டுள்ளன. Image Credit
பொங்கல் பரிசு
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் பொங்கல் பரிசு என்று கரும்பு உட்பட சில பொருட்கள் மற்றும் ₹2500 வழங்கப்பட்டது.
திமுக எதிர்கட்சியாக இருந்த போது, ₹5000 வழங்க வேண்டும் எதிர்ப்புக்குரல் எழுப்பியது. தற்போது ஆளுங்கட்சியான பிறகு ₹2500 கூட தரவில்லை.
அதை விட 21 பொங்கல் பொருட்களைக் கொடுப்பதாகக்கூறி அதுவும் தரமற்ற பொருட்கள் கொடுக்கப்பட்டது. அதைப் போட்டுக்கொடுக்க “பை” கூட இல்லை.
21 பொருட்களில் பல பொருட்கள் இல்லை, கெட்டுப்போன பொருட்கள், பல்லி என்று களேபரமாக உள்ளது ஆனால், ‘மக்கள் மகிழ்ச்சி‘ என்று சன் டிவி செய்தி வெளியிட்டுக்கொண்டுள்ளது.
அரிசி, பருப்பு வகை, வெல்லம் எதுவுமே அதோட இயல்பான நிறத்திலேயே இல்லை.
இதற்கெல்லாம் அமைச்சர் கொடுக்கும் விளக்கம் அடேங்கப்பா! ரகம்.
மிக மோசமான தரத்தில் கொடுக்கப்பட்ட பொருட்கள் உள்ளது. என்ன தைரியத்தில் இது போல கொடுக்கத் துணிகிறார்கள்?!
பொங்கல் பரிசு தொகுப்பில் எதிர்பாராமல் வந்த ஒரு பொருள் அல்வா.
பொங்கலுக்கு எதற்கு அல்வா?! என்று மக்கள் குழம்பியதில் பின்னர் தெரிய வந்தது அது வெல்லம் என்று.
பொருட்கள் ஊழலுக்கே வழி வகுக்கும்
இதுபோல பொருட்களை வழங்கும் போது நிச்சயம் அது நேர்மையான முறையில் நடக்காது என்பது தெரிந்தும் தமிழக அரசு செய்துகொண்டுள்ளது.
மக்களுக்கு நேரடியாக கைகளில் கொடுப்பதற்கு காரணமே தமிழக அரசு கொடுப்பதாக இல்லாமல் திமுக அதிமுக என்ற கட்சியாக கொடுக்க வேண்டும் என்பதற்காகவே.
இதை ஏன் பணமாக நேரடியாக மக்கள் வங்கிக்கணக்கில் செலுத்தக்கூடாது?! எத்தனை கோடி பேரின் நேரம் சேமிக்கப்படும்!
இதற்கான பணத்தை நேரடியாக வங்கிக்கணக்கில் செலுத்தினால் ஒரே ஒரு க்ளிக்கில் முடிந்து விடும்.
ஆனால், நேரடியாக கொடுப்பதால், பலருக்கு அலைச்சல், எரிபொருள் வீண், பணியாளர்களுக்கு கூடுதல் பணி, கொரோனா தொற்று அபாயம்.
₹20,000 கோடி பணத்தை 10 கோடி விவசாயிகளுக்கு ஒரே நாளில் மத்திய அரசு செலுத்தும் போது ஏன் தமிழகத்தால் முடியாது?!
தூங்கும் ஊடகங்கள்
அவனவன் கடுப்புல திட்டிட்டு இருக்கானுங்க, பெண்கள் வசை பாடிட்டு இருக்காங்க ஆனால், வழக்கம் போல தமிழக ஊடகங்கள் தங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லையென்று உள்ளன.
அதிசயமாக இது குறித்து ஒரு செய்தி வெளியிட்ட கருத்து பகுதியில் பலரும் ‘மைண்ட் வாய்ஸ்ன்னு நினைத்துச் சத்தமா பேசிட்டீங்கன்னு‘ கலாயித்துட்டு இருக்காங்க.
எந்த விமர்சனங்களையும் கூறாமல், எப்போதும் தமிழக அரசு அதிரடி, சிக்ஸர், மக்கள் மகிழ்ச்சி என்று கூறுவதையே தமிழக ஊடகங்கள் பிழைப்பாக வைத்துள்ளன.
இவர்களுக்கு எந்த வெட்கமும், அசிங்கமும் இல்லை. அண்ணாமலை இவர்களை கழுவி ஊத்துவதில் என்ன தவறு?!
ஊடகங்கள் தங்கள் கடமையைச் சரிவரச்செய்தால், இது போன்ற கட்டுரைகளுக்கே வேலை இல்லை.
தற்போது நடந்த சம்பவங்களில் ஒரே ஒரு சம்பவம் மட்டும் எடப்பாடி ஆட்சியில் நடந்து இருந்தால், வானத்துக்கும் பூமிக்கும் குதித்து தினமும் விவாதம் நடத்தி நொறுக்கியிருப்பார்கள்.
ஊடகங்கள் எவ்வளவு நாளைக்கு இதுபோலச் செய்திகளை மறைக்க முடியும்! ஒரு நாள் அனைவருக்கும் அனைத்தும் தெரியத்தான் போகிறது.
அப்போது உண்மையைக் கூறினாலும் மக்கள் நம்ப மாட்டார்கள்.