பொது இடங்களுக்கு, திட்டங்களுக்கு, நிறுவனங்களுக்கு அரசியல் தலைவர்கள் பெயரை வைக்கும் இம்சைக்கு அதிமுக, திமுக இரண்டுமே சளைத்ததல்ல. எடப்பாடி அரசின் தேவையில்லாத ஆணிகள் என்னவென்பதைப் பார்ப்போம்.
பாராட்டைப் பெற்ற கலைஞர்
திட்டங்களுக்கு அரசியல் தலைவர்கள் வைப்பதில் இரு கட்சிகளுமே படு மோசம் என்றாலும், கலைஞரை ஒரு விஷயத்துக்காக நிச்சயம் பாராட்ட வேண்டும்.
தற்போதைய தலைமுறைக்குத் தெரியாத பல விஷயங்களில் ஒன்று, போக்குவரத்து நிறுவனங்கள், மாவட்டங்களின் பெயர்கள் அரசியல் தலைவர்கள் பெயரில் முன்பு இருந்தது என்பது.
அதிலும் ‘ஜெ’ ஒரு படி மேலே சென்று, தான் ஆட்சியில் இருக்கும் போது தன் பெயரையே திட்டங்களுக்கு வைத்துக்கொண்டார்.
அதில் வந்தது தான் ‘ஜெ ஜெ போக்குவரத்துக் கழகம்‘.
போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்கள் பெயர்கள்
கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து போக்குவரத்து கழகங்களின் பெயர்களும் தலைவர்கள் பெயரில் இருந்து அந்தந்த ஊர் பெயரில் மாற்றப்பட்டது.
சென்னையில் ‘பல்லவன்’ என்று இருந்தது, ‘மாநகரப்பேருந்து‘ என்று அழகாக மாற்றப்பட்டது. Image Credit
பல்வேறு தலைவர்களின் பெயரில் இருந்த மாவட்டங்களும் அந்தந்த ஊர் பெயரிலேயே மாற்றப்பட்டது. எடுத்துக்காட்டுக்கு ‘பெரியார்‘ மாவட்டமாக இருந்த எங்கள் மாவட்டம், ‘ஈரோடு‘ மாவட்டமானது.
‘மெட்ராஸ்‘ என்ற பெயரைச் ‘சென்னை‘ என மாற்றியது, பொதுமக்களிடையே பெரியளவில் வரவேற்பை பெற்றது.
மிகச்சிறந்த முன்னெடுப்பு
கலைஞர் அரசு செய்த மிகச்சிறந்த செயல்களில் இன்றும் பலரின் பாராட்டைப் பெறுவது, போக்குவரத்துக் கழகங்கள், மாவட்டங்களின் பெயர்களை மாற்றியது.
ஆனால், ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்‘ என்று கலைஞரும் தானே வைத்துக்கொண்டதும் பின்னாளில் நடந்தது.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திரும்ப அரசியல் தலைவர்கள் பெயரை வைக்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்து விட்டார்.
CMBT என்று இருந்த கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு ‘ஜெ’ பெயரை மாற்றினார்.
நூற்றாண்டு பெருமையுடைய ‘சென்னை சென்ட்ரல்‘ பெயரைப் பாராளுமன்றத் தேர்தல் சமயத்தில், எம்ஜிஆர் பெயருக்கு மாற்றிக் கடுப்பைக் கிளப்பினார்.
MRT இரயில் நிலையங்கள் பெயர் மாற்றம்
தற்போது சம்பந்தமே இல்லாமல், கோயம்பேடு, சென்ட்ரல், ஆலந்தூர் MRT ரயில் நிலையங்களுக்கு ஜெ, எம்ஜிஆர், அண்ணா பெயரை வைத்துள்ளார்.
தற்போது இதன் அவசியம் என்னவென்பது புரியவில்லை.
இந்த அறிவிப்பு வந்தவுடன், ஆளாளுக்கு அவங்க கட்சி தலைவர் பெயரை வைக்கணும் என்று எதிர்பார்த்தது போலக் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.
மாநிலம் இருக்கும் மோசமான நிலையில் மக்களுக்குச் செய்ய ஏராளமான பணிகள் இருக்கையில் இவையெல்லாம் முக்கியமா?
சிலை பிரச்சனைகள்
மாநிலம் முழுக்க அரசியல் கட்சிகள் சிலைகளை வைத்து இருப்பதால், எவனாவது அவனுக்குப் பிடிக்காத தலைவர் சிலையை அவமானப்படுத்துகிறான்.
இது சர்சையை ஏற்படுத்துகிறது.
சிலை வைப்பவர்கள் அவரவர் கட்சி அலுவலகத்தில் வைத்துக்கொள்ளட்டும், எதற்குப் பொது இடத்தில் வைத்துக் கலவரங்களை உருவாக்கி மக்களைச் சிரமப்படுத்தனும்.
தினமும் 1 கோடி
சர்ச்சையான நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சிலை பாதுகாப்புக்காக, அரசு தினமும் 1 கோடி செலவிடுவதாகச் செய்தியில் வந்துள்ளது.
எந்தக் கட்சியினர், அமைப்பின் சிலையோ அதற்குப் பாதுகாப்பு அளிக்க, அவர்களிடமே கட்டணத்தை வசூலிக்க வேண்டும்.
மறுத்தால், சிலையை அவர்கள் கட்சி அலுவலகத்தில் அல்லது அவர்களது தனிப்பட்ட இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.
மக்களைக் காக்க வேண்டிய காவல் துறை, தண்டமாகச் சிலையைக் காவல் காத்துக்கொண்டுள்ளது.
யாரோ பொது இடத்தில் பொறுப்பற்று வைத்துச் செல்லும் சிலைக்காக, மக்களின் வரிப்பணத்தை ஏன் அரசு செலவழிக்க வேண்டும்?!
எதற்காகக் கலவரங்களுக்குத் துணை போக வேண்டும்?
தமிழக அரசின் பெயர்
அனைத்து விமான நிலையங்களின் பெயர்களும் அரசியல் தலைவர்கள் பெயரில் இருந்து அந்தந்த நகரின் பெயரிலேயே மாற்றப்படும் என்று மத்திய அரசு முன்பு அறிவித்தது ஆனால், செயல்பாட்டுக்கு வரவில்லை.
திட்டங்கள், நிறுவனங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்கக் கூடாது, சிலைகளைப் பொது இடத்தில் வைக்கக் கூடாது என்று மசோதாவை நிறைவேற்றினால், பல்வேறு தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்படும்.
திட்டங்களுக்கு, நிறுவனங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் பெயரை வைப்பதே சரி. தமிழக அரசின் பெயரில் இருப்பதே சிறப்பு. நமக்கும் பெருமை.
தொடர்புடைய கட்டுரைகள்
“சர்ச்சையான நேரத்தில், தமிழகம் முழுவதும் உள்ள சிலை பாதுகாப்புக்காக, அரசு தினமும் 1 கோடி செலவிடுவதாகச் செய்தியில் வந்துள்ளது.”
— அப்படியா, மிகவும் அதிகம்..
திட்டங்கள், நிறுவனங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை வைக்கக் கூடாது, சிலைகளைப் பொது இடத்தில் வைக்கக் கூடாது என்று மசோதாவை நிறைவேற்றினால், பல்வேறு தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்படும்.
— இதை நான் மிக நாட்களாக எதிர் பார்த்து கொண்டிருக்கிறேன்.
@செந்தில் ஆமாம், எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை ஆனால், 10 லட்சம் செலவு செய்தாலும் மக்களின் வரிப்பணம் வீண் தானே!
செய்தி –> https://www.dinamalar.com/news_detail.asp?id=2588121