சோலைமலை இளவரசி கதை நடக்கும் காலம் 1942 மற்றும் அதற்கும் நூறு ஆண்டுகளுக்கும் முந்தைய காலமாகும்.
சோலைமலை இளவரசி
குமாரலிங்கம் என்ற சுதந்திர போராட்ட வீரர், காந்தியின் கொள்கையில் பற்று கொண்டு இருந்தாலும், வன்முறை வழியிலும் ஆர்வம் கொண்டு இருந்தவர்.
மக்களைத் தூண்டி காவல் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி, அங்கிருந்து தப்பிச்சென்று சோலைமலை முருகன் கோவில் உள்ள மலைக்குச் செல்கிறார்.
அங்கே சென்றவுடன் அங்குள்ள இடம் தனக்கு ஏற்கனவே பரிச்சயமாக இருப்பதைக் கண்டு வியப்படைகிறார்.
இரவில் தூங்கும் போது, சோலைமலை கதை கனவில் வர, அதில் வரும் சம்பவங்கள் போல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நடப்பதை எண்ணி வியப்படைகிறார்.
இரு காலங்கள்
ஆசிரியர் கல்கி இரு காலங்களையும் சரி சமமாகப் பொருத்தி கதையைக் கொண்டு செல்வது சிறப்பு.
அக்காலத்திலேயே இரு வெவ்வேறு காலக் கதைகளை எழுதும் திறன்பெற்றவராக இருப்பது வியப்பளிக்கிறது.
தற்போது இவை சாதாரணமாகி விட்டாலும், அப்போது மிகப்பெரிய விஷயமே!
காங்கிரஸ்
ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய காங்கிரஸ் மீது மக்களுக்கு அபிமானம் இருந்தாலும், காங்கிரஸ் மீது வெறுப்புகொண்டு, இவர்களுக்கு ஆங்கிலேயர்களே பரவாயில்லை எனும் எண்ணவோட்டம் கொண்டவர்களாகவும் சிலர் உள்ளனர்.
சில மன்னர்கள் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற நிலைப்பாட்டிலேயே ஆங்கிலேயர்கள் உடனான நட்பைத் துவங்கியுள்ளார்கள்.
ஆனால், ஆங்கிலேயர்களோ புத்திசாலித்தனமாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவர்களிடையே நுழைந்து அவர்களை ஏமாற்றியுள்ளனர்.
கல்கி
கல்கி என்பதால் பொன்னியின் செல்வன் நாவலோட இந்நாவலை ஒப்பிடக் கூடாது, அந்நாவல் ஒப்பற்ற நாவல்.
கல்கியாலையே திரும்ப அது போல ஒரு நாவலை எழுத முடியவில்லை.
இந்நாவல் சிறப்பானதொரு நாவல் அல்ல ஆனால், இரு காலங்களை ஒரே சமயத்தில் கையாண்டு அதை நமக்கு அந்நியமாக்காமல் இரண்டிலுமே புரிந்து ஒப்பிட்டுப் பயணப்படும் அளவுக்கு எளிமையான கதையமைப்பாக உள்ளது இதன் சிறப்பு.
முடிவை வேறு மாதிரி அமைத்து இருக்கலாம். எப்போதுமே மகிழ்ச்சியான முடிவையே விரும்பிப் பழகிய நமக்கு இந்நாவலின் முடிவு ஏமாற்றத்தை அளிக்கிறது.
அமேசான்
அமேசான் Kindle / செயலி / இணையம் வழியாகப் படிப்பவர்கள் இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம். இப்புத்தகம் நமக்கு நிரந்தரமானது.
அமேசானில் இலவசமாகச் சோலைமலை இளவரசி நாவலைப் பெற –> Link
தொடர்புடைய கட்டுரைகள்
7 / 8 ஆண்டுகளுக்கு முன்பு நான் மிகவும் ரசித்து படித்த நாவல் சோலைமலை இளவரசி .. இரண்டு கதைகளின் ஓட்டத்தை ஆசிரியர் கொண்டு சென்ற விதம் .. அருமையாக இருக்கும் .. எங்குமே சலிப்பு தட்டாமல், மிகவும் ரசனையாக செல்லும் .. இதற்கு முன் இதுபோல புதினத்தை நான் படித்ததில்லை .. பகிர்வுக்கு நன்றி கிரி ..
யாசின் இந்த நாவல் பெயரை முன்பு கேள்விப்பட்டுள்ளேன் அதனாலே இந்நாவல் கிடைத்தவுடன் வாங்கி விட்டேன். இலவசம் தான்.