மக்களின் பணத்தை நேரடியாக அனைவர் கண் முன்னே திருடிய சம்பவங்கள் தமிழகத்தில் நிறைய உள்ளன. இதில் ஒன்று தான் தமிழில் பெயர் வைத்தால் 30% வரி விலக்கு என்பது. Image Credit
இது கலைஞர் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. பலான படங்கள் கூடத் தமிழில் பெயர் வைத்து வரிவிலக்குப் பெற்ற கொடுமைகள் நடந்தன.
பின் ஜெ ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ்ப் பெயர் இருந்தால் மட்டும் போதாது “U” சான்றிதழோடு சில கட்டுப்பாடுகளுடன் மாற்றம் பெற்றது.
தனக்குப் பிடிக்காதவர்கள் படங்களுக்கு ஜெ வரி விலக்கைத் தவிர்த்து வந்தார். லஞ்சப்பணம் கொடுக்கவில்லை என்றால் “U” சான்றிதழ் கிடைக்காது.
இன்னமும் இதே நிலை தொடர்கிறது.
30% வரி மக்களுக்கானது
உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்.. இந்த 30% வரி விலக்கு மக்களுக்கானது என்று.
ஒரு படத்துக்கு 30% வரி விலக்கு என்றால், நுழைவுக்கட்டணத்தில் 30% கட்டணக் கழிவை மக்களுக்குக் கொடுக்க வேண்டும்.
அதாவது 120₹ கட்டணம் என்றால் 85₹ தான் வசூலிக்க வேண்டும். கடந்த பத்து வருடங்களில் ஒருமுறை கூட இது போல நடந்தது இல்லை.
சிறியதாகக் கணக்குப் போட்டுப்பாருங்கள்
ஆண்டுக்குத் தோராயமாக 200 முதல் 250 தமிழ்ப் படங்கள் வெளியாகின்றன.
கடந்த பத்து வருடங்களில் குறைந்த பட்சம் ஆண்டுக்கு 200 படங்கள் என்று வைத்தாலும் பத்து வருடங்களில் 2000 திரைப்படங்கள். இதில் வரிவிலக்குப் பெற்ற படங்கள் 1200 என்றால் அதற்கு 30% வரியைக் கணக்குப் போட்டுப்பாருங்கள்.
அதிர்ச்சியடைந்து விடுவீர்கள். இது முழுக்க முழுக்க பகல் கொள்ளை.
மக்கள் வரிப்பணத்தைக் கொள்ளையடித்த திரையுலகினர்
மக்களின் பணத்தைத் திரையரங்கு உரிமையாளர்களும் மற்றவர்களும் பங்கு போட்டுக்கொண்டார்கள். மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகளை இவர்களே அனுபவித்தார்கள்.
சிலர் வழக்கு போட்டும் அதனால் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து இவர்களே அனுபவித்து வந்தார்கள்.
கேட்டால் அதிகச் செலவு, சம்பளம் போன்ற காரணங்களால் திட்ட மதிப்பீடு அதிகரித்ததால் இந்த 30% வரி விலக்கு உதவியாக இருந்ததாம்.
மக்களா இவர்களைச் செலவு செய்யக் கூறினார்கள்?
மக்களா இவர்களை அதிகப் பணம் முதலீடு செய்து படம் தயாரிக்கக் கூறினார்கள்? அதிகச் சம்பளம் கொடுத்து நாயகர்களைப் போடக்கூறினார்கள்?
ஒவ்வொருவருக்கும் பேராசை. இவர்கள் பேராசைக்கு மக்கள் வரிப்பணம் தான் கிடைத்ததா?
வியப்பு என்னவென்றால், இது போலச் சட்டம் போட்டு மக்கள் பணத்தை வேறு எந்த நாட்டிலாவது கொள்ளை அடிக்க முடியுமா?! என்பது தான்.
ஏனென்றால் நீதிமன்றம் கூட இதைச் சரி செய்யவில்லையே!!
வரவுக்கு மேல் செலவு செய்வது யார் தவறு?
எடுத்துக்காட்டுக்கு ஒரு வீடு கட்டுறீங்க என்று வைத்துக் கொள்வோம்.
உங்கள் வருமானம் என்ன? என்பது உங்களுக்குத் தெரியும், எதிர்கால வருமானம் என்னவென்று தெரியும்.
அதற்குள் வீடு கட்டினால் பிரச்சனையில்லை ஆனால், அடுத்தவன் அப்படிக் கட்டி இருக்கிறான் இப்படிக் கட்டி இருக்கிறான் என்று ஆடம்பரமாகக் கட்டிவிட்டுப் பின் பணம் கட்ட சிரமப்பட்டுப் புலம்பினால்.. பிரச்சனை யாருடையது?
படம் எடுக்கிறார்கள் என்றால், அவர்கள் திட்ட மதிப்பீட்டில் படம் எடுக்க வேண்டும். இவர்கள் செய்யும் வெட்டிச் செலவுகளுக்கு மக்கள் எப்படிப் பொறுப்பாக முடியும்?!
தற்போது GST 28% கட்ட வேண்டும் என்பதால், இவர்களின் ஒப்பாரி அதிகமாக இருக்கிறது.
எந்தக் கணக்குமில்லை
திரையரங்கு உரிமையாளர்கள் பெரும்பான்மையோர் உண்மையான கணக்கையே காட்டுவதில்லை. பெரிய நடிகர்கள் படம் வந்தால், 1000₹ 2000₹ என்று வசூலிக்கிறார்கள் ஆனால், அதற்கு எந்தக் கணக்குமில்லை.
2000₹ வாங்கினாலும் அவர்கள் காட்டும் கணக்கு அதிகபட்சம் 120₹ தான் ஆனால், எப்போதும் இவர்கள் காட்டுவது நட்டக்கணக்கு தான்.
GST யை எதிர்க்கும் முன் இவர்கள் திரையரங்கு கட்டணத்தில், வசூலில் வெளிப்படையாக இருக்க வேண்டும். முறையான கணக்கைக் காட்ட வேண்டும். இதையெல்லாம் செய்து GST யை எதிர்த்தால் அதில் நியாயம் உள்ளது.
30% வரி விலக்கு இனி முடியாது
தற்போது GST வந்தால், 120₹ என்று இருக்கும் கட்டணம் 153₹ ஆக மாறி விடும். இதை எல்லாவற்றையும் விட இனி 30% வரி விலக்கு தமிழக அரசால் கொடுக்க முடியாது.
இந்த நாளை நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டு இருந்தேன் அதாவது மக்களின் வரிப்பணத்தைக் கொள்ளை அடிக்கும் 30% வரிவிலக்கு செயலுக்கு முடிவு வரும் நாளை.
GST யால் இவர்களுக்கு எந்த அளவு நியாயமான நட்டம் என்பது எனக்குத் தெரியவில்லை. தெரியாத ஒன்றைப் பற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை.
ஆனால், கடந்த பத்து வருடங்களாக நுழைவுக் கட்டணத்தில் 30% மக்களின் வரிப்பணத்தை எந்தக் கூச்சமும் இல்லாமல் வாயை மூடிக்கொண்டு கொள்ளை அடித்தவர்களுக்கு GST யை எதிர்க்க எந்தத் தார்மீக உரிமையும் இல்லை.
தொடர்புடைய கட்டுரை – நட்சத்திர கிரிக்கெட்டும் 30% வரி விலக்கும்
யார் சார் மக்களை தியேடடரில் போய் படம் பார்க்க சொன்னது 1000 ரூபாய் ௨௦௦௦ ரூபாய் கொடுத்து பேசாமல் நெட்டில் படம் வருது அதில் பார்த்துவிட்டு போகவேண்டியது தானே செலவும் கம்மி நேரமும் மிச்சம் என்ன நான் சொல்றது சரிதானே ?
நான் இணையத்தில் பார்க்கிறேன் ஆனால், பணம் கட்டி.
tentkotta சேவை இந்தியாவில் கிடையாது. bigflix தளம் கூகிள் தேடலில் வருகிறது. bigflix சேவை தரம் மற்றும் வசதிகள் பற்றி மேலதிகமாக தேட வேண்டும். நீங்கள் எந்த வலைத்தளத்தில் பணம் கட்டி பார்க்கிறீர்கள்? அமேசான் ப்ரைம் வீடியோ?
நான் HeroTalkies தளத்தில் பணம் கட்டிப் பார்க்கிறேன்.
டிக்கெட் ரேட் மட்டும் தானா ? பார்க்கிங் கொள்ளை , ஸ்னாக்ஸ் கொள்ளை, தண்ணி பாட்டில் கொள்ளை — Forum மால் கீழ உள்ள சூப்பர் மார்க்கெட்ல Rs 10 விக்கற தண்ணி தியேட்டர்ல Rs 40 விக்கறாங்க !