Sairat [2016 – மராத்தி]

4
Sairat Movie

Sairat விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ரொம்ப நாட்களாகப் பார்க்கணும் என்று நினைத்தாலும் அதற்கான வாய்ப்புத் தற்போது தான் அமைந்தது. Image Credit

ஆதிக்கச் சாதி பெண்ணும் தாழ்த்தப்பட்ட சாதி பையனும் காதலிக்கிறார்கள் இறுதியில் என்ன நடக்கிறது என்பது தான் கதை.

Sairat

இப்படம் எனக்குக் கலவையான மனநிலையைக் கொடுத்தது.

அதாவது மகிழ்ச்சி, சலிப்பு, பயம், வியப்பு, அதிர்ச்சி என்று பல்வேறு வகையான உணர்வுகளைக் கொடுத்தது.

படத்தின் கதை அனைவராலும் ஊகிக்கக் கூடிய வழக்கமான கதை தான் ஆனால், அதைக் கொடுத்த விதத்தில் தான் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்று இருக்கிறது.

அதகளம் செய்யும் நாயகி ரிங்கு

நாயகி ரிங்கு நாயகன் ஆகாஷ் இருவருமே புதுமுகம் போல ஆனால், செம்ம பொருத்தம் மற்றும் நடிப்பு. ஆகாஷ் பயந்த சுபாவம்.

படத்தில் பட்டையைக்கிளப்புவது நாயகி ரிங்கு தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை.

அரசியல்வாதி மகளாக இருப்பதாலும், ஆதிக்கச் சாதி என்பதாலும் இயல்பாகவே இருக்கும் தெனாவெட்டு, திமிர், அதட்டலாகப் பேசுவது என்று இவருக்கு அம்சமாகப் பொருந்தி இருக்கிறது.

முறைப்பு திமிர் தெனாவெட்டு நடிப்பெல்லாம் இயல்பாக வரணும், கொஞ்சம் அசந்தாலும் செயற்கையான நடிப்பாகி விட அதிக வாய்ப்புள்ளது.

புல்லட் ஓட்டுவது, டிராக்டர் ஓட்டுவது, கிணற்றில் குதிப்பது என்று படத்தின் முதல் பாதியில் அதகளம் செய்து இருக்கிறார். இதற்காகவே கற்றுக்கொண்டாரோ!!

ரிங்கு, ஆகாஷ் மீது எப்படி உடனடி காதலாகிறார் என்பதற்கான வலுவான காரணத்தை இயக்குநர் தெளிவாக விளக்கவில்லை.

துணை கதாப்பாத்திரங்கள் 

ஆகாஷ் நண்பர்களாக வரும் சலீம் மற்றும் பிரதீப் பொருத்தமான தேர்வு. அதிலும் சப்பாணி போல நடக்கும் பிரதீப் தனது அட்டகாசமான நடிப்பால் அசத்துகிறார்.

இவரைப் பட்டப்பெயர் வைத்தே அனைவரும் அழைக்க, ரிங்கு இவரை “பிரதீப்” என்ற அவரின் உண்மையான பெயரில் அழைக்கும் காட்சிகள் ரசிக்க வைக்கும்.

ரிங்குவின் சகோதரன் ஒரு அரசியல்வாதி பையனாகச் செய்யும் அடாவடியும் திமிரும் தற்போதைய நிலையை அசத்தலாக விளக்குகிறது.

வெளியுலக நடைமுறை எதார்த்தங்கள்

இவர்கள் இருவர் காதல் ரிங்கு வீட்டுக்குத் தெரியவர திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய முயலும் போது வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்கள்.

ஆர்வக்கோளாறுல “நீ இல்லாமல் வாழ முடியாது” என்று வீட்டை விட்டு ஓடுபவர்கள் நிலையைப் பல படங்கள் (“காதல்” படம் போல) காட்டியிருக்கின்றன.

ஆனால், இந்த அளவுக்கு இயல்பாக விரிவாகக் காட்டியதாக நான் பார்த்தது இல்லை.

ஓடி வந்தாச்சு! இனி என்ன செய்வது?” என்ற மிகப்பெரிய கேள்வி அவர்கள் முன்னே இருக்கும்.

இந்தப் பகுதி ஆவணப்படம் போல மெதுவாகச் செல்கிறது என்றாலும் நடைமுறை எதார்த்தத்தை மிக அழகாகத் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது.

மாறும் தின வாழ்க்கை

தங்க இடம் கிடைக்காமல், பொதுக் கழிப்பறையைப் பயன்படுத்தி, இரவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகி அதன் பிறகு இடம் கிடைத்து, பணக்கார பெண்ணான ரிங்கு இந்த வசதிகளை ஏற்க முடியாமல் தவிப்பதும் என்று செம்மையாகக் கூறி இருக்கிறார்கள்.

குடிசைப் பகுதி நாற்றமும் தூய்மையின்மையும் அவரை தான் வசதியாக வாழ்ந்த நாட்களை நினைக்க வைப்பதும், நாள் முழுக்கச் சும்மாவே இருந்து மன அழுத்தத்தை ஏற்படுத்துவதும் என்று புதிய சூழ்நிலையை எதிர்கொள்ளும் இயல்பான காட்சிகள்.

ஓடிப்போக நினைக்கும் இணைகள் இப்படத்தைப் பார்த்தால், வெளியே சென்றால் நினைப்பது போல வாழ்க்கை அவ்வளவு எளிதல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.

ஓடிச் சென்று திருமணம் செய்வது என்னால் எப்போதுமே ஏற்றுக்கொள்ள முடியாத செயல். எந்தப் பிரச்சனை என்றாலும், இறுதி வரை போராடி நிற்பது மட்டுமே சரி.

இதனால் பாதிக்கப்படுவது அவர்களுடன் பிறந்த சகோதர சகோதரிகள் தான்.

ஆகாஷின் சகோதரிகளுக்கு இது போல நிலை வரும், அப்போது அவர்களின் தந்தை சிரமத்தை எதிர்கொள்ள முடியாமல் கதறுவது கொடுமையாக இருக்கும்.

காதலிக்கும் போது உருகுவதும் பிரச்சனை வரும் போது இருவரும் சண்டை போட்டுக்கொள்வது என்று நடைமுறை நிகழ்வை அப்படியே காட்டியிருக்கிறார்கள்.

ஊகிக்கக் கூடிய காட்சிகள்

படத்தில் எல்லாமே ஊகிக்கக் கூடிய காட்சிகள் தான் ஆனால், அடுத்தது இது நடந்து விடக்கூடாது என்ற பயம் படம் முழுக்க நம்மைப் படபடப்பாக வைத்து இருக்கிறது.

“சூர்யவம்சம்” சரத்குமார் தேவயானி மாதிரி உயர்வது போலக் காட்டுவது செயற்கையாக இருந்தாலும், இறுதியில் நம்மை உலுக்கி விடுகிறார்கள்.

படத்தில் பாடல்கள் ரொம்ப நன்றாக உள்ளது. அனைத்துமே மாண்டேஜ் காட்சிகள் என்பதால், மிக இயல்பாக உள்ளது, ஒளிப்பதிவு உட்பட.

படத்தை ரிங்குக்காவும் அந்தப் பெண்ணின் தைரியமான பேச்சு நடவடிக்கைக்காகவுமே அவசியம் பார்க்கணும், மிரட்டி இருக்கிறார்.

நினைவுபடுத்தி, பரிந்துரைத்த நண்பன் பாபுக்கு நன்றி 🙂 .

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

 1. ஜி, சூப்பர் ரெவியூ போங்க…நான் கிட்டத்தட்ட 6 hrs அந்த படத்தை பாத்தேன்… முக்கியமா அந்த 3 பாட்டு, அப்புறம் அந்த ரிங்கு பன்ற சில தைரியமான சேட்டைகள் (mangya fighting scene), அப்புறம் அந்த ரெண்டு நண்பர்கள் பன்ற காமெடி (love லெட்டர்) காட்சி எல்லாம் rewind rewind பண்ணி பாத்தேன்….

  நன்றி ஜி…(Should I say in english also… – Ringu style) 🙂 🙂

 2. படத்தின் பல காட்சிகள் தமிழில் வந்த காதல் படத்தை நினைவூட்டுகின்றன. இந்த படமே காதல் படத்தின் பாதிப்பு போன்று தான் இருந்தது

 3. @பாபு நான் தற்போது இப்படப்பாடல்கள் தான் கேட்டுக்கொண்டு இருக்கின்றேன் 🙂 இன்னொரு முறை படத்தைப் பார்க்க வேண்டும்.

  இதில் அந்த பார்ட்டி பாடலில் பிரதீப் போடும் குத்தாட்டம் செம்ம செம்ம.

  @ஷங்கர் வெறியன் காதல் படம் போல இருப்பது உண்மை தான் ஆனால், Sairat ல் விரிவாகக் காட்டி இருப்பார்கள்.

  என்னங்க பயங்கரமான பேரா இருக்கு உங்களோடது 🙂

 4. கிரி, கடந்த ஒரு மாதமாக ரம்ஜான் நோன்பு இருந்ததாலும், அலுவலக சக பணியாளர் விடுமுறைக்கு சென்றமையாலும் ஒரு மாதம் இணைய தொடர்பு இல்லை. படத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன். பகிர்வுக்கு நன்றி கிரி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here