திருமாவளவன் இந்துக் கோவில்கள் அமைப்பு பற்றிக் கூறியது மிகப்பெரிய சர்ச்சையாகி விட்டது. Image Credit
திருமாவளவன்
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்ததாலும், பல்வேறு அடக்குமுறைகளாலும், வர்ணாசிரம பிரிவுகளால் ஏற்பட்ட வேதனைகளால் அவருக்கு இந்து மதத்தின் மீதோ அல்லது அதன் அமைப்புகளின் மீதோ கோபம் உள்ளது என்பது இயல்பானது.
பாதிக்கப்பட்ட பட்டியலின சமுதாயத்தினர் நிலையில் இருந்து யோசித்தால் மட்டுமே அதன் உணர்வை, கோபத்தைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆதிக்கச் சாதியினருக்கு பட்டியலின மக்களின் வலி மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது.
பட்டியலின மக்களின் தலைவராகத் தன்னை முன்னிறுத்தும் திருமாவளவன், சிறந்த தலைவருக்கான ஒரு நபராகத் தன்னை முன்னிறுத்துகிறாரா என்றால், இல்லை.
தன்னுடைய மக்களின் வளர்ச்சிக்காக இதுவரை அனைவரும் மெச்சும்படியான நடவடிக்கை என்ன எடுத்தார்? என்றால், எதுவுமில்லை என்று தான் கூற முடியும்.
சில உதவிகளைக் கைகாட்ட முடியும் என்றாலும், அதை ஒப்பீடாக எடுக்கக்கூடிய அளவுக்கு இல்லை என்பதே உண்மை.
முதலில் பட்டியலின மக்களுக்குத் தேவையானது, படிப்பு மற்றும் தாங்கள் முன்னேற்றம் அடைவதற்கான அரசு கொடுத்துள்ள ஏராளமான சலுகைகள் குறித்த விழிப்புணர்வு.
இந்த இரண்டுமே மோசமான நிலையிலேயே அவர்களிடையே உள்ளது.
பட்டியலின மக்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கான சலுகைகள், படிக்கச் சலுகைகள் ஏராளமாக உள்ளது ஆனால், அவை பற்றிப் பலருக்கு தெரியவில்லை என்பதே நிதர்சனம்.
நான் கூறுவது, இணையத்தில் பேசிக்கொண்டு இருப்பவர்கள் பற்றி அல்ல. வறுமையில், எந்த விழிப்புணர்வுமே இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு இருக்கும் மக்களைப் பற்றி.
இதையெல்லாம் இவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய முக்கியமான பொறுப்பில் இருப்பவர் திருமாவளவன்.
ஆனால், அவர் செய்து கொண்டு இருப்பது என்ன?!
ஆதிக்க சாதியினருடன் சண்டை
ஆதிக்கச் சாதியினருடனான சாதி சண்டைகளை மூட்டி அவர்களை உசுப்பேத்துவது, அடிதடிக்கு பயன்படுத்துவது, இந்து கடவுள்களைக் கேவலமாகப் பேசி அதை அவர்களை ரசிக்க வைப்பது என்று குறுகிய வட்டத்துக்குள்ளேயே வைத்துள்ளார்.
ஆதிக்கச் சாதியினர் எப்படி நடந்து, காலத்தை விரயம் செய்தாலும் அவர்களுக்குப் பெரிய இழப்பு வந்துவிடப்போவதில்லை.
ஆனால், பட்டியலின மக்களுக்குத் தாங்கள் படித்து நல்ல வேலையில் சேர்ந்தால் மட்டுமே எதிர்காலம்.
இல்லையென்றால், அவர்களின் வறுமை மாறாது.
அசுரன் படத்தில் தனுஷ் கூறுவது போல, படிப்பை மட்டும் யாரும் எதுவும் செய்ய முடியாது.
எனவே, நன்கு படித்து, தேவையற்ற செயல்களில் நேரத்தை வீணாக்காமல், அரசியல் தலைவர்களின் சுயநலத்தில் தங்களை இழக்காமல் மேலே வருவதே அவர்களுக்கு நல்லது.
ஆனால், இதைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களை விடாமல் அப்படியே வைத்துள்ளார்கள், அதற்குத் திருமாவளவனும் ஒரு முக்கியக் காரணமாக இருக்கிறார்.
வழிகாட்ட வேண்டியவரே தங்கள் மக்கள் திசை திரும்பக் காரணமாக இருப்பது என்ன மாதிரியான செயல்?!
இந்து கோவில்களைப் பற்றி விமர்சனம் செய்தது கூட அங்குள்ள மக்களிடையே உணர்ச்சி வேகத்தில் பேசிக் கைதட்டுதல் பெறுவதற்குத் தான்.
அங்குள்ளவர்கள், திருமாவளவன் பேசியது தவறு என்பதைக் கூட உணராமல், கைத்தட்டி விசிலடித்து மகிழ்கிறார்கள், அந்த அளவுக்கு அவர்களின் மனநிலை மாற்றப்பட்டுள்ளது.
நாகரீகமான விமர்சனம் தேவை
பிடிக்கவில்லை என்றால், கருத்தியல் ரீதியாக விமர்சிக்கலாமே தவிர இது போல எந்த மதத்தையும் இழிவாகப் பேசுவது தவறு.
‘என்னை இந்து மதத்துக்கு எதிரானவனாகச் சித்தரிக்க முயற்சிக்கிறார்கள்‘ என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
இவ்வாறு பேசினால், அவரை வரவேற்கவா செய்வார்கள்..?! விமர்சிக்கத்தான் செய்வார்கள்.
போகிற இடத்தில் எல்லாம் இந்து மதத்தை அநாகரீகமாக விமர்சிப்பது, சர்ச்சையானால், என்னை இப்படி சித்தரிக்கிறார்கள் என்று புலம்ப வேண்டியது.
தேர்தல் சமயத்தில் சிதம்பரம் கோவில் சென்று வணங்குவது, தேர்தல் முடிந்த பிறகு வணங்கிய அதே கடவுளை நக்கலடிப்பது.
தேர்தலுக்காக ஒரு நிலை, தேர்தல் முடிந்த பிறகு ஒரு நிலை என்று ஏன் நடந்து கொள்ள வேண்டும்?
யாரும் எவரையும், எதையும் விமர்சிக்கலாம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இல்லை.
ஆனால், காலத்துக்கு ஒன்று, நேரத்துக்கு ஒன்று, நபருக்கு ஒன்று, மதத்துக்கு ஒன்று என்று நிலையை மாற்றிக்கொண்டே இருக்காதீர்கள்.
திருமாவளவன் அவர்களே! இது எந்த விதத்திலும் உங்கள் மீதான மதிப்பை உயர்த்தாது.
முன்பு போல அனைத்தையும் எளிதாக ஏற்றுக்கொள்ளும் நிலை மக்களிடையே தற்போது இல்லை.
உங்கள் மக்களுக்காகச் செய்யவேண்டிய பணிகளே ஏராளம் உள்ளது.
எனவே, இது போன்ற செயல்களில் உங்கள் நேரத்தை வீணடிக்காமல், மக்களுக்கான தேவைகளில் உங்கள் கவனத்தைச் செலுத்துங்கள்.
அவர்களின் முன்னேற்றத்துக்கு உதவுங்கள். இதுவே உங்களுக்கான கடமை & பொறுப்பு.
தொடர்புடைய கட்டுரை
சரியான பதிவு அடித்தட்டு மக்கள் இன்னும் பல சலுகைகள் இருப்பதை தெரியாமல் தான் இருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு டீகடையில் சிலரை சந்தித்தேன் பட்டியல் இனத்தவர்கள் தான் என்று நினைக்கிறன் ஏனென்றால் அவர்கள் வைத்திருந்த வண்டியில் ஜெய் பீம் என்று அம்பேத்கர் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தது. பேச்சு கொடுத்தபோது லோக்கல் தலைவர்களை பற்றி வானளவு புகழண்டர்கள் பேச்சு அம்பேகர் பக்கம் திரும்பியபோது நான் கேட்டேன் எந்த சலுகை கிடைக்காமலே அம்பேத்கர் அவர்கள் பல பட்ட படிப்பு படித்திருக்கும் போது நீங்கள் ஏன் மேற்கொண்டு படிக்காமல் சுற்றி திரிகிறீர்கள் என்று கேட்ட போது முழித்தார்கள் … தங்கள் தலைவர்களை போய் கேளுங்கள் … கேளிக்கைகாக திறன்பேசி உபோயிக்காமல் உங்கள் நலம் சார்ந்த விஷயங்களை அதில் இருந்தே தெரிந்து கொள்ளலாமே என்று கூறினேன் … ஆனால் இவர்கள் தலைவர்கள் இவர்களை உயரவிட மாட்டார்கள் உசுப்பேத்தி விட்டு தங்கள் சௌகரியங்களை பார்த்து கொள்ளவர்கள்
அரசியல் தலைவர்கள் இவர்களைப் பயன்படுத்திக்கொள்வது இவர்களுக்குத் தெரிவதில்லை. காலம் போன கடைசியில் உணர்ந்து என்ன பயன்?
நன்கு படிக்க வேண்டும். இவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள், சலுகைகள் உள்ளது. இதை முழுமையாகப் பயன்படுத்தினால் இவர்கள் எங்கேயோ செல்லலாம் ஆனால், விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள்.