சங்கதாரா | ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

13
sangathara சங்கதாரா - ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்?

1950 ல் “கல்கி” அவர்கள் சோழ மன்னர்களை அவர்களின் ஆட்சியைப் பற்றி “பொன்னியின் செல்வன்” நாவலில் எழுதினார்.

அதற்கு முன்பும் பின்பும் சோழ மன்னர்கள், அவர்களது ஆட்சி முறை பற்றியும் அதில் உள்ள ரகசியங்களைப் பற்றியும் பல எழுத்தாளர்களும் நாவல் எழுதி விட்டார்கள்.

பலரும் சோழர்களைப் பற்றி எழுதி இருந்தாலும் எழுதிக் கொண்டு இருந்தாலும், அனைவர் மனதிலும் காலம் கடந்தும் நிற்பது “பொன்னியின் செல்வன்“.

சில கதாப்பாத்திரங்களின் உண்மையான நிலை தெரியாததால் அதைப் படிப்பவர்களே ஊகித்துக் கொள்ளும்படி கல்கி எழுதி இருப்பார்.

அதில் ஒன்று ஆதித்த கரிகாலன் கொலை.

என்ன ஆதாரம்?

1000 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் அனைத்திற்கும் ஆதாரம் இருக்க வாய்ப்பில்லை. எனவே ஒவ்வொருவரும் தங்கள் ஆய்வின் அடிப்படையில் எழுதி வருகிறார்கள்.

இது தான் சரி என்பதற்கான உறுதியான ஆதாரம் அனைத்துக்கும் இல்லை. எவரும் இவர் எழுதியது தான் சரி என்று அறுதியிட்டுக் கூற முடியாது.

தன் கருத்தை மட்டும் கூறி அதைச் சிறப்பாக விவரித்து நம்மை அந்த உலகத்துக்கு கொண்டு செல்வது தான் ஒரு எழுத்தாளருக்கு அழகு.

நாம் நம்மைப் பற்றிப் பெருமையாகக் கூறுவதை விட நம் எழுத்தைப் படித்து மற்றவர்கள் உயர்த்திக் கூற வேண்டும்.

பக்குவப்பட்ட முன்னுரை அல்ல

பல புத்தகங்கள், தொடர்கள், கட்டுரைகள் எழுதி அனுபவம் பெற்ற “காலச்சக்கரம்” நரசிம்மன் அவர்களின் “முன்னுரை” அதைப் பிரதிபலிப்பதாக இல்லை.

இதர நாவலாசிரியர்கள் தங்கள் படைப்புகளைப் படிப்பதற்காக வழங்கியிருந்த “3D” கண்ணாடிகளைக் கழற்றி விட்டு” படிக்கக் கூறியிருக்கிறார்.

இதெல்லாம் கூறாமல் இருந்தால் 3D கண்ணாடி போடாமல் படித்து இருக்கலாம், கூறியபிறகு போடாமல் படிக்க முடியுமா?! 🙂 .

சோழ வரலாற்றில் பல அவிழ்க்க முடியாத ரகசியங்கள், மர்மங்கள் உள்ளன. அதில் ஒன்று “ஆதித்த கரிகாலன் கொலை“.

இவர் எப்படி இறந்தார்? யார் கொலை செய்தார்கள்? என்பது இன்றுவரை யாராலும் தீர்க்க முடியாத பிரச்சனையாக இருக்கிறது.

எல்லோரும் இவர் இப்படி இறந்து இருக்கலாம் என்ற ஊகத்தைத் தங்கள் தரப்பு ஆய்வுகளை வைத்துக் கூறுகிறார்களே தவிர இது தான், இப்படித் தான் இறந்தார் என்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாவல் இல்லை, இனியும் வர முடியாது.

சோழ வரலாற்றில் குந்தவை, அருள்மொழி வர்மனுக்கே சரித்திர நாவலாசிரியர்கள்   முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள், ஆதித்த கரிகாலனின் வீரத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை.

குந்தவை, அருள்மொழிவர்மன் அண்ணனாகத் தான் அனைவருக்கும் ஆதித்த கரிகாலன் தெரிகிறான் என்று கூறி இருக்கிறார்.

நரசிம்மன் அவர்கள் கூறுவதிலும் உண்மை உள்ளது. இவர் கூறுவதை ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும் ஆனால், இவரும் ஆதித்த கரிகாலனை உயர்வாக முன்னிறுத்தியதை விடக் குந்தவையைக் குறிப்பிட்டது தான் அதிகம்.

அருண்மொழியின் வீரத்தினை இமயமளவுக்கு எழுதி, எனது வீரத்தை எள்ளளவாக்கி, எனக்கு நியாயம் கிடைக்காமல் செய்து விட்டனர்

என்று ஆதித்த கரிகாலன் கூறுவதாக வருகிறது ஆனால், இதிலும் ஆதித்த கரிகாலன் வீரம் பெரியளவில் விவரிக்கப்படாமலே இருக்கிறது.

ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? என்பதைச் சரியோ தவறோ குழப்பாமல் இவர் ஆய்வில் தெளிவாகக் கூறி இருப்பது மட்டுமே சிறப்பு.

ஏன் இது போல நடந்து இருக்கக் கூடாது? என்று தோன்றுவதை மறுக்க முடியாது.

லாஜிக்கலாகச் சில கேள்விகள் இது எப்படிச் சாத்தியம்? என்றும் நினைக்கத் தோன்றுகிறது.

ஆசிரியர் நரசிம்மன் கதை போலக் கூறிவருகிறார் அதனால், குந்தவை தவிர எந்தக் கதாப்பாத்திரமும் மனதில் ஒட்டவில்லை.

சுவாரசியமான வார்த்தை விளையாடல்கள் இல்லை. வர்ணிப்புகள் தான் ஒரு கதாப்பாத்திரத்தை நம் மனதில் நிறுத்தும்.

மேலோட்டமான வர்ணனைகள்

இதில் வர்ணிப்புகள் மேலோட்டமாக உள்ளது.

பொன்னியின் செல்வனில் நம்மை மிரட்டிய பல கதாப்பாத்திரங்கள், சாதாரணக் கதாப்பாத்திரமாகக் கடந்து செல்கிறது.

இவருடைய முன்னுரையையும் முகவுரையையும் படிக்காமல் இருந்து இருந்தால் “3D” கண்ணாடி போடாமல் படித்து இருப்பேனோ என்னவோ! 🙂 .

சங்கதாரா என்றால் என்ன?

சோழர்கள் அரசராகப் பதவி ஏற்கும் போது புரச இலை, பலச தண்டு வைத்து ஒரு சங்கில் (தலைச்சங்கம்) நீர் வார்ப்பார்கள்.

இது கை மாறி இருக்கும் அரண்மனையின் பெயர் தான் “சங்கதாரா” என்று இந்நாவலில் கூறப்படுகிறது.

தமிழ் வார்த்தைகள் விளக்கம்

வரலாற்று நாவல்களைப் படிக்கும் போது ஆசிரியர் பயன்படுத்தும் சில தமிழ் வார்த்தைகள் அர்த்தம் நமக்குப் புரியாது.

இருப்பினும் முன்னர் கூறிய வார்த்தையையும் அடுத்து வருகிற வார்த்தையையும் சம்பவத்தையும் வைத்து இதைத்தான் கூறி இருப்பார் என்று நாம் உத்தேசமான முடிவிற்கு வருவோம்.

ஆனால், இதில் புரியாத / சிரமமான வார்த்தைகளுக்கு அவரே விளக்கம் அளிக்கிறார்.

பண்டாரசாலை” என்றால் நூலகம் அதிலும் பண்டிதர்களுக்கான அரிய சுவடிகளை வைக்கும் இடம் என்று கூடுதல் விளக்கம் கூறுகிறார்.

இதன் மூலம் சில வார்த்தைகளை அதன் உண்மையான அர்த்தம் புரிந்து படிக்க முடிகிறது. வரலாற்றுச் சான்றுகளையும் குறிப்புடன் கொடுத்து இருக்கிறார்.

மாற்றுக் கருத்தை முன் வைக்கும் போது முந்தைய வாதங்களைத் தவிடு பொடியாக்கும் படி வர்ணிப்புகள் இருக்க வேண்டும்.

ஏனென்றால் வர்ணிப்புகளும் வார்த்தை விளையாடல்களுமே வாதங்களுக்கு வலு சேர்க்கும்.

எல்லோருக்குமே ஆதித்த கரிகாலனை கொன்றது யார்? என்ற குறுகுறுப்பு இருக்கும்.

ஆசிரியர் ஏற்கனவே புத்தகங்கள் எழுதி, இவர் விவரித்த விதத்தை ரசிப்பவர்கள் இருப்பதாலும், இப்புத்தகத்தைச் சிலாகிப்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

இருப்பினும் எனக்குச் சங்கதாரா நாவல் திருப்தியளிக்கவில்லை.

பொன்னியின் செல்வன் அல்லது சோழ வரலாறு படித்தவர்கள் இந்நாவலை சரியாகப் புரிந்து படிக்க முடியும்.

நாவலைப் படிக்கக் கொடுத்த நண்பர் சூர்யாக்கு நன்றி.

தொடர்புடைய கட்டுரை

பொன்னியின் செல்வன்

அமேசானின் Kindle ல் வாங்க –> Link

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

13 COMMENTS

  1. ப்ரோ, நம்ம புராண இதிஹாச கதைகல பத்தியும் கொஞ்சம் பேசலாமே!! 🙂

  2. வணக்கம் கிரி,

    “எதிரியே இல்லாத நிலையை விட பலமில்லாத எதிரி என்பவன் உபயோகமானவன். ஆகவே மொத்த சோழகுலத்தை அழிப்பதற்குப் பதில் ஆணிவேராக உருவெடுத்துக் கொண்டிருக்கும் ஆதித்தனை அழித்துவிட்டால் ஆட்டம் கண்டுவிடும் என்பதே ஆபத்துதவிகளின் கணக்கு. அவர்களின் எண்ணத்தில் எவ்விதத்தவறுமில்லை”

    1. நிகழ்வு (The Incident)
    2. நிகழ்வு நடந்த காலத்தின் பின்னணி (Backdrop of the Incident)
    3. குற்றம் சாட்டப் பட்டோரும் அவர்களது குறிக்கோள்களும் (The Accused and motiffs)
    4. குந்தவை கூட்டாளிகள்
    5. உத்தம சோழன் கூட்டாளிகள்
    6. பாண்டிய ஆபத்துதவிகள்
    7. கிடைத்த ஆதாரங்கள் (Evidences available)
    8. அனுமானமும் முடிவும் (Inference and Conclusion)
    9. மீதமிருக்கும் கேள்விகள் (Unanswered Questions)

    மேலும் படிக்க : http://ilayapallavan.blogspot.com/2008/12/blog-post_3172.html

  3. நாவலோட முன்னும், பின்னும் எனக்கு அறிமுகம் இல்லை.. தற்போது படிக்க வேண்டும் என்ற எண்ணமும் இல்லை… உலக வரலாற்றில் நிறைய கொலைகள் காரணங்கள் அறியப்படாமலே, உண்மைகள் வெளி வராமலே புதைந்து விட்டன…அவற்றை தற்போது நிருபணம் செய்வது, காரணங்கள் கண்டறிவது சாத்தியம் இல்லாத ஒன்று… நீங்கள் அடுத்து வாசிக்க போவது என்ன புத்தகம்??? பகிர்வுக்கு நன்றி கிரி..

  4. புத்தகக் கரு நன்றாக இருந்தது. சில இடங்களைத் தவிர லாஜிக் சரியாக இருந்தது. (அருண்மொழித்தேவன் குந்தவையின் புதல்வன் என்றும் அதற்கு வலு சேர்ப்பதற்காகக் கூறிய நிகழ்வுகளும், கடைசியில் எல்லாம் தெரிந்ததைப் போல் வந்தியத்தேவர் அவருடைய வயோதிகத்தின்போது தெரியப்படுத்துவதும்). ஏன் ஆதித்த கரிகாலன் இறக்க நேர்ந்தது என்பது சங்கதாராவில் சரியாகக் கூறப்பட்டுள்ளது. பொன்னியில் செல்வனை ஆழ்ந்துபடித்தவர்களும், மிகச் சமீபத்தில் படித்தவர்களும், சங்கதாராவினால் திருப்தி அடைய முடியாது. சரித்திர நாவலை, மர்ம நாவல் போன்று அணுகினால் நினைத்த திருப்தியைக் கொடுக்காது. பொதுவாக, நாம் வரலாற்று ‘நாயகர்களை மிக உயர்ந்த இடத்தில் வைத்துப்பார்க்க விரும்புகிறோம். அவர்கள் சாதாரணமனிதர்களை விட மிக மேம்பட்டவர்கள் என்றுதான் காண விரும்புகிறோம். (கடவுள் சேவை செய்பவரும், அதாவது பூசாரி, சாமியார்கள், பாதிரிகள் போன்று… மிக மேம்பட்டவர்கள் என்று தான் காண விரும்புகிறோம்). நாம் அவர்களும் நம்மைப்போன்ற மனிதர்கள் தான், அவர்களுக்கும் ஏராளமான குறைகள் இருக்கும் என்று நினைக்காதது, வாசகர்களின் தவறுதான்.

    புத்தகம் அருமையான களத்தைக் கொண்டுள்ளது. நடை மிகவும் ஈர்க்குமாறு இல்லை. இரண்டொரு லாஜிக் மீறல்கள், வாதத்திற்கு உதவியாக இல்லை.

  5. ஒன்றைக் குறிப்பிட மறந்துவிட்டேன். எப்போதும்போல், கிரி அவர்கள் சரியாக எழுதியுள்ளார்கள். (எது நன்றாக இருக்கிறதோ அதைப் பாராட்டியும், எது சரியாகத் தோணவில்லையோ, அதை அப்படியேயும் எழுதியுள்ளார்). Unbiased Opinion adds value to his articles.

  6. @அருண் பேசிடுவோம் 🙂

    @சிவா நீங்க இன்னும் என் தளத்தை படிக்கறீங்களா?! 🙂

    தகவலுக்கு நன்றி.. படித்துப் பார்த்தேன் சுவாரசியமாக இருக்கிறது ஆனால், என்ன எழுதினாலும் யாரும் இதற்கு “தீர்ப்பு” கூற முடியாது 🙂

    @யாசின் உண்மை தான்.

    கள்ளிக்காட்டு இதிகாசம் படித்து விட்டேன். இதை எழுதிய பிறகு வேறு புத்தகம் படிக்கணும்.

    @நெல்லைத் தமிழன் எனக்கு கொலை சமாதானம் ஆகவில்லை. அவ்வளவு எளிதாக முடியுமா? அதோட மறைத்து இன்னொரு இடம் கொண்டு செல்ல இவர் என்ன சிப்பாயா?!

    குழந்தை பிறந்த பிறகு பெண்ணின் உடலமைப்பு மாறும் என்பது அனைவரும் அறிந்தது. அப்படி இருக்கும் போது எப்படி மறைக்க முடியும்?

    ஒரு இளவரசி இது போல நடந்து திருமணம் செய்ய ஒப்புக்கொள்வாரா? இது எதோ கள்ளக்காதல் என்று வரும் செய்தி போல உள்ளது.

    அதோடு 10 வயதுப் பெண் கூட திருமணத்தை நினைத்து வெட்கப்படுவதாக வருகிறது.. இந்த வயதில் என்ன தெரியும்? வீரம் இருக்கலாம் ஆனால், திருமண உறவை புரிந்து கொள்வதை எல்லாம் நம்ப முடியவில்லை. சிறு வயதாக இருக்கும் போது நடைபெறும் பெரிய சம்பவங்கள் ஏற்றுக் கொள்ளும்படியில்லை.

    பொன்னியின் செல்வனில் 19 வயதில் போருக்கு அருள்மொழி வர்மன் போவதே எனக்கு அரைகுறையாகத் தான் ஏற்றுக்கொள்ள முடிந்தது. இருப்பினும் 19 வயது என்பது பண்டைய காலத்தில் தற்போது போல இல்லாமல் உடல் உறுதியுடன் இருப்பார்கள் என்பதால் ஓரளவு சமாதானம் ஆனேன்.

    ஆனால், 10,12 வயதெல்லாம்.. நம்புற மாதிரி இல்லை.

    இது போல நிறைய இருக்கிறது ஆனால், அதை கூறினால் படிக்க நினைப்பவர்களுக்கு சுவாரசியம் போய்டும் என்று இதோட நிறுத்திக்கிறேன்.

    பாராட்டிற்கு நன்றி 🙂

  7. உடையார்
    முதல் பாகம்
    பக்கம் 402 முதல் 414 வரை
    “என் பிள்ளைக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்ற ஆதித்த

    கரிகாலன் அடியோடு ஒழிய வேண்டும்.” – செம்பியன்மாதேவி

    408- ரவிதாசன், இன்னொருவன் பரமேஸ்வரன். இவர்கள் அந்தணர்கள். மதுராந்தகனின்

    ஆட்கள். செம்பியன் மாதேவி ஓலை கொடுத்து அழைத்து வந்து பதவி கொடுத்துப்

    பாராட்டப்பட்ட முன்குடுமிச் சோழியர்கள். அதாவது எதிரியின் கையாட்கள்.

    414-ஆதித்த கரிகாலன் வலியால் ஏற்பட்ட பெருங்குரலோடு தரையில் சாய்ந்தான். அவன்

    துடித்து ஓயும் வரை ரவிதாசனும், பரமேஸ்வரனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

    மெல்ல அந்த இடம் விட்டு அகன்றார்கள்.

    சோழ சரித்திரத்தில் மிகப்பெரிய வேதனை. மிகப்பெரிய வஞ்சனை ஒன்று அங்கு

    நிகழ்ந்தேறியது. காலா காலத்துக்கும் பேசக்கூடிய ஒரு காரியமாய் அது மாறிவிட்டது.

  8. தல,
    எனக்கு பெரிய ஐடியா இல்லை இந்த பதிவு ல
    இருந்தாலும் நீங்க எழுதி இருக்கீங்க நு உங்க ரசிகனா ஒரு தடவை படிச்சேன் 🙂

    உடையார் உங்களுக்கு ரொம்ப புடிக்கும் நு தோணுது.. வாய்ப்பு இருந்தா படிக்கவும்

    – அருண் கோவிந்தன்

  9. ஏனக்கு இந்த புத்தகம் வேண்டும். ஏங்கு கிடைக்கும் ?
    – வர்த்தமான்

  10. When you get time, please read this book..two of the best historical thrillers, better than even ponniyin Selvan, as lot of ground work and research has gone into it to get the facts right. Beautifully answers all the unanswered questions and mysteries, missed in ponniyin selvan.

  11. எச்சரிக்கை. பொன்னியின் செல்வனோடு மட்டும் இந்த கதயை ஒப்பிடாதீர்கள்

  12. If you get a chance Please read “Cherar Kottai” – Part 1 and 2 by Gokul Seshadhri – excellant novel and one more by same author Rajakesari. Both are excellant novels.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here