சென்னை உட்கட்டமைப்பு | A Complete Mess

7
சென்னை உட்கட்டமைப்பு

2023 டிசம்பர் மழை சென்னையைப் புரட்டிப்போட்டு விட்டது. கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. Image Credit

சென்னை உட்கட்டமைப்பு

இதுவரை ஆண்ட திமுக அதிமுக கட்சிகளே சென்னையின் தற்போதைய நிலைக்கு முழு முதல் காரணம். இதில் திமுகவின் பங்கு அதிகம்.

காரணம், திமுக கோட்டையாக சென்னை கருதப்படுகிறது. பெரும்பாலான தேர்தல்களில் திமுகவே அதிக இடங்களைப் பெற்றுள்ளது.

ஒருமுறை ஜெ காலத்தில் அதிக இடங்களைப் பெற்றது, எந்த வருடம் என்று நினைவில்லை.

அனைவரும் விமர்சிப்பது, மழை நீர் வடிகால் சரியாக இல்லையாததாலே தண்ணீர் தேங்குகிறது என்று. இதுவும் ஒரு காரணம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

உண்மையான காரணம், திட்டமிடாத சென்னை நகர உட்கட்டமைப்பு.

என்ன பிரச்சனை?

சென்னையில் அரசியல்வாதிகள் (MP, MLA, கவுன்சிலர்கள்) புறம்போக்கு இடங்கள் மற்றும் ஏரிப்பகுதியை அதிகாரிகள் துணையோடு விற்று விட்டார்கள்.

எனவே, குளம், ஏரி இருந்த இடத்திலெல்லாம் வீடுகள் வந்து விட்டது.

எடுத்துக்காட்டுக்கு, 250 ஏக்கராக இருந்த, பெயரிலேயே ஏரியைக்கொண்ட வேளச்சேரி ஏரி, தற்போது 50 ஏக்கராக உள்ளது. மீதி 200 ஏக்கர் வீடுகள் ஆகி விட்டது.

ஏரிக்குள்ளே வீட்டை வைத்துக்கொண்டு தண்ணீர் வருகிறது என்றால், வராமல் என்ன செய்யும்?! 200 ஏக்கரில் உள்ள மக்களை வெளியேற்ற முடியுமா? சாத்தியமா?

மக்களுக்கு தலையெழுத்தா?

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் அவர்கள், இவ்வாறு வீடு கட்டியிருப்பவர்களை விமர்சித்து இருந்தார்.

கொஞ்சம் லாஜிக்காக யோசித்துப்பாருங்கள், அரசு இந்த இடங்களை மக்களுக்குப் பட்டா கொடுக்க அனுமதிக்கவில்லையென்றால், எப்படி இவர்கள் வீடு கட்ட முடியும்?!

இங்குள்ள குறிப்பிட்ட சில ஆக்கிரமிப்பாளர்களைத் தவிர்த்துப் பெரும்பாலானவர்கள் அரசின் வழிமுறைகளின் படியே வீட்டைக் கட்டி உள்ளார்கள்.

அப்படித் தவறு என்றால், எதற்கு அரசு அதிகாரிகள் வீடு கட்ட ஒப்புதல் வழங்குகிறார்கள்? எதற்குத் தண்ணீர், மின்சாரம் வழங்குகிறார்கள்?

எந்த மக்களாவது பிரச்சனையான இடத்தில் வீடு கட்ட வேண்டும் என்று விரும்பி செய்கிறார்களா?! அவர்களுக்கு என்ன வேண்டுதலா?

அரசின் அனுமதி பெற்ற ஒரு இடத்தில் வீட்டைக் கட்டி வசிக்கும் போது, திடீரென்று உங்கள் இடம் ஆக்கிரமிப்பு என்று கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

இதில் மக்களின் தவறு என்ன?

இதற்குத் தீர்வு என்ன?

கசப்பான உண்மை என்னவென்றால், திமுக அதிமுக ஆட்சியிலிருக்கும் வரை இப்பிரச்சனைக்குத் தீர்வு இல்லை.

காரணம், அடிப்படையிலேயே சிக்கல் உள்ளது. அனைத்து மட்டங்களிலும் லஞ்சம், ஊழல் ஆழமாக ஊடுருவி உள்ளது. மொத்த அமைப்புகளும் கெட்டு உள்ளது.

எனவே, ₹4,000 கோடியல்ல, ₹40,000 கோடி ஒதுக்கினாலும் இதே நிலை தான் அடுத்த பெரிய மழைக்கும் தொடரும். காரணம், பல வீடுகள் ஏரிகளில் கட்டப்பட்டுள்ளது, இவர்களின் ஊழல், லஞ்சம் உட்கட்டமைப்பை தரமாக மேம்படுத்த உதவாது.

அரசியல்வாதிகள் இது போன்ற மழைநீர் வடிகால், சாலை அமைப்பது போன்றவற்றைச் சம்பாதிக்கும் ஒரு வழியாகத் தான் பார்க்கிறார்கள்.

பிரச்சனைகளைச் சரி செய்யும் பணியாகக் கருதுவதில்லை.

இதைச் சரி செய்ய முடியாத அளவுக்கு மொத்த அமைப்பும் கெட்டுப்போய் உள்ளது. தலைமை சரியாக வந்தால் மாற்றம் கொண்டு வரலாம்.

நிர்வாகத்தின் பணி என்ன?

அமைச்சர்கள், ஆட்சியர்களை அழைத்து ஒரு போடு போட்டு, ஒவ்வொருவரையும் ஒவ்வொரு பகுதிக்கு நியமித்து, இரு நாட்களில் சரி செய்யவில்லையென்றால், தொலைத்து விடுவேன் என்று கூற வேண்டிய முதலமைச்சர், தக்காளி சாப்பாடு கொடுத்துக்கொண்டுள்ளார்.

ஒரு முதலமைச்சரின் பணியா இது!

முதலமைச்சர், அமைச்சர்களின் பணி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களிடம் வேலை வாங்குவதா? நிவாரணப் பொருட்கள், உணவுப் பொட்டலங்கள் கொடுப்பதா?

இதுவொரு நிர்வாகமா? நாமெல்லாம் எப்படியொரு கேடுகெட்ட அமைப்பில் உள்ளோம் பாருங்கள்!

ஒரு ஐடி நிறுவனத்தில் பேரிடர் குழு செய்யும் பணிகளில், 30% கூட அரசு நிர்வாகத்தில் செய்யவில்லை. இவர்கள் யாருக்குமே பாதிப்பின் உச்சம் புரியவில்லை.

புரிந்தவர்கள் கைகள் கட்டப்பட்டுள்ளது.

இதே சூழ்நிலையில் ஐடி நிறுவனம் பாதிக்கப்பட்டால், அவர்கள் எப்படி Disaster Management செயல்படுத்துகிறார்கள் என்று பார்த்ததால், பேரிடர் மேலாண்மை என்றால் என்னவென்று புரியும்.

சரியாகும் வரை பொறுப்பில் உள்ளவர்களை பேரிடர் மேலாண்மை குழு உலுக்கி எடுத்துவிடுவார்கள். இதுவே பேரிடர் மேலாண்மைக்கு எடுத்துக்காட்டு.

மக்களைப் பற்றி அக்கறையில்லை

திமுக ஆட்சிக்கு வரும் சில மாதங்களுக்கு முன்பு தான், ராதாகிருஷ்ணா சாலையில் மழைநீர் வடிகால் அதிமுகவினர் அமைத்தார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வடிகால் அமைப்பைச் சென்னை முழுவதும் மேம்படுத்துவதாகக் கூறி, அனைத்து இடங்களிலும் தோண்டி போட்டு விட்டார்கள்.

நல்லா இருந்த வடிகாலையும் இடித்துத் திரும்பக் கட்டினார்கள்.

பெரம்பூர் ஜவகர் நகரில், வடிகால் கட்டுகிறேன் என்று ஆறு மாதங்களுக்குத் தோண்டி போட்டு வைத்ததால், அங்குள்ள மக்கள் படாதபாடு பட்டார்கள்.

தற்போதைய மழையில் இடுப்பளவு தண்ணீர் உள்ளது. ‘இதுக்கு எதுக்குடா எங்களை ஆறு மாதம் படுத்தி எடுத்தீங்க!‘ என்று மக்கள் புலம்புகிறார்கள்.

மயிலாப்பூர் சிவசாமி சாலையில் வடிகால் பிரச்சனைக்காக, வடிகால் அமைக்கிறேன் என்று பல வருடங்களாக சாலையைத் தோண்டிப்போட்டு அமைத்தார்கள்.

தற்போது அங்கேயும் தண்ணீர் செல்லாமல் மழை நீர் தேங்கி நிற்கிறது, மக்கள் போராட்டம் செய்கிறார்கள்.

இதே நிலை தான் சென்னையில் பெரும்பாலான பகுதிகளில்.

தரம் இல்லை

வடிகால் அமைக்கிறார்கள் என்றால், சிமெண்ட்டை பூசி அதற்குத் தடுப்பு கூட வைப்பதில்லை, அதில் நாய், மனுசங்க நடந்து, வாகனங்கள் சென்று சேதமாகிறது.

பணிகள் Professional ஆக இல்லை, ஏனோ தானோவென்று படு கேவலமாகச் செய்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும் போது ரத்தம் கொதிக்கிறது.

இப்படி மக்கள் வரிப் பணத்தைக் கொஞ்சம் கூடப் பொறுப்பு இல்லாமல் வீணடிக்கிறார்களே! என்ற ஆத்திரம் வருகிறது.

என்ன செய்வது! மவுனமாகக் கடந்து செல்ல வேண்டியதாக உள்ளது.

கட்டப்படும் கால்வாயாவது தரமாக இருக்கிறதா என்றால், அதுவும் இல்லை. இதைத் தனியாக விளக்க வேண்டியதில்லை, ஒவ்வொருவரும் பார்த்து இருப்பீர்கள்.

பணம் சம்பாதிக்க ஒரு வாய்ப்பு

கட்டுகிறார்கள், இடிக்கிறார்கள், கட்டுகிறார்கள், இடிக்கிறார்கள். திரும்ப ஒரு இடத்தில் உடைக்கிறார்கள், எதோ செய்கிறார்கள் பின்னர் அப்படியே சில மாதங்களுக்கு போட்டு வைத்து விடுகிறார்கள்.

இவர்கள் பணியாகச் செய்யாமல், பணம் சம்பாதிக்கும் ஒரு வாய்ப்பாகத்தான் கருதுகிறார்கள்.

பல வருடங்களுக்குப் பிறகு சாலை அமைத்ததும், அதற்காகவே காத்திருந்தது போல, மின்சார, மெட்ரோ தண்ணீர் துறை சாலையைத் தோண்ட வந்து விடுகிறார்கள்.

கோபம் வருமா வராதா?

இதைச் சந்திக்காத எந்தவொரு சாமானியனும் இருக்க முடியாது.

அண்ணாமலை

நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று, அனைத்து துறை நபர்களையும் கலந்து ஆலோசித்து, ஆய்வு செய்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்றார்.

அண்ணாமலை கூறுவது சரி தான் ஆனால், யார் செய்வது?

இவ்வாறு கூறும் அண்ணாமலை வந்தாலே இதைச் செய்வது கடினம். காரணம், முன்னரே கூறியபடி மொத்த அமைப்பும் கெட்டுள்ளது.

திமுக ஆட்சி அமைத்ததும், 5 உலக பொருளாதார வல்லுநர்களைத் தமிழகத்துக்கு நியமித்தார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டுள்ளார்கள்?

இப்பிரச்சனைகளின் ஒரு பகுதியான ஆக்கிரமிப்பை அகற்றினால், தற்போது அரசை விமர்சிக்கும் அங்குள்ள மக்களே கடும் எதிர்ப்பைத் தெரிவிப்பார்கள்.

இவர்களை அனுமதிக்காமலிருந்தால், இந்நிலை வந்து இருக்குமா? எதற்கு அனுமதிக்க வேண்டும்? பின்னர் எதற்குத் துரத்த வேண்டும்?

சரி செய்வது எளிதல்ல

அண்ணாமலை வந்தாலும் இதைச் சரி செய்வது எளிதல்ல ஆனால், இரு திராவிட கட்சிகள் செய்யாததை இவர் செய்யலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

அப்படி முயன்றால், கடுமையான எதிர்ப்பு கிளம்பும், அதற்குத் திராவிட கட்சிகள் ஆதரவு தரும். இதைத்தாண்டிச் செய்ய முடியுமா? என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.

ஒருவேளை இதைச் செய்ய முடிந்தால், உலகின் எந்த நகரத்தின் பிரச்சனையையும் சரி செய்து விட முடியும்.

வடிவேல் சொல்வாரே, ‘மூத்தர சந்துல அடி வாங்கிய பிறகு, எந்த அடியையும் வாங்கும் தைரியம் வந்து விட்டது‘ என்று அதுபோலத்தான்.

மோசமான உட்கட்டமைப்பு

முன்னர் தான் திட்டமிடாமல், எதிர்கால பிரச்சினைகளைக் கருத்தில் கொள்ளாமல், சென்னையை விரிவாக்கி விட்டார்கள் என்றால், தற்போதும் அதுவே தொடர்கிறது.

அதாவது, தற்போது அனுமதிக்கப்படும் இடங்களும் முறையான இட வசதி, சாலை அகலம், வாகன நிறுத்த இடம் என்று விதிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை.

அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் லஞ்சப் பணத்தைப் பெற்று விதிமீறி அனுமதிக்கிறார்கள்.

சென்னையின் வெள்ளப்பிரச்சனையை சமாளிக்க உதவும் பகுதிகளில் ஒன்றான, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி கண் முன்னே கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் வீடுகள், பன்னாட்டு நிறுவன வளாகமாகி ஆகி வருகிறது.

என்னைப் போன்ற பலருக்கு வாழ்க்கை கொடுத்த சென்னையை இப்படி கூறு போட்டு விற்கிறார்களே என்று கண்ணீர் வருகிறது 🙁 .

நீதிமன்றமே வேடிக்கை பார்க்கிறது

அனைத்தையும் சென்னைக்கே கொண்டு வந்து சென்னையையே நாசம் செய்து விட்டார்கள். அவரவர் மாவட்டத்திலேயே அமைத்துக்கொடுத்தால், எதற்குச் சென்னைக்குப் படையெடுக்கிறார்கள்?

இப்படி மொத்த தமிழ்நாட்டையும் சென்னைக்கு வரவைத்து, சென்னையையே வாழத் தகுதியற்ற நகரமாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

இப்போதும் நடக்கும் அத்துமீறலை நீதிமன்றம் கூட வேடிக்கை தானே பார்க்கிறது, நீதிமன்றத்தையே மதிப்பதில்லை. யாரிடம் நம்பிக்கை வைப்பது?

திருந்தாத மக்கள்

பணத்துக்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும், ‘அரசியல்வாதி சம்பாதிக்கிறான் நான் எதற்கு வாங்காமல் இருக்கணும்?‘ என்று தன் தவறை நியாயப்படுத்துகிறார்கள்.

பணத்துக்கு வாக்களிப்பவன் ஒரு நியாயம் கூறுவது போல, மக்களுக்குக் கொடுக்கச் செலவழித்ததாகக் கூறி அரசியல்வாதி அவன் செயலுக்கு நியாயம் கூறுகிறான்.

சாப்பாட்டுக்கு வழி இல்லாதவன் பணத்தை வாங்கினால் கூட ஒரு வகையில் பரவாயில்லை என்று கூறலாம் ஆனால், மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை?

வாக்குக்கு ₹2,000 வாங்குவதால் என்ன பெரிய இலாபம்? ஆனால், ஒவ்வொருவரும் வாங்கும் இப்பணத்தால் ஏற்படும் சமூக பாதிப்பு மிக மோசமானது.

இவனுக காசை வாங்கிட்டு தானே வாக்களித்தானுக!‘ என்று ஊழலுக்கு அரசியல்வாதிகள் நியாயம் கற்பிப்பதை மக்கள் உணர்வதில்லை.

மழையால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு சென்னை மக்கள் கொந்தளித்தாலும், கோபம் குறைந்த பிறகு திரும்ப இவர்களுக்கே தான் வாக்களிக்கப்போகிறார்கள்.

4000 கோடி பேக்கேஜ்

4000 கோடி பேக்கேஜ் சர்ச்சையும், விமர்சனங்களுமே இன்னும் ஓயவில்லை.

நிவாரணத்தொகையை மின்னணு முறையில் மக்களுக்குக் கொடுக்காமல், ரொக்கமாகக் கொடுக்கப்போகிறார்களாம்.

அரசு கூறும் காரணம் வங்கியிலிருந்து வாங்கிய கடனுக்கு எடுத்து விடுவார்களாம். அப்படியென்றால் இனி எக்காலத்திலும் மின்னணு பரிமாற்றம் கிடையாதா?

இதன் உண்மையான காரணம் நானும் அறிவேன், நீங்களும் அறிவீர்கள் ஆனால், என்ன செய்வது?!

இவர்களையெல்லாம் வைத்துக்கொண்டு சென்னை உட்கட்டமைப்பு பிரச்சனைக்குத் தீர்வு என்பதெல்லாம் கனவே!

சென்னை உட்கட்டமைப்பு பிரச்சனை இடியாப்ப சிக்கலைப் போன்றது ஆனால், சரி செய்ய முடியாத பிரச்சனையல்ல. அதற்கு முழு உழைப்பையும், நேர்மையையும் கொடுத்துத் தவம் போலச் செய்தால் மட்டுமே முடியும்.

ஆனால், அதற்கான வெளிச்சம் கண்ணுக்கெட்டியவரை இல்லை.

தொடர்புடைய கட்டுரை

ஸ்டாலின் நிர்வாகத் திறமை உள்ளவரா?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

  1. மிகக்கொடுமை. இதற்கு தீர்வே இல்லை என்பதை உணரும் போது ஜீரணிக்க முடியவில்லை. இந்த மக்கள் இன்னும் எத்தனை காலம் தான் திமுக அதிமுகவை நம்பி ஏமாந்து கொண்டே இருப்பார்களோ. திமுக அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை வெற்றி பெற்று முதல்வராவதெல்லாம் நடக்கிற காரியாமா? அதுவும் இந்த தமிழக மக்களை நம்பி? எனக்கு நம்பிக்கையில்லை. ஓட்டு சதவீதம் கூடும். ஆனால் அது சீட்டாக மாறுவது மிகக்கடினம். அதற்குள் இந்த சென்னை எத்தனை வெள்ளத்தை பார்க்கப்போகிறதோ எத்தனை உயிர்கள் பலியாகப்போகிறதோ. லஞ்சம் ஊழல் தமிழகத்தில் அடிமட்டம்வரை ஊடுருவி உள்ளது. அதிலும் இந்த சென்னை மக்கள் திமுக மீது மிகுந்த விசுவாசமுள்ளவர்கள். அப்படி திமுக அவர்களுக்கு என்ன செய்தது. நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக சென்னையில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும். 6000 பணம் வாங்கியவுடன் இந்த மக்கள் இப்போது உள்ள கோபம் போய்விடும் பொங்களுக்கு வேறு பணம் கொடுப்பார்கள் அவ்வளவு தான் அடுத்த வெள்ளம் வந்தவுடன் மீண்டும் அழுவார்கள் இவர்களுக்கு திமுக தான் சரி அனுபவிக்கட்டும் என கோபம் வருகிறது. கோவை மக்கள் இவர்களுக்கு பரவாயில்லை.

  2. கிரி.. கடந்த முறை ஊருக்கு சென்ற போது தாத்தாவின் (இறந்து விட்டதால்) சொத்துக்களை மாமா பெயருக்கு மாற்ற வேண்டி, அம்மா, சித்தி கையெழுத்து போட வேண்டியதால் நானும் உடன் சென்றேன்.. அங்கு நடந்த சம்பவங்களை தற்போது எண்ணினாலும் மனது குமுறுகிறது. சாதாரண கடைநிலையில் இருப்பவர்களின் அதிகாரமே வானளவில் இருக்கிறது. பின்பு மேல் அதிகாரிகளின் நிலையை சொல்ல வேண்டியதில்லை.

    உண்மையில் அந்த தருணம் என்னை நிலைகுலைய வைத்தது.. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம், என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்.. பாரதியின் பாடல் வரிகள் தான் நினைவுக்கு வருகிறது..

  3. @ஹரிஷ்

    “திமுக அதிமுகவை எதிர்த்து அண்ணாமலை வெற்றி பெற்று முதல்வராவதெல்லாம் நடக்கிற காரியாமா? ”

    2031 ல் வாய்ப்புள்ளது. அதுவரை அண்ணாமலை சிக்கல் இல்லாமல் தொடர்ந்தால்.

    “வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக சென்னையில் 3 தொகுதிகளிலும் வெற்றி பெறும்.”

    எனக்கும் அவ்வாறு தான் தோன்றுகிறது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.

    இன்னொன்று அதிமுக, பாஜக வாக்கைப் பிரிப்பதால், திமுக வெல்வது எளிது.

    @யாசின்

    அங்கெல்லாம் பணம் கொடுக்காமல் எந்த வேலையும் நடக்காது. இது கட்சி பாகுபாடில்லை.

    அதிகாரிகள் நினைத்தது தான் நடக்கும். பணம் கொடுக்கவில்லையென்றால், இழுத்தடிப்பார்கள்.

  4. மனிதர்கள் வாழ தகுதியே இல்லாத ஊர் சென்னை.. இது புரிந்து கொள்ளாமல் சென்னையை மட்டுமே அலங்காரம் செய்து, நிறுவனங்களை அதிகரித்து சென்னை சென்னை என்று தலையில் வைத்து ஆடியதற்கு இயற்கை அன்னை கொடுக்கும் தண்டனை.

    தீர்வு இல்லவே இல்லை.

    மக்கள் சென்னை போல வராது என்று வெட்டி பந்தா செய்யாமல், சிறு குறு நகரங்களில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டால் மட்டுமே விமோசனம்

    அரசியல்வாதிகள் திருந்த வாய்ப்பு இருக்கா என்ன.. இல்லையே.. அவர்களை குறை சொல்லி ஒன்னும் ஆக போறது இல்லை..

    மக்கள் தாம் முடிவு எடுக்க வேண்டும்.. இன்னும் சென்னையில் வாழ வேண்டுமா என்று..

  5. @கௌரி

    “சென்னையை மட்டுமே அலங்காரம் செய்து, நிறுவனங்களை அதிகரித்து சென்னை சென்னை என்று தலையில் வைத்து ஆடியதற்கு இயற்கை அன்னை கொடுக்கும் தண்டனை.”

    உண்மை. குறிப்பாக ஏரிகளை அழித்ததற்கு கிடைக்கும் தண்டனை.

    “மக்கள் தாம் முடிவு எடுக்க வேண்டும்.. இன்னும் சென்னையில் வாழ வேண்டுமா என்று..”

    உண்மையில் அனைவரும் விரும்பி இருக்கிறார்கள் என்று கூற முடியாது.

    காரணம், வாய்ப்புகள் சென்னையில் தான் உள்ளது. என்னையே எடுத்துக்கொண்டால், கோவையில் வாய்ப்புக்கிடைத்தால், கோவையிலேயே இருக்க விருப்பம்.

    ஆனா, அங்குக் கிடைக்காததாலே சென்னையில் பணிபுரிய வேண்டியதாகிறது. ஊருக்கே செல்ல வேண்டும் என்பதே என் பல வருட விருப்பம்.

  6. அரசு அதிகாரிகளும் , அரசியல்வியாதிகளும் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் ஏரி மற்றும் பிற நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது மிகப்பெரிய தவறு. அவர்களை நீதிமன்றம் தண்டிக்கவேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளாய் இருந்தாலும் தண்டிக்கவேண்டும். நம்ம மக்கள் (நாம்) மட்டும் சளைத்தவர்களா என்ன? மழைநீர் வடிக்கால்களில் எல்லாம் குப்பையை போடவேண்டியது.பிறகு தண்ணீர் எங்கு இருந்து வடியும்?

  7. @Payapulla

    வாங்க! எப்படி இருக்கீங்க? 🙂

    “அரசு அதிகாரிகளும் , அரசியல்வியாதிகளும் எந்த ஒரு தொலைநோக்கு பார்வையும் இல்லாமல் ஏரி மற்றும் பிற நீர்நிலைகளில் கட்டிடம் கட்ட அனுமதி கொடுத்தது மிகப்பெரிய தவறு. ”

    கொடுத்ததை விடுங்க.. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறார்களே! இதுவே கடுப்பை கிளப்புகிறது.

    “அவர்களை நீதிமன்றம் தண்டிக்கவேண்டும். ஓய்வு பெற்ற அதிகாரிகளாய் இருந்தாலும் தண்டிக்கவேண்டும். ”

    நீதிமன்றம் கூறுவதை யார் கேட்கிறார்கள்? யாருமே மதிப்பதில்லை.

    “நம்ம மக்கள் (நாம்) மட்டும் சளைத்தவர்களா என்ன? மழைநீர் வடிக்கால்களில் எல்லாம் குப்பையை போடவேண்டியது.பிறகு தண்ணீர் எங்கு இருந்து வடியும்?”

    இது உண்மை தான் என்றாலும், மக்களிடையே ஒழுக்கத்தை கொண்டு வந்தால் மக்களும் பின்பற்றுவார்கள்.

    எங்கும் குப்பையாக ஒழுங்கற்று இருப்பதால், மக்களுக்கும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வருவதில்லை.

    எடுத்துக்காட்டுக்கு, சுத்தமான இடத்தில் இது போன்று பாட்டிலை, குப்பையைப் போட எவருமே யோசிப்பார்கள்.

    இந்த நிலையை எப்போது அரசு கொண்டு வருகிறதோ அன்று தான் மக்களும் ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here