கூகுள் ஃபோட்டோஸ் இலவச சேவைகள்

8
google-photos கூகுள் ஃபோட்டோஸ் இலவச சேவைகள்

கூகுள் ஃபோட்டோஸ் தரும் இலவச வசதிகள் இன்னும் பலர் அறியாதது. இதனுடைய அருமை தெரியாமலே இதன் இலவச வசதிகளை இழந்து கொண்டு இருக்கிறார்கள்.

கூகுள் ஃபோட்டோஸ்

கூகுள் ஃபோட்டோஸ் அப்படி என்னென்ன வசதிகள் தருகிறது என்று பார்ப்போம்.

Unified Google

தரவேற்றம் (Upload) செய்யும் அனைத்து நிழற்படங்களும் இலவசம். அதாவது உங்களுக்குக் கூகுள் இலவசமாகக் கொடுத்து இருக்கும் 15 GB இடத்தில் இது கணக்காகாது.

கூகுள் கணக்கு வைத்து இருக்கும் அனைவரும் 15 GB அளவுத் தகவல்களை இலவசமாகச் சேமிக்கலாம். இது Unified என்ற ஒருங்கிணைக்கப்பட்ட வசதி. அதாவது, உங்கள் ஜிமெயில், ஃபோட்டோஸ், கூகுள் ட்ரைவ் அனைத்தும் உள்ளடக்கியது.

நீங்கள் ஜிமெயிலில் மட்டுமே கூட 15 GB அளவுத் தகவல்களை வைத்துக் கொள்ளலாம் அல்லது கூகுளின் அனைத்துச் சேவைகளிலும் சேர்த்து 15 GB வைத்துக் கொள்ளலாம்.

இது நம்முடைய விருப்பம்.

லட்சக்கணக்கான நிழற்படங்களை நீங்கள் தரவேற்றம் செய்தாலும், இவை உங்களுடைய ஜிமெயில் கணக்கின் 15 GB அளவில் வராது.

என்னய்யா சொல்றீங்க?! ன்னு கேட்பவர் என்றால்.. இக்கட்டுரை உங்களுக்குத் தான்.

https://photos.google.com/

கூகுள் ஃபோட்டோஸ் இலவச வசதிகளை எப்படி நாம் பெறலாம் என்று பார்ப்போம்.

High quality (free unlimited storage)

கூகுள் ஃபோட்டோஸ் தளத்தில் Settings பகுதியில் சென்று High quality (free unlimited storage) என்ற வசதியைத் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வசதி தேர்வு செய்யப்பட்டு இருந்தால், அதுவே 16 MegaPixel அளவுக்கு மேல் இருக்கும் படத்தின் அளவை 16 Mega Pixel க்குள் தானியங்கியாகச் சுருக்கி தரவேற்றம் செய்து விடும்.

16 MegaPixel என்பது போதுமான தரம்.

Original தேர்வு செய்தால், உங்கள் நிழற்படத்தின் முழு அளவும் (16 MegaPixel க்கு மேல் உள்ளவை) தரவேற்றம் ஆகும் மற்றும் உங்களுடைய 15 GB கணக்கில் வரும்.

பெரும்பாலும் நிழற்படத்தில் ஆர்வம் உள்ளவர்கள், நிழற்படத்தின் தரம் கொஞ்சம் கூடக் குறையக் கூடாது என்று நினைப்பவர்கள் மட்டுமே பயன்படுத்துவார்கள்.

கூகுள் ஃபோட்டோஸ் திறன்பேசி செயலி (Google Photos App)

தற்போது WhatsApp வந்த பிறகு தாறுமாறாக நமக்கு நிழற்படங்கள் வருகின்றன.

அதில் எது முக்கியம் எது தேவையில்லை என்று பிரித்துத் தரவேற்றம் செய்யலாம் என்று நினைப்போம். பின்னர் எக்கச்சக்கமாக வந்த பிறகு தேர்வு செய்ய முடியாமல் கடுப்பாகி அனைத்தையும் நீக்கி விடுவோம்.

ஆனால், திறன்பேசியில் கூகுள் ஃபோட்டோஸ் செயலியை நிறுவிவிட்டால், நிழற்படங்களைப் பற்றிய கவலையை விட்டு விடலாம்.

இதற்கும் செயலியின் settings பகுதியில் High quality (free unlimited storage) என்று தேர்வு செய்ய வேண்டும்.

இதுவே அனைத்தையும் உங்கள் கூகுள் கணக்கு ஃபோட்டோஸில் சேமித்து விடும். எனவே, முக்கியமான நிழற்படத்தைச் சேமிக்கத் தவறிவிட்டோமேன்னு வருந்தத் தேவையில்லை.

இதைச் சேமிக்க WiFi மட்டுமே பயன்படுத்த வேண்டுமா? அல்லது  Data வையும் பயன்படுத்தலாமா? என்பதை நாம் தேர்வு செய்து கொள்ளலாம்.

நிழற்படம் தேவையில்லை என்றால், கூகுள் ஃபோட்டோஸ் தளத்தில் சென்று நீக்கிக் கொள்ளலாம்.

திறன்பேசியில் இடத்தைச் சேமிக்க

சிலர் குறைந்த அளவு நினைவகத்தை வைத்து இருப்பார்கள். இதனால் கொஞ்ச நாள் ஆனவுடன் இடம் நிரம்பி விட்டது.

எனவே, தேவையற்ற கோப்புகளை நீக்குங்கள் என்று எச்சரிக்கை வரும்.

கூகுள் ஃபோட்டோஸ் செயலியில் Free Up Space என்பதை க்ளிக் செய்தால், அதுவே சேமிக்காத நிழற்படங்களைத் தவிர்த்து ஏற்கனவே சேமித்து திறன்பேசி நினைவகத்திலும் இருக்கும் நிழற்படங்களை நீக்கி விடும்.

எதைச் சேமித்தோம் சேமிக்கவில்லை என்ற குழப்பமே இருக்காது. நிழற்படங்களைக் கவனக்குறைவாக இழக்க வேண்டியதும் இருக்காது.

நிழற்படங்களை மட்டுமல்ல, 15 நிமிட காணொளிகளையும் இலவசமாகச் சேமிக்க முடியும். தற்போது WhatsApp ல் நிழற்படங்களுக்கு இணையாகச் சிறு காணொளிகளும் அதிகளவில் பகிரப்படுவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பிடத் தக்க சில வசதிகள்

நமக்குத் தெரிந்தவருக்கு ஒரு நிழற்படத்தைப் பகிர விரும்பினால், மின்னஞ்சல் முகவரி கொடுத்து எளிதாகச் செய்ய முடியும்.

ஒரு Album ல் நீங்கள் அதிகபட்சமாக 20,000 நிழற்படங்களைச் சேமிக்கலாம்.

Album தேதியின் அடிப்படையில் வழக்கமாக வரிசைப்படுத்தப்பட்டு இருக்கும்.

பழைய நிழற்படங்களைத் தற்போது தரவேற்றம் செய்யும் போது தற்போதைய தேதியில் காட்டுவதால், Album வரிசைப்படி இருக்காது.

இதற்கு நாம் நிழற்படத்தின் தேதியை நம் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றிக் கொண்டால், வரிசை சரியாகி விடும்.

முன்பு ஒவ்வொரு படமாக இதைச் செய்ய வேண்டியது ரொம்பக் கடினமாக இருந்தது.

தற்போது மொத்த Album யும் ஒரே சமயத்தில் தேதியை மாற்றும் வசதியைக் கூகுள் தந்து இருக்கிறது. எனக்கு இது மிக மிகத் தேவையான சேவை.

முதலில் Album Cover வைக்க முடியாது, தற்போது திறன்பேசியிலும் வைக்கும் படி வசதியைக் கொண்டு வந்து விட்டது.

கூகுள் ஃபோட்டோஸ் வசதியை நிழற்படங்களுக்கு மட்டுமே இல்லாமல், நமது சான்றிதழ்கள், கடவுச்சீட்டு (Passport), ஆதார், PAN அட்டை மற்றும் பல்வேறு தகவல்களைச் சேமிக்கப் (Scan செய்து) பயன்படுத்தலாம்.

இதன் மூலம் அவசரமாகத் தேவைப்படும் நேரத்தில் எளிதாக இங்கே இருந்து எடுத்துக் கொள்ளலாம். அனைவர் கையிலும் பெரும்பாலும் திறன்பேசி இருப்பதால், மிக எளிது.

Read: சந்தையைக் கலக்கும் கூகுள் திறன்பேசி “Pixel”

PhotoScan

கூகுள் தற்போது PhotoScan என்ற அசத்தலான சேவையை அறிமுகம் செய்து இருக்கிறது.

இதனுடைய பயன் என்னவென்றால், உங்களுடைய சிதைந்த, தரம் குறைந்த பழைய நிழற்படங்களை இதன் மூலம் மேம்படுத்தலாம்.

இதைச் செய்யும் போது தரமான நிழற்பட கருவியுள்ள திறன்பேசி பயன்படுத்துங்கள். அப்போது தான் தரமான படமாகக் கிடைக்கும். நான் இதற்காகத் தாமதித்து வருகிறேன்.

என் வீட்டில் நூற்றுக்கணக்கான கருப்பு வெள்ளை நிழற்படங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் இந்த வசதியின் மூலம் மாற்றிச் சேமிக்கப்போகிறேன்.

கூகுள் தரும் இலவச சேவைகளுக்கு அளவே இல்லை. நம் தகவல்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பணம் கொடுத்தால் கூடக் கூகுள் போல எவரும் சேவையைக் கொடுக்க முடியாது.

நன்றி கூகுள் 🙂 .

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

8 COMMENTS

 1. எனக்கு இது வரையிலும் இந்த போட்டோ ஸ்கேன் தெரியவில்லை. இது போன்ற ஒன்றைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். 64 ஜிபி அளவிற்கு புகைப்படங்கள் உள்ளது. நீங்க சொன்ன மாதிரி கூகுள் போட்டோஸ் அப்புறம் பிகாசோ போன்ற அனைத்தும் தாண்டிவிட்டது. ஆனால் கூகுள் சின்கரைனஸ் கேட்டு தொந்தரவு செய்கின்றதே. ஒகே தட்டினால் மின் அஞ்சல் அனைத்தும் அலைபேசியில் வந்து (கூகுள் கணக்கில் உள்ள) உட்கார்ந்து விடுகின்றது. மின் அஞ்சல் இல்லாமல் அதாவது நமது அலைபேசி எண்களுடன் வந்து சேராமல் இருக்க வழி உண்டா?

 2. மிக்க நன்றி கிரி, photo Scan – செயலி அற்புதமாகச் செயல்படுகின்றது, இதற்கு முன்பு மொபைல் மூலம் முயற்சி செய்துள்ளேன் ஆனால் அந்தப் புகைப்படங்களை சரியாக எடுக்க முடியவில்லை,ஆனால் இந்தச் செயலியை பயன்படுத்தி எடுக்கும் போது எளிமையாக உள்ளது புகைப்படத்தின் முனைகளை அதுவாகவே சரி செய்து ஒழுங்குபடுத்திச் சிறப்பாக எடுக்க உதவுகின்றது

 3. The expected post… Photo scan is new to me.. thanks for sharing.

  A small correction.. it’s not Picasso
  It’s Picasa.

  By the by its my first comment but I’m a quite audience of your blog since long time ;-);-)

 4. இந்த எல்லையற்ற சேமிப்பிற்காக பிக்ஸல் வாங்கணும்னு ஆசை பட்டேன். ஆனா இப்படி ஒரு விசயம் இருப்பது இப்ப தான் தெரியும் .சூப்பர் நன்றி அண்ணா.

 5. நன்றி நண்பரே எனக்கு இந்த பதிவு உதவியாக இருந்தது

 6. இதுவரை கேட்டறியாத தகவல்கள், பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. குறிப்பாக PHOTO SCAN நிச்சயம் பயன்அளிக்கும் ஒன்று.

 7. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @ஜோதிஜி நாம் பேசியபடி மின்னஞ்சல் கூகுள் கணக்குடன் இணைந்து வருவது இதைத் தவிர்க்க முடியாது.

  ஆனால், நீங்கள் கூறுவது போல இது எந்த விதத்திலும் உங்களைப் பாதிக்காது. இது யார் என்ற அடையாளத்தை கொடுக்கவே உதவுகிறது.

  மற்றபடி யாரையாவது அழைக்க பெயர் மட்டுமே வரும் மின்னஞ்சல்கள் வராது.

  @Sam It might be auto correct issue. Will update it.

  BTW Silent readers are coming to comment only for point out mistake! Don’t know why 🙂

  • BTW Silent readers are coming to comment only for point out mistake! Don’t know why //

   Because we don’t want even small mistake though it is autocorrect, in giri’s post… It should be very perfect as usual…??
   Cheers

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here