சசிகலாவும் பொதுச் செயலாளர் & முதல்வர் பதவியும்!

5
சசிகலாவும் பொதுச் செயலாளர்

சிகலா முதல்வராகப் போகிறார் என்று கூறப்படுகிறது, அது வழக்குகளால் தற்போது குழப்ப நிலையில் உள்ளது. இவர் எப்படி இந்த நிலைக்கு வந்தார்? என்பதைச் சாமானியனின் எண்ணங்களில் எழுதியதே இக்கட்டுரை. Image Credit

“ஜெ” உடன் சசிகலா 25 வருடங்களுக்கு மேலாக இணைந்து இருந்தது, போயஸ் தோட்டத்தில் அவருக்கென்று ஒரு பயம் கலந்த மரியாதையைக் கொடுத்து விட்டது.

இதை முக்கியமானவரு(“ஜெ”)க்கு நெருக்கமானவர் என்ற பயம் என்று எடுத்துக்கொள்ளலாம். Image Credit – WhatsApp

உதாரணத்துக்குக் கலெக்டர் அலுவலகம் சென்றால், அங்கே முதலில் உதவியாளர் / பியூன் கிட்ட தான் தகவல்கள் கேட்போம்.

அவர்களும் ஏகப்பட்ட பிகு செய்து கொண்டு போனால் போகிறது என்று!! வெட்டியவுடன் நமக்குக் கொஞ்சம் கொடுப்பார்கள்.

வெளியே வந்து கண்டபடி திட்டுவோம் என்றாலும், அவர்களை முறைத்துக்கொண்டால் நம்ம பிரச்சனையில் விளையாடி விட்டால் என்ன செய்வது என்று நேரில் பார்க்கும் போது பம்மி கொண்டு இருப்போம்.

இதே நிலை தான் சசிகலாவும்.

“ஜெ” சசி நட்பு

சசிகலா 25 வருடங்களுக்கு மேலாக “ஜெ” உடன் இருந்தார், அதோடு அவருடைய மன்னார் குடியை சேர்ந்தவர்கள் ஆளுமை அதிகாரம் என்று செய்திகள் உண்டு.

எனவே, அங்கே செல்லும் அதிமுகவினர் சசிகலாவை பகைத்துக்கொண்டால் நம்மைப் பற்றி ஏதாவது போட்டுக்கொடுத்து விடுவாரோ அதனால், நம் அரசியல் வாழ்க்கைக்குப் பிரச்சனை வருமோ என்று அஞ்சி இருப்பார்கள்.

இது ஒரு இயல்பான நிகழ்வு தான்.

“ஜெ” எப்போதுமே “நான்” “என்னுடைய அரசு” என்று இருந்து தன் கீழ் உள்ளவர்களையும் மிரட்டி ஒரு பயத்திலேயே வைத்து இருந்தார்.

எதிர்த்துப் பேசினால், கட்சியை விட்டு தூக்கப்படுவோம் என்று உணர்ந்ததாலும் “ஜெ” வின் அதிரடி தெரிந்தாலும் யாரும் எதிர்க்கவில்லை.

இந்த மனநிலை தொடர்ச்சியாகப் பல வருடங்கள் தொடர்ந்ததால், அதிமுகவினரும் அனைவரும் விமர்சிப்பது போல அடிமை எண்ணத்துக்கு வந்து விட்டனர்.

வளைந்து நின்றாலே பதவி, காலில் விழுந்தாலே அதிகாரம் என்ற நிலையாகி அதுவே அதிமுக என்றானது. சில விதிவிலக்குகளும் உண்டு.

இவர்களும் பதவி இருந்தால் போதும், பதவி கிடைக்கும் என்றால் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்து அனைத்துக்கும் தயாராகி மானம் ரோஷத்தை முற்றிலும் விட்டுக்கொடுக்கத் தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் “ஜெ” காலமானார்.

சாதகமான இரண்டு காரணங்கள் 

இதில் சசிகலாவுக்கு இருந்த இரண்டு சாதகமான காரணங்கள் (தமிழக மக்களுக்குப் பாதகமான இரண்டு காரணங்கள்).

போயஸ் தோட்ட வீடு & ஆட்சி முடிய 4 1/2 வருடங்கள் இருந்தது.

போயஸ் தோட்ட வீடு

போயஸ் தோட்ட வீடு “ஜெ” இருந்தவரை ஒரு சிங்க குகை போல இருந்து, போயஸ் தோட்டம் என்றாலே ஒரு கெத்து என்றாகி விட்டது.

இது “ஜெ” மறைந்த பிறகு சசிக்கும் முன்பு இருந்த பயம் கலந்த ஒரு மரியாதையை தற்போது கொடுத்து விட்டது.

4 1/2 வருடங்கள்

“ஜெ” இறந்த பிறகு 5 / 6 மாதங்களில் தேர்தல் வருகிறது என்றால், தற்போது நிலையே மாறி இருக்கும். இது தான் உண்மை.

சின்னம்மா என்று கூவிட்டு இருப்பவங்க வேறு முகத்தை நாம் கண்டு இருப்போம்.

தற்போது பிரச்சனை செய்தால், நம் பதவி போய் விடும் நாலரை வருடங்கள் சம்பாதிப்பது நடவாத காரியம் என்ற நிலை எவரையும் எதிர்க்க துணிய விடவில்லை.

இதன் காரணமாக, அனைவரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்த “ஜெ” மீதான மரியாதை கூட அவர் இறப்புக்குப் பின்னர் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கும்படி அதிமுகவினரிடம் காணாமல் போனது.

ஆனால், தொண்டர்களிடம் அதே அன்பு இருந்தது, இருக்கிறது.

அமைச்சர்கள் MLA போன்ற அதிகாரத்தில் இருப்பவர்கள் மட்டுமே பதவிக்காக கீழ்த்தரமாக நடந்து கொண்டார்கள்.

அம்மாவா! யார் அது?

பதவியில் உள்ளவர்கள், பதவி தேவைப்படுபவர்கள் உடனே “ஜெ” வை மறந்து சசியே சரணம் என்றானார்கள்.

ஏற்கனவே, சசிகலாவிடம் பயந்து கொண்டு இருந்ததால், அதையே தொடருவது அதிமுகவினருக்கு சிக்கலாக  இல்லை ஆனால், தற்போது தான் இவற்றையெல்லாம் வெளிப்படையாகப் பார்த்த பொதுமக்களுக்கு அருவெறுப்பானது.

இப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் வளர்மதி. “ஜெ” இறப்புக்குப் பின் சசிகூடவே இருந்து தற்போது பதவியும் வாங்கி விட்டார்.

இவர் தான் “ஜெ” சிறையில் இருந்த போது ஒப்பாரி வைத்து பதவி பிரமாணம் எடுத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

“ஜெ” சிறையில் இருந்த போது குமுறிக் குமுறி அழுதவர்கள் பின் எந்தக் கவலையும் முகத்தில் காட்டாமல் இருந்தார்கள்.

சொல்லப்போனால் “ஜெ” இறந்த பிறகு அதன் பாதிப்பு இரண்டு நாள் கூட இல்லை என்பது கசப்பான உண்மை.

இதை அவரின் அரசியல் எதிரிகள் கூட எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள்.

எனவே, பதவியைக் காப்பாற்ற திரும்ப அடிமையாகும் முடிவை தொடர்ந்தார்கள்.

“ஜெ” மறைவுக்குப் பிறகாவது அதிமுகவினர் தலை நிமிர்ந்து இருப்பார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்குச் திரும்ப வளைந்தே இருப்பார்கள், காலில் விழுவார்கள், ஹெலிகாப்டருக்கு வணக்கம் போடுவார்கள் என்பது செம்ம அடியானது.

பன்னீர் செல்வம்

பன்னீர் செல்வம் பாஜக நெருக்கடி காரணமாக முதல்வரானதாகக் கூறப்பட்டது. இல்லையென்றால், அப்போதே சசி முதல்வர் ஆகியிருப்பார்.

அதிமுக மற்ற அமைச்சர்கள் எல்லாம் பன்னீர் செல்வம் அவர்களை எதிர்க்கவும் சசியை ஆதரிக்கவும் ஒரே ஒரு காரணம் தான்.

நம்ம கூட இருப்பவர் முதலமைச்சர் ஆகக் கூடாது ஆனால், வேறு நபர் ஆகலாம் என்பது. வேறு நபர் சந்தேகம் இல்லாமல் சசி தான்.

இது எப்படின்னா நம் குழுவில் இருப்பவர் மேலாளர் ஆகக் கூடாது ஆனால், தகுதியில்லாத புதியதாக இன்னொருவர் மேலாளராக வந்தால் கூட சரி என்ற சராசரி மனநிலை.

எனவே, பன்னீர் செல்வம் அவர்களை விரட்டி எப்படியாவது சசியைக் கொண்டு வர வேண்டும் என்று தீர்மானமாக இருந்தார்கள். இது சசிக்கும் வசதியாகப் போனது.

பன்னீர் செல்வம் அவர்கள் முதலமைச்சராகப் பதவி ஏற்ற பிறகு, முன்பு போலப் பொம்மை முதலமைச்சராக இல்லாமல் வேகமாக நடவடிக்கைகளை எடுத்தார்.

இதனால், இவருக்கு மக்களிடையே ஓரளவு செல்வாக்கு உயர்ந்தது.

ஏற்கனவே, பாஜக நெருக்கடியால் அப்போது முதலமைச்சர் ஆக முடியவில்லை என்பதால், இந்த முறையும் காலத் தாமதம் செய்தால் பிரச்சனையாகி விடும் என்று பன்னீர் செல்வம் அவர்களுக்குச் சுபம் போட்டு விட்டார்கள்.

இது தான் சசி பதவிகளைப் பெறும் முறை குறித்து எனக்குத் தோன்றிய எண்ணங்கள் 🙂 .

கொள்ளைக்காரர்கள்

மணல் கொள்ளைக்காரர்கள், மிடாஸ் நிறுவனத்தினர் மற்றும் இவையல்லாத பல கொள்ளைகளை அனைவருக்கும் தெரிந்தே நடத்தி வரும் சசி கும்பலிடமே தமிழக அதிகாரம் சென்று இருக்கிறது.

ஆறு மாதத்தில் இடைத்தேர்தலில் பணத்தை அள்ளி வீசப்போகிறார்கள் (சொத்துக்குவிப்பு வழக்கு காப்பாற்றுமா?!). பணத்தை வாங்கிக்கொண்டு வாக்களிப்பார்களா? தமிழ்நாடு மானத்தைக் காப்பார்களா?

பலர் சந்தேகமே இல்லாமல் சசி வெற்றி பெற்று விடுவார் என்று கூறுகிறார்கள்.

நினைத்தாலே… என்னமோ போங்க!

துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும்

எந்த ஒரு துன்பத்திலும் ஒரு நன்மை இருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.

ஜல்லிக்கட்டு எதிராகப் பீட்டா தடையைக் கொண்டு வந்து பிரச்னையை ஏற்படுத்தினாலும் இதன் மூலம் கிடைத்த பலன்கள் ஏராளம்.

நாட்டு மாடு, நாட்டு நாய், பெப்சி கோக், A2 பால் குறித்த விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

நாலைந்து இடங்களில் நடந்து கொண்டு இருந்த ஜல்லிக்கட்டு இனி தமிழகம் முழுக்க நடைபெறப் போகிறது. மாணவர்கள் பொதுமக்கள் போராட்டம் அரசியல்வாதிகளைப் பயமுறுத்தி இருக்கிறது.

நாட்டு மாடுகளின் விலை உயர்ந்துள்ளது, நாட்டு மாட்டுக்கான தேவை அதிகரித்துள்ளது.

இது போன்ற நேர்மறை செய்திகள் ஏராளம்.

அதே போல, சசி கும்பலால் தமிழ்நாடு நாசமாகப் போகிறது என்றாலும், இதனால் ஏதாவது நல்லது நடக்காமல் இருக்காது என்று நேர்மறையாக நினைப்போம்.

நம்பிக்கை தானே வாழ்க்கை!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. டியர் கிரி

  நான் இப்போது வரையிலும் இதை ஒரு உள்கட்சி விவகாரமாக பார்க்க வேண்டும்.

  ஒரு சர்வாதிகாரி ஆட்சி முடிவிற்கு வரும்போது அந்த இடத்தை மற்றொரு ஆள் தான் நிரப்பமுடியுமே தவிர வேறு வாழி கிடையாது.

 2. கிரி,

  நண்பர் பிரபாகரன் கூறுவது போல; இப்போது வரையிலும் இதை ஒரு உள்கட்சி விவகாரமாக பார்க்க வேண்டும்.

  கட்சி எம்.எல்.ஏக்களுக்குள் கலகக்குரல் ஏற்பட்டு 1988 போல சட்டசபையில் வேட்டி சட்டை கிழிக்கப்படும் பட்சத்தில் மத்திய அரசு தலையிடலாம்; அது நிகழாத பட்சத்தில் அதிமுக யாரை கை காட்டுகிறதோ அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வேண்டும். தவறும் பட்சத்தில் ஆளுநர் மண்டையில் கோர்ட் குட்ட நேரிடும்.

  பின்னால் இருந்தே இயங்கி வந்த அல்லது இயக்கி வந்த சசிகலா முன்னால் வருவது நல்லதே; இனி அவரது செயலுக்கு “அக்கவுண்டபிளிட்டி” உண்டு. ஏற்பதும் நிராகரிப்பதும் இனி அவர் செயல்படும் விதத்தை பொறுத்தது.

  ==============

  70/80 புது எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும் முதலீடு செய்துள்ளார்கள்.

  பழையவர்களுக்கு சேர்த்ததை காப்பதும், காத்ததை பெருக்குவதும் பெரும் கவலை.

  இலை நிழலின் மகிமை எல்லோரையும்விட அதிமுகவினருக்கு நன்றாக தெரியும், இந்த தேர்தலில் தோற்றாலும் அடுத்து ஜெயித்து விடலாம். அதை விடுத்து கட்சி மாறினால் அரசியல் அநாதையாகிவிடுவார்கள்.

  =============

  பெரும் பேரம் நடந்து கொண்டிருக்கும் என நினைக்கிறேன், பேரத்தின் முடிவில் குமாரசாமி வாரிசு உருவாகலாம் என நினைக்கிறேன்.

  இது நடக்காமல் சசிகலாவை ஜெயிலில் தள்ளினால், பிஜேபி அரசியல் ஆதாயம் அடையுதோ இல்லையோ, திமுக பெரும் லாபத்தை நோகாமல் அடையும்.

 3. //70/80 புது எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும் முதலீடு செய்துள்ளார்கள்.//

  நாலரை ஆண்டுகள் தேவையில்லை; முதலீட்டை விட பல மடங்கு இலாபம் பார்க்க செம்ம வாய்ப்பு கிடைச்சிருக்கு அவங்களுக்கு.

  ============

  நேற்று இரவு செம த்ரில்லர் படம் பார்த்த ஃபீலிங்.

  ராஜினாமா கடிதம் ஏற்க்கப்பட்ட நிலையில்; என்ன பேசுவார் என்று செம சஸ்பென்ஸ் இருந்தது.

  இன்னும் ஒரு வாரம் ரொம்ப சுவாரஸியமா இருக்கும்.

 4. அரசாங்கத்துல ஒரு ஆபீஸ் பாய் வேலை கிடைப்பது குதிரை கொம்பு.. ஆனால் தற்போது நிலவரத்தை பார்க்கும் போது ஒன்றும் கூறுவதற்கு இல்லை… ஒன்றுமே புரியவில்லை கிரி… இதுவும் கடந்து போகும். பகிர்வுக்கு நன்றி.

 5. @பிரபாகரன் உள்கட்சி விவகாரம் என்றாலும் மக்கள் முதல்வராக தேர்ந்தெடுத்தது இவரை அல்லவே!

  @காத்தவராயன் “70/80 புது எம்.எல்.ஏக்கள் அதிமுகவில் இருக்கிறார்கள் என நினைக்கிறேன். பெரும் முதலீடு செய்துள்ளார்கள்.”

  இது உண்மை.

  @யாசின் கார்ப்பரேசன் சாதாரண வேலைக்கு 3 லட்சம் லஞ்சம் என்று கூறினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here