கோக் பெப்சிக்கு உள்ளூர் பானங்கள் மாற்றாகுமா?!

5
கோக் பெப்சிக்கு உள்ளூர் பானங்கள் மாற்றாகுமா?!

மாணவர்கள் போராட்டத்தால் விளைந்த நன்மைகளுள் ஒன்று பெப்சி கோக் போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பானங்களுக்கான எதிர்ப்பு. Image Credit – Trak.in

தற்போது இதற்கான ஆதரவு விரிவடைந்து வருகிறது. வணிகர் சங்கம் மார்ச் 1 முதல் இதன் விற்பனையைத் தமிழகத்தில் நிறுத்தப்போவதாக அறிவித்துள்ளது.

இதற்கு மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “இது வணிகர்கள் எடுத்த முடிவு எனவே இதற்குத் தடை விதிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

கல்வி நிறுவனங்கள் பல ஆதரவு தெரிவித்துத் தங்கள் கல்வி வளாகத்தில் இவ்வகைப் பானங்களைத் தடை செய்துள்ளன. வரவேற்க வேண்டிய செயல்.

தடையை எவ்வளவு நாள் வணிகர்கள் பின்பற்றுவார்கள் என்ற சந்தேகம் எனக்குள்ளது. நாளையே வேறு காரணம் கூறி தடையைத் திரும்பப் பெற்றால் வியப்படைய எதுவுமில்லை.

மக்கள் தான் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.

உள்ளூர் பானங்கள் மாற்றாகுமா?

சிலர் பெப்சி கோக் போன்ற அந்நிய பானங்களுக்கு மாற்றாக உள்ளூர் “காளிமார்க்” தயாரிப்பான பவண்டோ போன்ற பானங்களைக் கூறி வருகிறார்கள்.

உள்ளூர் தயாரிப்பை வரவேற்க வேண்டியது நல்லது தான் அதற்காக தங்க ஊசி என்பதால் எடுத்துக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?!

எதற்கு இவ்வகைப் பானங்களுக்கு எதிர்ப்பு?

உடலுக்குத் தீங்கு விளைவிக்கிறது.

நம் மாநிலத்தின் நீராதாரத்தை அழித்து விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்துகிறார்கள்.

இரண்டுமே எந்த மிகைப்படுத்தலும் இல்லாத உண்மையான காரணங்கள்.

பவண்டோ போன்ற பானங்கள் தற்போது பெப்சி கோக் போன்ற தயாரிப்புகளோடு ஒப்பிடும் போது பிரபலமில்லை. எனவே, இதன் தாக்கம் பெரியளவில் இல்லை.

நாளை பெப்சி கோக் மாற்றாக வரும் போது இவர்களும் பெப்சி கோக் போலவே தான் தண்ணீரை எடுக்கப்போகிறார்கள். இதுவும் காற்றடைக்கப்பட்ட பானமே! பெப்சி கோக் அளவுக்கு இல்லையென்றாலும் இதுவும் உடலுக்கு ஏற்றதல்ல.

இன்று குறைந்த அளவில் தண்ணீரை எடுப்பவர்கள் விற்பனை அதிகரித்தால், அதிகளவில் தண்ணீரை உறிஞ்சப்போகிறார்கள் இதில் பெப்சி கோக் என்ன? பவண்டோ என்ன? எல்லோருமே ஒன்று தானே!

உள்ளூர் தயாரிப்பு என்பதாலே இதை ஆதரிப்பது எந்த வகையில் நியாயம்?

இதுவும் நீர் ஆதாரத்தை அழிப்பது தானே! இவர்கள் எந்த இடத்தில் நிறுவனத்தை வைத்துள்ளார்களோ அங்கே நிலத்தடி நீர் மட்டம் அதல பாதாளத்தில் சென்று விடும்.

விவாசாயத்தை ஊக்குவிக்கும் தின் பண்டங்களை, பானங்களை ஊக்குவிக்கலாமே!

உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அதே சமயத்தில் நீர் ஆதாரத்தை அழிக்காமல் விவசாயத்துக்கு உயிர் கொடுக்கக் கூடிய இளநீர், நன்னாரி சர்பத், பதனீர் போன்றவற்றை ஊக்குவிக்கலாமே!

இவை விவசாயிகளுக்கும் உதவி செய்யும், சுற்று சூழலும் கெடாது. இதன் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது குறைக்கப்பட்டு விவசாயம் தொடர்பாக வளர்ச்சி ஏற்படும்.

காளிமார்க் நிறுவனம் இது சார்ந்த வழிகளில் சிந்திப்பது நல்லது. ஏனென்றால், மாற்றாகச் சிந்தித்து அதை நோக்கி பயணிப்பது தனக்கு ஏற்படும் எதிர்கால இழப்புகளைக் குறைக்கும்.

இந்த வருடம் சில அரசுப் பள்ளிகளில் வழக்கமாகத் தரும் மிட்டாய்களுக்குப் பதிலாகக் கடலை உருண்டை, எள்ளுருண்டை போன்றவை தரப்பட்டன என்பது நல்ல மாற்றம்.

இவற்றை உண்பது இழிவாகவும் வெளிநாட்டு சாக்லேட்டுகளை உண்பது பெருமையாகவும் நினைக்கும் மன நிலை தற்போதைய பெற்றோர்களிடையேயும் குழந்தைகளுடையேயும் உள்ளது.

எனவே, இந்த மாற்றங்கள் உடனே சாத்தியமல்ல. மாற்றங்கள் நடைபெற காலங்கள் எடுக்கும்.

தண்ணீரின் முக்கியத்துவம் 

இது போன்ற உடலுக்குத் தீங்கு விளைவிக்காத உணவுப் பண்டங்களையும், விவசாயத்தை வளர்ச்சியில் கொண்டு செல்ல உதவும் பானங்களையும் ஊக்குவிப்பது நம் உடலுக்கும், விவசாயத்துக்கும் நல்லது.

பெப்சி கோக் தடை மட்டும் போதாது அந்நிறுவனங்கள் தமிழகத்தில் தண்ணீர் எடுப்பதற்கு அரசும் அனுமதிக்கக் கூடாது.

தண்ணீரின் முக்கியத்துவத்தை இன்னும் கூட உணராதவர்கள் அரசு உட்பட, நிச்சயம் இந்த வருடம் உணர்வார்கள். காரணம், தமிழகத்தில் இந்த வருடம் தண்ணீர் பிரச்சனை தலை விரித்து ஆடப்போகிறது.

இவ்வளவு நாட்களாக தூர் வாராமல் (அரசால் கவனிக்கப்படாமல்) இருந்த ஆறு, ஏரி, குளங்கள் வறட்சி நெருக்கடி காரணமாக கவனிக்கப்படும். துன்பத்திலும் நல்லது என்று நேர்மறையாக நினைத்துக் கொள்ளுங்கள்.

தங்க ஊசி என்பதால், கண்ணில் குத்திக் கொள்ளாதீர்கள். நீர் ஆதாரத்தை அழிக்கும் எந்தச் செயலுக்கும் துணை நிற்காதீர்கள்.

இது போன்ற பானங்களைக் குடிக்காமல் இருக்க முடியும் ஆனால், தண்ணீரை குடிக்காமல் இருக்க முடியுமா?! சிந்தியுங்கள்.

கொசுறு

சிலர், கருத்துகள் வெளியாவதில்லை என்று கூறியிருக்கிறீர்கள்.

இப்பிரச்சனை உண்மை தான். நீங்கள் வெளியிட்ட கருத்து உடனே வெளியாகவில்லை என்றாலும் என்னால் தாமதமாக நிச்சயமாக  வெளியிடப்படும்.

இந்தத் தொழிநுட்ப பிரச்சனையைச் சரி செய்யச் செலவு ஆகும் எனவே, பின்னர் இதைச் சரி செய்ய முயற்சிக்கிறேன். சிரமங்களுக்கு மன்னிக்கவும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. //நாளையே வேறு காரணம் கூறி தடையை திரும்பப் பெற்றால் வியப்படைய எதுவுமில்லை. மக்கள் தான் தொடர்ந்து புறக்கணிக்க வேண்டும்.//

    முற்றிலும் உண்மை, மக்கள் விரும்புவதை காரணம் காட்டி தான் உணவு முதல் திரைப்படம் வரை அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படுகிறது.

  2. ////////////////////ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது நான் ஃபேஸ் புக்கில் இட்ட பதிவு////////////

    சினிமா… சினிமா என்று ஒன்றுக்கும் உதவாத பல விஷயங்களை அதிலிருந்து கற்றுக்கொண்டு (எல்லோரும் அல்ல) பலவற்றை இழந்தும், நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள் பற்றி தெரியாமலே வாழ்க்கையை தொலைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

    மௌனகுரு, விசாரணை – இந்த இரண்டு திரைப்படங்கள் ஒரு சோறு பதம். ஏன் என்றால் எப்படிப்பட்ட படங்களையும் சென்சார் போர்டு மூலம் முடக்கும் அதிகாரம் அரசுக்கு இருந்தாலும் இந்த படங்கள் அதிகாரத்தின் இருண்ட முகத்தை பற்றி பேசினாலும் மீடியாக்கள் மூலம் கவனம் பெற வைத்ததை எதேச்சையான நிகழ்வாக நடந்ததாக என் மனம் நம்ப மறுக்கிறது. அந்த படங்கள் கூட அதிகாரம் என்றால் இதுதான் என்று பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகத்தான் எனக்கு தெரிந்தன. சுதந்திர இந்தியாவை பொறுத்தவரை பல்வேறு போராட்டங்களில் இறுதியில் வென்றது போலீசாரின் லத்திகளும் அரசு நிர்வாகமும்தான். நியாயத்தை பற்றி பேசினால் கூட தேசப்பாதுகாப்பு என்ற ஒற்றை வார்த்தையில் எல்லாவற்றையில் அடக்கி வாலை சுருட்ட வைத்து விடுவார்கள்.

    நம்ம நாட்டுல 130 கோடி பேர் இருக்கானுங்க… ஒவ்வொருத்தனையும் திருத்துறது என் வேலை இல்ல… என்னை நான் திருத்திக்கிறேன்… ஆல்ரெடி எப்பவோ பன்னாட்டு கூல் டிரிங்ஸ் விஷயங்கள்ல திருந்தியாச்சு. ஆண்டு கூட நினைவில் இல்லை. ஏன் என்றால் 1995ல் இருந்து 2016ஆம் ஆண்டுக்குள் இரண்டு கை விரல்களால் எண்ணக்கூடிய முறைகள் அயல் நாட்டு குளிர்பானம் அருந்தியிருந்தால் அதிகம். அதுவும் விருந்தோம்பல் செய்பவரின் மனம் புண்படக்கூடாது என்பதற்காக. அவற்றை நான் வேண்டாம் என்று கம்பீரமாக மறுக்கத்தொடங்கியே பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அதை மீறி கட்டாயப்படுத்துபவர்களிடம் Bovento மட்டும் கேட்டு வாங்கி அருந்தியதுண்டு.

    ஆண்டுக்கு ஒரு முறை அல்லது இரு முறை அம்மாவின் பிறந்த ஊர் செல்லும்போது பகல் பயணம் என்றால் சாப்பாடு எனக்கு சிக்கல் தரும் என்று Bovento அருந்துவதுண்டு. இரவு நேரப் பயணம் என்றால் வீட்டில் இருந்து கொண்டு செல்லும் தண்ணீர் பாட்டில் தவிர வேறு எதுவும் தேவைப்படுவதில்லை.

    மது, புகை, பாக்கு பழக்கம் பக்கமே சென்றதில்லை. (இதெல்லாம் இல்லாம என்ன …………த்துக்கு நீ உயிரோட இருக்க என்றும் சிலர் கேட்கக்கூடும்)

    மேலோட்டமாக பார்த்தால் இது சாதாரணமான ஒன்றாக தோன்றும். அப்படி ஒவ்வொரு மனிதனும் இருப்பது சாதாரணமான விஷயம் இல்லை.

    இதை மட்டுமல்ல…. அடிமைகள் தாங்கள் தொடர்ந்து அடிமையாக இருக்க வசதியாக புதிய தலைவனை வெளியில் இருந்து தேடுவார்களே தவிர தங்களில் ஒருவனை தலைமையாக ஏற்க மாட்டார்கள்….( இது உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும்.)

    இந்த விஷயத்தையும்

    சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்தில் கூறப்பட்ட ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள கூறிய சில விஷயங்களையும் நமக்கு மேலே இருப்பவர்கள் நன்றாக உள் வாங்கி செயல்படுத்தி வருகிறார்கள்.

    மக்கள் பொங்கி எழுந்து விட்டார்கள்… அப்படி இப்படி என்று கூறி உசுப்பேற்றி விடுவதை திருவாளர் பொதுஜனம் இனியாவது நம்பாமல் “எரிவதை பிடுங்கி விட்டால் கொதிப்பது தானாக அடங்கி விடும்…” என்பதை உணர்ந்தால் நல்லது.

  3. கொசுறு 2 க்கு நன்றியுடன்……….. 🙂

    மாணவர்கள் / இளைஞர்கள் போராட்டத்தின் போது மிக அபத்தமாக கேட்ட கோஷம் “பெப்ஸி கோலாவுக்கு பதில் உள்நாட்டு பானம்”.
    பேய்க்கு பயந்து பிசாசிடம் அடைக்கலம் போக எப்படி துணிகிறார்களோ ?

    // தங்க ஊசி என்பதால் எடுத்துக் கண்ணில் குத்திக் கொள்ள முடியுமா?//
    🙂 🙂 பிரச்சனையின் வீரியத்தை ஒரு வரி சொல்லிட்டீங்க கிரி.

    // உடலுக்குத் தீங்கு விளைவிக்காத அதே சமயத்தில் நீர் ஆதாரத்தை அழிக்காமல் விவசாயத்துக்கு உயிர் கொடுக்கக் கூடிய இளநீர், நன்னாரி சர்பத், பதனீர் போன்றவற்றை ஊக்குவிக்கலாமே!//

    நன்னாரி சர்பத்:
    ==============
    நன்னாரி சர்பத்……….
    நினைத்தாலே நா இனிக்கிறது.

    கோடை காலம் ஆரம்பித்துவிட்டால்; நானே ஒரு நன்னாரி பாட்டிலை வாங்கி 10லிட்டர் சர்பத்போட்டு 2.5 லிட்டர் மிரிண்டா பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்வதுண்டு .
    நன்னாரி பாட்டில் ரூ60 [ 2.5 லிட்டருக்கு ரூ15],
    10 எலுமிச்சை [2.5 லிட்டர் சர்பத் போட] ரூ 30 லிருந்து 50 வரை
    வெயில் காரணமாக சூடு பிடிப்பதை நன்னாரி சர்பத் பருகுவதன் மூலம் தவிர்க்கலாம்.

    இதில் என்ன பிரச்சனைன்னா……
    இந்த திருவேலையை செய்யும் போதெல்லாம் வீட்டில் எனக்கு அர்ச்சனைதான் விழும்.

    கடைகளில் வாங்கி அந்த கண்ணாடி க்ளாஸில் குடிப்பது தனி ருசிதான்.

    திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இன்னமும் நன்னாரி சர்பத் அதிகமாக பழக்கத்தில் உள்ளது.

    பதனீர்:
    ======
    பதினி எங்க பேச்சு வழக்கில்.

    இணையத்தில் பேராதரவு உள்ள பானம் என்றால் இதுதான். ஆனால் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதும் இதுதான்.

    சாலையோரம் கிடைக்கும் பதினியில் கலப்படம் அதிகம்.
    சுத்தமான பதினி கிடைப்பதற்கு பகீரத முயற்சி எடுக்க வேண்டியதுள்ளது.
    காரணம்;
    ஒரு லிட்டர் பதினி ரூ20/30
    ஒரு லிட்டர் கள் ரூ100

    எங்க ஊரில் மதுவிலக்கு போலீஸின் வேலை கள் இறக்குபவர்களை பிடிப்பதுதான். 🙂
    ==========
    பதனீர், இளநீர், நன்னாரி சர்பத் [லெமன் ஜூஸ்] ஆகியவற்றுடன் கரும்புச்சாறு, அனைத்து விதமான பழ ஜூஸ்களையும் ஊக்குவிக்கலாம்.
    =========

    மேலே நண்பர் ஒருவர் வெல்லம் பயன்பாடு பற்றி எழுதியிருந்தார்.[ அவர் கொடுத்த சுட்டிகளை படிக்கவில்லை]

    எங்கள் நிலத்தில் விளையும் கரும்பில் இருந்து வெல்லம் செய்கிறோம் என்பதால் சில விவரங்களை குறிப்பிட விரும்புகிறேன்.

    சீனிக்கு [சர்க்கரைக்கு] சரியான மாற்று வெல்லம் கிடையாது;
    ஆனால்;
    சீனியை விட சிறந்தது வெல்லம்,
    வெல்லத்தை விட சிறந்தது கருப்பட்டி.

    க்ளுக்கோஸ், சுக்ரோஸ், பிரக்டோஸ் இவற்றில் எதில் உள்ளது எது சிறந்து என்று தேடி படித்துக் கொள்ளவும், ஆனால் நான் கூறவருவது பாமரனின் பார்வையில்….

    கரும்பழுப்பு நிறத்தில் இருக்கும் கரும்புச்சாறு எப்படி வெள்ளை நிற சீனியாகிறது? மஞ்சள் நிற வெல்லமாகிறது? சீனி ஏன் வெள்ளை நிறமாகவே நீடிக்கிறது? வெல்லம் ஏன் சில நாட்களில்/வாரங்களில் கருப்பு நிறமாகிறது?

    கெமிக்கல்.

    சீனி தயாரிக்க என்ன என்ன கெமிக்கல் போடுகிறார்கள் என்று கூகுள் கூறும்.

    வெல்லத்தில் என்ன என்ன கெமிக்கல் போடுகிறார்கள் என்று நான் கூறுகிறேன்.
    1. சோடா உப்பு
    2. சுண்ணாம்பு
    3. மோனோ கால்சியம் பாஸ்பேட்
    4. சோடியம் ஹைட்ரோ சல்பேட் [ இதுதான் நிறம் நீக்கி]
    5. சஃபோலைட் [இது வாடிக்கையாளர் கைக்கு செல்லும் வரை வெல்லத்தின் மஞ்சள் நிற்த்தை தக்க வைக்கும்]

    சேம் சைடு கோல் போடுறேன்னு பாக்குறீங்களா? 🙂

    கருப்பு வெல்லத்தில் கெடுதல் குறைவு; பயன்படுத்தப்பட்ட கெமிக்கல் தனது வீரியத்தை பெரும்பாலும் இழந்து விடும்.ஆனால் நல்லா கலரா இருக்குற வெல்லத்தைத்தான் மக்கள் விரும்புகிறார்கள்.

    எங்கள் வீட்டு பயன்பாட்டிற்கு என கெமிக்கல் எதுவும் சேர்க்காமல் வெல்லத்தை செய்து கொடுக்கச் சொல்லி வைத்துக் கொள்ளுவோம். டீ, காபி, பால் உட்பட முடிந்தவரை சீனியின் உபயோகத்தை தவிர்த்து வருகிறோம்.

    மஞ்சள் வெல்லம் தயாரிப்பதை விட கருப்பு வெல்லம் செய்வதற்கு செலவு குறைவாகவே ஆகும். ஆனால் ஆர்கானிக் தயாரிப்பு என்ற பெயரில் பலமடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்கிறார்கள். இந்த நிலை மாறவேண்டும்.

    கருப்பட்டி அது தனிரகம்.

    சமீபகாலமாக வெல்லத்திலும் கருப்பட்டியிலும் தயாரிக்கும் போதே அதனுடன் சீனியை கலப்படம் செய்கிறார்கள் [நாங்க இல்லப்பா……]
    குறிப்பாக ஆந்திராவில் [அனஹாபள்ளி] தயாராகும் வெல்லத்தில் அளவுக்கதிகமாக சீனியும் கெமிக்கலும் கலக்கிறார்கள். இதை எப்படி கண்டு கொள்வதென்றால் ஆந்திரா வெல்லம் ஒரு கட்டி கிட்டத்தட்ட ஒரு கிலோ இருக்கும், பாலித்தீன் கவர் கொண்டு மூடியிருப்பார்கள். மஞ்சள் நிறம் மாறவே மாறாது.

    ஜொலிப்பதெல்லாம்
    சொக்கத்தங்கமல்ல

  4. இது போல பதிவுகளை படிக்கும் போது மனம் தானாகவே கணக்கிறது… பகிர்வுக்கு நன்றி கிரி. திரு சகாயம் பல ஆண்டுகளுக்கு முன்பே பெப்சிக்கு எதிராக போராடியதையம், அதற்காக அவர் கொண்ட சிரத்தையும் அதிகம்.

  5. @iKway தகவலுக்கு நன்றி. நானும் இக்கட்டுரையைப் படித்தேன்.

    @சோமேஸ்வரன் & சரவணன் நன்றி

    @காத்தவராயன் நீங்க சொன்ன பிறகு நன்னாரி சர்பத் குடிக்க தோன்றுகிறது 🙂 எங்க பகுதியில் இருக்கும் கடையில் எப்பவாது வாங்கி குடிப்பேன்.

    பதனீர் சுவை புதியதில் ஒரு மாதிரி இருக்கும்.. ஆனால், பழகி விட்டால் அசத்தலான சுவை.

    சீனில இவ்வளவு சீன் இருக்கா 🙂 கொஞ்சம் திகிலா தான் இருக்கு.. அவ்வளவு சீக்கிரம் இதை தவிர்க்க முடியும் என்று தோன்றவில்லை.

    @யாசின் பார்க்கிறேன் யாசின். முன்னரே கேள்விப் பட்டு இருக்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here