ஒரு நாய் தன் பல பிறவிகளைக் கடந்தும் தன் நினைவுகளை, சுவாசங்களை உடன் கொண்டு வருவதாக A Dog’s Purpose கதை. Image Credit
A Dog’s Purpose
இதில் முதல் கதையும் இறுதிக் கதையுமே படத்தின் முக்கியப் பகுதிகள்.
எனக்கு நாய் என்றால் அதீத விருப்பம். நாய் வளர்க்க முடியவில்லையே என்ற என்னுடைய ஏக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
எங்கே நாயைப் பார்த்தாலும், தெரு நாயாக இருந்தாலும் ஒரு அன்பு தோன்றும்.
அந்த அன்பு அனைத்து நாய்களிடமும் வந்து விடாது, நமக்கென்று ஒத்திசைவு இருக்கும், அப்படிப்பட்ட நாயின் மீது நமக்குப் பிரியம் இருக்கும்.
ஏன் என்ற காரணங்களுக்கு விடை கிடைக்காது, புரிந்து கொள்ளவும் முடியாது.
நாய்கள் திறமை.. அடேங்கப்பா.. !!
ஒவ்வொரு பகுதிகளிலும் வரும் நாய்கள் திறமை அடேங்கப்பா! என்னமா நடிக்கின்றன! நடிப்பில் செயற்கை என்று ஒரு சின்னப் பகுதியைக் கூடக் குறிப்பிட முடியாது. Police நாய் மட்டும் ஒரே ஒரு காட்சியில் பின்தங்கி இருக்கும்.
எப்படி நடிக்க வைக்கிறார்கள் என்று எப்போதும் எனக்கு வியப்பாக இருக்கும்.
நாயின் கண்கள் கூடப் பேசுகிறது! மனிதனைப் போல உணர்ச்சிகளை முகத்தில் அவ்வளவு அசத்தலாகக் காட்டுகிறது.
பாசமாக நாயுடன் இருப்பதை எளிதாகக் கண்டு பிடிக்க முடியும், ஒரு நாய் பிரியனாக. இதில் நடித்துள்ள பையன் என்னமா அதனுடன் விளையாடுகிறான்! பழகுகிறான்!!
இறுதியில் A Dog’s Purpose படம் சொல்ல வரும் கருத்து, நிறைவாக இருந்தது.
சென்னை அனுபவம்
நாங்கள் தோட்டத்தில் இருந்த போது ஏராளமான நாய்களை வளர்த்து இருக்கிறோம். அதில் சில என்றுமே மறக்க முடியாது.
ஏதாவது ஒரு நாய் சம்பவம், படம் நம்முடைய பழைய நினைவுகளை மீட்டுக்கொண்டு வரும்.
சென்னை வீட்டுப்பகுதியில் கருப்பு நாய்ச் சுற்றிக்கொண்டு இருந்தது. துவக்கத்தில் பிடிக்கவில்லை, பின்னர் அதன் குணம், “கெத்து” ரொம்பப் பிடித்து விட்டது.
அதனால், அதன் கூட ரொம்பப் பிரியமாக இருப்பேன். என் பசங்களும் அந்த நாய் கிட்ட ரொம்பப் பாசமாக இருப்பார்கள்.
என்னைக் கண்டால் என்னை வழியனுப்பிய பிறகே செல்லும்.
ஒரு நாள் நாயைக் காணவில்லை, பின்னர் இரண்டு நாட்கள் கழித்து ஒருவரிடம் கேட்ட போது “யாரோ அந்த நாயைத் தலையிலே அடித்துக் கொன்று விட்டார்கள்” என்றார் வருத்தத்துடன். திக்கென்று இருந்தது.
இன்று வரை அந்த நாயின் இழப்பை என்னால் தாங்கமுடியவில்லை. அவ்வப்போது நினைவுக்கு வந்து மனதை வருத்தமடையச் செய்துகொண்டே இருக்கிறது 🙁 .
நாயின் மீதான என்னுடைய பிரியம் என்பது அளவிட முடியாது.
இது தலைமுறைகள் பல கடந்தும் தொடர்ந்து வரும் பந்தம். எங்க கொள்ளு தாத்தா, தாத்தா, அப்பா, நான் தற்போது என்னுடைய பசங்க என்று தொடர்கிறது, இனிமேலும் தொடரும்.
வினய்! “அப்பா நாம ஒரு நாய் குட்டி வாங்கிக்கலாமா?” என்று கேட்டுட்டு இருக்கான்.
தற்போது உள்ள வாழ்க்கைச் சூழ்நிலைகளால் எங்களால் நாயை வளர்க்க முடியவில்லை ஆனால், நீண்ட கால விருப்பம் என்னவென்றால், பணி ஓய்வு பெற்று எங்கள் கோபியில் இருக்கும் போது நாயை வளர்க்க வேண்டும் என்பது தான்.
படிக்கக் கிறுக்குத்தனமாகத் தோன்றலாம் ஆனால், நிச்சயம் நடக்கும் 🙂 .
தொடர்புடைய கட்டுரைகள்
நாய் நன்றியுள்ளது மட்டுமல்ல அன்பும் மிகுந்தது!
அழ வைத்த A Tale of Mari and three puppies
கொசுறு
இந்தப்படத்துக்கு எதிராக இந்த Peta கிறுக்கனுக படத்தின் Premier போது போராட்டம் செய்து இருக்கானுங்க. இவனுகளை..
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
//அந்த அன்பு அனைத்து நாய்களிடமும் வந்து விடாது, நமக்கு என்று ஒத்திசைவு இருக்கும், அப்படிப்பட்ட நாயின் மீது நமக்குப் பிரியம் இருக்கும்.//
இது எனக்கும் நடந்திருக்கிறது, இது ஏன் என்று பல முறை கேட்டும் விடை இல்லை. படம் அருமை. 8 Below, Hachi a dog’s tale இந்த படங்கள் பார்த்திருக்கீங்களா? இதில் வரும் நாய்களை ரொம்ப பிடிக்கும்.
அருமை அண்ணா…எனக்கும் நாய்கள்னா ரொம்ப பிடிக்கும்…ஆனா என் அம்மா இதுவரை அனுமதிக்கல..அதுக்கு காரணம் நாய்கள் பிடிக்காதுனு இல்ல..அதுக்கு எதாவது ஆச்சுனா அந்த பாவம் நமக்கு தான்னு சொல்லுவாங்க..அதுனால இதுவரைக்கும் எந்த செல்லபிராணியும் வச்சுக்கல..கொஞ்ச நாள் மீன் வளர்த்தேன்..அதுவும் அந்த திருட்டு பூனைக்கு பிடிக்கல போல… அதுல இருந்து எனக்கு பூனைனா ஆகாது..என்னால இதுவரைக்கும் ஒரு நாய் வளர்க்க முடியலங்கற ஏக்கம் எப்போதுமே இருக்கு..நாய்கள் வளர்க்கறவங்க யாராவது பார்க்கவே பொறாமையா இருக்கும்..நாய்கள் பற்றிய புத்தகம்,செய்திகள், வீடியோ இதலாம் எதாவது பார்த்தா கண்டிப்பாக படிச்சுருவேன்..அப்போ அப்போ கூகுள்ல நாய்கள் பத்தி பார்த்துட்டு இருப்பேன்..எனக்கு German Shepherd ரொம்ப பிடிக்கும்..நம்ம நாட்டு நாய்கள்ல சிப்பி பாறை பிடிக்கும்…
அண்ணா நாய்கள் வளர்ப்பு, வழிமுறைகள் பற்றி ஒரு பதிவு போடலாமே…waiting…
கிரி, நமக்கு ஒரு விஷியம் பிடிக்குதுனா அது மொக்கையா இருந்தாலும் செய்வது என் பழக்கம். கல்லூரி நாட்களில் பெல்ஸ் கால் சட்டையை போட்டுகுனு ஒரு ரோமன்ஸ் லுக் விட்டதை இப்ப நினைச்ச மகா கேவலமாக இருக்கு. ஆனால் சத்தியமா வருத்தமா இல்ல!!!
நாயை பற்றி உங்களது பழைய கட்டுரையிலே நான் என் கருத்தை தெரிவித்துளேன். நாய் என்றாலே எனக்கு கொஞ்சம் பயம் தான். சிறு வயது அனுபவம் காரணமாக இருக்கலாம். ஆனால் என் அம்மாவிற்கு இன்றும் பாதுகாவலன் நாய் தான். அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். இன்றும் தினமும் தெருவோர நாய்களுக்கு உணவளிப்பார்கள்.
நான் எப்பவுமே புறாக்களின் காதலன். புறாக்கள் வளர்த்த நிகழ்வுகளை தற்போது நினைத்தாலும் ஒரு பழைய கருப்பு வெள்ளை திரைப்படம் பார்த்த உணர்வு வரும். அந்த நாட்களில் உறக்கத்தில் கூட புறாக்கள் கனவில் வந்து வந்து செல்லும். இன்றும் புறாக்களை காணும் போது சற்று நேரம் நின்று பார்த்து விட்டு தான் செல்வேன்.
சில சமயம் மனைவிக்கு நக்கலாக கூட தோன்றும். என்ன சொல்லி புரிய வைக்க முடியும். என்னுடைய முதல் காதல், புறாக்கள் மீது தான் என்று!!! அவைகளின் அசைவுகளை பார்த்துகொண்டே ஒரு யுகத்தையே கடந்து விடலாம்.. பறவையியலின் தந்தை சலீம் அலி அவர்களின் புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டு.. எதிர்காலத்தில் நிறைய திட்டங்கள் உண்டு!!!! நீங்கள் எங்கும் புறாக்களை காணும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்து செல்லவும்.. குழந்தைகளுக்கும் காட்டவும்.. கண்டிப்பாக ரசிப்பார்கள்… பகிர்வுக்கு நன்றி கிரி.
@சோமேஸ்வரன் இரு படங்களும் பார்த்து இருக்கிறேன். அசத்தலான படங்கள்.
@உதயா நாய்கள் வளர்ப்பு பற்றி பதிவா?! புது வேண்டுகோளா இருக்கே 🙂 சரியான நேரம் அமையும் போது எழுத முயற்சிக்கிறேன்.
நாய் வளர்ப்பு என்பது நானும் நாய் வைத்து இருக்கிறேன் என்பதல்ல.. அதற்கு என்று விருப்பம் அன்பு எல்லாமே இருக்கணும்.
நாய் தானே! என்ற எண்ணம் வரக்கூடாது. அதே போல நாயும் நமக்கு அமைவது என்பது எளிதல்ல. சில நாய்கள் நமக்கு பொருந்தாது.. நம்முடைய கட்டுப்பாட்டில் இருக்காது.
இது போல நடைமுறை சிக்கல்களும் உள்ளது. திரைப்படங்களில் வரும் நாய் போலவே அமைந்து விடும் என்று எதிர்பார்க்க முடியாது.
@யாசின் தனிமையில் இருப்பவர்களுக்கு நாய் ஒரு வரப்பிரசாதம்.
“நீங்கள் எங்கும் புறாக்களை காணும் வாய்ப்பு கிடைத்தால் பார்த்து செல்லவும்.. குழந்தைகளுக்கும் காட்டவும்”
ஹா ஹா புதுமையான வேண்டுகோள். ரசித்தேன் 🙂
புறாவை பார்த்தால் உங்கள் நினைவு இனி வரும். எங்க அண்ணன் புறா வளர்ப்பதிலும், பந்தயத்துக்கு விடுவதிலும் ஒரு காலத்தில் ஆர்வமாக இருந்தார்.