தலைமுடி வெட்டுவது எளிதானது அல்ல

22
தலைமுடி வெட்டுவது எளிதானது அல்ல

லைமுடி வெட்டுவது எளிதானது அல்ல என்பது ஆண்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் திகில் படம் பார்ப்பது போலவே இருக்கும் 🙂 . Image Credit

தலைமுடி வெட்டுவது

நமக்குத் திருப்தி தரும் படி வெட்ட வேண்டும். சரியாக வெட்டும் நபர் இருக்க வேண்டும் என்ற கவலை கடைக்குப் போகும் போதே இருக்கும். இதை நினைக்காத ஒரு ஆணும் இருக்க முடியாது.

எங்க சிரமத்தைப் புரிந்த “அட்டகத்தி” இயக்குநர் ரஞ்சித் இதை ஒரு காட்சியாக “அட்டகத்தி” படத்தில் வைத்து இருப்பாரு 🙂 . அருமையான காட்சி.

ஆண்களாலே உண்மையாகப் புரிந்து ரசித்துச் சிரிக்க முடியும். ஏனென்றால் இது போல அனுபவம் இல்லாத ஆண் இருக்க முடியாது.

ரஞ்சித் இது மாதிரி கண்டிப்பாக மாட்டி இருப்பாரு அதனால தான் இதை அனுபவித்து வைத்து இருக்காரு.

இதில் வருவது போலவே தலைமுடி வெட்டுவது ஒருவர் நன்றாகவும் / சுமாராக வெட்டும் இருவரும் இருப்பார்கள்.

முடி வெட்டக் காத்திருக்க உட்கார்ந்த உடனே ஊருல இருக்கிற கடவுளை எல்லாம் வேண்டிட்டு இருப்பாங்க.

யப்பா! எப்படியாவது இவரே நமக்கு முடி வெட்ட வர வேண்டும் என்று 🙂 . நான் பயந்துட்டே இருப்பேன்.

வயசானா நபராக இருந்தால்.. “தம்பி! எப்படி வெட்டனும்..” என்று கேட்கும் போதே வயிற்றை கலக்க ஆரம்பித்து விடும்.

ஆஹா! இன்னைக்கு தலை என்ன ஆகப் போகுதோ என்று. பாதி முடிந்த உடனே ஐயோ! எவனெவன் ஓட்டப்போறானோ என்று பீதியாகி விடும்.

பசங்க பார்த்தவுடனே “என்னடா.. எங்க தலையைக் கொடுத்தே!” என்று ஆரம்பித்துடுவானுக 🙂 .

ரவி ஸ்டார்

சென்னையில் இருந்த போது பல கடைகள் சென்றும் திருப்தியாக இல்லை.

ஒருமுறை பண்பலையில் நுங்கம்பாக்கம் “ரவி ஸ்டார்” (Cauvery Complex) சலூன் பற்றி விளம்பரம் வந்ததைக் கேட்டு முயற்சி செய்யலாம் என்று சென்றேன்.

உரிமையாளர் ரவி ரொம்ப நன்றாக முடி வெட்டுவார். இவர் கடையில் இருந்தவர்கள் பலர் ரொம்ப நன்றாக முடி வெட்டுவார்கள்.

இங்கே ஒருவர் எனக்கு நன்றாகப் பொருந்திப் போனார் ஆனால், இவர் பெயர் மறந்து விட்டேன்.

தொடர்ந்து சில வருடங்கள் இங்கே சென்றேன்.

இடையில் உரிமையாளர் திடீர் என்று மாரடைப்பில் இறந்து விட்டார். ரொம்பச் சின்ன வயது, அதிபட்சம் 45 க்குள் தான் இருக்கும். பிறகு அப்படியே குறைந்து, போவது நின்று விட்டது.

ரமேஷ் சலூன்

இதற்கு முன்னால் “ரமேஷ் சலூன்” (நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலை) என்ற கடைக்கு ஒரே ஒரு முறை சென்றேன். அருமையாக வெட்டி விட்டார் ஒருத்தர்.

முடி வெட்டி வந்த பிறகு, முதல் முறையாக என்னைப் பார்த்து “சூப்பரா வெட்டி விட்டு இருக்காங்கடா!” என்று நண்பன் என்று கூறிய கடை இது 🙂 .

இதன் பிறகு ஏன் நான் செல்லவில்லை என்று நினைவில்லை.

ராஜ் மாணிக்கம்

இதன் பிறகு அறிமுகம் ஆனது தான் “ராஜ் மாணிக்கம்”. தியாகராய நகர் GLOBUS அருகே உள்ள வைரம் காம்ப்ளெக்ஸில் கடை நடத்திக்கொண்டு உள்ளார்.

இங்கே முரளி என்ற ஒருவர் நன்கு பழக்கம் ஆகி விட்டார். எப்போதும் இவரிடம் தான் முடி வெட்டுவேன்.

இங்கே கிட்டத்தட்ட 4 வருடத்திற்கும் மேல் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்தேன்.

சிங்கப்பூர்

பிறகு சிங்கப்பூர் வந்து விட்டேன். இதன்  உரிமையாளர் ராஜ் மாணிக்கம் நன்றாகப் பழகுவார். இவர் கடை பல திரைப்படங்களில் வந்து இருக்கிறது.

“சிவா மனசுல சக்தி” படத்தில் ஜீவா இங்கே முடி வெட்ட வந்து போவது போல ஒரு காட்சி இருக்கும்.

சிங்கப்பூர் வந்த பிறகு எக்கச்சக்கமாக மாட்டிக் கொண்டேன்.

துவக்கத்தில் அனைத்தையுமே INR ல் கணக்கு செய்து செலவு செய்வதால், குறைந்த கட்டணமாக 5 வெள்ளி என்று ஒரு கடைக்கு லிட்டில் இந்தியா சென்றேன். வாழ்க்கையே வெறுத்து விட்டது.

அட்டகத்தி தினேஷ் மாதிரி நி(த)லை ஆகி விட்டது 🙂 .

இனி இந்தப் பக்கமே வரக் கூடாது என்று முடிவு செய்து விட்டேன். என் வீட்டருகே இருந்த சைனீஸ் கடை ஒன்று ஓரளவு பழக்கமாகி விட்டது.

பலி ஆடு மாதிரி தலையைக் கொடுக்க வேண்டியது தான். அவங்க என்ன சொல்றாங்க என்று எனக்குப் புரியாது, நான் சொல்வது அவர்களுக்குப் புரியாது.

நம்ம ஊர் போலப் பொறுமையாக வெட்டமாட்டார்கள். பரபரன்னு அதிகபட்சம் ஐந்து  நிமிடங்களில் அனைத்தையும் முடித்து விடுவார்கள். நமக்குத் திருப்தியே இருக்காது.

முடி வெட்டுபவர்கள் பெண்கள்

கடையில் முடி வெட்டுபவர்கள் பெண்கள். முதலாளியாக இருக்கும் பெண் மட்டும் சிறப்பாக வெட்டுவார். இவரிடம் முடி வெட்டினால் மட்டும் திருப்தியாக இருக்கும்.

முடி வெட்டும் போது ஷார்ட் அல்லது மீடியம் என்று கேட்பது வழக்கம். இது சீனர்கள் என்றில்லை எந்தக் கடை சென்றாலும் வழக்கமாகக் கேட்பது.

சீனர்களிடம் மறந்து கூட ஷார்ட் சொல்லிவிடக் கூடாது ஏனென்றால், இவர்கள் மீடியமே நமக்கு ஷார்ட் போல இருக்கும்.

இதில் ஷார்ட் கூறினால் நம்ம தலை நிலை “விருச்சிககாந்த்” தலை மாதிரி ஆகி விடும் 😀 .

இப்படி போயிட்டு இருந்த போது கடந்த முறை ஊருக்குச் சென்ற சமயத்தில் சென்னையில் ஒரு நாள் இருக்க வேண்டி வந்தது.

முரளி

சிங்கப்பூரில் முடி வெட்டிக் கடுப்பாக இருந்ததால், முன்பு சென்ற  தியாகராயநகர் “ராஜ் மாணிக்கம்” செல்லலாம் என்று நண்பனுடன் சென்றேன்.

நல்ல வேளையாக ராஜ் மாணிக்கம் இருந்தார், அதைவிட வியப்பாக “முரளி” யும் இருந்தார். கிட்டத்தட்ட 14 வருடமாகப் பணி புரிகிறார்.

நான் சிங்கப்பூர் வந்தே எட்டு வருடம் ஆகப் போகிறது. ராஜ் மாணிக்கம் என்னுடன் பேசி நலம் விசாரித்துக்கொண்டு இருந்தார்.

இருவரும் எட்டு வருடம் கடந்தும் இன்னும் மறக்காமல் இருந்ததே மகிழ்ச்சி.

ராஜ் மாணிக்கமே வெட்டினார். சும்மா அப்படி இப்படி என்று விரல் விளையாடுது. அதிகபட்சம் 7 நிமிடங்கள் வெட்டி இருப்பார் என்று நினைக்கிறேன்.

எட்டு வருடங்களுக்குப் பிறகு முடி வெட்டியதில் திருப்தியாக உணர்ந்தேன்.

தொழில் திறமை / அனுபவம் என்பது இது தான். பக்காவாக முடி வெட்டினார். ‘ரொம்ப வருடங்களுக்குப் பிறகு இப்பத்தாங்க திருப்தியாக இருக்கு‘ என்றேன்  சிரித்தார்.

தலைமுடி வெட்டுவது என்பது ஒரு கலை.

முடியைப் பிடித்து விரல்களால் அளவெடுத்து வெட்டுபவர்கள் (மேலே இருக்கும் படத்தில் இருப்பது போல) மட்டுமே சரியாக வெட்டுவார்கள்.

சிலர் இப்படிப் படம் காட்டுவார்கள் ஆனால், இறுதியில் கிரி தலை, கீரிப் பிள்ளை தலை மாதிரி ஆகிடும் 🙂 .

இதன் பிறகு ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தேன். முரளியும் “சார்! அப்படியே இருக்கீங்க.. ஏழு வருஷம் இருக்கும்ல சார் நீங்க வந்து” என்றார், ஆமோதித்தேன்.

எங்கே சென்றாலும் உடனே அங்குள்ளவர்களை நட்பாக்கி விடுவதால் இன்னும் மறக்காமல் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

ராஜ் மாணிக்கத்திடம், உங்களை “சிவா மனசுல சக்தி” படத்துல பார்த்தேன் என்றதும், குஷியாகி விட்டார் 🙂 .

சிங்கப்பூரில் எனக்கு முடி வெட்டுவதில் நடக்கும் கொடுமையை அவரிடம் கூறிக்கொண்டு இருந்தேன்.

உறவினர் பையன் சிங்கப்பூரில் கடை வைத்து இருப்பதாகவும், அவர் கடைக்குச் சென்று பாருங்க என்று விவரங்கள் கொடுத்தார்.

மணியம்

சிங்கப்பூர் வந்து கடைப் பெயர் மட்டும் நினைவு இருந்தது, எந்தக் காம்ப்ளெக்ஸ் என்று மறந்து விட்டது.

தம்பி மகேஷ் இந்தப் பகுதியில் தான் இருப்பதால், “மணியம்” கடைப் பெயரைக் கூறி இது எங்க இருக்கிறது என்று தெரியுமா? என்று கேட்டால்..

அண்ணா! அங்கே தாண்ணா வெட்டிட்டு இருக்கிறேன். நீங்க வாங்க நான் கூட்டிட்டுப் போறேன்‘ என்று கூற, ஆஹா! அருமை என்று கூறி ஒரு வார இறுதியில் சென்றேன்.

கடைக்குச் சென்று என்னை அறிமுகம் செய்து கொண்டு, உங்க அண்ணன் தான் உங்களைப் பற்றிக் கூறினார் என்று பேசிக்கொண்டு இருந்தேன்.

ஆமாங்க! அவர் என்னோட சித்தப்பா பையன் தான். எனக்கு அண்ணன் ஆகிறது‘ என்று கூறினார்.

சென்னை & இவர் கடை பற்றி எல்லாம் பேசிக்கொண்டு இருந்தேன். ஒரே முறையில் நன்கு பழக்கம் ஆகி விட்டார். இவருடைய பெயர் புனிதன்.

இவருடைய அப்பா கடை இது, தற்போது இவர் கடையைக் கவனித்துக்கொண்டு உள்ளார்.

ரொம்ப நன்றாக முடி வெட்டுகிறார். சிங்கப்பூரை விட்டே அடுத்த வருடம் கிளம்பி விடலாம் என்று முடிவு செய்து இருக்கும் நேரத்தில் இந்தக் கடை அறிமுகம்.

முன்பே தெரிந்து இருந்ததால் நன்றாக இருந்து இருக்குமே என்று வருத்தமாகி விட்டது.

மசாஜ்

முடி வெட்டிய பிறகு மசாஜ், சுடு தண்ணியில் ஊற வைக்கப்பட்ட துணியில் இறுதியில் தலையைத் துடைத்து எல்லாம் விடுகிறார் (வெட்டிய முடி பறக்காமல் / உறுத்தாமல் இருக்க).

10 வெள்ளி மட்டுமே!

கடந்த மூன்று முறையாக இங்கே தான் முடி வெட்டுகிறேன்.

என் வீட்டில் இருந்து செல்லத் தூரம் என்றாலும் (ரயில், பேருந்து மாறிச் செல்ல வேண்டும்) தரம் எங்கே இருந்தாலும், வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள் என்பதற்கு நானே எடுத்துக்காட்டு.

புனிதன் ரொம்ப நன்றாகப் பழகுகிறார், அதை விட முக்கியமாக நன்றாக முடி வெட்டுகிறார் 🙂 .

சிங்கப்பூரில் என்னைப் போல ஒரு நல்ல சலூனை எதிர்பார்த்துக் கொண்டு இருந்தவர்கள் / இருப்பவர்கள், இந்த முகவரிக்குச் செல்லலாம்.

25 வருடங்களுக்கும் மேலாக இந்தக் கடை இதே இடத்தில் இருக்கிறது.

K.S.MANIAM (கடையின் பெயர்)
HAIR DRESSING SALOON
Blk 3 #01-68 , Lorong Lew Lian, Singpaore 531003
Time – 8.30 AM to 8.30 PM
Closed on Tuesday – Mobile 8297 6649

செரங்கூன் MRT நிலையத்தில் Exit “D” எடுத்தால் இந்த இடத்திற்கு வரலாம். MRT யில் இருந்து 7 நிமிடத்தில் நடந்து வந்து விடலாம். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

கொசுறு 1

எப்படி முடி வைக்கலாம் என்பது பற்றி ஐந்து வருடம் முன்பு ஒரு இடுகை எழுதி இருந்தேன். தற்போது அது நினைவிற்கு வந்தது.

இதில் என்ன பெரியவியப்பு என்றால், நான் கூறிய ஸ்டைல்கள் பெரும்பாலானவை நம் ஊருக்கு வந்து விட்டது தான்.

விரைவில் “ஜெய்ஹிந்த்” செந்தில் ஸ்டைலும் வந்துவிடும் 🙂 .

Read: ஸ்டைல்! ஸ்டைல்!! ஸ்டைல்!!!

கொசுறு 2

முதலில் ஆண்களுக்குத் தான் முடி வெட்டச் செலவாகும், தற்போது நிலைமையே தலைகீழாகி விட்டது 🙂 . பெண்கள் தான் செலவு செய்கிறார்கள்.

அதுவும் ஒரு முறை ஆரம்பித்து விட்டால், புலி வாலைப் பிடித்த கதையாக மாசாமாசம் இதற்கென்று அழ ஒரு பணத்தை ஒதுக்க வேண்டியது இருக்கும்.

Straightening, coloring, Haircut, Dye, Threading, Waxing ஐயையோ! இவர்கள் கதை பெரிய கதை.

22 COMMENTS

 1. நானும் உங்களை மாதிரி அவஸ்தை பட்டுருக்கேன்… அய்யோயோ இவன, இன்னையோட நம்ம தலை அவ்வளவுதான் அப்படின்னு…. அப்புறம் ஞாயிறுக்கிழமை மட்டும் முடி வெட்ட போகமாட்டேன், அப்ரண்டிஸ் பசங்கலுக்கு அன்னிக்கு தான் வேலையே 🙂

 2. நன்றி, நானும் ரொம்ப நாளா முடி வெட்ட நல்ல கடையா தேடிகிட்டு இருந்தேன்

 3. TOO LATE கிரி Because I already in Singapore for past 20 years . but no use now ,Because now i have very less hair .

 4. கிரி.. சூப்பர் மேட்டரு.. காதல் தேசம் அப்பாஸ், இவரோட அறிமுகம் கிடைக்கவில்லை வாழ்க்கைல எனக்கு எந்த நல்ல காரியமும் (இந்த பரட்டை தலைய வச்சிகினு) நடந்து இருக்காது..

  கல்லூரியில் முதல் ஆண்டில் ஜோக்கர்ரா உள்ள போன நான், மூன்றாம் ஆண்டில் டாப்பர்ரா வெளியில் வந்தேன் (படிப்பில் இல்லை, ஹேர் ஸ்டைல). எல்லாம் எங்க ஆனந் (சிகை அலங்காரம் செய்பவர்) அண்ணனோட கைபக்குவம் தான். சும்மா, கை விளையாடும். ஒரு நாள் கூட இப்படி வெட்டுங்க, அப்படி வெட்டுகனு சொன்னதே கிடையாது.. 8 ரூபாயில் ஆரம்பித்த உறவு இன்று வரை தொடர்கிறது..(விடுமுறையில் செல்லும் போது மட்டும்)..

  ஆனால் தற்போது UAE ல் என் தலையில் கை வைக்காத இந்தியனோ, பாகிஸ்தானியோ, பெங்காலியோ, யாரும் இல்லை..ஆரம்பிக்கும் போது நல்ல தான் இருக்கும், போக போக பாதியிலே எழுந்திருச்சி ஓடிவிடலாம் போல இருக்கும்…

  என் அனுபவத்தில், அதிக வாடிக்கையளர்களுக்கு சேவை செய்வதில் மட்டுமே குறியாக உள்ளார்களே தவிர, வாடிக்கையளரை திருப்திபடுத்துவதில் கவனம் செலுத்துவதில்லை.. (எங்க போன என்ன, பயபுள்ள இங்கதானே வரணும் என்ற தைரியம் கலந்த திமிர் தான் இவர்களுக்கு) பகிர்தமைக்கு மகிழ்ச்சி கிரி.

 5. என்ன கிரி நெறைய்ய அனுபவம் போலிருக்கு..

  சவுதியில் ஒரு குறிப்பிட்ட மலையாளி கடையில் தான் முடி வெட்டுவேன் இதுக்காக கார் எடுத்துகிட்டு பத்து எழு கிலோமீட்டர் போகணும்.

  ஒரு சமயம் கம்பெனி ஓனரிடம் லீவு கேட்டிருந்தேன்.. அவர் இப்போ முடியாது சீனா போயிட்டு அடுத்த மாசம் பதினைந்து நாள் போய்க்கோ அப்படின்னு சொல்லிட்டார்.. சரின்னு (சாமானெல்லாம் ரெடியாகி ) இருக்கிற கடுப்பில் சலூனுக்குள் நுழைந்து மெஷின் கட்டிங்ன்னு சொல்லிட்டேன். (வழக்கமா மகாநதி கமல் மாதிரி பின்பக்கம் மெஷினும் முன்பக்கம் கத்தரிக்கோலும்) அவன் என்ன கடுப்புல இருந்தானோ தெரியல மெஷின முன்பக்கத்திலேர்ந்து ஆரம்பிச்சிட்டான்… நிருத்துன்னா சொல்ல முடியும் ? நிறுத்துனா ஜெய்ஹிந்த் பட செந்தில் கட்டிங் மாதிரியே இருக்கும். சரி போனது போச்சின்னு குளிச்சிட்டு வந்தா ஓனர் போன் பண்ணி நீ லீவுக்கு போயிட்டுவா அப்படின்னு சொல்றார் – அப்போது இந்தியா வந்தபோது வெளியில எங்கயும் தலை காட்டல… விருச்சிககாந்த் மாதிரியே இருந்தது.

  கல்யாணத்துக்கு ஒரு மாசம் முன்பு கடையில் சென்று தோ பாருங்க பதினஞ்சி நாள் கழிச்சி எனக்கு கண்ணாலம்.. இத மனசுல வச்சிக்கிட்டு எப்படி வெட்டனுமோ அப்படி வெட்டுங்க அப்படின்னு பயந்துகிட்டே தலைய கொடுத்தேன்.

  சீனாவில் முடிவெட்ட பயம், நம்ம ஒன்னு சொன்னா அவன் ஒன்னு செய்வான் (நண்டு சூப்பு கேட்டு ஆமை சூப்பு குடிச்சதிலேர்ந்தே அனுபவபட்டுட்டேன்).
  ஹாங்காங்கில் சொல்லவே வேண்டாம் குறைந்தது 300 டாலர் தீட்டிடுவாணுக (2350ரூ). சவுதியில் இப்போ 25௦ ரூ ஆகுது நான் 150 ரூ வாங்குகின்ற கடையில் வெட்டிகொள்கிறேன்..

  நம்மூரு மாதிரி நியுஸ் பேப்பர் படிச்சிட்டு ஊர்கதை பேசி அம்பது ரூபாயில் (இப்பவும் அதான் கொடுக்கிறேன்) முடிவெட்டுவதை பல சுவராஸ்யம் வேறெங்கும் கிடைப்பதில்லை.

 6. பெண்களுக்கு முடிவெட்டுறதா.. ஹேர் ஸ்ட்ரைட் பண்றாங்களாம், ஐப்ரோ திரட்டிங் பண்றாங்களாம்… வெட்டுனா நல்லா வளருமாம்… நம்ம வெட்டுற செலவை விட மும்மடங்கு அதிகமா இருக்கு. அதைவிட கொடுமை இதையெல்லாம் அனுமதிச்சுட்டு என் அம்மாகிட்ட திட்டு வாங்க முடியல.

  அதெல்லாம் இருக்கட்டும் ஹேர் ஆர்ட் பத்தி நீங்க என்ன நினைக்கிறீங்க கிரி.. (பெவிகால் கொண்டு முடியை ஒட்டி ஓவியம் வரைவது) நான் இதுவரை ரெண்டு படங்கள் பண்ணியிருக்கேன்..

 7. //பெண்கள் தான் தற்போது முடிக்காக ஏகப்பட்ட செலவு செய்கிறார்கள். Straightening, coloring, Haircut, Dye, Threading, Waxing ஐயையோ! இவர்கள் கதை பெரிய கதை.

  threading – 50
  blow dry – 600
  thong curls – 700
  Hair coloring(root touch up) – 500
  facial – 500
  manicure – 200
  pedicure – 300
  waxing – 300
  only this much amount girls used to spent ..not more than this ..இதுக்கு போய் ஐயையோ! சொன்னா எப்படி அண்ணா..

  • இவ்வளவுதானா ?? 🙁 சிக்கு வருவதினால் முடியை கொஞ்சம் வெட்டவேண்டும் என்று என் மனைவி சொன்னார் இந்தியாவில் தெரிஞ்ச பார்லரில் பத்து ரூபாய் வாங்குறாங்க. சவுதியில் 25 ரியல் (400 ரூ) கேட்டாங்க… (என்னடா இது எனக்கே 10 ரியால்) நானே வெட்டுறேன்னு சொன்னேன். பொண்டாட்டி வேணாம் நான் இந்தியாவுலேயே வெட்டிகிறேன்னு ஊருக்கு போய்டாங்க,

   • she is intelligent and she must be knowing the result thts why she didnt give you 🙂 hair கட் பண்றதுக்கு எல்லாம் separate degree இருக்கு …இல்லனா அட்லீஸ்ட் டிப்ளோமோ complete பண்ணனும்..you just cant do that simply …dont make fun 🙂

    • UK ல என்ன மனைவி hair straightening பண்ணுறதுக்கு 500 பவுண்ட்ஸ் (45,000 Rs) சொன்னங்க.. நானே Iron Box வெச்சு straightening பண்ணுறேன்னு சொன்னேன். அவங்க இந்திய வந்து பண்ணிகறேனு மனசு மாதிகிட்டாங்க 🙂

     • Even for hair straightening there is study …also there is separate machine for hair ironing … Iron Box வச்சு எல்லாம் பண்ண கூடாதுங்க.. OMG எப்படி இப்டி எல்லாம் yosikiringa sir ….

 8. செம பதிவு கிரி. அட்டகதி சீன் சூப்பர். எல்லாருமே எப்போவாவது ஒரு தடவையாவது இதை அனுபவிச்சு இருப்பாங்க. எனக்கு எல்லாம் நிறைய முறை. 🙂

  இங்க U.K-ல எல்லாம் நம்பர் மயம்(1 முதல் 8 வரை). ஒரு அங்குலத்தை எட்டாகாகப் பிரித்து வெட்டுவார்கள்.

  அதாவது
  1 = 1/8 அங்குலம் மட்டும் விட்டு விட்டு, மிச்சம் நீளத்தை வெட்டி விடுவார்கள் .
  2 = 2/8 (1/4) அங்குலம் மட்டும் விட்டு விட்டு, மிச்சம் நீளத்தை வெட்டி விடுவார்கள் .

  8 = 8/8 ஒரு அங்குலம் மட்டும் விட்டு விட்டு, மிச்சம் நீளத்தை வெட்டி விடுவார்கள் .
  இப்படியே 3, 4, …8 வரை எண்ணிக்கை உள்ளது.

  இந்த நம்பர் மேட்டர் தெரியாமல் ஏதாவது ஒரு நம்பரை சொல்லி, அது ராங் நம்பர் ஆகி….., அதை என் கேக்குறீங்க!!!

  அப்புறம் இன்னொரு விஷயம் என்னன்னா இப்போ நம்பர் 4ன்னு சொல்லிடோம்னு வச்சுக்கங்க, முழு தலையும் ஒரே மாதிரி சைசில் வெட்டிடுவாங்க. கர்ண கொடூரமா இருக்கும். இப்போ எல்லாம் சைடுல 3, தலை மேல 4ன்னு சொல்லிடுவேன். 🙂

  கரெக்டான நம்பர் கண்டுபிடிக்க ஒரு 6 மாசம் ஆச்சு. Google எல்லாம் பண்ணி வேண்டி இருந்துச்சு இந்த தலை முடி வெட்டுறதுக்கு. ரொம்ப பெரிய மேட்டர்.

 9. //இறுதியில் கிரி தலை, கீரிப் பிள்ளை தலை மாதிரி ஆகிடும்.//

  :-))

  இங்க சீனா ல முக்கால்வாசி தலை கீரிபுள்ள தல மாதிரி தான் இருக்கும் கிரி. செம்ம காமெடியா இருக்கும்.. என்ன டேஸ்ட்டுடா இவங்களுக்குன்னு நினைப்பேன். இதுல சேவல் மாதிரி கலர் கலரா வேற… ரொம்பக் கொடுமையா இருக்கும் பார்க்கவே 🙂

 10. தலைக்கு மேலே
  இத்தனை வேலைகள் இருக்கா
  அத்தனையும் சிறந்த பகிர்வு

 11. ரொம்ப அருமையான பதிவு ஜி…..எல்லா ஆணின் வாழ்க்கையிலும் நடக்கற விஷயத்த ரசிச்சு எழுதிருக்கீங்க……..எனக்கெல்லாம் எக்கச்சக்க அனுபவம் கிரி 🙂 🙂 ……முடி வெட்ட போகனும்னாவே பயத்துலயே தான் போவேன்……முக்கியமான ஒரு function இருக்கும், சரியா அப்போ பாத்துதான் சொதப்பி தல காட்ட முடியாத படிக்கு செஞ்சுருவாங்க……அதுவும் காலேஜ் படிக்கும் போதெல்லாம் இந்த மாதிரி ஆகி பொண்ணுங்க முன்னாடி அவமானமா போயிரும், ஒரு ரெண்டு வாரத்துக்கு முடி வளர்ற வரைக்கும் கண்ணாடிய பாக்கவே வெறுப்பா இருக்கும்…….

  ஒரு தடவ, காலேஜ் படிக்கும் போது ‘காக்க காக்க’ படம் வந்த சமயம்….அதுல வர்ற சூர்யா மாதிரி போலீஸ் கட்டிங் வேணும்னு சொல்லி முடி வெட்டினேன்……செம்ம கன்றாவியா வந்துருச்சு 🙂 வீட்டுக்கு போனா அப்பா பாத்துட்டு பயங்கர திட்டு, என்னடா இப்படி கோமாளியாட்டம் முடி வெட்டிருக்கன்னு…..ஒழுங்கா மறுபடியும் வெட்டுன்னு சொல்லிட்டு போயிட்டாரு……ஏற்கனவே சொதப்பல், மறுபடியும் கை வெச்சு என்னமோ மாதிரி இருந்துச்சு 🙂 🙂 அந்த ரெண்டு மூணு வாரம் நான் பட்ட கஷ்டம், சொல்லி முடியாது…….

  இப்போ தான் ஒரு ரெண்டு வருசமா ஒரே ஒருத்தர் கிட்ட நல்ல செட் ஆகிருக்கு……பட் அவருமே அப்பப்போ சொதப்புவாறு…….அதனால இப்போவெல்லாம் வெட்டும் போதே சொல்லிடறது , நகம் வெட்டி விடற மாதிரி அளவா வெட்டுங்கன்னானு…….

  சில சமயங்கள் நெனைக்கிறது, பேசாம இந்த பொண்ணுங்க மாதிரி நாமளும் தோல் வரைக்கும் முடி வளர்த்திட்டா இந்த முடி வெட்டுற பஞ்சாயத்தே இருக்காதுன்னு 😀

 12. அற்புதமான பதிவு, ஓவ்வொருவரும் இந்த சூழ்நிலையை அனுபவித்து இருப்பார்கள்…. நான் அயனாபுரம் ரயில்வே காலனி அருகில் உள்ள ரோபோ ஹேர் கட்டிங்லதான் மாதத்ததிற்கு இருமுறை அந்த கொடுமையை அனுபவிக்கிறேன், அண்ணண் தம்பி இருவர் சேர்ந்து நடத்தும் கடை அது, என்ன டாபிக் கொடுத்தாலும் அதுபற்றி ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக பேசியே காது புண்ணாகும் நிலை வரும்வரை நம்மளை விடமாட்டார்கள்.

 13. செம பதிவு அண்ணா … பல ஆணின் மனது ஒரு ஆணுக்குத்தான் தெரியும் என்பதை உண்மை என்று நிருபித்துவிட்டீர்கள் ,,….

 14. அனைவரின் வருகைக்கும் நன்றி

  @விஜய் நான் சனிக் கிழமை செல்வேன். அப்பரண்டீஸ் விசயம் உஷாராகிக்குறேன்.

  @சுரேஷ் எனக்கும் 7 வருடம் கழித்தே தெரிந்தது ஆனால், தற்போது முடி இருக்கிறது 🙂

  @யாசின் நீங்க கூறிய மாதிரி.. இப்ப அதிகம் பேருக்கு முடி வெட்டத் தான் முயற்சிக்கிறார்கள். திருப்தியாக வெட்டுகிறோமா என்பது பற்றி யாருக்கும் கவலையில்லை.

  @ராஜ்குமார் “நிறுத்துனா ஜெய்ஹிந்த் பட செந்தில் கட்டிங் மாதிரியே இருக்கும்” ஹா ஹா

  ஹாங்காங் ல ரொம்ப அதிகமா சொல்வது போல தெரிகிறதே!

  ஹேர் ஆர்ட் பற்றி எனக்கு யோசனை இல்லை.. என்னோட அக்கா இதை செய்து இருக்காங்க.

  @ஜானகி எங்களுக்கு மாதம் அதிகபட்சம் 200 உடன் முடிந்து விடும். இந்தப் பணம் எல்லாம் கட்டுபடியாகாது. இது மாதத்திற்கு என்று கூறி தலை சுற்ற வைத்துடாதீங்க 🙂

  அகிலாவை எதுக்கு சப்போர்ட் பண்ண சொல்றீங்க.. இங்க நாம என்ன சண்டையா போட்டுட்டு இருக்கோம் 🙂

  @விஜய் ஐயையோ! நீங்க சொல்றதைக் கேட்டால் எனக்கு கிர்ர்ர்ன்னு இருக்குது. நான் ஏற்கனவே கணக்குல ரொம்ப “புத்திசாலி”. இங்க முடி வெட்ட சென்றால், எலி கரண்டு வைத்த மாதிரி தான் வெளியே வருவேன் போல. நிஜமாகவே இதைக் கேட்க எனக்கு அதிர்ச்சியா இருக்கு.. நீங்க சொன்ன மாதிரி எண்ணை மாற்றிக்கூறினால் நம்ம தலை கதி அதோ கதி தான் போல.

  @அகிலா அவனுக சும்மாவே விதவிதமா இருப்பானுக..முடிய சொல்லவே வேண்டாம். ஜெய்ஹிந்த் புலிக்குட்டி பூனைக் குட்டி மாதிரி இருப்பானுக. 🙂

  @ரோஷன் நீங்க சொன்ன விஷயத்தை குறிப்பிட்டு இருக்கலாம்.. அதாவது முக்கியமான விழா என்று போகும் போது தான் தலையை குதறி வைத்துடுவாங்க. என் திருமணத்தின் போது காலி விழாத குறையா கெஞ்சி ஒழுங்கா வெட்டுங்க என்று புலம்பிட்டு இருந்தேன்.

  தோள் வரைக்கும் வளர்த்தால் அதற்கு பராமரிப்பு அதிகம்… சும்மா இல்லை.

  @தங்கராஜ் “என்ன டாபிக் கொடுத்தாலும் அதுபற்றி ஒருமணி நேரத்துக்கும் அதிகமாக பேசியே காது புண்ணாகும் நிலை வரும்வரை நம்மளை விடமாட்டார்கள்.” ஹா ஹா ஹா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here