மூடாமல் இருந்த ஆழ்குழாயில் விழுந்து குழந்தை சுர்ஜித் இறந்தது மிக வருத்தமளிக்கும் செய்தி. கடந்த சில நாட்களாக ஊடகங்கள் முழு நேரமாக இந்நிகழ்வு பற்றிய செய்திகளையே ஒளிபரப்பிக்கொண்டு இருந்தனர்.
யார் தவறு?
பலரின் விவாதப்பொருளாக மாறியது இச்சிறுவன் இறப்புக்கு யார் காரணம் என்பது.
குழந்தையின் பெற்றோர் & அரசாங்கம் தங்கள் பொறுப்புகளைப் புறக்கணித்ததே காரணம். Image Credit
பெற்றோர்
4+ வருடங்களாக மூடாமல் இருந்த ஆழ்குழாயை சுர்ஜித் பெற்றோர் மூடி இருக்க வேண்டும். அவர்கள் மூடி இருந்தார்கள் ஆனால், மழைக்கு விலகி விட்டது என்பது போன்ற விளக்கத்தைக் காண நேர்ந்தது.
இதெல்லாம் ஏற்றுக்கொள்ளுபடியான விளக்கமில்லை. ஆபத்து என்று தெரிந்தும் அதைச் சரியாக மூடாத குறிப்பாகக் குழந்தையை வைத்துள்ளவர்கள் கூறும் காரணமில்லை.
இன்னொன்று பெற்றோரின் ‘அறியாமை’ என்று பலரால் குறிப்பிடப்படுகிறது.
அறியாமை என்பது சரி தான் என்றாலும், அதையே காரணமாகக் கூறி தவறில் இருந்து தப்பிக்க முடியாது. இறுதியில் பாதிக்கப்படுவது இவர்களே!
ஒருமுறை விமானப் பணிப்பெண்களிடம் தவறாக நம்மவர்கள் சிலர் நடந்து கொண்டார்கள் என்று கூறிய போது, அவர்கள் அறியாமையில் நடந்து கொள்கிறார்கள் என்று ஒருவர் கூறினார்.
அவர்கள் தவறை நியாயப்படுத்திக் கூறிய போது எனக்குக் கடும் கோபம் ஏற்பட்டது.
நம்ம வீட்டுப்பெண்களிடம் இதுபோல ஒருவர் நடந்து கொண்டு அறியாமையில் செய்தேன் என்றால் ஒப்புக்கொள்வோமா?!
இரு சம்பவங்களும், பிரச்சனைகளும் வேறு என்றாலும், ‘அறியாமை’ எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகிறது என்று விளக்கவே இதைக் கூறினேன்.
பக்கத்து வீட்டு குழந்தை இதில் விழுந்து இருந்து, நாங்கள் அறியாமையால் தவறு செய்து விட்டோம் என்று கூறினால் குழந்தையின் பெற்றோர் ஏற்றுக்கொள்வார்களா?
உங்களுக்கு இதுபோல ஒரு நிலை வேறொருவர் தவறால் ஏற்பட்டால், இதே ‘அறியாமை’ பதிலை ஏற்றுக்கொள்வீர்களா? இதில் பெற்றோரின் தவறுள்ளது என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.
அரசு
அரசு இதுபோல ஆழ்குழாய்களுக்குச் சரியான முறையில் சட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.
யார் வேண்டும் என்றாலும், எப்படி வேண்டும் என்றாலும், எதை வேண்டும் என்றாலும் செய்யலாம் என்று இருப்பதே இதுபோலத் தவறுகள் நடப்பதற்குக் காரணம்.
இதுவரை ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒவ்வொரு முறையும் இதுபோலப் பேசிக் கடந்து செல்வதே வழக்கமாக இருக்கிறது. இனியும் இதுபோல நடக்கும்.
ஒரு பொறுப்பான அரசாங்கம் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து, தீர்வைக் கண்டுபிடிப்பதே சரியான முறையாகும்.
கடந்த சில நாட்களாக அமைச்சர்கள், அதிகாரிகள், ஊழியர்கள் அனைவரும் கடுமையாக உழைத்தனர் ஆனால், இறுதியில் பயன் இல்லாமல் போகிறது.
காரணம், இதற்கென்று சரியான திட்டமோ வழிகாட்டுதலோ இல்லை.
இதைச் சரி செய்யாமல் இருந்தால், எத்தனை வருடங்கள் ஆனாலும் இதே பிரச்சனை தொடர்ந்து கொண்டு இருக்கும்.
பொதுமக்களிடையியே இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். யாராவது இது போலத் திறந்து வைத்து இருந்தால், புகார் அளிக்கக் கூற வேண்டும்.
பரபரப்புக்கு கொஞ்ச நாள் மட்டும் சுறுசுறுப்பாக இருந்து விட்டுப் பிறகு வழக்கம் போலக் கண்டுகொள்ளாமல் இருப்பதே நம்ம ஊர் பிரச்சனை.
அரசாங்கம் கடுமையான அபராதம் விதித்து, தண்டனை கொடுக்க வேண்டும் காரணம், இது உயிர் சமபந்தப்பட்ட பிரச்சனை. யாரோ செய்யும் தவறால் இன்னொருவருக்கு இழப்பு.
ராக்கெட் விடுவது வீண், அதற்குப் பதிலாக இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்கணும் என்ற குற்றச்சாட்டு.
இப்பிரச்னைக்கு தீர்வு கண்டு பிடிக்கணும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது ஆனால், ராக்கெட் விடுவதை வீண் என்று கூறுவது அரைவேக்காட்டுத்தனம்.
இன்று பல வசதிகளை நாம் அனுபவித்துக்கொண்டு இருப்பதற்குக் காரணமே அந்த ராக்கெட் தான் என்பது புரியாமல் பேசுகிறார்கள். எல்லாவற்றிலும் உணர்ச்சி வேகம்!
அனைத்து பிரச்சனைகளுக்கும் அரசையே குற்றம் கூறிக்கொண்டு இருப்பது தவறான செயல். ஒவ்வொருவரும் தங்களுடைய பொறுப்பையும் உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
கோமாளித்தனங்கள்
தற்போது இக்கட்டுரை நான் எழுதக்காரணம் அச்சிறுவன் இறந்த பிறகு நடந்த நடக்கும் கோமாளித்தனங்களைப் பார்த்துக் கடுப்பானதே.
குழந்தையின் தாய்க்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்கிறார் முத்தரசன். திருமாவளவன் பல படிகள் மேலே சென்று ஒரு கோடியுடன் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்கிறார்!
என்ன பேசுகிறோம் என்று புரிந்து தான் பேசுகிறாரா! என்பதே தெரியவில்லை.
ஸ்டாலின் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்சம் கொடுக்கிறார். இதைப்பார்த்து அதிமுக வும் 10 லட்சம் கொடுக்கிறது, அரசு சார்பாக 10 லட்சம் கொடுக்கப்படுகிறது.
அச்சிறுவனின் தாய் சுர்ஜித்துக்கு கோவில் கட்டுவேன் என்கிறார்.
என்னங்கயா நடக்குது?!
நியாயமா பாதுகாப்பு இல்லாமல் ஆழ்குழாய் வைத்து இருந்ததற்குச் சுர்ஜித் பெற்றோருக்குத் தண்டனை கொடுத்து இருக்க வேண்டும் ஆனால், தவறு செய்தால் 30+ லட்சம் கொடுக்கிறார்கள்.
தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்ற நிலை மாறி, பணம் கிடைக்கும் என்றாகி விட்டது.
இது போல ஒரு கோமாளித்தனம் எந்த நாட்டிலாவது நடக்குமா? எரிச்சலாக வருகிறது. ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.
இதுபோல ஒரு சூழ்நிலையில் இந்தியா போன்ற உணர்ச்சிவசப்படும் நாட்டில் தண்டனை கொடுக்க முடியாது என்றாலும், மேற்கூறியவற்றை செய்யாமல் தவிர்க்கலாம்.
அரசியல்வாதிகள் எது எதற்குத் தான் அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று யோசிக்க மாட்டார்களா? அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள் ஒவ்வொருவரும். இதையெல்லாம் எப்படி யோசிக்கிறார்கள் என்பதே புரியாத புதிராக இருக்கிறது.
இவர்கள் எல்லாம் மக்களை வழி நடத்துகிறார்கள் என்பதே அபாயகரமாக உள்ளது.
இதே அரசும் நீதிமன்றமும் தான் ‘தலைக்கவசம்’ அணியுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள் ஆனால், யார் கேட்கிறார்கள்? தவறு செய்தால் யாருக்கு இழப்பு? நமக்கா அரசாங்கத்துக்கா?
அபராதம் விதித்தால், ‘ஏன் இவ்வளவு அபராதம்?‘ என்று கேள்வி.
நாம் சரியாக இருந்தால், அபராதம் கட்ட வேண்டியதில்லை என்று யோசிக்காமல், அபராதத்தைக் குறைக்கணும் என்றால், நான் தவறு செய்துட்டே தான் இருப்பேன் என்பதாகத்தானே அர்த்தம்.
அரசு தவறு செய்தாலும், இறுதியில் பாதிப்படைவது நாம் தான். எனவே, அரசைக் கைக்காட்டிக்கொண்டு இருந்தால், இழப்பு நமக்கே. நாம் தான் எச்சரிக்கையாக இருக்கனும்.
இரு வாரங்களுக்குப் பிறகு, இப்படியொரு சம்பவம் நடந்ததா?! என்று நினைக்கும் அளவுக்கு ஊடகமும் மக்களும் வேறு செய்திக்கு நகர்ந்து விடுவார்கள். இது தான் நடக்கப்போகிறது.
கேவலமான அரசியல்! ஊடகங்கள்!! அவற்றை ஆதரிக்கும் மக்கள்!!! ச்சை
தொடர்புடைய கட்டுரை
சுஜித் குறித்த எந்த செய்திகளையும், காணொளிகளையும் நான் பார்க்கவில்லை.. ஆனால் இறந்துவிட்டான் சென்ற செய்தியை மட்டும் பார்த்தேன்.. இதில் யாருடைய தவறு என்று அலசி ஆராய விரும்பவில்லை.. ஒன்றை மட்டும் உறுதியாக நம்புகிறேன்.. இதுவும் கடந்து போகும்!!!
கிட்டத்தட்ட 90 % உங்கள் கருத்துக்களுடன் ஒத்து போகிறேன்.. ஆனால் எந்த நிகழ்விலும் பணம் மற்றும் அரசுவேலை என்பது எனக்கு சுத்தமாக புரியவில்லை!!! யார் இறந்தாலும் அல்லது விபத்தை சந்தித்திலோ பாதிப்படைந்தவரின் குடும்ப வலி சத்தியமாக நமக்கு தெரியாது..
ஒரு தந்தையோ, தாயோ, அண்ணன், தம்பி, தங்கை யாராக இருந்தாலும் அதன் வலி சத்தியமாக அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரியுமா தவிர!!! சுற்றி வேடிக்கை பார்க்கும் கூட்டத்தில் உள்ள எவருக்கும் அது புரியாது.. ஆனால் அந்த பாதிப்பிற்கு இழப்பீடு பணம், வேலை என்பது மட்டும் தீர்வாகாது என்பது என் எண்ணம்…
எல்லா சமூக நிகழ்வுகளையும் அரசியலாக்குவது இங்கு பழகிபோகி விட்டது.. எத்தனையோ நிகழ்வுகளை பட்டியல் இட்டு கொண்டு போகலாம்.. தவறை செய்தவர்கள், மீண்டும் அதே தவறினை செய்து கொண்டிருப்பதற்கும்.. குற்றப்பின்னணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக சுற்றி கொண்டிருப்பதற்கும்.. தண்டனைகள் இன்னும் கடுமையாக படவில்லை என்பது தான் உண்மை..
சில லட்சங்கள் எத்தனை ஆண்டுகள் அவர்கள் குடும்பத்தை நிம்மதியாக வைத்திருக்கும் என்பது தெரியவில்லை!!! பிரச்சனையின் ஆரம்பத்தை கண்டறியாமல், அதன் முடிவை மட்டும் தேடுவது வியப்பாக இருக்கிறது.. இதுவும் கடந்து போகும்..
என்னத்த சொல்ல நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் அப்படி.
இதை எல்லாம் பார்த்து எவனெல்லாம் குழந்தையை கொல்ல பார்க்குறானுகளோ. பயமா இருக்கு கில்லாடி.
அந்த ஆழ்துளை கிணறு ஐந்து வருடத்திற்கு முன்பே மூடப்பட்டு விட்டது ஆனால் திடீர் என மழையினால் பள்ளம் ஏற்பட்டது. இவர்கள் மட்டும் அல்ல தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறு பலவற்றை நிறைய பேர் மூடுவது இல்லை . மூடுபவர்களும் மண்ணை கொண்டே மோடிவிடுகிறார்கள் அவை தில இடங்களில் இவ்வாறு பள்ளம் ஏற்படுவதும் உண்டு, வறுமையை போக்க சிலபேர் போர் போட்டு நீர் இல்லாமல் மூடுவதற்கு பணம் இல்லாமல் மண்ணை கொண்டு மூடி விடுகிறார்கள் . விவசாயம் செய்யும் விவசாயிக்கு மட்டுமே புரியும் இது ஒரு விபத்து என்று , 100% digital world பொழுதை போக்கும் அனைவருக்கும் பணம் போகிறதே என்று கடுப்பு மட்டும்தான் தோணும் . அரசு வேலை பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை .ஆனால் ஒரு நிமிடம் கூட கவன குறைவு ஏற்படாத அறிவு ஜீவிகளே….
@யாசின் விதிமுறைகளைச் சரிவரப் பொதுமக்களும் அரசாங்கமும் பின்பற்றாததே பல்வேறு பிரச்னைகளுக்குக் காரணம்.
@விஜய் ஆமாம் கேப்டன் இதே மாதிரி பலர் கூறி இருக்காங்க.
@பெயரில்லாதவர்
“விவசாயம் செய்யும் விவசாயிக்கு மட்டுமே புரியும் இது ஒரு விபத்து என்று , 100% digital world பொழுதை போக்கும் அனைவருக்கும் பணம் போகிறதே என்று கடுப்பு மட்டும்தான் தோணும் . அரசு வேலை பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை .ஆனால் ஒரு நிமிடம் கூட கவன குறைவு ஏற்படாத அறிவு ஜீவிகளே….”
முட்டாள்தனமான வாதம்.
சும்மா விவசாயி விவசாயின்னு அனுதாபம் தேடாதீர்கள். என் அப்பா விவசாயி, என் மாமனார் விவசாயி. எங்கள் சொந்தமே விவசாயம் தான்.
எனக்கும் அனைவரின் நடைமுறை பிரச்சனையும் தெரியும்.
டிஜிட்டல் பணத்தை அனுப்பினால் அடுத்தவன் கஷ்டம் புரியாது என்பது அர்த்தமல்ல. கவனக்குறைவு அனைவருக்குமே ஏற்படும் ஆனால், எந்த மாதிரியான கவனக்குறைவு என்றுள்ளது.
உங்களுக்கு இது போல ஒரு நிலை பக்கத்து வீட்டு நபரின் கவனக்குறைவால் நடைபெற்றால் இதே காரணத்தைக் கூறுவீர்களா?
உங்களைப் போன்றவர்கள் இதுபோலத் தவறுகளை நியாயப்படுத்துவதால் தான் சுர்ஜித் அப்பா தைரியம் அடைந்து தன்னுடைய மனைவிக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் என்று இரு நாட்கள் முன்பு கோரிக்கை வைத்துள்ளார்.
தன்னுடைய மகனின் சாவுக்குத் தானும் ஒரு காரணம் என்பதே இவருக்கு உரைக்கவில்லை. கொஞ்சம் கூடக் குற்ற உணர்வு இல்லாமல் இதில் எப்படி வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார் என்பதும் புரியவில்லை.
இவரைப் போன்றவரை ஆதரித்தற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
நன்றி உங்கள் பதிலுக்கு.