பேரறிவாளன் | காத்திருந்த கட்டுரை!

5
பேரறிவாளன் Perarivalan

க்கட்டுரை எழுதப்பட்ட நாள் 28 ஏப்ரல் 2014. அப்போது கிட்டத்தட்ட பேரறிவாளன் விடுதலையாகி விட்டதாகவே அறிவிப்பு வந்து விட்டது. அப்போது எனக்கு இருந்த மன நிலையில் இக்கட்டுரையை எழுதி இருந்தேன். Image Credit 

அவர் வீட்டை அடைந்தவுடன் வெளியிடலாம் என்று காத்திருந்தால், திடீரென்று மத்திய அரசு எதிர்ப்பால் விடுதலை ரத்தாகி விட்டது.

நானும் இக்கட்டுரையை அப்படியே வைத்து விட்டேன். தற்போது பரோலில் பேரறிவாளன் வெளியானதால், இக்கட்டுரையை அப்படியே எந்தச் சிறு மாற்றமும் (பிழை திருத்தம் உட்பட) இல்லாமல் வெளியிடுகிறேன்.

பேரறிவாளன் அம்மா, அற்புதம்மாள் “என் மகன் என் வீட்டை அடையாத வரை நான் இந்தச் செய்தியை நம்ப மாட்டேன்” என்று கூறி இருந்தார். இந்த முறை ஏமாற்றாமல் வந்து விட்டார்.

ஊடகங்களே, பொதுமக்களே! அவர்களைத் தொல்லை செய்யாதீர்கள்.

இந்த ஒரு மாதம் அவர்கள் இருவரும் பேச கடலளவு விசயம் இருக்கும். அவர்களை நிம்மதியாக இருக்க விடுங்கள்.

இனி என்னுடைய 2014 ம் ஆண்டுக் கட்டுரை (வெளியாகாதது)

பேரறிவாளன்

தவறு செய்யாமல் தண்டனை அனுபவிப்பது என்பது கொடுமையான செயல்களில் ஒன்று. நான் இங்கே கூறப்போவது பேரறிவாளன் பற்றி மட்டுமே!

மற்றவர்கள் பற்றி இங்கே நான் பேசப் போவதில்லை காரணம், அவர்கள் என்ன குற்றத்தில் சம்பந்தப்பட்டு இருக்கிறார்கள்? என்ன செய்தார்கள்? என்பது கூட சுத்தமாக நினைவில்லை.

என் மனதிற்கு இவர் குற்றம் புரியவில்லை என்று துவக்கத்தில் இருந்தே உள்ளுணர்வு கூறியது.

துவக்கத்தில் இருந்தே என்று கூறுவதே தவறு. அப்போது நான் சின்னப் பையன் எனவே, அது பற்றி புரிந்து கொள்ள எனக்கு அனுபவமில்லை / யார் குற்றவாளிகள் என்பது பற்றிய புரிதலும் இல்லை.

பின்னாளில் கிடைத்த / படித்த தகவல்கள் பாதிக்கப்பட்ட பேரறிவாளன் குறித்து விவரங்கள் பற்றி தெரிந்து கொண்ட போது சில புரிதல்கள் ஏற்பட்டது. இதனால், இவர் குறித்து மட்டும் ஃபாலோஅப் செய்து கொண்டு வந்தேன்.

பேரறிவாளனுக்கு மட்டும் ஏன் உங்களுக்கு அப்படித் தோன்றியது என்று கேட்டால்… நிச்சயம் என்னிடம் பதில் இல்லை. சில கேள்விகளுக்கு பதிலே இருக்காது அதில் ஒன்று தான் இது.

நான் தூக்குத் தண்டனைக்கு ஆதரவானவன். அதில் இன்று வரை எனக்கு மாற்றுக் கருத்தில்லை ஆனால், அது குற்றம் செய்தவர்களுக்குத் தான்.

ஒருவேளை பேரறிவாளன் இந்தக் குற்றத்தில் நேரடி தொடர்பு / இதில் சம்பந்தப்பட்டு இருந்தால், நிச்சயம் தமிழராக இருக்கிறார் என்ற காரணத்திற்காக எல்லாம் இவருக்காக பரிந்து பேச மாட்டேன்.

குற்றம் யார் செய்தாலும் குற்றமே! தவறு செய்தவர்கள் தண்டனை அனுபவித்தே தீர வேண்டும். அதே போல நிரபராதி எந்த விதத்திலும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது.

தன்னுடைய 19 வயதில் சிறைக்குச் சென்றவர் 42 வயதில் வெளியே வந்து இருக்கிறார். நினைத்தாலே எவ்வளவு கொடுமையாக இருக்கிறது.

வருடத்திற்கு நான்கு முறை ஜாலியாக சென்று வருகிறவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் தான் சிறை சொகுசான இடமாக இருக்கும்.

இது போல மாட்டுபவர்களுக்கு, முதல் முறையாக உள்ளே செல்பவர்களுக்கு அது ஒரு நரகம் என்று பல புத்தகங்களில் படித்து இருக்கிறேன். என் நண்பன் ஒருவன் கூறி கேட்டு இருக்கிறேன்.

தற்போது காலங்கள் கடந்து விட்டதால், சிறையில் காவலர்களால் இவருக்கு பெரியளவில் அழுத்தம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், துவக்க காலத்தில் நினைத்துப் பாருங்கள்.

எவ்வளவு சித்ரவதை செய்து இருப்பார்கள்? பொய்யான வாக்குமூலத்தை கொடுக்க எத்தனை மிரட்டல்களை அவர் மீது கட்டவிழ்த்து இருப்பார்கள்.

தவறு செய்யாத ஒருவன் தவறு செய்ததாக கையெழுத்து போடும் நிலை வந்தால்.. அதை அனுபவிப்பவருக்கே அதன் வலி புரியும்.

நிறைய சிறை சம்பந்தப்பட்ட திரைப்படங்களை பார்த்துள்ளதால், பேரறிவாளன் எவ்வளவு துன்பத்தை அனுபவித்து இருப்பார் என்று உணர முடிகிறது. எத்தனை நாட்கள் தனிமைச் சிறை! இதை தாண்டி வருவதே மிகப் பெரிய சவால்.

நம்மை ஒரு அறையில் தனியாக படிக்க / பார்க்க பேச யாருமில்லாத இடத்தில் இரண்டு மணி நேரம் விட்டால், எப்படி இருக்கும் என்று தெரியுமா? ஒவ்வொரு நிமிடமும் ஒரு யுகமாகக் கழியும்.

நமக்கு போர் அடிக்கும் போது அலுவலகத்திலேயே ஒரு நிமிடம், ஐந்து நிமிடம் போல நகரும். அப்படி என்றால் தனிமை எவ்வளவு கொடுமை.

இது போல நிலை தொடர்ந்தால் மனநிலை பாதிக்கப்படும் அல்லது வெறுப்பின் காரணமாக தற்கொலைக்கு மனம் தூண்டும். மன தைரியம் இருந்தால் மட்டுமே இதை எல்லாம் ஒருவர் தாண்டி வர முடியும்.

23 வருடமும் இவர் தனிமை சிறையில் இருந்து இருக்க மாட்டார் என்றாலும், சில காலம் நிச்சயம் இருந்து இருப்பார். இதெல்லாம் மிகவும் மோசமான தருணங்கள்.

வடிவேல் ஒரு படத்தில் சும்மாவே இருப்பார். அதை ஒருத்தர் கிண்டலடிக்க “எங்க நீ ஒரு நாள் சும்மா இருந்து பாரு பார்க்கலாம்” என்று சவால் விட்டு அவரால் முடியாமல் ஓடி விடுவார்.

இது நகைச்சுவையாக இருந்தாலும், சும்மா இருப்பது அதுவும் எப்போது சாகப் போகிறோம் என்றே தெரியாமல் தினம் தினம் பயந்து கொண்டே இருப்பது மிகவும் கடினமான சூழ்நிலை.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு எப்போது நிறைவேற்றப்படும் என்ற பயத்தில் எப்படி நாட்களை கடத்தி இருக்க முடியும்?! எனக்கு மன உளைச்சலாக இருந்தால், என்னால் ஒரு Blog கட்டுரை கூட எழுத முடியாது.

இத்தனை மன உளைச்சலில் சிறையில் இருந்தே படித்து, அதில் வெற்றி பெற்று “தங்கப் பதக்கம்” வாங்க எவ்வளவு மன வலிமை, திறமை வேண்டும்! இதெல்லாம் Just like that கடந்து போகும் சாதனைகள் அல்ல.

நான் எவ்வளவு வேண்டும் என்றாலும் காத்திருப்பேன் ஆனால், முடிவே தெரியாமல் எப்படி பயத்துடன் காத்திருப்பது. கசாப் தண்டனை நிறைவேற்றப் பட்ட போது இவரின் மனநிலை எப்படி இருந்து இருக்கும்?

நம்மையும் இதே போல திடீரென்று தூக்கில் போட்டு விடுவார்களோ! என்ன நடக்கும்? அம்மாவை பார்க்க முடியுமா? என்று எத்தனை கேள்விகள் மனதினுள் ஓடிக்கொண்டு இருந்து இருக்கும்.

மற்றவர்களுக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு இவரின் வேண்டுகோள் நிராகரிப்பட்ட போது என்ன நினைவுகள் மனதினுள் ஓடி இருக்கும்?!

இது இப்படி இருக்க, குற்றம் புரியாத மகனுக்காக 23 வருடங்கள் போராடிய ஒரு தாயை நான் கேள்விப்பட்டதில்லை.

தன்னால் எங்கெல்லாம் சென்று நீதி கேட்டுப் போராட முடியுமோ அங்கெல்லாம் சென்று முயற்சி செய்து இருக்கிறார். நினைத்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது.

எவரும் ஏதாவது ஒரு கட்டத்தில் மனதை விட்டு விடுவார்கள் அல்லது இனி ஆண்டவன் விட்ட வழி என்று சலிப்படைந்து விடுவார்கள்.

ஆனால், கடந்த வாரம் வரை விடா முயற்சியாகப் போராடி இருக்கிறார் என்றால், இவரின் மன உறுதியை என்ன கூறி பாராட்டுவது! இது போல அம்மா பேரறிவாளனுக்கு கிடைக்க அவர் கொடுத்து வைத்து இருக்க வேண்டும்.

இவர் போல எங்கள் ஊரில் ஒரு அதிசய அம்மாவைப் பார்த்து இருக்கிறேன். புனிதா என்பது அவர் பெயர்.

அவருடைய மகனுக்கு உடலில் ஹார்மோன் பிரச்சனை எனவே, ஐந்து வருடத்திற்கு ஊசி போட வேண்டும். ஒரு ஊசியின் (மருந்தின்) விலை 32,000 ருபாய். இது நடந்தது 1996 வருடத்தில்.

அப்போது 32,000 என்பது மிகப்பெரிய தொகை. அதோடு இவர் நடுத்தரக் குடும்பம் தான். இதற்காக தங்கள் சொத்து முழுவதும் இழந்தும் பலரிடம் உதவி பெற்று எப்படியும் அந்த மருந்தை போட்டு விடுவார்.

இதை படிக்கும் உங்களால் நம்ப முடிகிறதா? மாதம் 32,000 என்றாலே எப்படிடா சமாளிக்கப் போகிறோம் என்று இருக்கும்.

துவக்க காலத்தில் தினமும், பின் ஐந்து நாளைக்கு ஒரு முறை, பின் 15 நாட்களுக்கு ஒரு முறை பின் கடைசி வருடத்தில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை பின் வருடத்திற்கு ஒரு முறை என்று போட்டார்கள்.

தற்போது கூட இதை நினைத்தால் எனக்கு மலைப்பாக இருக்கிறது. இதில் மிகப்பெரிய விஷயம் என்னவென்றால், இடையில் ஊசி போட தவறினால் திரும்ப முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

இதற்காக தனி ஒரு பெண்ணாக சென்னை, சேலம் என்று மருத்துவரிடம் அலைந்து கொண்டு இருப்பார்.

கோபியில் அப்போது திரைப்பட படப்பிடிப்புகள் அதிகம் நடைபெற்றுக் கொண்டு இருந்ததால், நடிகர் நடிகைகள் வரவும் அதிகம் இருந்தது. அவர்களை எல்லாம் சந்தித்து உதவி பெற்று தன் மகனுக்கு தொடர்ந்து மருந்து கொடுத்து வந்தார்.

இவ்வாறு இவர் பண உதவி பெறுவதை பலர் தவறாகக் கூறினார்கள். இருந்தும், அதை எல்லாம் புறம் தள்ளி தொடர்ந்து போராடி ஐந்து வருடம் அந்த மருந்தைக் கொடுத்து, அவரது மகனை காப்பாற்றினார்.

தற்போது அவன் நன்கு படித்து நல்ல பணியிலும் இருக்கிறான். சமீபத்தில் திருமணமும் ஆகி விட்டது.

உண்மையாகக் கூறினால், இவர் நிலையில் நான் இருந்து இருந்தால், இது போல முயற்சித்து இருப்பேனா என்று தெரியவில்லை.

ஏனென்றால் இவர் எதிர்நோக்கிய போராட்டங்களும் வாங்கிய வசவுகளும் அத்தனை. என்னுடைய முதல் சம்பளத்தை இவருக்குத் தான் கொடுத்தேன். இன்றுவரை இதை நினைவு கூறுவார்.

தன் பிள்ளையைக் காப்பாற்றப் போராடிய இப்படிப்பட்ட ஒரு அம்மாவிற்கு பிறகு தற்போது தான் ஒரு (அற்புத) அம்மாவை காண்கிறேன்.

தூக்குத் தண்டனை ரத்து செய்யப்பட்டபோது அற்புதம்மாள் சந்தோசப்பட்டாலும், என் மகனை “குற்றவாளி இல்லை” “அவன் நிரபராதி” என்று கூறவில்லையே! என்று வருத்தப்பட்டார்கள்.

இது தான் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம்.

உண்மையில் பேரறிவாளன் குற்றவாளி என்றால் அப்பாடா! ரத்து ஆனதே போதும் என்று தான் நினைத்து இருப்பார்கள். மனதில் உண்மையும் நேர்மையும் இருப்பவர்கள் மட்டுமே இது குறித்து கவலைப்படுவார்கள்.

இவர்களின் நேர்மைக்கு இது ஒரு சிறப்பான சான்று. உண்மையில் எனக்கும் வருத்தமே! விடுதலை செய்தாலும் நிரபராதி என்று கூறவில்லையே!

அற்புதம்மா அவர்கள் கூறியதை அவர் நிலையில் இருந்து படித்துப் பாருங்கள், 23 வருடங்கள் எவ்வளவு கொடுமையானது. ஒரு தாயின் நிலையில் இருந்து பார்த்தால் தான் தெரியும். தூக்குத் தண்டனை ரத்தானதை ஒட்டி அவர் கூறியது பின்வருமாறு.

இழந்து போன என் மன நிம்மதியை மீட்டு இருக்கிறது. இனி எனக்கு கெட்ட கனவுகள் வராது. தூக்கத்தில் இருந்து எழுந்து, திடீரென்று மிரண்டு அலற மாட்டேன். இரவுகளில் வரும் தொலைபேசி அழைப்பு என் ரத்தக் கொதிப்பை அதிகரிக்காது.

ஒவ்வொரு நாளும் அதிகாலை தொலைக்காட்சி செய்தியை பதட்டத்துடனேயே பார்த்து விட்டு பிறகு தெளியும் நிலை இருக்காது.

ஒவ்வொரு முறையும் சிறையில் இருந்து வெளி வரும் பொழுது சொல்ல முடியாத துக்கம் என் தொண்டையை அடைக்காது. News credit seythigal

ஒருவர் எவ்வளவு மன அழுத்தத்தில் இருந்து இருந்தால் இது போல வார்த்தைகள் வந்து இருக்கும். இத்தனை நூறு கிலோ எடையை தினமும் தூக்கிக்கொண்டு நடப்பது என்றால் எவ்வளவு கொடுமையானது.

மகன் என்ன ஆவான்? தண்டனையை நிறைவேற்றுவார்களா? தூக்கு ரத்தாகுமா? என்று எத்தனை எத்தனை கேள்விகள்.

சமீப வருடங்களில் ஊடகங்களின் ஆதரவால், சில சமூக ஆர்வலர்களால் இவருக்கு ஒரு மரியாதை கிடைத்து இருக்கிறது ஆனால், கைது ஆன துவக்க காலத்தில் இவரது உறவினர்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் என்று பலரும் இவரை ஒதுக்கி இருப்பார்களே!

எந்த உதவியும் கிடைக்காமல் ஒவ்வொன்றுக்கும் அனைவரையும் எதிர்பார்த்து என்று மன உளைச்சல் மிகுந்த காலம். நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது.

அரசியல்வாதிகள் அதிகாரிகள் என்று பலரின் அலட்சியத்தால் எவ்வளவு தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.

சில கையெழுத்தில் ஒருவரின் தலையெழுத்தை மாற்றி விடக் கூடிய அதிகாரம் இருந்தும், அரசியல் லாபத்திற்காக எத்தனை தாமதங்கள்.

சமீபத்தில் ஒரு அதிகாரி தான் விசாரணையில் செய்த தவறை ஒப்புக்கொண்டதை கேட்ட பொழுது, சம்பந்தமே இல்லாத எனக்கே அவ்வளவு ஆத்திரமாக இருந்தது.

பாதிக்கப்பட்டு 23 வருடங்களாக சிறையில் இருப்பவருக்கும் அவரது அம்மாவிற்கும் எப்படி இருந்து இருக்கும்!! பலரின் அலட்சியம் சுயநலத்தால் ஒருவரின் வாழ்க்கையே வீணடிக்கப்பட்டு விட்டது. இழந்த இளமை திரும்பக் கிடைக்குமா?!

விடுதலை என்று அறிந்து பிறகு சிறையில் இருந்த சில நாட்கள் மிகவும் சுவாரசியமான நாட்களாக இருந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு அலுவலகத்தில் பணியில் இருந்து ராஜினாமா செய்து வேறு நிறுவனம் ஒரு வாரத்தில் மாறப்போகிறீர்கள் என்றால், உங்களுக்கு அந்த இடைப் பட்ட நாளில் தற்போதைய அலுவலகத்தில் எந்த பொறுப்பும் பெரியளவில் இருக்காது.

வழக்கமான நெருக்கடிகள் இருக்காது, சுதந்திரமாக இருக்கும். இந்தக் காலம் ஒரு சந்தோசமான காலம். அந்தக் கடைசி சில நாட்கள் சிறையில் என்ன நடந்து இருக்கும்?!

கட்டுப்பாடுகள் குறைந்து, காவலர்கள் வாழ்த்தி, இதுவரை இல்லாத அன்பை காட்டி என்று புது அனுபவம் அவருக்கு கிடைத்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

மாற்றாக நடந்து இருந்தாலும், “என்ன! சில நாட்கள் தானே சுதந்திரக் காற்றை அனுபவிக்கப் போறோமோ” என்ற மகிழ்ச்சியே மனதில் குடி கொண்டு இருக்கும். 23 வருடம் இருந்தவருக்கு சில நாட்கள் இருப்பதா கஷ்டம்! சுகமான சுமை.

நினைத்துப் பாருங்கள்.. வெளிநாட்டில் 6 மாதம் இருந்து நம் சொந்த ஊருக்கு வந்தாலே ஆயிரம் மாற்றங்கள் தெரியும். என்னது தோசை 60 ரூபாயா!! என்று அதிர்ச்சியாக இருக்கிறது.

நீதிமன்றத்திற்கு வந்ததைத் தவிர வேறு எங்கும் வெளியே சென்று இராமல் 23 வருடங்கள் சிறையிலேயே நான்கு சுவருக்குள் கழித்து தற்போது வெளியே வந்தால், உலகமே மாறி விட்டது போல இருக்காதா!!

எதோ வேறு உலகிற்குள் வந்தது போல இருக்கும். எத்தனை மாற்றங்கள் நடந்து இருக்கும்!! என்னால் அவரின் நிலையில் கற்பனையே செய்ய முடியவில்லை.

சிறையில் செய்தித்தாள்கள் தொடர்ந்து படித்து இருந்தால், இவருக்கு கொஞ்சம் பழக்கப்பட்டு இருக்கும். இருப்பினும், நேரில் எதிர்கொள்ளும் போது ஒவ்வொன்றும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் கலந்தே இருக்கும்.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவின் மடியில் தலை வைத்து தூங்குவாரோ!

“அம்மா! 23 வருடங்களுக்குப் பிறகு இன்று தான் நான் தூங்குகிறேன்” என்று நிம்மதியாக கண்ணுறங்குவாரோ! இனியாவது இறைவன் இந்தக் குடும்பத்திற்கு நிம்மதியை வழங்கட்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.

குறிப்பாக அரசியல்வாதிகள் விளையாட்டில் சிக்கி திரும்ப வாழ்க்கையை தொலைத்து விடக் கூடாது. எனவே அனைத்து அரசியலையும் ஒதுக்கி புது வாழ்க்கை துவங்க வாழ்த்துக்கள்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

 1. புனிதா அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

 2. உண்மையில் உருக்கமான பதிவு. நீங்கள் கூறியது போல் என்னுடைய சிறு வயதில் இது நிகழ்ந்ததால் இந்த வழக்கை பற்றிய முழுமையான தகவல்கள் தெரியாது. ஆனால் 23 வருடங்கள் என்பதை நினைத்து பார்க்க முடியவில்லை. வாழ்வின் பெரும்பகுதி சிறைச்சாலையில் கழிந்து விட்டது. சமுதாயத்தை பொறுத்தவரை இது வெறும் செய்தி. ஆனால் அவரது தாயாரின் மனநிலையில் இது மறுபிறவி.

  புனிதா அம்மையாரின் உழைப்பு கற்பனையிலும் என்ன முடியாத ஒன்று!!!! 10000 ரூபாய் சம்பளம் வாங்கும் போது 50000 இக்கான தீடீர் செலவு வந்தாலே கலங்கி விடுவோம் இன்று!!!! 1996 இல் மாதம் 32000 ரூபாய் என்பது நினைக்க முடியாத ஒன்று!!! சத்தியமாக இவரின் மனவலிமை எத்தனை பேருக்கு இருக்குமென்று யோசிக்க கூட முடியவில்லை!!!!

  கல்லூரி பருவத்தில் ( 1999 – 2004) தினமும் ஒரு வயதான பெண்மணியின் ரோட்டோர இட்லி கடையை கடந்து செல்வேன். ஒருநாள் கூட சாப்பிட்டது இல்லை. ஆனால் இந்த கடையை கடக்கும் போது மட்டும் ஒரே ஒரு எண்ணம் மட்டும் தோன்றும். (இவரின் இந்த நிலைக்கு காரணம் என்ன??? நான் சம்பாரிக்கும் போது அவருக்கு உதவ வேண்டும் என்று!!!) மனதில் எண்ணி கொண்டேன்…

  வெளிநாடு வந்து முதல் விடுமுறையில் (2009 ) அவரது கடைக்கு சென்று சாப்பிட்டுவிட்டு 5000 ரூபாய் கொடுத்தேன்.. எதற்க்கு என்று வினவி??? பின்பு நான் எல்லாவற்றையும் விளக்கியும் கூட பணத்தை வாங்கவில்லை. அந்த தருணம் உண்மையில் மறக்க முடியாத தருணம்.

  உறவுகள் பணம் பணம் என்று நம்மை பிடுங்கும் போது எந்த உறவுமே இல்லாத அந்த அம்மையார் பணத்தை தவிர்த்தது உண்மையில் அவர் மீது மதிப்பை எனக்கு இன்னும் அதிகரித்தது!!!! பணமில்லாதவர்கள் தான் பணத்தின் மீது பற்று இல்லாதவர்களாக இருப்பதை நான் கண்ட காட்சி என்னை பிரமிக்க வைத்தது….பகிர்வுக்கு நன்றி கிரி!!!

  • ரொம்ப பீல் ஆயிட்டேன் .. நான் இதுபோன்றவர்களை பார்க்க நேரிடும் போது உணர்சசி வசப்பட்டு கண் கலங்கி இருக்கேன். இதுபோல முதல் மாத சம்பளம் எல்லாம் கொடுத்தது இல்லை. வயதானவர்கள் சிறுவர்கள் செய்யும் வியாபாரத்தில் பொருளின் மதிப்பு ஐம்பது ரூபாய் என்றால் நூறு ரூபாய் கொடுத்துவிட்டு திரும்பி கூட பார்க்காமல் காத்து கேளாத மாதிரி வேக வேகமாக வந்து விடுவேன்.

   பெரும்பாலானோர் பின்னாடியே வந்து திருப்பி கொடுத்து பிறகு அவர்களிடம் எடுத்து சொல்லி வலுக்கட்டாயமாக அனுப்பி வைப்பேன். அப்படியும் சிலர் முடியாது என்று உறுதியாக இருப்பார்கள். அவர்களைப் போன்றோரிடத்தில் மேலும் ஏதாவது ஒரு பொருளை வாங்கி கொண்டு போவேன்.

 3. @கார்த்திக் பெண்கள் நிழற்படங்களை அவர்கள் அனுமதியில்லாமல் என்னுடைய தளத்தில் பகிருவதில்லை.

  @யாசின் மாதம் 32000 அல்ல.. துவக்கத்தில் தினமும் 32000 . இறுதி வருடங்களில் மட்டுமே மாதம் 32000.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here