சக்கர வியூகம் (நாவல்)

6
chakraviyugam novel சக்கர வியூகம்

க்கர வியூகம் என்ற தலைப்பு ஈர்ப்பாக இல்லை ஆனால், நாவல் அருமை 🙂 .

சக்கர வியூகம்

பத்து நாட்களில் திருமணம் என்ற நிலையில், ‘தமிழ்நதி’ சென்னையில் இருந்து சொந்த ஊர் மதுரைக்குச் செல்லப் பேருந்துகள் ரயில்களில் பயணச்சீட்டு கிடைக்காததால், நண்பரின் நண்பர் வாடகைக் காரில் பயணம் செய்கிறார்.

ஊருக்குக் காரில் செல்லும் போது நடக்கும் எதிர்பாராத சம்பவங்களே நாவலின் மையக் கதை.

நாவலின் துவக்க உரையாடலே என்னை ரொம்பக் கவர்ந்து விட்டது. நம்ம வீட்டில் நடப்பது போல இயல்பான, நகைச்சுவையான உரையாடல்.

நாவல் துவங்கி இறுதி வரை பரபரப்பாக இருந்தது. அடுத்தது என்ன நடக்குமோ என்ற ஆவல், பரபரப்பு, பயம் தொடர்ச்சியாக இருந்தது.

இயல்பான உரையாடல்

முக்கியக் கதாப்பாத்திரங்களான தமிழ்நதி, ஸ்ரீதரன் உரையாடல் மிக இயல்பாகவும், எரிச்சலை கிளப்பாமலும் இருந்தது.

இவர்கள் இருவருக்குமான பயணம், உரையாடல் நீண்டு சில நேரங்களில் இப்பயணம் எப்போது முடிந்து எப்படா அடுத்த காட்சி ஆரம்பிக்கும்! என்ற எண்ணம் தோன்றினாலும், சுவாரசியமாக இருந்ததை மறுப்பதற்கில்லை.

நமக்கு எங்கெல்லாம் கேள்விகள் தோன்றுமோ அங்கெல்லாம் அதற்கான பதிலை ஆசிரியர் கொடுப்பதால், படிக்க நம்பும்படியுள்ளது.

வழக்க போல என்ன? எப்படி? கேள்விகளும் உள்ளது.

ஸ்ரீதரன் கதாப்பாத்திரம் மிகச்சிறப்பாக அமைக்கப்பட்டு இருக்கிறது, தமிழ்நதி கூட. ஸ்ரீதரன் தொடர்ச்சியாகத் தமிழ்நதியை கிண்டல் செய்து வருவதும் அதற்குத் தமிழ்நதியின் எதிர்வினையும் எதார்த்தமாக இருந்தது.

சில காட்சிகளை ஊகிக்க முடிந்தாலும், உறுத்தும்படியில்லை. இறுதியில் மிக வேகமாக முடித்தது போல இருந்தது, இன்னும் விவரிக்க வாய்ப்புகள் இருந்தும்.

ஒரு காட்சியில் இருந்து நம்மை அறியாமலே இன்னொரு காட்சிக்கு அழைத்துச் செல்வது மிகச் சிறப்பு. கொஞ்சம் படித்த பிறகே நாம் இதை உணர முடியும், செம.

தமிழ்நதி அம்மா, தங்கை கதாப்பாத்திரங்கள் நம்ம வீட்டுல நடக்கும் உரையாடல்கள் போல இருப்பதே நாவலுக்கு ஒரு நெருக்கத்தைக் கொடுக்கிறது.

வர்ணனைகளுக்கு அதிக நேரம் எடுக்காமல், உரையாடலுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருந்தது ரசிக்கும்படி இருந்தது.

ஏனென்றால், சில நாவல்களில் வர்ணனையே நமக்குச் சலிப்பைக்கொண்டு வந்து விடும்.

வர்ணனை என்று தெரிந்தால், அதைத் தவிர்த்துக் கதைக்கு வரும் அளவுக்கு என்னைச் சில நாவல்கள் சோதித்துள்ளன. வர்ணனையே சில சமயம் இரு பக்கங்கள் இருக்கும்.

கருவாச்சி காவியம்‘ போன்ற நாவல்கள் வர்ணனை மிகச் சிறப்பாக இருந்தன.

ஆசிரியர் சஷி முரளிக்குப் பாராட்டுகள். அனைவருக்கும் இந்நாவலை பரிந்துரைக்கிறேன்.

கொசுறு

என்னுடைய அக்காக்கள் இருவர் புத்தகம் மிகத் தீவிரமாகப் படிப்பார்கள்.

நான் ஊருக்குச் சென்று இருந்த போது Kindle யை எடுத்துச் சென்று இருந்தேன். இப்புத்தகம் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று தோன்றியதால், அக்காவுக்குப் படிக்கக் கொடுத்தேன்.

அக்காவும் தேர்வுக்குப் படிப்பது போல, நான் ஊருக்குக் கிளம்பினால் Kindle யை எடுத்துச் சென்று விடுவேன் என்பதால், வேகமாகப் படித்தார் ஆனாலும் முடிக்க முடியவில்லை.

நான் சென்னை கிளம்பி விட்டேன். தற்போது முக்கால்வாசி புத்தகம் படித்துவிட்டு மீதியை முடிக்க முடியாத கடுப்பில் உள்ளார் 🙂 .

அமேசானில் வாங்க –> சக்கர வியூகம் Link

தொடர்புடைய கட்டுரை

“அமேசான் Kindle” அனுபவங்கள்

என்னுடைய முதல் அமேசான் இ-புத்தகம்

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. வணக்கம் அண்ணா
    அமேசனில் தேடலில் கிடைக்கவில்லை, லிங் ஏதாவது கொடுக்க முடியுமா ?

    நன்றியுடன்
    மதிசுதா

  2. நியாயமாக நானே விமர்சனத்தில் கொடுத்து இருக்க வேண்டும். எளிதாகக் கண்டு பிடித்து விடலாம் என்று நினைத்தேன்.

    https://www.amazon.in/Chakraviyugam-Tamil-Sashi-Murali-ebook/dp/B0739V7L8D

    படித்துட்டு எப்படி உள்ளது என்று கூறவும். என்னோட அக்காக்கு ரொம்ப பிடித்தது 🙂 .

    • மிக்க நன்றிகள்

      இன்னொரு விடயம் அண்ணர், உங்களது வலைத்தளத்தின் கருத்துப் பெட்டிகள் மொபைல் வியூ வில் வருவது இல்லை

      • தெரியும் மதிசுதா. அதைத் தெரியவைக்க வேண்டும் என்றால், அதற்கு நான் கொஞ்சம் செலவு செய்ய வேண்டும். அதனால், அப்படியே விட்டுட்டேன்.

        தற்போது கருத்துக் கூறுபவர்கள் குறைந்து விட்டார்கள், எனவே, எதற்குத் தேவை இல்லாத செலவு என்று விட்டுட்டேன். எதிர்காலத்தில் சரி செய்யும் எண்ணம் உண்டு.

  3. கிரி, உங்க அக்காவுடைய ஆர்வத்தை பார்க்கும் போது, நான் எட்டாவது படிக்கும் போது ராணி காமிஸ் மாயாவி புத்தகங்களை படித்த நிகழ்வுகள் மனதிற்குள் வந்து போகின்றது.. என்ன ஒரு மாய உலகம் தெரியுமா அது!!! ப்பா!!! இப்ப நினைத்தாலும் மனசு துள்ளி குதிக்கிறது… புத்தகம் வாங்க காசு சுத்தமா இருக்காது.. வீட்லயும் கேட்க முடியாது..

    அதனால் எங்க வீட்டுக்கு எதிர் வீட்ல இருக்குற நண்பன் வீட்ல கேட்டு வாங்கி படிப்பேன்.. அதுலயும் என் நண்பன் வைப்பான் பாருகுங்க செக்!!! அவனுக்கு வீட்டு பாடம் எழுதி கொடுத்தா மட்டும் தான் புத்தகத்தை படிக்க குடுப்பான்.. அவங்க வீட்ல கடைக்கு போறது, ரேஷன் கடைக்கு போறது என மற்ற வேலைகளையும் பார்க்கணும்.. அதுவும் எங்க வீட்டுக்கு தெரிய கூடாது..

    என் கண்ணுக்கு மாயாவி மட்டும் தான் தெரியும்.. அதனால எல்லாத்தையும் தாங்கி கொள்வேன்.. சில ஆண்டுகளுக்கு முன், ஊருல இருக்கும் போது பரனை சுத்தம் செய்யும் போதும், அதே மாயாவி புத்தகம்.. சொல்லனுமா என்ன??? உட்கார்ந்து புத்தகத்தை முழுமையாக படித்தேன்.. 15 வருடங்களுக்கு முன் படித்த அதே புத்தகம்.. ஆனால் இன்று படிக்கும் போது சுவாரசியம் இல்லை… என்ன ஒரு மாற்றம் என்னுள்!!! பகிர்வுக்கு நன்றி கிரி.

  4. நானும் காமிக்ஸ் புத்தகங்கள் இரண்டு மூட்டைகளில் வைத்து இருந்தேன். மிகைப்படுத்தவில்லை.

    பலவற்றை பைண்டிங் செய்து வைத்து இருந்தேன். அனைத்துக்கும் என் அப்பா தான் காரணம்.

    இடையில் பல வருடங்கள் புத்தகங்கள் பக்கமே செல்லாமல் இருந்தேன், பொன்னியின் செல்வன் படித்த பிறகு மீண்டு புத்தகம் படிக்கும் ஆவல் ஏற்பட்டது.

    பின்னர் புத்தகம் வைக்க இடம் இல்லாமல் புத்தகம் படிப்பது குறைந்தது. தற்போது மீண்டும் Kindle வந்து மீண்டும் வாய்ப்பைக்கொடுத்துள்ளது.

    நீங்கள் சொல்வது போல சில புத்தகங்கள் முன்னர் வியப்பாகப் படித்தது தற்போது ஒன்றும் இல்லாமல் உள்ளது. அட! இதைப் போயா இப்படி படித்தோம் என்று உள்ளது.

    திரைப்படங்களும் இதே போல.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here