டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்!

7
டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும்!

டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும் கட்டுரை நடிகர்களின் ரசிகர்களுக்கானது, மற்றவர்கள் விருப்பப்பட்டால் மட்டும் தொடரவும்.

சமூகத்தளங்களும் இணையமும் திரைப்படங்களின் கொண்டாட்டத்தைச் சிதைத்து விட்டன. காலத்துக்கு ஏற்ப மாற்றம் தவிர்க்க முடியாது என்றாலும், இந்த மாற்றம் கடுப்பையே தருகிறது. Image Credit

டிராக்கர்ஸ்

முன்பு ஒரு திரைப்படம் வந்தால், வசூல் குறித்துத் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் அதை வைத்து ரசிகர்கள் மற்ற நடிகர்களின் வசூலோடு ஒப்பிட்டு விவாதிப்பார்கள், இது வழக்கமானது.

தற்போது எவர் வேண்டும் என்றாலும், எதையும் கூறலாம் என்ற நிலையாகி விட்டது.

ட்ராக்கர்ஸ் என்ற பெயரில் அனைவரும் தங்களின் வசதிக்கு ஏற்ப வசூலை கூட்டி குறைத்து விருப்பம் போல விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் கூடத் தெரியாத வசூல் தகவல்களை இணையத்தில் டிராக்கர்ஸ் கொடுத்துக் கொண்டுள்ளார்கள்.

இதையும் நம்பி ரசிகர்கள் சண்டை போட்டுட்டு இருக்காங்க. இதனால் எதிர்மறை எண்ணங்களே அதிகரிக்கிறது.

ஒரே படத்துக்குப் பல்வேறு வசூல் கணக்குகள்

இதில் என்ன கொடுமை என்றால், இவர்கள் இரு வருடங்களுக்கு முன் ஒரு படத்துக்கு ஒரு வசூலையும் ஓரிரு வருடங்களுக்குப் பிறகு அதே படத்துக்கு வேறு வசூல் தகவலையும் கொடுப்பார்கள். கேட்டால், அதற்குப் பதிலே இருக்காது.

தற்போது சில / பல தயாரிப்பாளர்களே ட்ராக்கர்களில் சிலருக்குப் பணத்தைக் கொடுத்துப் பொய்யான தகவலைக் கூற வைக்கிறார்கள்.

இவர்களும் பணத்துக்காகப் பொய்யான வசூல் கணக்கைக் கொடுக்கிறார்கள்.

இதை அறியாத முட்டாள் ரசிகர்களும், தங்களுக்கு சாதகமாக இருந்தால் இதை வைத்துச் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

வசூலே தீர்மானிக்கிறது

முன்பு எவ்வளவு நாட்கள் ஒரு திரைப்படம் ஓடுகிறதோ அது தான் வெற்றிப்படமாக இருந்தது.

ஆனால், தற்போது அதிகத் திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதால், எவ்வளவு வசூல் என்பது தான் முக்கியமானதாக மாறி விட்டது.

எனவே, ட்ராக்கர்கள் காட்டில் மழை.

ரசிகர்களும் பல இடங்களில் இருந்து தகவல்களை எடுத்து வந்து, இந்த வசூலைப் பார், அதைப் பார் என்று சண்டைபோட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

தங்கள் விருப்ப நடிகர் வசூலை அதிகமாகக் காட்ட மற்ற நடிகரின் படத்தின் பொய்யான தகவல்களைப் பரப்புவதும், படத்தின் வசூலை குறைக்கப் படத்தைப் பற்றிய எதிர்மறையான தகவல்களைப் பரப்புவதும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

இது திரைப்படங்களை ரசிப்பதையே கெடுக்கிறது.

வசூல் பற்றி ரசிகனுக்கு ஏன் கவலை?

சில வருடங்களுக்கு முன்பு நண்பன் பாபுவிடம் பேசும் போது வசூல் பற்றிய பேச்சு வந்ததால்,

ஜி! நமக்கு எதுக்கு ஜி வசூல் பற்றியெல்லாம், படத்தை என்ஜாய் பண்ணிட்டு போவோம்” என்று கூறுவான்.

எனக்கு உடன்பாடு என்றாலும், முழுவதும் புறக்கணிக்கவில்லை ஆனால், சமீப வருடங்களில் பலர் மனப்பிறழ்வு ஆனது போல வசூலுக்காகச் சண்டை போடுவதைப் பார்த்து, இரு வருடங்களுக்கு முன்பு வசூல் பற்றிச் சிந்திப்பதை குறைத்து விட்டேன்.

வசூல் குறித்துச் சிந்திப்பது என்னுடைய திரைப்பட ரசனையைப் பாதிக்கிறது. இதை திரை ரசிகனாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

எழுத்து Passion என்றால், என் பொழுதுபோக்கு இசை, திரைப்படங்களைப் பார்ப்பதும் தான். தொடர்ந்து 4 படங்கள் என்றாலும் சலிக்காமல் பார்ப்பேன்.

இவை இல்லாத உலகத்தை என்னால் கற்பனையும் செய்ய முடியவில்லை.

ஒரு ரஜினி ரசிகனாகத் தலைவர் படத்தை யாராவது ஏதாவது கூறினால் கோபம் வரும் ஆனால், பாபு கூறியது போல வசூல் எல்லாம் தயாரிப்பாளர் யோசிக்க வேண்டியது நாம் ஏன் பேசிட்டு இருக்கணும் என்று தோன்றி இதைத் தவிர்த்து விட்டேன்.

ஆனால் இவ்வளவு வருடங்களாகத் தொடர்ந்ததை அவ்வளவு எளிதில் விட முடியவில்லை, கடந்த “பேட்ட” படத்தில் கிட்டத்தட்ட அதில் இருந்து வெளியே வந்து விட்டேன். தர்பாரில் முழுக்க வெளியே வந்து விடுவேன்.

அதாவது, “தர்பார்” வசூல் பற்றி யோசிக்காமல் படத்தை மட்டும் ரசிப்பேன். அதன் பிறகும் அது குறித்துச் சிந்திக்க மாட்டேன்.

எவனோ எதையோ உளறிட்டுப் போறான்.. நமக்கென்ன?! நாம் உண்மை கூறினாலும், எதையாவது கொண்டு வந்து இதைப்பார் என்பார்கள்.

அனைத்துத் தகவல்களும் பொய்

இதில் கூறப்படும் தகவல்கள் அனைத்துமே பொய், ட்ராக்கர்ஸ் கொடுப்பது தனிப்பட்ட விருப்பு வெறுப்பு மற்றும் பணம் கொடுப்பவர்களுக்கான தகவல்கள்.

அவர்களின் நேர்மையில்லாத தகவல்களுக்காகவும், பணத்துக்காகப் பொய்யாகத் தரும் தகவல்களை நம்பியும் சண்டையிடுவது முட்டாள்த்தனம்.

டிராக்கர்ஸ் அரசியலும் உணராத ரசிகர்களும் கட்டுரையைப் படிக்கும் அனைத்து நடிகர்களின் ரசிகர்களுக்கும் கூறுகிறேன்.

படத்தை ரசியுங்கள், வசூல் சண்டை என்ற பெயரில் முட்டாளாகாதீர்கள்.

அதிகாரப்பூர்வமான வசூல் தகவல்கள் கிடைக்காத தற்போதைய சூழ்நிலையில், ட்ராக்கர்ஸ் தகவல்களை நம்பி சண்டையிடுவது முடிவே இல்லாத விவாதம்.

எந்த நடிகர் படம் நன்றாக இருந்தால் என்ன? ஓடட்டுமே!  ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள்?! இது போன்று அதிகரிக்கும் எதிர்மறை எண்ணங்கள் உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையையே பாதிக்கும் வல்லமை பெற்றவை.

இதைப்படித்து ஒருவராவது தன்னை மாற்றிக்கொண்டால்… மகிழ்ச்சி!

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

7 COMMENTS

 1. நல்ல பதிவு கில்லாடி.
  கண்டிப்பாக ஒரு சதவிகிதமாவது யோசிக்க வைக்கும்.
  மகிழ்ச்சி 🙂

 2. விஸ்வாசம் படம் பல ரஜினி ரசிகர்களிடம் மாற்றத்தை கொண்டு வந்திருக்கிறது. இனிமேல் ரஜினி, அஜித் விஜயுடன் மோதி எல்லா நேரமும் வெல்ல முடியாது என்பது தெரிந்தவுடன் இனிமேல் வசூல் விபரங்களை பார்க்கவே தேவையில்லை என்ற திடீர் யோக நிலையை அடைந்துள்ளார்கள். நீங்கள் இந்த முன்னரே முன் முடிவுக்கு வந்திருக்கலாம்.
  ஆனால் நான் நிறைய ரஜினி ரசிகர்கள் பொங்கல் தொடங்கி முதல் 10 நாள் வசூல் சண்டை பிடித்து பின்னர் , தமிழ் நாட்டில் விஸ்வாசம் பேட்டையை முந்திவிட்டது உறுதிப்படுத்தியபின்னர், படத்தை மட்டும் ரசிப்போம் என்ற முக்தி நிலைக்கு போய்விட்டார்கள். சர்க்கார் பட நேரத்தில் தங்க காசு வாங்கியவர்களாக எந்த டிரக்டர்களை கலாய்த்தவர்களோ பேட்டை பட நேரத்தில் அதே டிரக்கர்களை திட்டி தீர்த்தார்கள். ரமேஸ் பாலா என்ற டிரக்டர் ரஜினி ரசிகர்களிடம் இன்று வரைக்கும் மிதி பட்டபடிதான் ருவீட்டரில் வாழ்கிறார்.

  குடும்ப படங்களின் ரசிகரான நீங்கள கூட விஸ்வாசம் படம் பற்றி மூச்சுக்கூட விடவில்லை. நான் உங்களை சீண்டுவதற்காக கேட்டபோதும் நீங்கள் மறுத்தீர்கள். கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த உங்களுக்கு விஸ்வாசத்தை ரசிக்கமுடியவில்லை என்றால் ரஜினி200 இன் போதுதான் நீங்கள் சொல்லும் மனநிலையை அடைவீர்கள்.( ரஜினி200 நிச்சயமாக வரும். ) சினிமாவின் தீவிர ரசிகரான மன முதிர்ச்சியான உங்களாலேயே உங்களின் தலைவரின் படத்துடன் வெளிவந்த இன்னுமொரு படத்தை பற்றி பேச முடியவில்லையென்றால் என்னத்தை சொல்லுவது.

  எவ்வாறு உங்களால் எல்லா டிரக்டர்களுமே பொய் சொல்லுவதாக முன் முடிவுக்கு வர முடிகிறது. தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் வைத்திருந்தால் அங்கே உள் நிலவரம் அறிய முடியாதா. திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னால் நம்பு முடிபவர்களால் டிரக்டர்கள் சொல்லுவதை ஏற்க முடிவதில்லை. விஸ்வாசம் வினையோகஸ்தர் உத்தியோகபூர்வமாக 125 கோடி வசூல் என்று அறிவித்ததையும் ஏற்க முடியவில்லை.

  இது ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய் அஜித் தொடங்கி சிவகார்த்திகேயன் ரசிகர்கள் வரைக்கும் பொருந்தும்.

  பொங்கல் தருணத்தில் இந்த சண்டையினால் உண்மையாகவே பலனடைந்தது கே.ஜே.ஆர் யும் சன் டிவீயும்தான். இதை எந்த நடிகரின் ரசிகரும் உணரவில்லை. விஸ்வாசத்தை 5 தடவை 10 தடவை பார்த்ததாக பெருமைப்பட்டு நிறைய அப்பாவிகள் ருவீட் செய்திருந்தார்கள்.

  வெறும் திரைப்படமாக இரு படங்களையும் பார்த்த எனக்கு இரு படங்களுமே மிக மிக சுமாரான பொழுதுபோக்கு படமாகவே இருந்தது.

  • ஹலோ அஜித் படமாவது தியேட்டர்ல ஃபுல்லா ஓடி பாத்திருக்கேன் but பிகில் மாதிரி ஒடாமலே 300 கோடிணு வடை சுடர ரசிகர்கள் அஜித்துக்கும் இல்ல தலைவர்க்கும் இல்ல இன்னும் ரஜினியின் தோல்வி படம் என்று கூறும் படங்களின் வசூலே 150 கோடிக்கு மேல் என நிறைய பத்திரிக்கைகளில் படித்திருக்கிறேன்
   இன்னும் விஜய் போன்ற நடிகர்கள் அஜித் தின் 100 கோடி படங்களை விட குறைவாக கொடுத்து விட்டு பிதற்றுகிரார்கள் . இந்த வகையில் அஜித் எவ்வளவோ மேல் தனது ரசிகர்களை இது போன்ற செயல்களில் ஈடு படாமல் இருக்க பல அறிக்கைகளை வெளியிடுகிறார் ,விஜய் போன்றோர் அவரது அமைப்பின் மூலம் பொய் டிராக்கர்ஸ் களை உருவாக்கி கொண்டிருக்கிறார்கள் ..இப்போது புதிதாக 100கோடி சம்பளம் என்று கதை வேற.. தெலுங்கு பட கம்பனியில் நடிப்பதை மறைக்க 100கோடி கதை.. ரஜினியின் இடத்தை நிரப்ப விஜய் 40 வருடங்களுக்கு மேல் ஹிட் கொடுக்க வேண்டும் இது எந்த நடிகனாலும் முடியாது. விஜய் ரசிகர்கள் 90% ஸ்கூல், அல்லது காலேஜ் ரசிகர்கள் தான் வயது 24 குள் எனவே இவர்களுக்கு ரஜினி பற்றி தெரிய வாய்ப்பு இல்லை ..உங்கள் வாழ்கையை பாருங்கள் அவர்களின் வருமானத்தை. அவர்கள் பார்த்து கொள்வார்கள்

 3. @விஜய் 🙂

  @ப்ரியா

  உன்னோட மனசு முழுக்க எதிர்மறை எண்ணங்களே நிறைந்துள்ளது. இந்த எண்ணங்கள் உன்னை எப்போதும் இது போலவே யோசிக்க வைத்துக்கொண்டே இருக்கும்.

  நேர்மறையாக சிந்தியுங்கள் என்று கட்டுரை எழுதினால் அதில் வந்து இந்த மாதிரி எழுதி வைத்து இருக்கே!

  நான் எழுதும் கட்டுரைக்கு பதில் அளிக்க நான் தயங்கியதே இல்லை.. இதோ என்னுடைய பதில்.

  “குடும்ப படங்களின் ரசிகரான நீங்கள கூட விஸ்வாசம் படம் பற்றி மூச்சுக்கூட விடவில்லை.”

  உன்னுடைய பிரச்னை என்னவென்றால், நீ நினைப்பதை மற்றவர்களும் நினைக்கணும் என்று எதிர்பார்க்கிறாய். அது தான் சரியாக இருக்கும் என்று நீ நம்புகிறாய்.

  அப்படியில்லை என்றால், உன்னோட கற்பனையில் உதிப்பதை ஊகமாக எழுதிக்கொண்டு இருக்கிறாய். மற்றவர்களுக்கு ஏதாவது காரணம் இருக்கலாம் என்று அதை மதிக்க வேண்டும்.

  நான் தலைவர் ரசிகன் என்று பலருக்கு தெரியும்.. இதில் நான் விமர்சனம் எப்படி எழுதினாலும் நீங்கள் ரஜினி ரசிகன் என்பதால் இப்படி கூறுகிறீர்கள் என்று கூறுவார்கள்..

  ஏன்.. இவ்வளோ பேசுற நீயே முதல் ஆளா வந்து சொல்லுவே! ரஜினி படத்துக்கு அப்படி சொன்னீங்க.. இப்ப விஸ்வாசத்துக்கு இப்படி சொல்றீங்க என்று..

  நானே யோசித்து இராத காரணங்களை எல்லாம் கண்டு பிடித்து சொல்லுவாய்.. “ஊகம் என்ற பெயரில்”.

  ஏற்கனவே இது போன்ற பிரச்சனைகளால் கமல் படங்களுக்கு விமர்சனம் எழுதுவதில்லை என்று முடிவில் உள்ளேன்.

  எனவே, தவிர்த்து விட்டேன்.. இதில் என்ன கொலை குற்றத்தை கண்டாய்?!

  எழுதி தவறாக விமர்சித்து இருந்தால், விமர்சிப்பதில் நியாயம் உண்டு.. விமர்சனம் எழுதவில்லை என்பதற்கெல்லாம் ஒரு விமர்சனமா? என்ன கொடுமை சார்.

  இக்கட்டுரை கூட நான் எழுதி பல நாட்கள் ஆகிறது.. அப்போது வெளியிட்டால் தவறாக புரிந்து கொள்ளப்படும் என்று தாமதமாக வெளியிட்டேன்… ஆனால் இதிலும்…!

  “நான் உங்களை சீண்டுவதற்காக கேட்டபோதும் நீங்கள் மறுத்தீர்கள். ”

  காரணம் மேலே கூறப்பட்டுள்ளது.

  என்னை எதற்கு சீண்டணும்? இது தவறு என்று தோன்றவில்லையா?! இது தேவையற்ற பிரச்சனையை உண்டு பண்ணும் என்று நீ உணரவில்லையா? இல்லை அதை தான் நீ எதிர்பார்க்கிறாயா?

  என்னிடம் பதிலை பெற்று அதை வைத்து நீ என்ன செய்ய போகிறாய்?

  “கடைக்குட்டி சிங்கத்தை ரசித்த உங்களுக்கு விஸ்வாசத்தை ரசிக்கமுடியவில்லை என்றால் ரஜினி200 இன் போதுதான் நீங்கள் சொல்லும் மனநிலையை அடைவீர்கள்.( ரஜினி200 நிச்சயமாக வரும். ) சினிமாவின் தீவிர ரசிகரான மன முதிர்ச்சியான உங்களாலேயே உங்களின் தலைவரின் படத்துடன் வெளிவந்த இன்னுமொரு படத்தை பற்றி பேச முடியவில்லையென்றால் என்னத்தை சொல்லுவது.”

  இந்த கொடுமையை நான் எங்கே சென்று சொல்வது.. ஒரு படத்தைப் பற்றி நான் கூறாமல் ரசிக்கிறேன் ரசிக்கவில்லை என்று உனக்கு யார் கூறியது?

  எனக்கே தெரியாமல் கூறி விட்டேனோ!!

  அது எப்படி கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல், நான் இப்படித்தான் நினைத்து இருப்பேன் என்று முடிவு செய்து உன்னால் அதையொட்டி என்னை விமர்சிக்க முடிகிறது?

  அதிலும் “என்னத்தை சொல்வதாம்” 😀 . உண்மையாகவே வியப்பாக உள்ளது.

  “எவ்வாறு உங்களால் எல்லா டிரக்டர்களுமே பொய் சொல்லுவதாக முன் முடிவுக்கு வர முடிகிறது. தமிழ் நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆள் வைத்திருந்தால் அங்கே உள் நிலவரம் அறிய முடியாதா.”

  சரி.. நான் தவறு என்றே இருக்கட்டும். சில டிராக்கர்கள் உண்மை கூறுகிறார்கள் என்று எப்படி உன்னால் முன் முடிவுக்கு வர முடிந்தது?! பதில் அளிக்க முடியுமா?

  என்னை பற்றி உனக்கு என்ன தெரியும்? எனக்கு இருக்கும் தொடர்புகள் பற்றி என்ன தெரியும்?

  சும்மா இணையத்தில் படிப்பதை வைத்து அடித்து விட்டுட்டு இருக்கேன் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறாயா?

  சரி..நான் கேட்கும் கேள்விக்கு சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் கூறு..

  யார் நேர்மையான நீ கூறும் ட்ராக்கர்? இரண்டு மூன்று பேரெல்லாம் வேண்டாம்? ஒரே ஒருத்தரை கூறு.

  ஏனென்றால், நானும் அந்த உண்மையான நேர்மையான சரியான தகவலை மட்டுமே கொடுக்கும் ட்ராக்கரை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

  உண்மையாகவே.. பொய்யில்லை. எனக்குத் தெரியாத அந்த ட்ராக்கர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

  ப்ரியா உன்னுடைய வாழ்க்கையில் எனக்கு தெரிந்த அளவில் ஒரு பிரச்னை வரும் என்றால், அது உன்னுடைய ஊகத்தில் பேசும் பழக்கத்தால் இருக்கலாம்.

  எல்லாவற்றையும் assumption லையே பேசி விட முடியாது, விவாதிக்க கூடாது.

  ஒரு விவாதத்திலாவது ஊகத்தில் என்னை விமர்சிக்காமல் உன்னால் விவாதிக்க முடிகிறதா?

  ஊடகம் தொடர்பாக எழுதிய போது மனதில் வஞ்சம் வைத்து இக்கட்டுரை எழுதினீர்கள் என்று இரு கட்டுரைகளுக்கு கூறினாய்.

  அப்போதே நான் கூறினேன், விகடனை மட்டும் தான் அப்படி எழுதி இருக்கிறேன், வேறு எதுவுமே அப்படி நான் எழுதியதில்லை என்று.

  இக்கட்டுரையின் உன்னுடைய பதிலை இது தொடர்பாக நான் எடுத்துக்கொள்ளலாமா?

  எப்படா விஸ்வாசம் படம் பற்றி கிரி பேசுவார் அதில் இது போல பேசலாம் என்று.. இதை நான் சொல்லவில்லை நீ தான் என்னை சீண்ட நினைத்தேன் என்று கூறினாய்.

  இப்ப யார் இது போல நடந்து கொள்வது? நானா நீயா?

  ரஜினி எதோ உன்னோட குடியை கெடுத்தது போல அனைத்திலும் ரஜினியை விமர்சிப்பதையே வழக்கமாக வைத்து இருக்கும் உன்னை நினைத்து பரிதாபப்படத்தான் முடிகிறது.

  இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு வன்மம் கூடாது அதுவும் அவரால் எந்த வகையிலும் தான் பாதிப்பு அடையாமல் இருந்தும் இது போல தொடர்ந்து எதையாவது கற்பனையில் ஊகத்தில் கூறி வருவது அயர்ச்சியை தருகிறது.

  எதிர்மறை எண்ணங்கள் நம்மை நிம்மதியாக இருக்க விடாது ப்ரியா. அண்ணனாக ஒரு அறிவுரை.

  ஆனால், உனக்கு ஒரு விதத்தில் நன்றிக்கடன் பட்டு இருக்கிறேன்.

  பல நேரங்களில் நாம் பொறுமையை கையாள்வதில் முன்னேறி இருக்கிறோம், கோபப்படாமல் இருக்கிறோம் என்று நினைப்பேன்.

  ஆனால், உன்னுடைய இது போன்ற பதில், என்னுடைய பொறுமையை மிக சோதித்து நான் கடக்க வேண்டிய தூரம் அதிகமுள்ளது என்று எனக்கு அறிவுறுத்துகிறது.

  எனக்கு நீ பொறுமையை கற்பிப்பதாக நான் நேர்மறையாக எடுத்துக் கொள்கிறேன்.

  • உங்களை தாக்குவது எனது நோக்கமல்ல. இனிமேல் உங்களுடன் ரஜினி/ ரஜினி ரசிகர்கள்/ ரஜினி அரசியல் பற்றி பேசுவதாக உத்தேசமில்லை.. ஏதாவது வகையில் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி. வணக்கம்.

   • @ப்ரியா ரஜினி என்றில்லை யாரையும் ஊகத்தில் விமர்சிக்காதே என்பதே நான் கூறுவது.

 4. உங்களை தாக்குவது எனது நோக்கமல்ல. இனிமேல் உங்களுடன் ரஜினி/ ரஜினி ரசிகர்கள்/ ரஜினி அரசியல் பற்றி பேசுவதாக உத்தேசமில்லை.. ஏதாவது வகையில் உங்களை காயப்படுத்தியிருந்தால் மன்னிக்கவும். நன்றி. வணக்கம்.

  நைஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here