லாக்கப் [விசாரணை 2016]

3
லாக்கப் [விசாரணை 2016] Lockup Novel Tamil

லாக்கப்” நாவல் நம் அனைவருக்கும் பரிச்சயமானது. இந்நாவலை அடிப்படையாகக் கொண்டு தமிழில் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் “விசாரணை” படம் வெளியானது. தமிழகப் பகுதி மற்றும் தினேஷ் காதல் கூடுதலாக இணைக்கப்பட்டது.

லாக்கப்

வீட்டை விட்டு ஓடி ஆந்திரா சென்று, பொது இடத்தில் தூங்கி, குளித்து, டீ கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த போது, ஒரு வழக்குக்குக் கணக்குக் காட்ட சம்பந்தமே இல்லாமல் கைதாகி அடி வாங்கி வெளியே வருவது தான் “லாக்கப்” கதை.

விசாரணை படத்தில் காட்சியாகப் பார்த்ததை விட இதில் படிக்கும் போது திகிலாக உள்ளது. Image Credit

ஆசிரியர் சந்திரகுமார் வாங்கிய அடியில் நான் 40% வாங்கியிருந்தாலே, வடிவேல் சொல்வது போல அடித்தவர்கள் கொலை வழக்கில் கைதாகி இருப்பார்கள் 🙂 .

திடமான நபராக இருந்ததால் மட்டுமே அடிகளைத் தாக்குப்பிடித்து இருக்கிறார்.

காவல்துறை விசாரணை, இருப்பிடம், உடனுள்ள கைதிகள் என மிகக் கொடுமையான உலகம் என்று தெரிந்தாலும், இவ்வளவு மோசமாக நடத்துவார்கள் என்று நினைத்தது இல்லை.

திரைப்படங்களில் காட்டுவது, நடப்பதில் பாதி கூட இருக்காது போல.

சந்திரகுமார் துவக்கத்தில் சாதாரண எழுத்து நடையாகத் துவங்கி செல்லச் செல்லத் தேர்ந்த எழுத்தாளர் எழுதுவது போல வர்ணனைகள் சிறப்பாக அமைந்துள்ளன.

நாடோடி வாழ்க்கை

இவர்களைப் போல உள்ளவர்கள் நாடோடிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். எங்குமே நிரந்தரமாக இருப்பதில்லை. ஒவ்வொரு ஊருக்கு ஒவ்வொரு பெயர்.

30 வயது வரை சரி.. அதன் பிறகு எப்படி குடும்ப வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள் என்பது தெரியவில்லை.

இவர் நண்பர்களில் ஒருவர் ஏழு மொழி அறிந்து வைத்து இருக்கிறார். இவருடைய தாய் மொழி என்ன என்பதை இறுதிவரை யாரும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்.

அந்த அளவுக்கு அனைத்து மொழிகளிலும் திறமையானவராக உள்ளார்.

கனவும் கற்பனைகளுமே ஆறுதல்

அடி வாங்கி அசைய முடியாத நிலையில் இருந்த இவருக்குக் கற்பனையும் / கனவுமே ஆறுதலாக இருந்துள்ளன.

இருக்கின்ற சூழ்நிலையை மறைப்பதற்காகக் கனவுகளை உருவாக்கிக் கொள்வது எனக்குப் பழக்கம். அந்தக் கனவுகள் என்னைத் துன்புறுத்தாத வகையில் துளியும் நிகழ்காலத்தில் பாதிப்பு ஏற்படுத்தாமல் வெகுதூரத்தில் சஞ்சரிக்கும்.

ஆயிரமாயிரம் விதங்களில் வடிவங்களில் கனவு கண்டு கொள்வதற்கான சாத்தியங்களும் இருந்ததால், வற்றாத ஜீவநதியாய் ஓடும்.

எனது கனவு இடைக்காலங்களில் தொடர் துன்பங்களில் இருந்து என்னை மீட்டது.

ஆனால், அதே சமயம், நான் காண்பது கனவு என்ற உண்மை எனக்குத் தெரியுமாதலால் கனவு நிலையில் கண்ட முடிவுகளை ஓர் நாளும் வாழ்க்கையில் கையாள நினைத்ததில்லை. அதனால் எனக்குப் பெரும் துன்பம் வந்ததும் இல்லை.

சில நேரங்களில் நம் கோபங்கள் ஆதங்கங்களுக்கு அவை வடிகாலாக இருந்துள்ளன.

எனக்கு “சூப்பர் பவர்” கிடைத்தால் என்ன செய்வேன் என்று அடிக்கடி நினைத்துப் பார்ப்பதுண்டு.

முதல் வேலையா லஞ்சம் வாங்குறவன், வன்புணர்வு செய்யறவன் எல்லோரையும் போட்டுத் தள்ளிடனும் என்று நினைப்பேன் 🙂 🙂 .

இன்ஸ்பெக்டர் இவர்கள் நால்வரையும் அடி நொக்கி எடுத்ததால், வெளியே வந்த பிறகு என்ன ஆனாலும் சரி.. இன்ஸ்பெக்டரை கொலை செய்து விட வேண்டும் என்று ஆத்திரத்தில் திட்டமிட்டு இருக்கிறார்கள்.

பேச்சிலேயே பலமுறை கொன்றும் இருக்கிறார்கள் 🙂 .

இது எனக்கு வியப்பளிக்கவில்லை. இவர்களுடைய நிலையில் நான் இருந்தாலும் இதையே நினைத்து இருப்பேன். கொஞ்சம் கூட மனிதத்தன்மை இல்லாத அடி!

அடி வாங்கினால் செய்ய வேண்டியது

இந்நாவலால் தெரிந்து கொண்டது, எங்காவது மாட்டி அடி வாங்கினால், முதலில் செய்ய வேண்டியது வலித்தாலும் வீக்கத்தை அழுத்தி நீவி விட வேண்டும் என்பது.

இல்லையென்றால் சீழ் பிடித்து மோசமான நிலைக்குச் சென்று விடுவோம் என்று அனுபவக் கைதிகள் கூறுவார்கள். கை, கால்கள் முடமாவதற்கும் வாய்ப்புள்ளது.

குழந்தை பேறு கிட்டத்தட்ட கனவாகிவிடும்.

விசாரணை படத்தில் தினேஷ் மற்றும் மூவரை காலில் கட்டி தொங்க விட்டுப் பாதத்தில் அடிப்பார்கள். அடித்த பிறகு அந்த இன்ஸ்பெக்டர் அவர்களை ஓட விடுவார்.

இதற்குக் காரணம் காலில் ரத்தம் கட்டாமல் இருப்பதற்காக. அப்போது தான் திரும்ப அடிக்க முடியும்.

ஓடவில்லையென்றாலும் கால் காலியாகி விடும். நினைத்தாலே பகீரென்று உள்ளது.

அவ்வாறு ஓடும் போது மீண்டும் அடிப்பது போல (வீக்கத்தால்) உடல் வலி பின்னியெடுக்க, சுருண்டு விழுந்தால் மீண்டு முதுகில் அடி விழத் தட்டுத் தடுமாறி எழுந்து திரும்ப வலியுடன் ஓடி மயக்கமாகி இருக்கிறார்.

இவர் வாங்கிய அடியைப் படித்ததும் நான் மாணவர் விடுதியில் வாங்கிய அடியும் மெரினா கடற்கரையில் காவலரிடம் வாங்கிய அடியும் நினைவில் வந்து சென்றது 🙂 .

Read: போலீஸ் அடின்னா இது தானா!

Read: தர்ம அடி வாங்கிய என்னுடைய ஹாஸ்டல் அனுபவம்

பத்துக்குப் பத்து அறையில் 13 பேர்

பத்துக்குப் பத்து அறையில் ஒரு கட்டத்தில் 13 பேர் இருந்துள்ளார்கள். இங்கே அவர்கள் இருந்த சூழ்நிலையை விவரித்தால், உங்களால் சாப்பிடவே முடியாது.

இதனால், அப்பகுதியை தவிர்த்து விடுகிறேன். பூலோக நரகம் என்றால், அது சிறைச்சாலை தான்.

உண்மையில் இவர்கள் இருப்பது விசாரணை கைதிகளாகக் காவல் நிலையத்தில் தான், சிறைச்சாலை அல்ல.

சிறிய நாவல்

நாவலில் தேவையற்ற செய்திகளைச் சம்பவங்களைக் கூறாமல் நேராக விசயத்துக்கு வந்து விட்டார். நாவலும் 144 பக்கங்கள் என்பதால், ஒரே இரவில் படித்து விட்டேன்.

அனுபவங்களை எழுதும் போது காவலர் அனைவரையும் “அவன் இவன்” என்று எழுதியிருக்கிறார். இவனுங்களுக்கு எல்லாம் என்ன மரியாதை வேண்டிக் கிடக்கு என்கிற ரீதியில் உள்ளது.

அவருடைய உணர்வுகளை முழுமையாக உணர முடிகிறது.

நாவலைப் படித்து விட்டு, திரும்ப உடனே “விசாரணை” படத்தைப் பார்த்தேன்.

முதல் முறை பார்த்ததை விடத் திகிலாகவும் பயமாகவும், சந்திரகுமார் எப்படி அடி வாங்கியிருப்பார் என்றும் ஒப்பிட்டுப் பார்க்க முடிந்தது.

தவறே செய்யாமல் இவ்வளவு கொடுமைகளை அனுபவிப்பது என்பது, கற்பனையில் கூடப் பயங்கரமானதாக இருக்கிறது.

சிறைச்சாலை மனிதனை திருத்தும் இடமாகத் தான் இருக்க வேண்டும் ஆனால், சிறைச்சாலை சென்று வந்தால், பெரும்பாலும் அப்பாவிகள் குற்றவாளிகளாகி விடுகிறார்கள், குற்றவாளிகள் பெரும் குற்றவாளிகள் ஆகி விடுகிறார்கள்.

சிலரே இதில் இருந்து தப்பித்து நல்ல வாழ்க்கை வாழ முயற்சிக்கிறார்கள் ஆனால், அவர்களையும் குடும்பமும் சமூகமும் நம்ப மறுத்துத் திரும்பப் பழைய பாதைக்கே செல்ல வழிவகுக்கிறது.

எனவே, இதில் இருந்து தப்பித்து வருவது என்பது மிகப்பெரிய சாதனையே!

லாக்கப் புத்தக வடிவமைப்பு எழுத்து அளவு என்று அனைத்துமே சிறப்பான வாசிப்பனுவத்தைத் தந்தது. “டிஸ்கவரி புக் பேலஸ்” வெளியிட்டு இருக்கிறது.

லாக்கப் நாவல் விலை 120.

3 COMMENTS

  1. கிரி.. பதிவு நன்றாக இருந்தது. விசாரணை படம் பார்த்தேன் ஆனால் இந்த புத்தகத்தை இது வரை படிக்கவில்லை. இந்த பதிவை பார்த்தபின் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படுகிறது. திரை படத்தில் பார்க்கின்ற காவல் துறை வேறு. நிஜத்தில் உள்ளது வேறு.

    இரண்டு இரவுகள் விசாரணைக்காக காவல் நிலையம் சென்ற சொந்த அனுபவம் உண்டு. சம்பவம் நடந்து 9 ஆண்டுகள் முடிந்து இருந்தாலும் ஆனால் அந்த நிகழ்வுகள் நெஞ்சை விட்டு இன்றுவரை அகலவில்லை…இரண்டு நாட்கள் என்றாலும் இருபெரிய பெரிய புத்தகம் எழுதும் அளவுக்கு சம்பவங்கள் உள்ளது கிரி… அந்தமானின் செல்லுலார் சிறைச்சாலையை பார்க்கவேண்டும் என்ற ஆவல் எதிர்கால பயண பட்டியலில் உண்டு… பகிர்வுக்கு நன்றி கிரி.

  2. யாசின் இரண்டு நாட்கள் என்றாலும் அனுபவம் நீங்கள் கூறுவது போல நிறைய இருக்கும்.

    அந்தமான் எனக்கும் பார்க்கும் விருப்பமுள்ளது. குறிப்பாக சிறைச்சாலை படம் வெளிவந்த பிறகு. இங்கே கப்பலில் நண்பர்களுடன் செல்ல வேண்டும் என்ற துணை விருப்பமும் உள்ளது.

  3. மிக நல்ல பதிவு.

    இங்கு புனே’வில் விசாரணை படம் ஒரு வாரம் கழித்து வெளியானது. ஆர்வமாக முன்பதிவு செய்து அரங்கில் சென்று அமர்ந்தால் திடீரென்று ஓர் ஆங்கிலப் படத்தைப் போட்டுவிட்டார்கள். நானும் எனது நண்பர்களும் குழம்பிப்போய் ஒவ்வோர் அறையாக எட்டி எட்டிப் பார்த்தோம். பிறகுதான் தெரிந்தது “content issue” எனக் கூறி காட்சியை நீக்கிவிட்டார்களாம். படம் பார்க்க முடியாமல் நொந்து போய் திரும்பி வந்தோம். ஆனாலும் படம் பார்க்க 30கி.மீ போனது வேறு கதை. அதுவும் தனியாகச் சென்று பார்த்தேன். ஒரு வாரத்திற்கு மேலாக அதன் பாதிப்பு நீங்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here