தமிழில் வட்டார மொழி வழக்கு என்பது மற்ற மொழிகளை விட அதிகம். ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வட்டார மொழி வழக்குச் சிறப்பு, எது சிறந்தது என்ற கேள்வி அவசியமற்றது. Image Credit
மதுரை, கோவை, திருநெல்வேலி, விழுப்புரம், சென்னை, பட்டுக்கோட்டை என்று ஒவ்வொரு பகுதிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த வட்டார மொழி வழக்கு உள்ளது. இதில் பல சொற்கள் அவர்களுக்கு மட்டுமே புரியும்.
நமக்கு அடையாளம்
சென்னைக்கு படிக்க வந்த போது பலர் என் கொங்கு தமிழைக் கிண்டல் செய்வார்கள், சிலர் கேட்க ரொம்ப நன்றாக உள்ளது என்று கூறுவார்கள்.
நாளடைவில் நான் பேசுவது சிலருக்கு புரியவில்லை என்பதாலும், ஒவ்வொரு முறையும் விளக்க வேண்டியதாக இருந்ததாலும், நானே பேச்சு வழக்கை மாற்றிக்கொண்டேன்.
இதனால் சிலர் நான் கொங்குப் பகுதியை சேர்ந்தவன் என்பதைச் சொன்னால் தான் அறிவார்கள், சிலர் பேசி முடிக்கும் முன்பே, “நீங்க கோயமுத்தூரா?” என்று கேட்டு விடுவார்கள்.
எனக்கே வியப்பா இருக்கும்! எப்படி அவ்வளோ விரைவில் கண்டுபிடித்தார்கள் என்று 🙂 . “ங்க” சொல்லும் போதே கோயமுத்தூரா என்று கேட்டு விடுகிறார்கள்.
என்னை மாற்றிக்கொண்டாலும், கொங்கு வட்டார வழக்கு பேச்சின் மீது எனக்கு அதீத காதல். அப்படி மற்றவருடன் பேசும் போது இனம் புரியாத மகிழ்ச்சி, நெருக்கம் எல்லாமே வரும்.
அதனால், ஊருக்கு வந்தால், கொங்கு பேச்சுக்கு மாறி விடுவேன். அதில் ஓர் ஆனந்தம்!
அப்படி மாறினாலும், முழுதாக மாற முடியவில்லை. இரண்டும் கெட்டானாகத்தான் இருக்கிறேன் என்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது.
ஊருக்கு செல்லும் போது அங்கே பேசுபவர்கள் பேச்சை கேட்டால், அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும். எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.. ஆனால், சுகமான அனுபவம்.
ஒட்டுக்கா
“ஒட்டுக்கா” என்றால், ஒன்றாக என்று அர்த்தம். எடுத்துக்காட்டுக்கு “ஒட்டுக்கா வந்தோம்” என்றால், ஒன்றாக வந்தோம் என்பது அதன் பொருள்.
என்னுடைய நண்பன் சதிஷ், ஒட்டுக்கா என்று கூறினால் தற்போதும் கிண்டலடிப்பான் 🙂 . நான் கூறுவதில்லை, என்னுடைய இன்னொரு கோவை நண்பன் கூறுவான்.
என் பசங்க இதே வார்த்தையைத் தான் பயன்படுத்துகிறார்கள் ஆனால், அவர்களை மாற்றிக்கூற சொல்லவில்லை. அப்படியே பேசட்டும் என்று விட்டுவிட்டேன்.
நம்ம வட்டார வழக்கு மொழியைக் கற்றுக்கொண்ட பிறகு எப்படியோ மாற்றிப்பேசட்டும்.
என் பசங்களும் நம்ம சொந்த ஊரின் வட்டார மொழி வழக்கை, பழக்கங்களை, மரியாதையைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.
ஒருமை
சென்னையில் அப்பாவை ஒருமையில் அழைப்பது வழக்கம், அதனால் அப்பா மீது மரியாதை இல்லையென்று அர்த்தம் கிடையாது, அது சென்னை வட்டார வழக்கு அவ்வளவே!
நான் நண்பர் பெண்ணிடம் “அப்பாவை மரியாதையாக வாங்க ன்னு சொல்” என்றவுடன், நண்பர், “அவ என்னைத் தானே சொல்றா.. அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை” என்றார்.
அதன் பிறகு எங்க பகுதி வழக்கங்களை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதை நிறுத்தி விட்டேன். எங்கள் பகுதிகளிலேயே இது போல அவ்வப்போது நடக்கும்.
“ஏனுங், சொல்லுங், உம்படது, ஆமாங், சரிங், வந்தனுங், ஒட்டுக்கா, மறுக்கா, விசுக்குனு, இப்ப தான் வந்தயாக்கும்” என்று பேசுவதைக் கேட்கும் போதே ஆனந்தமாக இருக்கும் 🙂 .
கடந்த வாரம், என்னுடைய அக்கா மாமனார் காலமானார், அவருக்கு வயது 86. என்னை எப்போதுமே “எப்ப வந்தீங்க?” என்று மரியாதையாகவே அழைப்பார்.
எந்த மாவட்டமாக இருந்தாலும் அவரவர் வட்டார வழக்கை புறக்கணிக்காதீர்கள். மற்றவர்களுக்குக் கிண்டலாக இருக்கலாம் ஆனால், நமக்கு அது அடையாளம்.
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
ரொம்ப சரியான வார்த்தை கில்லாடி.
நாம் நம்முடைய அடையாளத்தை மாற்றக்கூடாது.
நான் என்னுடைய பழைய ஆபீஸ் வேலையாக முதன் முதலில் கோவை சென்று PWD ஆபீஸ்ல, கம்ப்யூட்டர் install பண்ணிட்டு இருக்கும் பொது ஒரு வயசான அம்மா கொங்கு மொழியில பேசிட்டு இருந்தாங்க. நான் அப்படியே அவங்களை பார்த்துட்டே இருந்தேன். ரொம்ப நேரம் அவ்வளவு அழகா பேசிக்கிட்டே இருந்தாங்க. 18 வருஷம் முன்னாடி நடந்த விஷயம் இன்னும் ஞபாகம் இருக்கு 🙂
வட்டார வழக்கு நமக்கு ஒரு அடையாளம். நான் வெளிநாட்டில், தமிழ் கேட்டாலே கூர்ந்து கவனித்து அது எந்த வட்டார மொழின்னு பார்ப்பேன். அதிலும் நெல்லைப் பேச்சு, நாகர்கோவில் பேச்சுலாம் கேட்டாலே, முன்பின் தெரியாதவரிடமும், நீங்க இந்தப் பகுதியான்னு கேட்டு, அவங்க ஆமாம், எப்படிக் கண்டுபிடிச்சீங்கன்னு கேட்கும்போது ஒரு சந்தோஷம் வரும்.
தமிழகத்தில் பல இடங்களில் இருந்ததால் எனக்கென்ற வட்டார மொழி போய்விட்டது என்பதில் ஒரு வருத்தம்தான். நான் எந்த ஊரைச் சேர்ந்தவன் என்பது என்னிடம் பேசிக் கண்டுபிடிக்கமுடியாது. ஆனால் கொங்கு, நெல்லை, நாகர்கோவில், சென்னை பகுதியைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஐடெண்டிடியை மறைக்க இயலாது.
அப்பாவை ‘நீ’ என்று சொல்லும் வழக்கம் ஒரு பகுதிக்குறியது கிடையாது. சென்னையில் பொதுவா யாரையும் மரியாதையா பேசமாட்டாங்க (ஒரிஜினல் சென்னைக் காரங்களோட தமிழ்)
@விஜய் 🙂 நகரத்து நபர்களை விட, கிராமத்து நபர்கள் பேசினால் செமையா இருக்கும் .
@நெல்லைத்தமிழன்
ஆமாம் 🙂 . வெளிநாட்டில் தமிழ் பேசுபவர்களை கண்டாலே தனி மகிழ்ச்சி, அதிலும் நம்ம வட்டார மொழியினை பேசுபவர் என்றால் கூடுதல் மகிழ்ச்சி.
“அப்பாவை ‘நீ’ என்று சொல்லும் வழக்கம் ஒரு பகுதிக்குறியது கிடையாது.”
உண்மை தான். நான் சென்னையுடன் சம்பந்தப்பட்டதால், அதை எடுக்காட்டாக கூறினேன்.
எங்கள் ஊரிலேயே அது போல பேசுபவர்கள் இருக்கிறார்கள்.
திருப்பூரில் தொடக்கத்தில் முதல் ஐந்து வருடங்கள் என் காரைக்குடி மொழியை மாற்ற முடியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால் இப்போது திருப்பூர் சூழலில் வட்டார மொழி என்பதே இல்லை.