அதில் என்ன சுவாரசியம் இருக்கும்?!

1
அதில் என்ன சுவாரசியம்

பொன்னான நிகழ்காலம் புத்தகம் பற்றி எழுதிய போது அதில் இருந்து 30 – 50 கட்டுரைகள் எழுதும் அளவுக்கு விஷயங்கள் உள்ளது. அவ்வப்போது எழுதுகிறேன் என்று கூறி இருந்தேன்.

அதிலிருந்து இரண்டாவது கட்டுரை. Image Credit

அதில் என்ன சுவாரசியம்

வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களை, பிரச்சனைகளை, சவால்களை நினைத்துக் கலங்காமல் போராடினால் தான் வாழ்க்கை விறுவிறுப்பாக இருக்கும்.

தடகள போட்டியில் தடைகள் பலவற்றைத் தாண்டி வருபவருக்கே பரிசு கொடுக்கிறார்கள். தடைகளைத் தாண்டாமல் பக்கவாட்டில் ஓடி வந்து “நான் தான் முதலில் வந்தேன், எனக்குத் தான் பரிசு” என்றால், எவரும் கொடுப்பார்களா?

அது போலவே வாழ்க்கையும்.

நம் முன்னே இருக்கும் தடைகளைத் தாண்டி போராடி வரும் போதே வெற்றி நம் வசம் ஆகிறது. அந்த வெற்றிக்குண்டான மதிப்பும் கிடைக்கிறது. வாழ்க்கையில் தடைகளே இல்லையென்றால், வாழ்க்கை எந்தச் சுவாரசியமும் இல்லாமல் சப்புன்னு இருக்கும்.

உங்களுடைய நல்ல நிலைக்கு எப்படி வந்தீர்கள் என்று யாராவது கேட்டால்..

படித்தேன் வேலையில் சேர்ந்தேன்” என்று ஒரு வரியில் கூறினால், கேட்பவருக்கு “அதில் என்ன சுவாரசியம் இருக்கும்?

அதே எனக்கு இவ்வளவு எதிர்ப்புகள் இருந்தது, தடைகள் இருந்தது அவற்றை நான் கடந்து இந்த நிலையை அடைந்தேன் என்று உங்கள் அனுபவங்களைக் கூறினால், கேட்பவரும் இவற்றை முன்னுதாரணமாக எடுத்துத் தன்னை உற்சாகப்படுத்திக்கொள்ள வாய்ப்பாக இருக்கும்.

உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் செய்த சாதனைகள், போராட்டங்கள் பற்றிக் கூற சம்பவங்கள் இருக்க வேண்டும்.

சாப்பிட்டேன், தூங்கினேன், படித்தேன், வேலைக்கு போனேன், திருமணம் ஆச்சு, குழந்தைகள் பிறந்தார்கள்” என்று கூறினால், “அடப்போய்யா” என்று கூறி எழுந்து சென்று விடுவார்கள்.

இன்பங்கள் துன்பங்கள்

வாழ்க்கையைப் பரபரப்புள்ளதாக ஆக்கிக்கொள்ளுங்கள் ஆனால், அதில் உள்ள இன்ப துன்பங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இன்பங்களைப் போலவே, துன்பங்களும் வேண்டும், அதுவே நம் வாழ்க்கையைச் சுவாரசியமாக்குகிறது. பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை சுவாரசியமற்ற வாழ்க்கை.

பிரச்சனைகள் மட்டுமே இருப்பதாகக் கருதி விளக்கெண்ணையை முகத்தில் பூசியது போல இல்லாமல், புத்துணர்வுடன் இருங்கள். இவை துன்பங்களை எளிதாக எதிர்கொள்ள உதவும்.

தவறு செய்து விட்டோம் என்று எதிர்மறையாகக் கருதாமல், நம் தவறை திருத்த கிடைத்த ஒரு வாய்ப்பாக நேர்மறையாகக் கருதினால், அனைத்து சிரமங்களையும் தைரியமாக எதிர்கொள்ளலாம். நேர்மறை எண்ணங்கள் நமக்குப் புத்துணர்வை அளிக்கும்.

தொடர்புடைய கட்டுரை

பொன்னான நிகழ்காலம் – மகிழ்ச்சியின் இரகசியம்

1 COMMENT

  1. “இன்பங்களைப் போலவே, துன்பங்களும் வேண்டும், அதுவே நம் வாழ்க்கையைச் சுவாரசியமாக்குகிறது. பிரச்சனைகளே இல்லாத வாழ்க்கை சுவாரசியமற்ற வாழ்க்கை.”
    மிகச்சரியான வார்த்தை கில்லாடி. நன்றி – Vijay

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here