தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழக அரசுப் பேருந்துகள் வசதியான இருக்கைகள், காலை வைக்கப் போதுமான இடம் என்று பக்காவாக உள்ளது. வண்ணமும் உறுத்தாமல் மிக அழகாகத் தனியார் பேருந்துகள் போல உள்ளது.
ஒரே பிரச்னை நிற்கும் பகுதியைக் குறுக்கி விட்டார்கள். இதை அரை அடி அகலப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்து இருக்கும். Image Credit
வெகு சில பேருந்துகள் மட்டுமே உள்ளன என்று நினைத்தேன் ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகப் பழைய பேருந்துகளை மாற்றி வருகிறார்கள், கண்கூடாகத் தெரிகிறது.
இதற்கு முன் அறிமுகப்படுத்திய பேருந்துகள் அனைத்துமே பயணிகளின் வசதிகளைக் கருத்தில் கொள்ளாமல், மனம் போன போக்கில் வடிவமைக்கப்பட்டு இருந்தன.
தமிழக அரசுப் பேருந்துகள்
நான் கோபியில் இருந்து சென்னை வரும் போது கோபி பேருந்து நிலையத்தில் இருந்து ஈரோடு செல்ல, வழக்கமாகக் குறிப்பிட்ட தனியார் பேருந்தில் தான் செல்வேன்.
இந்தப் பேருந்து கிளம்ப ஐந்து நிமிடம் முன்பு கிளம்பும் ஒரு அரசுப் பேருந்தை ஒருவரும் கண்டுகொள்ள மாட்டார்கள்.
நடத்துனர், “இந்தப் பேருந்தில் ஏறுங்க!” என்று அழாத குறையாகக் கேட்டுக்கொண்டு இருப்பார் ஆனால், பயணிகள் புறக்கணித்து விடுவார்கள்.
இந்த முறை சென்றால், புதிய பேருந்து! உட்கார இடமேயில்லை ஆனால், தனியார் பேருந்தில் கூட்டமில்லை.
அந்நியன் அம்பி காதல் கடிதத்தை கொடுத்த பிறகு ஒரு நடை நடப்பாரே அது போல அரசுப் பேருந்து நடத்துனர் கெத்தாக நடந்து கொண்டு இருந்தார் 😀 .
பார்க்கவே ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
நிலை மாறியிருக்கிறது
அதாவது, “பணத்தைக் கொடுத்துட்டு நீ எப்படியோ அமர்ந்துட்டு போ! அது உன் தலைவிதி” என்பது போல நிலையிருந்தது ஆனால், தற்போது நிலை மாறியிருக்கிறது.
சுருக்கமாக, கடந்த 8 வருடங்களுக்கு மேலாக மோசமான பேருந்துகளாக இருந்து தற்போது பயணிகள் தேவையுணர்ந்து அறிமுகப்படுத்திய பேருந்துகளாக வலம் வருகின்றன.
இதற்கு யார் காரணமாக இருந்தாலும், தமிழகப் பயணிகள் சார்பாக வாழ்த்துகள்.
எனக்கென்னவோ “ஜெ” இருந்த போது நடந்ததை விட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆட்சியில் இது போல மாற்றங்கள் சிறப்பாக இருப்பதாகக் கருதுகிறேன்.
என்ன தான் இது போலப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், பராமரிப்பு என்பது மிக முக்கியம். அதைச் செய்யவில்லை என்றால், எந்தப்பயனும் இல்லை.
இப்பேருந்துகளை காணும் போது நமக்கும் “நம் மாநில பேருந்து” என்று கூற பெருமையாக உள்ளது. தமிழ்நாடு மற்ற மாநிலப் பேருந்துகளுக்கு முன்மாதிரியாக இருந்தது ஆனால், அந்த மதிப்பைச் சமீப வருடங்களில் இழந்து விட்டது.
மீண்டும் அப்பெயரை பெறும் என்று நம்புவோம்.
சென்னை மாநகரப் பேருந்து
சென்னை மாநகர சிவப்பு நிறப் பேருந்தைப் பற்றி ஏற்கனவே எழுதி இருந்தேன்.
இப்பேருந்துகளின் எண்ணிக்கையும் சென்னையில் அதிகரித்து வருகிறது. மிக வசதியாக உள்ளது.
இவ்வகைப் பேருந்துகளைச் சொகுசுப் பேருந்துகள் என்று எழுதி இருப்பார்கள். இப்பேருந்து வசதியாக இருந்தாலும், சொகுசு பேருந்து என்று எழுதப்படவில்லை.
சொகுசுப் பேருந்து என்ற பெயர் இடம்பெறாதது நன்று. என்னைப் பொறுத்தவரை சாதாரணக் கட்டண பேருந்தே இத்தரத்தில் தான் இருக்க வேண்டும்.
சொகுசுப் பேருந்து என்ற கட்டண முறையை ஒழித்து இரு கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட வேண்டும். ஒன்று சாதாரணக் கட்டணம் மற்றொன்று குறிப்பிட்ட நிறுத்தக்கட்டணம்.
இதுவே நியாயமானது!
Read: சென்னை மாநகரச் சிவப்பு நிறப் பேருந்து
🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).
ஸீட் படங்களை போட்டிருந்தால் மேலும் உதவியாக இருந்திருக்கும்
ஸீட் அகலம் ஒரு முக்கிய விடயம்
இந்த பதிவு பல உபயோகமான தகவல்களை தாங்கி வந்திருக்கின்றது
கிரி, மகிழ்ச்சியாக இருக்கிறது.. இதுபோல மாற்றங்களை மக்கள் எப்போதும் வரவேற்பார்கள்.. எங்கள் பகுதியில் தற்போது எனக்கு தெரியவில்லை, நான் கல்லுரி படிக்கும் போது தனியார் பேருந்துக்கு நிகராக கூட்டம் அரசு பேருந்திலும் இருக்கும்.. ஆனால் எப்போதும் அரசு பேருந்து நட்டத்தில் செல்கிறது என்பதை மட்டும் எவ்வாறு என்று புரிந்து கொள்ள முடியவில்லை.. பகிர்வுக்கு நன்றி கிரி..
@ராஜேந்திரா நன்றி
@யாசின் அதற்கு ஊழல் மிக முக்கியக் காரணம். பராமரிப்பு என்று அதில் ஏகப்பட்ட கொள்ளை நடக்கிறது.