ராட்சசன் [2018] செம்ம த்ரில்லர்

4
Ratsasan movie review ராட்சசன்

சைக்கோ படம் எடுக்க வேண்டும் என்ற கனவில், அது தொடர்பான செய்திகளை ஆய்வு செய்து கதையை எழுதி ஒவ்வொரு தயாரிப்பாளரையும் சந்தித்துக் கதை கூற, அனைவரும் படமாக எடுக்க மறுக்கிறார்கள். Image Credit

பின் குடும்பத்தினர் கட்டாயத்தால் வேறு வழி இல்லாமல் திரைப்படக் கனவை மூட்டைக் கட்டிவிட்டு காவல் துறை வேலைக்குச் செல்லும் விஷ்ணு விஷால் சந்திக்கும் முதல் வழக்கே சைக்கோ சம்பந்தப்பட்டதாக உள்ளது.

இதில் தனக்கு ஏற்கனவே உள்ள அனுபவத்தை வைத்து விசாரிக்கிறார். சைக்கோவை பிடித்தாரா இல்லையா? என்பது தான் கதை.

ராட்சசன்

தமிழில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு வந்துள்ள செம்ம த்ரில்லர். திரைக்கதை சலிப்பாக்காமல் கொண்டு சென்று இருந்தார்கள்.

அமலாபாலிடம் சில பொறுக்கிகள் பிரச்னை செய்ய, விஷ்ணு விஷால் வெளுத்து வாங்கும் போது, நானே அவர்களைச் சாத்தியது போன்ற மன நிறைவைத் தந்தது.

அக்காட்சி சினிமாத்தனமானது என்று அறிவுக்குத் தெரிந்தாலும் மனது ரசிக்கவே செய்கிறது.

விஷ்ணு விஷாலுக்கு பொருத்தமான கதாப்பாத்திரம். இதில் பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்க முடியாது. தன் எல்லை உணர்ந்து நடித்ததுக்கு பாராட்டுகள்.

யார் சைக்கோ?

இடைவேளை தாண்டி ரொம்ப நேரம் கழித்தே யார் சைக்கோ எனத் தெரிய வருவது, அநேகமாக இப்படமாகத்தான் இருக்க வேண்டும்.

ஆனால், அதனுடைய குறை தெரியாமல் திரைக்கதை அமைத்து உள்ளார்கள்.

குழந்தைகள், சிறுமிகள் குற்றம் என்றாலே எனக்குக் கொஞ்சம் வயிற்றைக் கலக்கும்.

இதில் கூடுமானவரை ரொம்ப உள் நுழையாமல் மேலோட்டமாக, இலைமறைவு காயாகக் காட்சிகளை அமைத்து இருப்பது நிம்மதி.

தற்போது எங்கும் கண்காணிப்புச் சாதனங்கள் உள்ளன. அப்படி இருக்கையில் சைக்கோ பற்றி ஒரு இடம் கூட இது பற்றி வரும் காட்சிகள் இல்லை.

சுருக்கமாக CCTV பற்றியே இதில் இல்லை. விசாரணை என்றாலே CCTV தவிர்க்க முடியாது.

இதைச் சைக்கோ புத்திசாலித்தனமாக மறைத்தோ, ஒதுக்கியோ இருப்பது போலக் காட்சி அமைத்து இருந்தால் சுவாரசியமாக இருந்து இருக்கும்.

கணக்கு ஆசிரியராக வருபவர் செமையாகக் கதாப்பாத்திரத்தைப் பிரதிபலித்து இருக்கிறார்.

ஒரு சாயலில் “அவதாரம்” பாலசிங்கம் போல உள்ளார், குரல் கூடக் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. இருவருக்கும் எதுவும் தொடர்பு இருக்குமோ?! 🙂 .

டேனியல் பாலாஜி இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க மறுத்து விட்டாராம், அவரைவிடத் தற்போது நடித்தவரே பொருத்தம்.

த்ரில்லர் படங்களுக்கே உள்ள சிறப்பு என்றால், எதையும் ஊகிக்க முடியாத காட்சிகள் இருக்க வேண்டும் ஆனால், இதில் எளிதாகச் சில காட்சிகளை ஊகிக்க முடிந்தது.

ஜிப்ரான்

ஜிப்ரான் வழக்கம் போலப் பின்னணி இசை சிறப்பாக அமைத்துள்ளார். இவரின் பின்னணி இசை திறமையைப் பலர் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்பது என் எண்ணம்.

ஜிப்ரானுக்கு அதிகம் வாய்ப்பளிக்கும் கமல் கூட இவரின் பின்னணி இசை திறமையைப் பயன்படுத்தவில்லை.

இதில் வரும் ஒரு இசை “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தின் பின்னணி இசையை நினைவுபடுத்தியது.

Read: தீரன் அதிகாரம் ஒன்று [2017] பேய் துரத்தல்

விஷ்ணு விஷால் மாமாவாக வரும் முனீஸ்காந்த் வழக்கமான நகைச்சுவை இல்லாமல் பொறுப்பான காவல் அதிகாரியாக வந்துள்ளார்.

இவர்கள் மேலதிகாரியாக வரும் பெண் ஈகோ பிடித்தவராக உள்ளார், “மைனா” படத்தில் சேது மனைவியாக வருபவர்.

இதில் ஊதிப்போய்த் தொப்பை எல்லாம் போட்டு இருக்கிறார். உடம்பை குறைத்து இருந்தால், இக்கதாப்பாத்திரத்துக்கு இன்னும் கெத்தாக இருந்து இருப்பார்.

மருத்துவராக நிழல்கள் ரவி, காவல் அதிகாரியாக ராதாரவி, ஆசிரியையாக வரும் அமலா பால் போன்றோருக்குப் பயனற்றது என்று கூற முடியாத கதாப்பாத்திரங்கள்.

முண்டாசுப்பட்டி படம் எடுத்த இயக்குநர் ராம்குமார் இப்படத்துக்காக நிறைய ஆராய்ச்சி செய்துள்ளார், சைக்கோ மனநிலைகள் பலவற்றைக் கூறுகிறார், ஏற்புடையதாக உள்ளது.

த்ரில்லர் படங்களை விமர்சிக்கும் போது உள்ள பிரச்னை அதில் உள்ள காட்சிகளை விளக்க முடியாது, அதோடு நமக்குள்ள சந்தேகங்களையும் கேட்க முடியாது.

படிப்பவர்களுக்கு அதன் சுவாரசியம் போய் விடும், இதிலும் அப்படியே!

அனைவரையும் ராட்சசன் படம் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

கொசுறு

திரையரங்கு நிறைந்து இருந்தது பார்க்கவே மகிழ்வாக உள்ளது. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி!

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

4 COMMENTS

  1. கிரி, இன்னும் படத்தை பார்க்கவில்லை.. படத்தை பார்த்த நண்பர்கள் படம் நன்றாக இருப்பதாக கூறினார்கள்.. உங்கள் விமர்சனமும் நண்பர்கள் கூறியது போல் இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் அதிகமாய் உள்ளது..

    “திரையரங்கு நிறைந்து இருந்தது பார்க்கவே மகிழ்வாக உள்ளது. நல்ல படங்களை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சி” (ஏற்றுக்கொள்ளவேண்டிய உண்மை).. தரமான படங்களுக்கு மக்களின் ஆதரவு என்றும் உண்டு. என்பதை இந்த படம் மீண்டும் நிருபித்துள்ளது.. பல கோடிகளில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் நிச்சயம் சிந்திக்க வேண்டிய தருணமிது… பகிர்வுக்கு நன்றி கிரி..

  2. நீங்கள் பார்த்த thiriller படங்களின் பெயர்களை தரமுடியுமா?
    ரெத்தம் சதையுமான படம் என்றாலும் பரவாயில்லை.
    plz plz

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!