நீர்ப்பறவை | அசத்தலான ஒளிப்பதிவு

15
நீர்ப்பறவை

ந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்க்கும் படங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தி விடுவதுண்டு, அது போல ஒரு வியப்பு  தான் “நீர்ப்பறவை” படமும்.

ஆனால், ஒரு சின்ன திருத்தம். என்னை வியப்படைய வைத்தது படத்தின், ஒளிப்பதிவு இயக்குனர் பாலசுப்ரமணியத்தின் அட்டகாசமான ஒளிப்பதிவு.

நீர்ப்பறவை

கொஞ்சம் கூட மிகைப்படுத்தவில்லை.. படம் பார்த்து மனதில் பட்டதை அப்படியே இங்கே பகிர்கிறேன்.

தேசிய விருது பெற்ற இயக்குனர் “சீனு ராமசாமி” இயக்கிய படம் என்ற ஆர்வம் மட்டுமே இப்படத்தை பார்க்கத் தூண்டியது.

சிங்கப்பூரில் வெளியானதா என்று தெரியவில்லை. வந்து சென்று இருந்தால் இந்தப் படத்தை திரையரங்கில் பார்க்காமல் தவறவிட்டதற்காக ரொம்ப வருத்தப்படுகிறேன்

இந்தப்படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்து நாட்கள் ஆனாலும், ஏனோ படம் பார்க்க வேண்டும் என்றே தோன்றவில்லை.

சுவாரசியம் இல்லை

பலரும் விஷ்ணுவின் குடியைப் பற்றியே குறிப்பிட்டு எழுதி இருந்ததால் கூட இருக்கலாம் / படித்த சில விமர்சனங்கள் அவ்வாறு நினைக்கத் தூண்டி இருக்கலாம்.

புத்தாண்டு, நண்பர் முத்துவுடன் முருகன் கோவிலுக்குச் சென்று விட்டு இரவு “சரி! ஏதாவது படம் பார்க்கலாம்” என்று இதைப் போட்டேன்.

ஆரம்பத்தில் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல் தான் பார்த்தேன் ஆனால், போகப்போக படத்தின் ஒளிப்பதிவின் அழகில் என்னையே மறந்து விட்டேன்.

இந்த மாதிரி, படம் முழுக்க ஒளிப்பதிவிற்காக எந்தப்படத்தையும் ரசித்தது இல்லை.

ஒரு படத்தில் சில பாடலை, சில காட்சிகளை எடுத்த விதத்திற்காக ரசித்து இருப்பேன் ஆனால், இது போல படம் முழுக்க ரசித்தது இல்லை.

அட! அட! என்ன வண்ணம், என்ன ஒரு கோணம்… பட்டாசாக இருந்தது.

ரோஜா அலைபாயுதே

“ரோஜா” படத்தில் “சின்ன சின்ன ஆசை”யில் வரும் துவக்க இசைக்கு காட்டப்படும் வயல்வெளி நம்மை அப்படியே காட்சியோடு ஒன்றிப்போகச் செய்யும்.

“அலைபாயுதே” படத்தில் மாதவன் ஷாலினியை தேடிச் செல்லும் போது தூரத்தில் ஒரு பாலத்தில் செல்லும் பேருந்தைக் காட்டும் போது அட! எவ்வளவு அழகு என்று நினைத்துள்ளேன்.

தனுஷ் நடித்த “பொல்லாதவன்” (வேல்ராஜ்), “எல்லாம் அவன் செயல்” என்ற RK படத்தின் ஒளிப்பதிவும் (ராஜ ரத்தினம்) வித்தியாசமாக இருக்கும்.

இது போல சில படங்களைக் குறிப்பிடலாம் ஆனால் மொத்தப் படத்தையும் என்னால் ரசிக்க முடிந்தது என்றால் அது சந்தேகம் இல்லாமல் “நீர்ப்பறவை” படம் தான்.

ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு அழகாக இருக்கிறது. இதற்காகச் சிறப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்களா என்று தெரியவில்லை.

நிழல் படம் எடுப்பவர்கள், ஒரு குறிப்பிட்ட காட்சியை, அதற்கான சூழல் அமையும் வரை காத்திருந்து எடுப்பார்கள். அது படத்தைப் பார்த்தாலே நமக்குப் புரியும். இது போலப் படம் முழுக்க இருந்தால்… அது தான் இந்தப்படம்.

படத்தின் கதை, குடியைப் பற்றியும், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் அடையும் துன்பத்தைப் பற்றியும் கூறுவதாகும்.

கதையைக் கேட்டால் உங்களுக்கு வழக்கமான டாக்குமெண்டரி படம்போலத் தோன்றலாம் ஆனால், படம் அப்படியில்லை.

விஷ்ணு

சில நேரங்களில் விஷ்ணு குடிப்பதைப் பார்த்தால் நமக்கே டாஸ்மாக்கில், அவருடன் இருப்பது போல இருக்கிறது ஆனால், சரியாகக் கொண்டு சென்று இருந்தார்கள்.

இது போல ஒரு கதாப்பாத்திரத்தில் நடித்ததற்காக விஷ்ணுவையும் பாரட்ட வேண்டும். திரைக்கதை நன்றாகவே இருந்தது. குடியை விட்ட பிறகு ஒருவர் எப்படி மாறுகிறார் என்பதை அழகாக காட்டி இருக்கிறார்கள்.

ஒருவேளை படம் ரொம்ப மோசமாக இருந்து இருந்தாலும், நிச்சயம் ஒளிப்பதிவிற்காகப் பார்த்து இருப்பேன் ஆனால், படம் நன்றாகவே இருந்தது.

படத்தில் கடல் முக்கியப் பகுதி என்பதால், நீல வண்ணம் அதிகம். படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் இதற்காகவே அழகு படுத்தினார்களா! அல்லது இந்தக் கேமராவில் அனைத்து காட்சிகளும் / இடங்களும் அழகாக தெரிகிறதா!!

ஒரு காட்சியில் விஷ்ணுவும் இன்னொருவரும் சண்டைப் போடுவார்கள் அப்போது இருவரும் எதிர் எதிரே கடலில் தண்ணீர் தெறிக்க ஓடி வருவதை மேலே இருந்து காட்டியிருப்பார்கள்… அற்புதம்.

நிழல் படங்கள் எடுக்கும் போது வெற்று பரப்பாக, எந்த ஒரு கட்டிடமும் இல்லாத இடத்தில், ஒரே ஒரு நபர் இருக்கும் போது, படம் எடுத்தால் செமையா இருக்கும்.

கடலைச் சார்ந்த படம்

நீர்ப்பறவை இயல்பாகவே கடலைச் சார்ந்த படம் என்பதால், கடலும் கடற்கரையும் அதிகம் வருகிறது.

இதனால், யாரையாவது காட்டும் போது பின்னணியில் எவருமில்லாமல் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கடலோ அல்லது மணல் பரப்போ அல்லது அலைகள் மட்டுமே தெரிவது போல வந்தால் அட்டகாசமாக உள்ளது.

முதலில் இதுபோல காரணத்தால் தான் அழகாக இருக்கிறது என்று நினைத்தேன் ஆனால், அனைத்துக் காட்சிகளிலுமே (கடல் இல்லாமல் வீடுகள், சர்ச் மற்றும் சாலைகள் கூட) ஒளிப்பதிவு நம் கண்ணை விட்டு அகல மறுக்கிறது.

இதே இப்படி என்றால், உப்பளங்கள் சில காட்சிகளில் வரும். சும்மாவே கலக்குறாங்க! இதில் முழுதாகவே வெண்மையாக இருந்தால்…! சூப்பர்.

பாலசுப்ரமணியம்

கேமராவை எங்கெல்லாம் வைத்தால் அழகாக இருக்குமோ அங்கே எல்லாம் வைத்துத் தூள் கிளப்பி இருக்கிறார் பாலசுப்ரமணியம்.

நான் நிச்சயம் இன்னொரு முறை ஒளிப்பதிவிற்க்காகவே பார்க்கப் போகிறேன்.

விமர்சனங்களில் பொதுவாக ஒளிப்பதிவு சிறப்பாக / சுமாராக இருந்தது, இல்லை என்றால் கும்கி போலச்சில படங்களுக்குக் கொஞ்சம் கூடுதலாகப் பாராட்டி இருக்கிறேன் ஆனால், எந்த ஒரு படத்திற்கும் ஒளிப்பதிவை இப்படி விளக்கியதில்லை.

எனக்கு அதை டெக்னிக்கலாக விளக்கத் தெரியவில்லை.

இது படத்தின் விமர்சனமல்ல ஒளிப்பதிவின் விமர்சனம். ஒரு படத்தின் ஒளிப்பதிவிற்க்காக விமர்சனம் எழுதியதும் எனக்கு இதுவே முதல் முறை.

நான் சிறந்த நிழல் படங்கள் எடுப்பவனல்ல, ஓரளவிற்கு எடுப்பேன் ஆனால், நல்ல ரசனைக்காரன்.

அழகான படங்களை ரசிக்க ரொம்பப் பிடிக்கும் அதனால், இந்தப் படத்தின் ஒளிப்பதிவை ரசித்ததில் எந்த வியப்பும் இல்லை.

ஒரு இயக்குநரின் படம் பார்த்து, படம் நமக்குப் பிடித்து இருந்தால் விக்கியில் சென்று, அவர் இதற்கு முன் என்னென்ன படங்கள் இயக்கி இருக்கிறார் என்று தேடுவோம்.

நான் பல ஆங்கில மற்றும் கொரியன் படங்களுக்கு இவ்வாறு தேடி, பின் அவரின் முந்தைய படங்களைப் பார்த்து இருக்கிறேன்.

கேள்விப்பட்டு இராத ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியன், இதுவரை எந்தெந்த படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து உள்ளார் என்ற இயல்பான ஆவலில் பார்த்தேன்.

இதில் பின்வரும் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.

இந்தப்படங்களில் “பிதாமகன்”, “தம்பி”, “ஜெயம் கொண்டான்” படங்களின் ஒளிப்பதிவு ரொம்ப நன்றாக இருக்கும்.

எனக்கென்னவோ இயக்குனர்கள் இவரைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையோ என்று தோன்றுகிறது.

இது போலச் சிலரே இவரது திறமையை முழுதாக வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்கள். Image Credit Wikipedia.

உங்களில் யாருக்காவது ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம் அவர்களைத் தெரிந்தால், அவரை இங்கே ஒருத்தன் மனதார பாராட்டி இருக்கிறான் என்று கூறி விடுங்கள் 🙂 .

இவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால், நேரில் பாராட்ட வேண்டும் என்று ஆசை. இந்தப்படத்தின் ஒளிப்பதிவிற்கு விருது கிடைத்தால் ரொம்ப சந்தோசப்படுவேன்.

உங்களுக்குத் தெரிந்த சிறப்பான ஒளிப்பதிவு திரைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

15 COMMENTS

  1. கிரி அவர்களுக்கு,
    வணக்கம். தங்களின் விமர்சனம் ரசித்து படித்தேன்…காரணம் பாலசுப்ரமணியம் என் கணவர் & ஒளிப்பதிவில் எனக்கு இருக்கும் ஆர்வம். என் கணவரும் விமர்சனத்தை படித்தார். நன்றி.

  2. நீர்பரவை இன்னும் பாக்கலீங்க.. அத அதற்க்கு காரணம் டிவியில் காட்டப்படும் ஓவர் விளம்பரம்.

  3. கிரி,

    எனக்கு விஷ்ணு வோட படம் பாக்குறதுல அவ்வளவா interest இல்ல. என்னன்னு தெரியல பட், நீங்க olipadhivu பற்றி sonnadhala torrent download panni pakkuren…….

  4. நீர் பறவை இன்னும் பார்கல
    பாக்கணும் நு interest இல்லை நீங்க இவ்வளவு சொல்லுறீங்க சோ ஒரு டைம் பாத்துட்டு சொல்லுறேன் தல

    – அருண்

  5. அடடே! படத்த தியேட்டர்ல பாக்க மிஸ்பண்ணிட்டனே. சரிவிடுங்க எப்படியும் சன் டிவில போடுடுவாங்க, அப்போ பாத்துக்கலாம் (என்ன விளம்பரம் போட்டு கொல்லுவாங்க 🙂 )

  6. பாலசுப்ரமணியத்தின் “குட்டி” ஒளிப்பதிவும் நன்றாகவே இருந்தது. சன் டிவியின் ஆரம்பகால பிரபல தொகுப்பாளர் மாலா இவரது மனைவி.

    கலர் படங்களில்………..
    பாலுமகேந்திரா – மூன்றாம் பிறையில் சூரிய கதிர்கள் மரங்களை தாண்டி விழுவதை பார்த்த போது , பிரமித்து போனேன். அப்புறம் மாண்டேஜ் சாங்கில் வரும் க்ளோஸ்ப் அருமையாக இருக்கும், அதாவது ஹீரோவும், ஹீரோயினும் வெகு இயல்பாக பேசிக் கொள்வது போல படமாக்குவார் (கடைசியாக வந்த அது ஒரு கனாக்காலம் -அந்த நாள் பாடலிலும் கூட). உன் கண்ணில் நீர் வழிந்தால் – கண்ணில் என்ன கார்காலம், ரஜினியும் மாதவியும் வெகுஇயல்பாக பேசுவதை பார்க்கும் போது, அட அது நம்ம ரஜினிதானா என்று சந்தேகம் வரும்.

    அசோக்குமார் – ஜானி போன்ற ஆரம்ப காலம் முதல் ஜீன்ஸ் வரை அருமையாக செய்திருப்பார். ஹீரோயின்களை மிக அழகாக காட்டுவார். “தென்றலே என்னைத்தொடு” – ஒவ்வொரு பாடல் காட்சியையும் மிக எளிமையாக ஸ்ரீதரின் வரையறைக்கு உட்பட்டு அழகியலாக படமாக்கியிருப்பார், இந்தப்படம் போல வேறு எந்த படத்திலும் ஜெயஸ்ரீ இவ்வளவு அழகாக தெரிய மாட்டார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த படத்தின் நான்கு பாடல்களை மனம் தேடும் ( ஏம்மா, என்னாங்க தவிர்த்து).
    இயக்குனராக இவர் செய்தது எல்லாம் “உவ்வே” சமாச்சாரங்கள்.

    பி.சி.ஸ்ரீராம் – அஜித் ஷாலினியை திருமணம் செய்யப்போவதாக அறிவித்திருந்த நேரம் “அலைபாயுதே” ரிலீஸ், அதை பார்த்துவிட்டு நண்பன் ஒருவன் அஜித்தை கொலைவெறியுடன் தேடிக்கொண்டிருந்தான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நிறம் பாடலில் “சிகப்பு’ – ஷாலினி…………
    சமீபத்தில் “யாவரும் நலம்” அந்த லிப்ட் ஷாட் வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    ஷங்கரின் “ஐ” படத்தில் எனக்கு இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு பி.சிதான். கோபுர வாசலிலே படத்தில் இவரிடம் உதவியாளராக இருந்த அனைவரும் இந்தியாவின் இன்றைய Most wanted ஒளி ஓவியர்கள்.

    இவர்கள் மூவரும் போட்ட பாதையில்தான் 80-களில் இருந்து இன்று வரை தமிழ் சினிமா ஒளிபாய்ச்சுகிறது.

    சொல்ல மறந்துட்டேனே…….
    உன்மையான ஒளி ஓவியர் “தங்கரின்” மோகமுள் (சொல்லாயோ-பெண், கமலம் பாதகமலம்), பாரதி (நிற்பதுவே) போன்றவையும் குறிப்பிடத்தகுந்த படங்களே!

  7. கிரி
    நீர்பறவை பார்த்தவுடன் உங்கள் விமர்சனம் இந்நேரத்தில் தேடி படித்தேன. ஏன் எனில் எனக்கு படமும் மிகவும் பிடித்து இருந்தது.குறிப்பாக இப்படி ஒரு ரோலில் துணிச்சலாக நடித்த விஷ்ணு ,G V பிரகாஷ் இசை மற்றும் பின்னணி இசை பற பற பாடல் மற்றும் மறக்க இயலாத திரு.பாலசுப்ரமணியன் அவர்களின் அற்புதமான ஒளிப்பதிவு.கண்டிப்பாக தேசியவிருது இந்த வருடம் கிடைக்க வேண்டுகிறேன்.படம் முழுவதும் கடலில் மணலில் நடந்த உணர்வு.இந்த அதிகாலை பின்னூட்டம் என் உணர்வின் வெளிப்பாடு.HATS OFF TO YOU BAALASUBRAMANIYAN SIR. அற்புத படைப்பிற்கு சீனு ராமசாமி அவர்களுக்கும் ,இப்படத்தை வெளியிட்ட உதயநிதி அவர்களுக்கும் என் பரவச பாராட்டுக்கள்.

  8. சுனைனா நடிப்பும் அருமை குறிப்பிட மறந்துவிட்டேன்.சுனைனா தமிழ் பேச பழகிவிட்டால் தேசிய விருது வாங்கும் வாய்ப்பு அருகில் உண்டு.ஒரு கிருத்துவ பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.

  9. இசை N.R.Raghunanthan என்று அறிந்தேன் தவறாக குறிப்பிட்டதற்கு மன்னிக்கவும் . N.R.Raghunanthan சார் உங்கள் இசை நீண்ட நாட்களுக்குப்பின் என்னை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டியது.நன்றி

  10. தற் செய்யலாக மாலா பாலா -வின் காதல் படிகட்டுகள் (விகடன் பதிப்பகம் )போன வாரம் படித்தேன். சொல்வனம் சுகா வின் location ப்ளாக்-கில் பாலா-வின் பகுதியும் அப்படி அமைந்ததே. காத்தவராயன் முந்தி விட்டார். வழிமொழிகிறேன், காத்தவராயன் அவர்களுடன் ஒளிப்பதிவாளர் பற்றிய குறிப்புகளுக்கு மட்டும்.

  11. அனைவரின் வருகைக்கும் நன்றி

    @மாலா பாலு நன்றி. இன்னும் சிறப்பான படங்களை தர என் அன்பான வாழ்த்துகள்.

    @ராஜ்குமார் அதற்கு தயாரிப்பு ரெட் ஜெயண்ட் காரணமாக இருக்கும்.

    எல்லோருக்குள்ளும் ஒரு சோகக் கதை இருக்கும் போல 🙂

    @ராஜேஷ் பாருங்க.. நன்றாக இருக்கும்.

    @அருண் நோ கமெண்ட்ஸ்

    @கௌரிஷங்கர் 🙂

    @காத்தவராயன் தகவல்களுக்கு நன்றி. சன் டிவியில் நான் இவர்களை பார்த்தேனா என்று தெரியவில்லை.

    ஜெயஸ்ரீ யை எனக்கு ரொம்ப பிடிக்கும் 🙂

    @ARANANBU சுனைனா நடிப்பு உண்மையில் மிக சிறப்பு நீங்க சொன்னது போல.

    @ஹரிராம் நன்றி

  12. இன்று கண்ணா லட்டு திங்க ஆசையா படம் பார்த்தேன், பாலா அவர்கள் தான் ஒளிப்பதிவு, கோவில் கோபுரம் பின்னணியில் இருந்து சூரியன் உதிக்கும் காட்சி. அப்பா ! புல்லரித்து விட்டது. சிறுவனாக இருந்த பொது , தஞ்சை கோவிலில் இதை போன்ற அஸ்தமனம் பார்த்தேன். வானத்தில் சூரியன் வரையும் வண்ண கோலங்களை மீண்டும் திரையில் இன்று பார்த்தேன். பாலா சார் வெல் டன். வானம் எனக்கொரு போதிமரம் என்றார் புலவர். அவரின் புலமையை நீங்கள் உருவக படுத்தி விட்டீர்கள் திரையில்.

  13. நான் புகைப்பதை நிறுத்தி 5 வருடம் முடியபோகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here