OTT க்காக எடுக்கப்பட்ட படம் Joji. Image Credit
Joji
குடும்பத்தின் இளைய மகன் ஃபகத் பாசில், இவருக்கு இரு அண்ணன்கள்.
செலவுகள் அனைத்துக்கும் தந்தையையே எதிர்நோக்கி இருப்பது குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்துகிறது.
தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டு சில கால மருத்துவத்துக்குப் பிறகு காலமாகிறார்.
தந்தை இறப்புச் சோகமாக இருக்கக் கூடாது என்று மூத்த மகன் பட்டாசு வெடிக்க, உறவினர்களுக்கு இறப்பில் சந்தேகம் வருகிறது.
இறுதியில் என்ன ஆனது என்பதே Joji.
துவக்கமே அருமை
படத்தின் துவக்கமே வெளிநாட்டுப் படத்தைப் பார்ப்பது போல இருந்தது. கேரளாவின் அழகும், தனிமையும், கழுகு பார்வை ஒளிப்பதிவும் அட்டகாசம்.
துவங்கிய ஓரிரு நிமிடங்களில் அட! என்று பார்க்க வைப்பது கலக்கல்!
இவர்கள் வீடு நகரத்தை விட்டு விலகி, மிகத்தனிமையான ஆனால், மிகப்பெரிய வீடாக உள்ளது. வீட்டின் சுற்றுப்புறம், இயற்கை, குளம் என்று அசத்தலான சூழ்நிலை.
ஃபகத் பாசில்
இவரை என்ன கூறி பாராட்டுவது?! அனைத்து படங்களிலும் வித்யாசமான நடிப்பை, உடல்மொழியை வழங்குகிறார்.
எங்கே இருந்து இதற்கான யோசனையைப் பிடிக்கிறாரோ!
கல்லூரி படிப்பைப் பாதியில் விட்ட கதாப்பாத்திரம் என்பதால், இளைய வயதுக்காக எடையைக் குறைத்து, வேகமான உடல்மொழியாக்கி நம்ப வைத்துள்ளார்.
சைக்கோ கலந்த கதாப்பாத்திரம். அனைவரும் புரிந்து கொள்வது கடினம்.
புகைப்பது, நடப்பது, பேசுவது, களுக்கென்று சிரிப்பது அனைத்துமே தனித்தன்மையாக உள்ளது.
குடும்பம்
குடும்பத்தில் அனைவரும் எதோ ஒரு வகையில் அமைதியாக இருக்கிறார்கள். ஃபகத் பாசில் மட்டுமே தன்னை எதோ ஒரு வகையில் பரபரப்பாக வைத்துக்கொள்கிறார்.
ஃபகத் பாசில் அண்ணி எப்போதும் ஒரு சோகத்தில், அமைதியில் இருந்தாலும், அந்த அமைதியும், அவர் உடல்மொழிகளும் ஒரு வித ஈர்ப்பை கொடுக்கின்றன.
அனைத்தையும் அமைதியாகக் கடந்து செல்லும் அவர் நடவடிக்கைகள் வித்யாசம்.
ஒளிப்பதிவு & பின்னணி இசை
மனதுக்குப் பிடித்த ஒளிப்பதிவு, பின்னணி இசை.
பல காட்சிகள் கழுகுப் பார்வையில் படம் பிடிக்கப்பட்டு இருப்பது, படத்துக்கு கெத்தையும், த்ரில்லர் படங்களுக்குண்டான மன நிலையையும் கொடுக்கிறது.
கேரளா பசுமை அனைவரும் அறிந்தது. எனவே, காட்சிகள் அசத்தலாக உள்ளது.
த்ரில்லர் படங்களுக்கே உண்டான பயம் கலந்த பின்னணி இசை படத்தைச் சுவாரசியமாக்குகிறது.
திரைக்கதை, காட்சியமைப்பு, நடிப்பு, ஒளிப்பதிவு, பின்னணி இசை வெளிநாட்டுப் படம் பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தந்தது.
கேரளா தான் எவ்வளவு அழகாக உள்ளது! 🙂 .
யார் பார்க்கலாம்?
முக்கால்வாசி வரை படம் பரபரப்பாக இல்லையென்றாலும், எதோ ஒன்று திரைக்கதையில் நம்மை இணைக்கிறது, ஒன்ற வைக்கிறது.
சாதாரணப் படமாகச் சென்று கொண்டு இருக்கும் போது, திடீரென்று த்ரில்லர் படமாக மாறிப் பரபரப்பை கூட்டுகிறது.
Joji அனைவருக்கும் பிடிக்கும் திரைக்கதையல்ல.
அனைத்து வகைப் படங்களையும் ரசிப்பவர்களால் மட்டுமே இப்படத்தைப் பொறுமையாகப் பார்க்க முடியும்.
பொறாமை படக் கூடாது என்று நினைத்தாலும், இது போல மலையாளப் படங்களைப் பார்க்கும் போது தவிர்க்க முடியவில்லை 🙂 .
Amazon Prime ல் காணலாம்.
Directed by Dileesh Pothan
Produced by Fahadh Faasil, Dileesh Pothan, Syam Pushkaran
Written by Syam Pushkaran
Starring Fahadh Faasil, Baburaj, Shammi Thilakan, Unnimaya Prasad, Basil Joseph
Music by Justin Varghese
Cinematography Shyju Khalid
Edited by Kiran Das
Distributed by Prime Video
Release date 7 April 2021
Running time 113 minutes
Country India
Language Malayalam
தொடர்புடைய விமர்சனங்கள்
Trance (2020 மலையாளம்) சுவிசேஷ கூட்டங்கள்
Kumbalangi Nights (2019 மலையாளம்) | God’s Own Country
Take Off [மலையாளம் – 2017] “உலகப்படம்”
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.
கிரி, உங்கள் பதிவை படித்த பின் படத்தை பார்த்தேன்.. மிகவும் பிடித்து இருந்தது.. பஹத் பசிலுக்காக மட்டும் பார்க்க வேண்டும் என்று எண்ணிய எனக்கு அவரின் நடிப்பை விட ஒளிப்பதிவும், பின்னணி இசையும் மிரள வைத்து விட்டது.. நீங்கள் சொல்வது போல் இந்த படம் எல்லோருக்கும் பிடிக்கும் என்று கூற முடியாது.. ஆனால் வித்தியாசமான படங்கள் பார்க்க விரும்புவோர்கள் இந்த படத்தை நிச்சயம் விரும்பி பார்ப்பார்கள்.. படத்தில் பாதிரியாராக வருபவர் சிறு வயது என்றாலும் அவரின் நடிப்பு மிகவும் யதார்த்தம்.. இது போல நிறைய கூறலாம்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
படம் உங்களுக்கு பிடித்ததில் மகிழ்ச்சி 🙂 .