நான் மகான் அல்ல (2010)

16
Naan Mahaan alla நான் மகான் அல்ல

பையா வெற்றிக்குப் பிறகு கார்த்தி நடித்து இருக்கும் படம் நான் மகான் அல்ல. வெண்ணிலா கபடிக்குழு என்ற வெற்றிப்படத்திற்கு பிறகு இயக்கி இருக்கும் படம் இயக்குனர் சுசீந்திரனுக்கு. Image Credit

இருவருக்குமே இந்தப்படம் நல்ல பெயரைப் பெற்றுத்தந்து உள்ளது.

நான் மகான் அல்ல

கதை ரொம்ப சிக்கலானதெல்லாம் இல்லை. தன் தந்தையை கொன்றவர்களை (உடன் சில காரணங்களும்) மகன் பழிவாங்குகிறான். இது தான் படத்தின் கதையே.

இதில் போதை பொருள்கள், தற்கால ஒரு சில இளைஞர்கள் நடவடிக்கை, சமூக சீர்கேடு போன்றவற்றை சேர்த்து தனது சிறப்பான திரைக்கதையின் மூலம் தொய்வு இல்லாமல் படத்தைக் கொண்டு செல்கிறார்.

படத்தின் நாயகன் திரைக்கதை தான் கார்த்தி அதற்கு அடுத்தது தான்.

இதைப்போலப் பல படங்கள் வந்து இருந்தாலும் மறுபடியும் மற்றவர்களுக்குச் சலிப்பு தட்டாமல் கொடுத்து வெற்றி பெறுவது என்பது கொஞ்சம் சவாலான விஷயம் தான்.

வன்முறை

படத்திற்கு பெரிய குறை அதிகப்படியான வன்முறை.

வன்முறை என்று சொல்வதை விட ஒரு சில காட்சிகள். சுசீந்திரன் எதற்காக வெட்டுவதை இந்த அளவிற்கு காண்பித்தார் என்று புரியவில்லை.

சில காட்சிகள் ஹாரர் படத்தை நினைவூட்டுகிறது.

படம் துவங்கும் போதே ஒரு வன்புணர்வு காட்சி போல வரும் ஆனால், அதை முழுதும் காட்டாமல் காட்சியமைப்பின் மூலம் நமக்குக் கூறி இருப்பார்கள் அதைப்போல இதையும் செய்து இருக்கலாம்.

கார்த்திக்கு இக்கதாப்பாத்திரம் கச்சிதமாகப் பொருந்துகிறது.

மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு எதுவும் செய்யாமல் தன் கதாப்பாத்திரத்தின் தன்மை அறிந்து அல்லது இயக்குனரால் ஒழுங்காக வேலை வாங்கப்பட்டு நடித்திருக்கிறார்.

நகைச்சுவைக் காட்சிகள் இவருக்கு நன்றாகப் பொருந்துகிறது.

போறபோக்குல அப்படியே ஒரு சிரிப்பு வெடியைப் போட்டுட்டு போயிட்டே இருக்காரு.

அதுவும் இவர் பணம் வசூல் பண்ண ஒரு வீட்டிற்கு சென்று அங்கே கிரிக்கெட் பார்த்து இவர் செய்யும் அலப்பறை செம நகைச்சுவை. இது மாதிரி பல இருக்கு.

சண்டைக் காட்சிகளில் நிறைய மதிப்பெண் பெறுகிறார். அதற்கு இவரின் நம்பும்படியான உடல்வாகும் ஒரு காரணம்.

கார்த்தியின் அப்பாவிற்கு அடிபட்டுப் படுத்து இருப்பார் அதனால் குடும்ப வேலைகளையெல்லாம் கார்த்தி கவனிக்க வேண்டியதாக இருக்கும்.

ரேசன், மின்சாரம்,  மளிகை கட்டணம் என்று நீளும்.

அதுவரை ஜாலியாகச் சுற்றிக்கொண்டு இருந்தவர் இதைப் பார்த்துக் குடும்பஸ்தன் என்றால் இத்தனை வேலை, பொறுப்பு இருக்கா! என்று மிரளுவதற்கு திரையரங்கில் பலத்த சிரிப்பலை.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லை வழக்கமான தமிழ்ப்பட கதாநாயகி. 

அது ஏன் அனைத்து இயக்குனர்களும் எவ்வளவு நல்ல படம் எடுத்தாலும் கதாநாயகி கதாப்பாத்திரத்தை மட்டும் டம்மி பீசாகவே வைத்து இருக்கிறார்கள்.

சும்மா வந்து கெக்கே பிக்கேன்னு சிரிக்கிறார் கார்த்தியுடன் செல்லமாகச் சண்டை போடுகிறார் அவ்வளவே.

படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் யுவன் சிறப்பாகச் செய்துள்ளார் குறிப்பாகப் பின்னணி இசை அருமை.

கொஞ்சம் பரபரப்பான காட்சிகளில் டெம்ப்போ ஏற்றப் பின்னணி இசை பெரிதும் உதவியுள்ளது.

முக்கால்வாசி படம் இயல்பாகவும் கடைசி கால் வாசி படம் சினிமாத்தனமாகவும் இருக்கிறது.

கால்வாசி படம் சினிமாத்தனம் என்று நமக்குத் தோன்றக்காரணமே அதற்கு முந்தைய காட்சிகள் இயல்பாக வந்து இருந்தது தான்.

கல்லூரி மாணவர்கள்

இந்தப்படத்தில் குறிப்பிட வேண்டிய முக்கியமான நபர்கள் வில்லத்தனமாக நடித்து இருக்கும் கல்லூரி மாணவர்கள்.

அடேங்கப்பா! என்ன நடிப்பு! பின்னிப் பெடலெடுக்கிறாங்க. அதிலும் கறுப்பினத்தவர்  போல முடி வைத்து இருக்கும் பையன் வெளுத்து வாங்குறான்.

அதில் லீடராக வருபவர் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக எனக்குப் பட்டது. முகத்தைக் கோபமாகவும் ரவுடி மாதிரியும் வைக்கச் சிரமப்பட்டதை போல இருந்தது இயல்பான மிரட்டலாக இல்லை.

மற்றபடி அனைவரும் அருமையாக நடித்து இருந்தார்கள். அதுவும் கடைசி சண்டை…. அசத்தல் போங்க!

இந்தப்படத்தில் நடிக்கும் கறுப்பினத்தவர் போல இருக்கும் பையனைக் கதாநாயகன் கார்த்தி மறந்தாலும், படம் பார்த்து வருபவர்கள் அவர் முகத்தை மறக்கமாட்டார்கள் அந்த அளவிற்கு பீதியை கிளப்பியுள்ளார்.

ரவுடிகள் உலகம்

கார்த்திக்கிற்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் திடீர் நட்பை ஏற்படுத்தி அதைக் கடைசி வரை கொண்டு சென்று இருப்பது எதிர்பார்த்த ஒன்று.

ரவுடிகள் உலகம் எப்படி இருக்கும் என்று அதன் இயல்பு கெடாமல் எடுத்து இருப்பது பாராட்டுக்குரியது.

குறிப்பாக வழக்கமாக இவர்கள் சந்திக்கும் இடம், இருக்கும் இடத்தின் அமைப்பு என்று அனைத்திலும் கவனம் செலுத்தி செட்டிங்க்ஸ் எதுவும் போடாமல் அப்படியே எடுத்து இருப்பது காட்சிகளின் மீதான நம்பகத்தன்மையை நமக்குத் தருகிறது.

அதிலும் ஒரு மாணவனின் மாமாவாக வருபவரின் குரலும் உடல் மொழியும் அவர்கள் போடும் திட்டமும் அசத்தலாக உள்ளது.

எந்த வித ஒப்பனையும் இல்லாமல் இருப்பது காட்சிகளுக்கு வலு சேர்க்கிறது.

வன்முறை என்ற குறுகிய வட்டத்திற்குள் சிந்திக்காமல் கூறி உள்ள விசயங்களைக் கவனித்தீர்கள் என்றால் அவர்கள் கூறி உள்ள சமூக அவலங்கள் புரியும்.

இதைப்போலக் கதைக்கு இதைப்போல வன்முறை அவசியம் தான் ஆனால், கொஞ்சம் அதிகமாகி விட்டது அவ்வளவே.

ECR

ECR போன்ற கடற்கரை சாலைகளில் உள்ள சவுக்கு தோப்புகள் மற்றும் ஒதுக்குப்புறமான இடங்களில் ஒதுங்குபவர்களை சுற்றி வளைத்து அந்தப்பையனை அடித்துப் போட்டு விட்டு அல்லது கட்டிப்போட்டு விட்டு அவன் முன்னாலே அந்தப்பெண்ணை வன்புணர்வு செய்து விட்டு ஓடிவிடுகிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியே சொல்வதும் சிரமம். இதுவே, இவர்களுக்குத் தைரியத்தை கொடுக்கிறது. இதைப்போலப் பல சம்பவங்கள் தினமும் நடக்கிறது.

உலகம் அழகானது நமக்கு இதைப்போல ஏதாவது நடக்காத வரை. இதையே நான் மகான் அல்ல பிரதிபலித்துள்ளது.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT updates, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

16 COMMENTS

 1. //படத்தின் ஹீரோ என்னை பொறுத்தவரை திரைக்கதை தான்//

  இது போதுமே, அப்ப படத்தை பார்க்கலாம் விடுங்க பார்த்துடுவோம் 🙂

  பகிர்வுக்கு நன்றி!.

  அப்புறம் நீங்க சொன்ன அந்த கல்லூரி மேட்டர் உண்மை, ஹி ஹி ஏன்னா நானும் அப்படிதான் 🙂

 2. உங்களுடைய விமர்சனம் மிகவும் நன்றாக இருந்தது. பல விசயங்களை ஆராய்ந்திருக்கிறீர்கள்! வாழ்த்துகள்!

 3. விமர்சனத்திற்கு நன்றி தல. களவாணி இன்னும் பாக்கல நேற்றுத்தான் கார்த்தியின் திரைப்படத்தைப் பார்த்தேன்.

  விமர்சனத்திற்கு நன்றி

 4. கிரி இப்போது தான் ஆனந்த விகடனில் நான் மகான் அல்ல விமர்சனம் படித்து விட்டு சிஸ்டத்தில் அமர்ந்தேன் உங்கள் விமர்சனம் படித்தேன் .விமர்சனம் நன்றாக எழுதுகிறீர்கள் .வாழ்த்துக்கள்
  களவாணி படம் ரொம்ப நாட்களாக பார்க்கணும் என்று நினைத்து போக முடியவில்லை பார்த்து விட்டு சொல்கிறேன் நன்றி

 5. கிரி படம் பார்த்து விட்டேன், அருமையாக இருந்தது.

  அப்புறம் ஒரு விஷயம்

  //ஒழுங்கான கல்லூரி மாணவர்களை கேட்டால்//

  நானும் அப்படிதான் என்று போன பின்னூட்டத்தில் சொன்னதை மனதில் வைத்துக்கொண்டு, என் கல்லூரியில் போய் கேட்க கூடாது என்பதை சொல்ல மறந்து விட்டேன் :-).

 6. கதை ரொம்ப சிக்கலானதெல்லாம் இல்லை.. தன் தந்தையை கொன்றவர்களை (உடன் சில காரணங்களும்) மகன் பழிவாங்குகிறான்.

  Template தீம் ஆக இருந்தாலும் குடுத்து இருக்கும் விதம் அருமை

  எனக்கு என்னவோ காதல் காட்சிகள், ஹீரோவின் தோழி அனைத்தும் ரொம்ப செயற்கையாக தோன்றியது. வழக்கம் போல ஹீரோவின் தங்கை யும்….

  அதற்கு மாறாக ஜெயப்ரகாஷ் மற்றும் நண்பர்கள் வெகு இயல்பு…

  அதில் லீடராக வருபவர் நடிப்பு கொஞ்சம் செயற்கையாக எனக்கு பட்டது. முகத்தை கோபமாகவும் ரவுடி மாதிரியும் வைக்க சிரமப்பட்டதை போல இருந்தது இயல்பான மிரட்டலாக இல்லை.

  அவர் கொஞ்சம் கலராக இருப்பதால் அப்படி தோன்றி இருக்கும் என நினைக்கிறேன்

  கார்த்திக்கிற்கும் ஒரு பெரிய ரவுடிக்கும் திடீர் நட்பை ஏற்படுத்தி அதை கடைசி வரை கொண்டு சென்று இருப்பது எதிர்பார்த்த ஒன்று தான் என்றாலும் சுவாராசியமாக இருந்தது.

  எனக்கு ஒரு சந்தேகம் காஜல் அகர்வால் பூஸ்ட் காம்ப்ளான் எல்லாம் நல்லா குடிப்பாங்க போல இருக்கு…. நல்லா செழிப்பா இருக்காங்க

  நல்லா கேட்டிங்க ஒரு கேள்வி, காஜல் பண்ற வொர்க் அவுட் ல நம்ம கார்த்தி கொஞ்சமாவது பண்ண சீக்கிரம் உடம்ப ட்ரிம் பண்ணிடலாம்

  நாம் நினைக்கும் படி உலகம் அழகானது அல்ல.. அழகானது தான் நமக்கு இதைப்போல ஏதாவது நடக்காத வரை.

  இதுதான் படத்தில் சொல்ல வந்த விஷயம் என நினைக்கிறேன்

 7. இரண்டு படங்களையும் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைக்கவில்லை, நான் மகானல்ல இப்போது அருகில் ஓடிக்கொண்டிருந்தாலும் எந்திரன் பார்த்த பின்புதான் எந்த புதுப்படமும் பார்ப்பது 🙂

 8. இரண்டு படங்களும் பார்த்து விட்டேன்…. ஆனால் “களவாணி” சான்ஸே இல்லை.. இந்த அளவிற்கு நான் எந்த படத்தையும் ரசித்ததில்லை.. அதுவும் கடைசி காட்சி சூப்பரோ சூப்பர்….

 9. சிங்கக்குட்டி, மோகன், மயூ, சரவணன், சதா, ஜீவதர்ஷன் மற்றும் ஜாவா வருகைக்கு நன்றி

  @சிங்கக்குட்டி நடத்துங்க.. நீங்க ரொம்ப நல்லவருன்னு எனக்கு தெரியும் 🙂

  @ சதா ஹீரோவின் தோழி மற்றும் தங்கை நடுத்தர குடும்பத்தைப்போல (தோற்றத்தில்) இல்லாமல் இருந்தது காரணமாக இருக்கலாம். அந்தப்பையன் கலராக இருப்பதால் எனக்கு அவ்வாறு தோன்றவில்லை.

  @ஜீவதர்சன் தலைவர் படம் இப்ப வருவதற்கான அறிகுறியே தெரியவில்லை.. பேசாம பாருங்க 🙂

  @ஜாவா வாங்க.. ரொம்ப நாளா ஆளைக்காணோம் 🙂 களவாணி எனக்கு ரொம்ப பிடித்து இருந்தது.

 10. கிரி

  நல்ல விமர்சனம்…..

  களவாணி பார்த்தேன்…. ரசிக்கும்படியாக இருந்தது…..

  எந்திரனுக்காக வெயிட்டிங்….

 11. உங்ககிட்ட இருந்து எந்திரன் பாடல் விமர்சனம் எதிர்பார்த்துட்டு இருக்கோம் பாஸ்.

 12. கிரி களவாணி படம் பார்த்தேன் குடும்பத்துடன் எல்லோரும் சிரித்து ரசித்தோம் எங்கள் தஞ்சை வட்டார படம் என்பதால் தஞ்சாவூர் சென்று வந்தது போல் தோன்றியது

 13. வணக்கம்
  உங்களின் திரைப்பட விமர்சனம் மிகவும் அருமையாக உள்ளது. ஒவ்வொருக் காட்சியையும் வருணித்து விமர்சனம் செய்கிறீர்கள். உங்கள் விமர்சனம் பெரும்பாலும் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here