சுங்கச்சாவடி கட்டணம் இந்தியா முழுக்க அதிகரித்துக் கொண்டே செல்கிறது ஆனால், பல சாலைகள் மிக மோசமாகப் பராமரிக்கப்படுகிறது. கோவை சுங்கச்சாவடி (செங்கப்பள்ளி) குறித்த கட்டுரை இது.
கோவை சுங்கச்சாவடி
சேலம், அவிநாசி, நம்பியூர், கோபி பகுதியிலிருந்து கோவை வரும் வாகனங்களுக்குக் கோவை, செங்கப்பள்ளி சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கட்டணம் ₹100 (செப்டம்பர் 2021). மிக அதிகமான கட்டணம். https://tis.nhai.gov.in/
தேசிய நெடுஞ்சாலை
இந்தத் தேசிய நெடுஞ்சாலை அனைத்து வசதிகளுடன் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- கனரக வாகனங்கள் சாலையோரங்களில் ஓய்வெடுக்கத் தனிப்பகுதி.
- Service Lane.
- நடுவில் வரும் கிராமங்களில் உள்ளவர்கள் நெடுஞ்சாலையில் கடக்காமல் இருக்கப் பாலங்கள்.
- பெரிய ஊர், நகரங்களின் நெரிசலை தவிர்க்கப் புறவழிச்சாலை.
- சாலையில் விலங்குகளோ, மனிதர்களோ குறுக்கே செல்ல முடியாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.
சாலையின் தரம்
ஆனால், சாலையின் தரம் தேசிய நெடுஞ்சாலைக்குண்டானதாக இல்லை.
துவக்கத்தில் இருந்தே சாலை Smooth ஆக இல்லாமல், சொரசொரப்பாக இருந்தது. இதனால், டயர் தேய்மானம் அதிகம்.
இதை ஒப்பிடும் போது மாநில சாலை மிகச்சிறப்பாக இருக்கும். கருமத்தம்பட்டியிலிருந்து அன்னூர் செல்லும் சாலையை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.
ஏராளமான பெரிய, சிறிய பாலங்கள் இந்தத் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளன. இதைக் கடக்கும் போது வாகனம் அதிர்வடையாமல் செல்ல முடியாது.
இவ்வாறு அமைத்து இருப்பதால் கனரக வாகனங்கள் செல்லும் போது ஏற்படும் அதிர்வுகளால் பாலத்தின் ஆயுட்காலம் குறைகிறது.
வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அசவுகரியமான பயணத்தை அளிக்கிறது காரணம், பல இடங்களில் சாலை சீராக இல்லை. வாகனத்தின் பராமரிப்புச் செலவு கூடுகிறது.
ஏராளமான இடங்களில் சாலை பழுதாகியுள்ளது, இதை ஒட்டுப்போட்டு (Patch work) சரி செய்துள்ளார்கள் ஆனால், ஒழுங்காகச் செய்யவில்லை.
குழியை நிரப்புகிறேன் பேர்வழியென்று கரடுமுரடாக மேடு செய்து வைத்துள்ளார்கள்.
இதனால் என்ன பயன்?! வழக்கமாக அனைத்து இடங்களிலும் செய்யும் அதே முட்டாள்தனமான வேலையைத் தான் செய்கிறார்கள்.
வாகனம் கடக்கும் போது அதிர்ந்தபடியே தான் செல்கிறது.
மூளையே இருக்காதா?!
சாலையை ஒட்டுப்போடும் போது ஏற்கனவே உள்ள சாலை மட்டத்துக்கே சரியான அளவில் அமைக்க வேண்டும் என்று ஒரு அதிகாரி கூடக் கூற மாட்டாரா?
சுங்கச்சாவடி கட்டணத்தையும் அதிகளவில் வாங்கிக்கொண்டு இப்படிக் கேவலமாக ஒட்டுப்போட்டால் ஆத்திரமாக உள்ளது.
சாலையும் சரியில்லை, ஒட்டுப்போட்டதும் சரியில்லை.
கார் போன்ற வாகனங்களில் அடிக்கடி இவ்வழியாகச் செல்பவர்களுக்கு மேற்கூறிய இச்சாலையின் பிரச்சனைகள் புரியும்.
கார்கள் எப்படியோ அதிர்வுகளைச் சமாளித்துக்கொள்ளும் ஆனால், இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது மிகவும் கடினமாகவும் எரிச்சலாகவும் உள்ளது.
கோவை நகர (மாநில) சாலை துவங்கியவுடன் சாலையின் தரம் வித்யாசம் தெரியும். அதாவது சாலை Smooth ஆக இருக்கும்.
₹100 சுங்கச்சாவடி கட்டணத்தையும் வாங்கிக்கொண்டு சாலையையும் மோசமாக பராமரித்து இருப்பது கோபத்தை ஏற்படுத்துகிறது.
துவக்கத்தில் போடப்பட்ட சாலையின் தரமே சரியில்லை. எனவே தான் ஏகப்பட்ட இடங்களில் ஒட்டுப்போட்டு வைத்துள்ளார்கள்.
முழுச்சாலையும் தரமாக அமைத்தால் மட்டுமே இப்பிரச்னைக்குத் தீர்வு. இது எப்போது நடக்குமோ?!
தொடர்புடைய கட்டுரைகள்
எனக்கு தனிப்பட்ட முறையில் இந்த சுங்கச்சாவடிகளை குறித்து நிறைய கேள்விகள் இருக்கின்றது.. உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் போது கண்டிப்பாக கேட்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..
கண்டிப்பாக யாசின். எனக்கும் சில கேள்விகள் உள்ளது 🙂