இயக்குநர் ரஞ்சித் சார்பாக நீலம் பண்பாட்டு மையம் மூலம் மக்களிசை என்ற நிகழ்ச்சி நாட்டுப்புற கலைஞர்கள் உட்படப் பல்வேறு இசை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்காக நடைபெறுகிறது. Image Credit
நீலம் பண்பாட்டு மையம்
நாட்டுப்புற கலைகள் கிட்டத்தட்ட அழிந்து வருகிறது. மாறி வரும் நவீன உலகத்தின் விருப்பங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறி வருகிறது.
இக்கலைகளை, இசைக்கலைஞர்களைத் தற்போது எவரும் ஆதரிப்பதில்லை. திருவிழாக்காலங்களில் மட்டுமே இவர்கள் கவனிக்கப்படுகிறார்கள்.
இக்கலையால் எதிர்காலம் இல்லை அதாவது இதை நம்பி வாழ்க்கையை நடத்த முடியாது என்பதால், இக்கலையிலிருந்து விலகி வருகிறார்கள்.
அதிகபட்சம் இத்தலைமுறை தொடர்வார்கள், அடுத்தத் தலைமுறையில் வர மாட்டார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து, ஆதரித்து வருமானம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இயக்குநர் ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் மூலமாக ஏற்படுத்தி வருகிறார்.
Spotify போன்ற இசை நிறுவனங்களிலிருந்து வருமானம் வருவது போல வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முயற்சி எடுத்து வருகிறார்.
மக்களிசை
ரஞ்சித் எடுத்துள்ள முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. பலரால் கண்டுகொள்ளப்படாத நிலையில் இவர் முயற்சிக்கிறார்.
எடுத்துக்காட்டுக்கு நாதஸ்வரம் தமிழகப் பாரம்பரிய இசை ஆனால், தற்போது இதை ஓரங்கட்டி பலரும் செண்டை மேளத்துக்கே ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
இருப்பதிலேயே மிகக்கடுப்படிக்கும் செயல் எதுவென்றால், பாரம்பரியம் பின்பற்ற வேண்டிய கோவிலில் கூட இது போல நடக்கிறது.
ஒரு கடை திறப்பு விழா நடைபெறுகிறது என்றால் அங்கே செண்டை மேளம் தான் இருக்கும், தற்போது வழக்கமாக மாறி வருகிறது.
பறை இசை மிக அற்புதமான கலை மற்றும் இசை ஆனால், இசை குறிப்பிட்ட சாராருக்கான இசையாக மட்டுமே கருதப்படுகிறது.
இது போலப் புறக்கணிக்கப்படும் இசைகளுக்கு இந்நிகழ்ச்சி மறுவாழ்வு அளிக்கும்படியுள்ளது.
கானா பாடகர்
‘எட்டாம் வகுப்பு படிக்கும் பொண்ணுக்கு பூந்தி வாங்கிக் கொடுத்து வாந்தி எடுக்க வைப்போம். அப்ப தான் எங்களை விட்டுப் போகமாட்டா‘.
என்று கானா பாடகர் பாடிய பாடல் வைரலாகப் பரவிச் சர்ச்சையானது.
மக்களிசையில் இது போன்ற பாடல்களே பாடப்படுகின்றன என்று விமர்சனங்கள் வந்தன ஆனால், இது வேறு நிகழ்ச்சியில் 2020 ல் பாடப்பட்ட பாடல்.
ஆனாலும், புகார் கொடுக்கப்பட்டுக் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படப்போவதாகக் கூறப்படுகிறது.
இவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை ஆனால், இதை வைத்து மக்களிசை நிகழ்ச்சிக்குக் களங்கம் ஏற்படுத்துவது சரியல்ல.
மங்கள (மார்கழி) இசை
மார்கழி உற்சவம் என்ற பெயரால் கொண்டாடப்பட்டு வருகிறது.
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் கடுங்குளிரையும் பொருட்படுத்தாது நீராடி அவரவர் விருப்ப ஆலயங்களில் இறைவனைத் திருப்பாவை அல்லது திருவெம்பாவை பாடல்களால் துதித்து வழிபடுவர்
பல ஆண்டுகளாக மார்கழி மாதத்தில் கர்நாடக சங்கீதம் மற்றும் அது தொடர்பான நிகழ்ச்சிகள் மாதம் முழுக்க நடைபெற்று வருகிறது.
சென்னை உட்படப் பல நகரங்களில் உள்ள சபாக்களில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறும்.
சர்ச்சை
தற்போது இந்நிகழ்ச்சிக்குப் போட்டியாக மக்களிசை என்ற பெயரில் ரஞ்சித் ஆரம்பித்துள்ளார். அனைத்து இசையும் ஒன்று தான் என்ற கருத்தில் இதை முன்வைத்து ரஞ்சித் பேசுகிறார்.
என்னதான் ரஞ்சித் இதுபோலக் கூறினாலும் இது போட்டிக்காக / வீம்புக்காகச் செய்வது போலவே தான் உள்ளது. எதிர்காலத்தில் இதை வைத்துச் சபாக்களில் சண்டைகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.
தமிழர்களுக்குச் சிறப்பு என்றால் தை மாதம் தான், பொங்கலும் இணைந்து வருவதால், இம்மாதத்தில் ரஞ்சித் நிகழ்ச்சியை நடத்துவதே சிறப்பாக இருக்கும்.
அதோடு தை மாதத்தில் ஏற்கனவே, இது தொடர்பான நிகழ்ச்சிகளைச் சங்கமம் என்ற பெயரில் கனிமொழி அவர்கள் செய்து வந்தார்.
எனவே, அதோடு இதையும் இணைத்து நடத்துவது பொருத்தமானதாக இருக்கும்.
பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேண்டும் என்பது போல மார்கழி மாதத்திலேயே தான் இதை நடத்துவேன் என்பது வீண் பிடிவாதம் அன்று வேறில்லை.
ரஞ்சித் கூறுவது போல மார்கழி மாதத்தை யாருக்கும் எழுதித்தரவில்லை, அதே போல இதே மார்கழி மாதத்தில் தான் ரஞ்சித்தும் நடத்த வேண்டும் என்பதும் இல்லை.
அப்படியே நடத்தினாலும் சர்ச்சையாக்காமல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.
கலைஞர்களுக்கு நல்லது செய்ய எந்த மாதமாக இருந்தாலும் நல்ல மாதமே!
ரஞ்சித் முயற்சிக்கு வாழ்த்துகள்!
தொடர்புடைய கட்டுரைகள்
செண்டை மேளம் | தமிழகத்தை ஆக்கிரமிக்கிறது
சூறையாட வாடா! தாண்டி வாடா வீரா!! | மகான்
🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel ⭐.