காசி விநாயகா உணவகம் | திருவல்லிக்கேணி

6
காசி விநாயகா உணவகம்

திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில், பேச்சிலர்கள், மேன்சன், கடைகள் ஆகியவற்றுக்குப் பிரபலம். இவற்றோடு பிரபலமானது மெஸ் எனப்படும் உணவகங்கள். அப்படியான ஒரு மெஸ் தான் காசி விநாயகா உணவகம்.

காசி விநாயகா உணவகம்

மெஸ் என்ற உணவகம் திருவல்லிக்கேணி (சென்னை) முழுக்கக் காலம் காலமாகப் பிரபலம். காரணம், இங்கே குறைந்த கட்டணத்தில் மேன்சன்கள் அதிகம்.

ஊரிலிருந்து சென்னைக்கு வருபவர்களுக்குக் குறைந்த வாடகையில் இங்கே கிடைப்பதோடு அதற்காகவே அதிகரித்த மெஸ்கள் அதிகம்.

இவ்வகை மெஸ்கள் அக்காலத்தில் இருந்தே நவீன முறைக்கு, மாற்றத்துக்கு மாறாமல் அதே பழமையோடு இருப்பவை.

இதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியவில்லை.

இது போன்று அதே பழமையுடன் இருக்கும் மெஸ் தான் காசி விநாயகா உணவகம்.

50+ வருடங்களைக் கடந்து இன்னமும் வெற்றிகரமாக தொடர்வது வியப்பே! குறையாத தரமென்றால் மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு போல.

எப்படியுள்ளது?

  • வெள்ளை, மஞ்சள் வண்ணத்தில் டோக்கன் தருகிறார்கள், இருக்கை எண் உட்பட. அவர்கள் அழைக்கும் நேரத்தில், இருக்கையில் உள்ளே சென்று அமர வேண்டும்.
  • வெள்ளை டோக்கனை அழைத்தால் அதை வைத்துள்ளவர்கள் மட்டும் செல்ல வேண்டும், அதே போல மஞ்சள்.
  • பருப்பு, நெய், தயிர் போன்றவற்றுக்குக் கூடுதல் கட்டணம், டோக்கன்.
  • சாப்பாடுக்குக் கட்டணம் ₹85, பருப்பு, நெய் ₹10, தயிர் ₹10. இது மார்ச் 2022 நிலவரம். பணம் மட்டுமே, UPI வசதியில்லை.
  • மிகக் குறுகலான சந்தில் இருப்பதால், சாப்பிட வருபவர்கள் அப்பகுதியை நிறைத்துக்கொண்டுள்ளனர்.
  • இரு கட்டிடங்கள் தள்ளி அமர இடமுள்ளது, தேவைப்படுபவர்கள் அங்கே சென்று அமரலாம். இல்லையென்றால் நின்று கொண்டு இருக்க வேண்டியது தான்.
  • சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாய், அப்பளம் கொடுக்கிறார்கள்.
  • அளவு சாப்பாடு தான் ஆனால், அதுவே சிலரால் முழுக்கச் சாப்பிட முடியாது. குறைவாகத் தேவையென்றால், முன்னரே கேட்க அறிவுறுத்தி உள்ளார்கள் ஆனால், யாரும் அவ்வாறு கேட்பது போலத் தெரியவில்லை.
  • சுவை வழக்கமான உணவகம் போல இல்லாமல், வீட்டு சாப்பாடு போல உள்ளது. எனவே, தைரியமாக சாப்பிடலாம் என்பது இங்கு வரும் கூட்டமே கூறுகிறது.
  • புதிதாக வருபவர்கள் வெள்ளை, மஞ்சள் டோக்கன் விவரம் புரியாமல் விழிப்பது வாடிக்கையாக உள்ளது. நானும் குழம்பி விட்டேன், உள்ளே சென்று அமர்ந்த பிறகு ஒருவர் ‘சார்! இது என் இடம்‘ என்கிறார்.
  • டோக்கனில் உள்ள எண் படி இருக்கையில் அமர வேண்டும் என்று பின்னர் தான் புரிந்தது 🙂 .
  • மெஸ், கல்யாண வீடுகளில் உள்ள பிரச்சனை, வேகமாகச் சாப்பிட வேண்டும். காரணம், நாம் முடிக்க மற்றவர்கள் காத்து இருப்பார்கள். இங்குள்ள பிரச்சனையாக இதைத்தான் கூறுவேன்.
  • என்னால் விரைவாகச் சாப்பிட முடியாது ஆனால், மற்றவர்கள் சாப்பிட்டு எழுந்து விடுவதால், நாமும் சாப்பிட்டு முடிக்க வேண்டிய கட்டாயமாகிறது.

இதுவரை காசி விநாயக மெஸ் பற்றித் தெரியாமல் இருந்தால், முயற்சித்துப்பார்க்கலாம்.

உணவகம் உள்ள இடம் –> கூகுள் வழிகாட்டி

பரிந்துரைத்தது விஜயகுமார்.

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

6 COMMENTS

  1. hi giri
    visiting your blog after a long time… as a kid i used to wonder why these many people stand in the center of the ROAD( akbar sahib street is kind of road for us at that time) I found out several years later that it is a mess and you have this token system etc etc

    food quality is good and happy to know that it stlll functions

    hope to cover other posts which i missed !

  2. (இதற்கான காரணம் என்னவென்று இன்றுவரை புரியவில்லை) மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளாதது தான், இவர்களின் வெற்றிக்கான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் கிரி.. மாற்றங்களை மேற்கொள்ளும் போது நிச்சயம் கடைநிலையில் உள்ளவர்கள் வருவது கடினம்.. தற்போது அதிக வாடிக்கையளர்கள் இவர்கள் தான் இருப்பார்கள் என எண்ணுகிறேன்..

    (குறையாத தரமென்றால் மக்களின் ஆதரவு எப்போதும் உண்டு போல) நிச்சயம் ஆதரவு இருக்கும் கிரி.. என் பார்வையில் சலூன் கடைகளும், உணவகங்களும் எப்பவுமே நான் ஒன்றாக தான் பார்ப்பேன்.. இரண்டிலும் சேவை நன்றாக இருப்பின் என்றுமே மாற்ற வேண்டும் என யாரும் நினைப்பதில்லை.. என் சொந்த அனுபவத்திலும் இதுதான்..

    சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், மோர், கூட்டு, பொரியல், ஊறுகாய், அப்பளம் : இந்த மாதிரி ஒரு தரமான சாப்பாடு சாப்பிட்டு பல வருடங்கள் ஓடி விட்டது.. கடைசியாக எப்போ சாப்பிட்டேன் என்ற நினைவில் கூட இல்லை… வத்தக்குழம்பு + அப்பளம் என்னுடைய விருப்ப உணவு.. 2 / 3 முறை சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலும் வத்தக்குழம்பு மட்டும் தான் வாங்கி சாப்பிடுவேன்.. இடையில், சாம்பார், ரசம், தயிர் என வாங்கமாட்டேன்.. அந்த ஒரு குழம்பின் சுவை மட்டும் நாவில் இருந்தால் போதும்..

    தற்போது ஊரில் இருந்த போது உணவகத்தில் சாப்பிட்டது எல்லாம் ஏமாற்றமே!!!.. எனக்கு இந்த உணவகத்தில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் போது சாப்பிட்டு பார்க்கிறேன்.. பகிர்வுக்கு நன்றி கிரி..

  3. சுமார் நூறாண்டு காலமாகவே திருவல்லிக்கேணி ‘மெஸ்’கள் பெயர் போனவை. சைடோஜி மெஸ், ஹனுமந்தராவ் மெஸ், வெங்கடரங்கம் பிள்ளைத் தெரு மெஸ், மாமி மெஸ் என இச்சிறு அமைப்புகள் காலை எட்டரை மணியிலிருந்து பதினொரு மணிவரையிலும், மாலை ஏழு மணியிலிருந்து ஒன்பது மணிவரையிலும் இருபது இருபது நபர்களாக உள்ள பந்தியில் உணவு படைப்பார்கள். இவர்களுடைய வத்தல் குழம்பு பிரசித்தமானது. அநேகமாக உணவு உண்பவர்கள் அனைவரும் வாடிக்கைக்காரர்கள்.

    திருமணத்திற்கு முன்பு பையன் பெண் பற்றி விசாரிப்பது போல மெஸ் முதலாளி நிறையக் கேள்விகள் கேட்டுத் திருப்தியான பதில் கிடைத்தாலும் அந்த இளைஞனுக்கு ஒரு இறுதிச் சோதனையாக மூன்று நாட்கள் மட்டும் உணவு அளிப்பதாக ஒத்துக்கொள்வார். அவன் எப்படிச் சாப்பிடுகிறான், உணவை வீண் செய்கிறானா, ஓரேடியடியாக அள்ளிப் போட்டு அடைத்துக்கொள்கிறானா, பக்கத்திலிருப்பவர், அருவருப்படையும்படி உணவைக் கீழே சிந்துகிறானா, ஏப்பம் விடுகிறானா என்று பார்த்த பிறகுதான் வாடிக்கைக்காரனாகச் சேர்த்துக் கொள்வார்.

    உண்மையில் உணவு அருந்தும்போது இவ்வளவு அமைதியாகவும் கட்டுப்பட்டுடனும் இயக்கும் கோஷ்டிச் சாப்பாட்டை இந்த மெஸ்களில் தான் காண முடியும். இன்று பெரிய, பளபளவென வர்த்தக ரீதியான உணவு விடுதிகள் வந்துவிட்டன. இந்த மெஸ்களின் செல்வாக்கும் மிகவும் குறைந்துவிட்டது. கண்டிப்பு நிறைந்த மனிதர்கள் இப்போது இல்லை.

  4. திருவல்லிக்கேணி காசி விநாயகா உணவகம்!

    “சொந்த ஊர் துறையூர் பக்கத்துல இருக்கிற கிராமம். பத்தாவது முடிச்சுட்டு சென்னைக்கு ஓடி வந்தேன். செய்யாத வேலையே இல்ல. எல்லா வேலையும் செஞ்சி பார்த்தேன். எதுவுமே திருப்தியா வரலை.அப்பதான் மாநிலக்கல்லூரில இருக்கிற விக்டோரியா ஹாஸ்டல் மெஸ்ல சமையல் வேலைக்கு சேர்ந்தேன். சொன்னா நம்ப மாட்டீங்க. அவ்வளவு சந்தோஷமா இருந்தது. வேலை பார்த்த திருப்தியும் கிடைச்சது.

    அந்த நொடிலதான் ‘சமையல்தான் நமக்கான வேலை’னு புரிஞ்சுது. எல்லா சமையல் நுணுக்கங்களையும் கத்துக்கிட்டேன். அஞ்சு வருஷங்கள் கழிச்சு இந்த மெஸ்ஸை ஆரம்பிச்சேன்…’’ புன்னகையுடன் சொல்கிறார் உணவகத்தின் உரிமையாளரான வாசுதேவன்.

    இந்த உணவகத்துக்கு எப்போது சென்றாலும் நான்கைந்து ஆங்கிலேயர்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். போலவே அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள், சினிமாக்காரர்கள்… என சகலரும் தட்டுப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்; இருக்கிறார்கள்.

    “45 பைசாவுக்கு சாப்பாடு போட ஆரம்பிச்சேன். இப்ப 75 ரூபா. அப்ப விலைவாசி குறைவு. தரமான பொருட்களும் குறைந்த விலைல கிடைச்சது. இப்ப எவ்வளவு பணம் கொடுத்தாலும் தரமான பொருள் கிடைக்கிறது குதிரைக் கொம்பா இருக்கு.

    நல்லா ரசிச்சு ருசிச்சு சாப்பிடற யார் உணவகம் ஆரம்பிச்சாலும், நடத்தினாலும் அந்த ஹோட்டல் அல்லது மெஸ் பேரும் புகழும் பெறும். சமைச்சதுமே சுடச்சுட சாப்பிடணும். அதுதான் உணவுக்கு நாம செலுத்தற மரியாதை. ஆறினதை திரும்ப சூடுபடுத்தக் கூடாது. அப்படி செஞ்சா உணவுல இருக்கிற சத்தும் சுவையும் போயிடும்…’’ என்று சொல்லும் வாசுதேவன், சமையல் பொருட்களிலேயே வாசம் இல்லாத பொருள் என்றால் அது புளிதான் என்கிறார்.

    ‘‘இப்ப பலரும் குக்கர்ல சமைக்கிறாங்க. உண்மைல அது உடலுக்கு கேடு. எந்த உணவையும் மூடாம சமைக்கணும். ஏன்னா வேகறப்பதான் நச்சுப் பொருட்கள் ஆவியா வெளியேறும். இதுவே ஒரு கட்டத்துல வாசமா பக்கத்து வீடு வரை வீசும்!இதுதான் ஆரோக்கியமான சமையல். இப்படி செஞ்சு சாப்பிட்டா நல்லா செரிக்கும்…’’ என்கிறார் வாசுதேவன்.

  5. @Saravanan

    Yeah, those who are new to this place will confuse why all are standing here 🙂 .

    @யாசின்

    “மாற்றங்கள் ஏதும் மேற்கொள்ளாதது தான், இவர்களின் வெற்றிக்கான காரணமாக இருக்கும் என நினைக்கிறேன் கிரி”

    இருக்கலாம் யாசின்.

    “என் பார்வையில் சலூன் கடைகளும், உணவகங்களும் எப்பவுமே நான் ஒன்றாக தான் பார்ப்பேன்.”

    செமையா சொன்னீங்க 🙂 . சிங்கப்பூரில் இருந்த போது இதற்காகவே சலூனுக்கு தூரமாக இருந்தாலும் சென்று வந்தேன். இதை வைத்து ஒரு கட்டுரை எழுதி இருந்தேன் 🙂 .

    ” 2 / 3 முறை சாப்பாடு வாங்கி சாப்பிட்டாலும் வத்தக்குழம்பு மட்டும் தான் வாங்கி சாப்பிடுவேன்”

    வெறித்தனமான வத்தக்குழம்பு ரசிகராக இருப்பீங்க போல இருக்கே 🙂

    “எனக்கு இந்த உணவகத்தில் சாப்பிட வாய்ப்பு கிடைக்கும் போது சாப்பிட்டு பார்க்கிறேன்”

    எனக்கென்னமோ அதற்கான வாய்ப்பு ரொம்ப குறைவுன்னு நினைக்கிறேன்.. நேரம் இருக்காது என்பதால் கூறினேன் 🙂 .

  6. @ஸ்ரீனிவாசன்

    “சுமார் நூறாண்டு காலமாகவே திருவல்லிக்கேணி ‘மெஸ்’கள் பெயர் போனவை.”

    உண்மை தான்.

    வாடிக்கையாளராக சேர்க்கவே கட்டுப்பாடுகளா! செம 🙂 தற்போதைய கால கட்டத்தில் இதற்கு வாய்ப்பில்லை என்று நினைக்கிறன்.

    “இந்த மெஸ்களின் செல்வாக்கும் மிகவும் குறைந்துவிட்டது. கண்டிப்பு நிறைந்த மனிதர்கள் இப்போது இல்லை.”

    உண்மை தான்.. இதற்கு காரணம் வாய்ப்புகள் அதிகரித்து விட்டது. பல வகையான உணவகங்கள் பெருகி விட்டது. எனவே, இங்கே இல்லையென்றால், வேறு ஒன்று நகர்ந்து விட்டார்கள்.

    எனவே, கால மாற்றத்தில் இவை தவிர்க்க முடியாதவையாக மாறி விட்டது.

    உரிமையாளர் வாசுதேவன் பேட்டி நன்று 🙂

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here