The Kashmir Files (2022 இந்தி) | மறைக்கப்பட்ட இனப்படுகொலை

5
The Kashmir Files

1990 ம் ஆண்டு, காஷ்மீரில் இந்துக்கள் (பண்டிட்கள்) மீது நடந்த இனப்படுகொலையைக் கூறுகிறது The Kashmir Files. Image Credit

The Kashmir Files

இந்தியாவில் நடந்த அனைத்து கலவரங்களும் முக்கியமாகப் பாபர் மசூதி, கோத்ரா கலவரங்கள் அனைவருக்கும் தெரியும். இந்திராகாந்தி கொல்லப்பட்ட போது பஞ்சாப்பில் நடந்த கலவரம் ஓரளவு தெரியும்.

பெரும்பாலானவர்களுக்கு எதுவுமே தெரியாத ஒரு சம்பவம், கலவரமல்ல இனப்படுகொலை காஷ்மீரில் நடந்தது.

சிறு வயது முதல் செய்திகளைப் படிப்பதில் ஆர்வம் உண்டு ஆனால், காஷ்மீரில் நடந்தது பற்றித் தோராயமாக 2018 வரை தெரியாது.

மற்ற கலவரங்களைப் பற்றிப் பேச்சு வரும் போது காஷ்மீர் சம்பவங்கள் பலரால் குறிப்பிடப்பட்டதால், என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள ஆர்வம் ஏற்பட்டது.

ஆனால், எங்குமே இது குறித்த சரியான தகவல் இல்லை அல்லது தெரிந்து கொள்ளச் சரியான வாய்ப்பு அமையவில்லை.

பிரச்சனையை புரிந்து கொள்ள The Kashmir Files உதவியது.

கலவரம், இனப்படுகொலை வித்யாசம் என்ன?

எளிமையாகக் கூறினால்,

கலவரம் என்பது இரு பக்கமும் நடப்பது. இனப்படுகொலை என்பது ஒரு பக்கம் மட்டுமே நடப்பது.

பாபர் மசூதி, கோத்ரா சம்பவங்கள் கலவரம். இலங்கை, காஷ்மீரில் நடந்தது இனப்படுகொலை.

கலவரத்தில் யார் பலம் குறைவோ அவர்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும். இனப்படுகொலையில் பாதிக்கப்படுபவர் பக்கம், பாதிப்பு மட்டுமே இருக்கும்.

ஏனென்றால், ஆளுமை உள்ளவர்கள் மட்டுமே இனப்படுகொலையை நடத்த முடியும். பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்க முடியாத சூழலில் இருப்பார்கள். எதிர்த்தாலும், இறுதியில் கையறு நிலையிலேயே இருப்பார்கள்.

இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மை என்றாலும், காஷ்மீரில் சிறுபான்மையினரே.

சிறுபான்மையினருக்குப் பிரச்சனை என்றால் அனைவரும் குரல் கொடுப்பார்கள் ஆனால், இந்துக்கள் சிறுபான்மையினர் என்றால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

இதுவே நிதர்சனம், கசப்பான உண்மை.

பண்டிட்கள்

காஷ்மீரை விட்டு பண்டிட்கள் வெளியேற முஸ்லிம்கள் நிர்பந்திக்கின்றனர். பொது இடங்களிலும், மசூதிகளிலும் அறிவிப்புகள் வெளியாகின்றன.

மதம் மாறுங்கள் அல்லது காஷ்மீரை விட்டு வெளியேறுங்கள் அல்லது கொல்லப்படுவீர்கள். இந்த மூன்று தான் வாய்ப்பாகக் கொடுக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட 3,00,000 க்கும் அதிகமானோர் அகதிகளானதாகக் கூறப்படுகிறது. பல ஆயிரம் இந்துக்கள் (பண்டிட்கள்) கொல்லப்பட்டனர்.

சம்பவங்கள் துவங்கிய தேதி 1990 ஜனவரி 19.

அகதிகள் என்பவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்பவர்கள் ஆனால், சொந்த நாட்டிலேயே அகதியானவர்கள் காஷ்மீர் பண்டிட்கள் மட்டுமே.

இக்கலவரம் நடந்த போது மத்திய அரசு எந்தக்கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது போலச் சம்பவம் நடக்கும் என்று உளவுத்துறை கூறியும் முன்னேற்பாடுகள் இல்லை.

இவ்வளவு பெரிய சம்பவம் நடந்துள்ளது ஆனால், எந்த ஆவணமும், செய்திகளும் இல்லை. முக்கியமாக இப்படுகொலை குறித்து எவருமே பேசுவதில்லை. ஏன்?

இணையத்தில் தேடினால், இடது சாரி ஊடக செய்திகள் மட்டுமே கிடைக்கும். இவர்கள் என்றுமே இந்துக்களின் வலியைக் கூறியதில்லை.

The Kashmir Files

மிகத் தைரியமான படைப்பு என்று பலரால் கூறப்படுகிறது ஆனால், எனக்கு அப்படித்தோன்றவில்லை.

நடந்த சம்பவங்களில் 20% கூடப் படத்தில் காட்டப்பட்டு இருக்காது என்றே தோன்றுகிறது. இதைக்கூறவே பல எதிர்ப்புகள் போராட்டங்கள்.

இதுவே மோடி ஆட்சியில் இருப்பதால் முடிகிறது, மற்றவர்கள் ஆட்சியில் இருந்தால் இப்படத்துக்குத் தடை விதித்து இருப்பார்கள்.

படம் Non-Linear முறையில் முன் பின்னாக உள்ளது.

இப்படம் நடந்த சம்பவங்களைச் செய்திகளாகத் தெரிந்து கொள்ள உதவுகிறது ஆனால், உணர்வுப்பூர்வமாகக் கடத்துவதில் தோல்வியடைந்துள்ளது.

காஷ்மீர் பண்டிட்கள், பாதிக்கப்பட்டவர்கள் இப்படம் பார்க்கும் போது நிச்சயம் அதிர்வலையை ஏற்படுத்தும். பழைய நினைவுகள் வந்து உணர்ச்சிவசப்படுத்தும்.

ஆனால், இதில் சம்பந்தப்படாதவர்களுக்கு ஒரு ஆவணப்படமாகப் பார்ப்பது போல இருக்கலாம். சில காட்சிகள் அழுத்தத்தைக் கொடுத்தாலும், எதோ ஒன்று குறைகிறது.

சமூகத்தளங்களில் வெளியான காணொளியில் இயக்குநரின் காலில் விழுந்து அழுத பண்டிட் பெண்ணின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது.

காஷ்மீர் இனப்படுகொலை என்பது மிகப்பெரிய சம்பவம் ஆனால், திரைக்கதை அந்தப் பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.

ஒருவேளை அனைத்தையும் வெளிப்படையாகக் கூற பயப்படுகிறார்களா?!

இப்படத்தையே சிலர் எதிர்ப்பது வியப்பாக உள்ளது. இதில் இறுதிப்பகுதி தவிர மற்றவை எல்லாமே மேலோட்டமாகவே கூறப்பட்டுள்ளது.

மற்ற மதத்தினருக்கு நடப்பதை பொட்டில் அடித்த மாதிரி கூற பல படங்கள் இருக்கையில், காஷ்மீர் இனப்படுகொலையை மேலோட்டமாகக் கூறவே இவ்வளவு வருடங்கள் ஆகி உள்ளது.

பின்னணி இசை சுமாராக உள்ளது. மெலோட்ராமா வயலின் இசையைத் தேவைப்படும் இடத்தைத் தவிர மற்ற இடங்களில் தவிர்த்து இருக்க வேண்டும்.

இன்னும் சிறப்பாக எடுக்க முடியாததற்கு முதலீடு (Budget) காரணமாக இருக்கலாம். குறைந்த முதலீடு படம் நெடுக தெரிகிறது.

ஜவஹர்லால் நேரு பல்கலை

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் நடப்பதை தெளிவாகக் காட்டியுள்ளார்கள்.

இப்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் நிவேதிதா மேனன், செய்தியாளர் Barkha Dutt பங்கையும் எவ்வாறு மாணவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகின்றனர் என்பதையும் காட்டியுள்ளனர்.

இந்தியாக்கு எதிரானவர்களை ஜவஹர்லால் நேரு பல்கலை உருவாக்கிக் கொண்டுள்ளது. மோடி அரசாலும் இங்கே இதுவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை என்பதே இவர்களின் பலம் கூறும்.

இப்படத்தில் என்னை மிகக்கவர்ந்தது கிருஷ்ணா என்ற கதாப்பாத்திரம்.

1990 ல் சிறு குழந்தையாக இருந்து டெல்லியில் வளரும் கிருஷ்ணா தற்கால இளைஞர்களை அப்படியே பிரதிபலிக்கிறார்.

அதாவது, எதையுமே தெரிந்து கொள்ள விரும்பாமல், இடது சாரி நபர்கள், ஊடகங்கள் கூறியதை, கூறுவதை உண்மை என்று நம்பிக்கொண்டுள்ளவர்கள்.

உருவாக்கம் (Making) என்ற வகையில் The Kashmir Files திருப்தியளிக்கவில்லை ஆனால், இந்துக்களின் இனப்படுகொலையை ஆவணப்படுத்திய முதல் திரைப்படம் என்ற வகையில் பாராட்டுகளைப் பெறுகிறது.

மேலோட்டமாகக் கூறவே 32 வருடங்கள் ஆகியுள்ளது என்பது வலியைத் தருகிறது.

Article 370 நிறைவேறிய பிறகே, இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீரை நினைக்கும் அளவுக்கு மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன.

Lal Chowk ல் இந்தியக்கொடியை பறக்க விடவே இவ்வளவு வருடங்கள் ஆகியுள்ளதே பெரும் சோகம்.

இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாதியாக மாற்றும் செயல்கள் குறைந்துள்ளது. புதிய தொழில்கள் வருகின்றன. சுற்றுலாத்துறை மேம்பட்டுள்ளது.

இன்னும் சில வருடங்களில் காஷ்மீர் தீவிரவாதத்திலிருந்து விடுபட்டு இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல மாறும் என்ற நம்பிக்கையுள்ளது.

இந்துக்கள்

தன் மதத்துக்கு நடந்த கொடுமையைத் தெரிந்து கொள்ளாத, தெரிந்து கொள்ள விரும்பாத ஒரு மதம் இருக்குமென்றால், அது இந்து மதமாகத்தான் இருக்கும்.

தனக்கு நடக்காதவரை எதுவுமே இந்துக்களுக்குக் கடந்து போகும் நிகழ்வு தான்.

எனவே தான் என்ன நடந்தாலும், மதத்தை இழிவுபடுத்தினாலும் எளிதாகக் கடந்து சென்று விடுகிறார்கள்.

எதையும் பெரிதாக நினைக்காத பெரும்பான்மை இந்துக்களை நினைத்துப் பெருமைப்படுவதா வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை.

முஸ்லிம்கள் நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷில் இந்துக்களின் சதவீதம் குறைந்து கொண்டே வருகிறது ஆனால், பெரும்பான்மை இந்துக்கள் நாடான இந்தியாவில் முஸ்லிம்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந்தியாவை இழிவுபடுத்துபவர்களுக்கு, விமர்சிப்பவர்களுக்கு இதுவே பதில் கூறும் யார் சகிப்புத்தன்மையுள்ளவர்கள் என்று!

முஸ்லிம்கள் என்றில்லை, எதோ காரணத்துக்காக வெளிநாட்டு குடிமகனான இந்துக்களும், நாளை உக்ரைன் போல நிலை ஏற்பட்டால், அப்பவும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடாக இந்தியா தான் இருக்கும்.

ஏனென்றால், குறைகள் இருந்தாலும் இந்தியா போல ஒரு நாடு அமையாது. பலருக்கு இந்துக்களின் அருமையும் தெரியவில்லை, இந்தியாவின் அருமையும் புரியவில்லை

யார் பார்க்கலாம்?

வரலாற்றைத் தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அனைவரும் பார்க்கலாம் குறிப்பாக இந்துக்கள் அவசியம் பார்க்க வேண்டும்.

பலரும் கூறியது போலப் பார்க்க முடியாத காட்சிகள் என்று பெரியளவில் எதுவுமில்லை. கொலை, துப்பாக்கிச்சூடு மட்டுமே.

ஒரு காட்சி மட்டும் அதிர்ச்சியைக்கொடுக்கும் ஆனால், அதுவும் மேலோட்டமாகவே செல்கிறது. ஒருவேளை காட்சியை நீக்கி விட்டார்களா என்று தெரியவில்லை.

Directed by Vivek Agnihotri
Written by Vivek Agnihotri, Saurabh M Pandey
Produced by Tej Narayan Agarwal, Abhishek Agarwal, Pallavi Joshi, Vivek Agnihotri
Starring Mithun Chakraborty, Anupam Kher, Darshan Kumar, Pallavi Joshi
Cinematography Udaysingh Mohite
Edited by Shankh Rajadhyaksha
Music by Score:Rohit Sharma
Songs: Swapnil Bandodkar
Distributed by Zee Studios
Release date 11 March 2022
Running time 170 minutes
Country India
Language Hindi

தொடர்புடைய கட்டுரை

இந்து மதத்துக்கு யாரால் ஆபத்து?

🛑 To get Finance, Train, Food, UPI, OTT updates, Memes, Tech News, Online Offers follow –> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

5 COMMENTS

  1. படம் தற்போது தான் வெளியாகி இருக்கிறது.. இன்னும் பார்க்கவில்லை.. பார்த்துவிட்டு என் கருத்தை பகிர்கிறேன் கிரி.. State of Siege: Temple Attack இந்த படமும் ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்.. நேரம் இருப்பின் பார்க்கவும்.. அக்ஷ்ய் கண்ணா ஹிந்தியில் எனக்கு விருப்பமில்லாத நடிகர்.. ஆனால் இந்த படத்தில் தான் பாத்திரத்தை சிறப்பாக செய்து இருப்பார்..

  2. அருமையான விமர்சனம் கிரி. உங்கள் கருத்தில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடே. நாளை இந்தப் படத்தை எங்களுக்கு அருகில் உள்ள திரை அரங்கில் பார்க்க உள்ளேன். (Bargain Tuesday only $5.50 – Regular Ticket $12.50)

  3. @யாசின் State of Siege: Temple Attack பற்றிக் கேள்விப்பட்டுள்ளேன் ஆனால், இன்னும் பார்க்கவில்லை. பரிந்துரைக்கு நன்றி.

    பார்க்கும் பட்டியலில் இணைத்துக் கொள்கிறேன்.

    @ஸ்ரீனிவாசன் நன்றி 🙂 வெளிநாடுகளில் இது போல வார நாட்களில் குறைந்த கட்டண முறையை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தலாம்.

    சிங்கப்பூரில் இருந்த போது இது போன்ற குறைந்த கட்டண நாட்களில் படத்துக்குச் செல்வது வழக்கம் 🙂

  4. Hello Giri. Nice review. Kashmir Pandits alone affected in this genocide or all Kashmiri Hindus and Sikhs?

  5. @நச்சினார்க்கினியன் In Kashmir Hindus means majority Pandits. Hindus were main target and Sikhs may be affected few. Sikhs also faced conversion issue.

    After Article 370 abolition, the issue has reduced.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here