Jivan Sandhya (2021 மராத்தி) | முதுமைக் காதல்

3
Jivan Sandhya

முதுமை காதலை பல திரைப்படங்கள் கூறி இருந்தாலும், Jivan Sandhya என்னை ரொம்பப் பாதித்து விட்டது. Image Credit

Jivan Sandhya

வாழ்க்கை துணையை இழந்த 60 வயதைக் கடந்த அபயங்க்கர் மற்றும் சந்தியா இருவர் எதிர்பாராமல் சந்திக்கிறார்கள். அவர்களுக்குள் ஏற்பட்ட புரிதல் காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள்.

இதற்கு இருவர் வீட்டிலும் பிள்ளைகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். இறுதியில் என்ன ஆகிறது என்பதே Jivan Sandhya.

அழகான கதை

இது போன்று கண் கலங்கி ரசித்துப் படம் பார்த்து வருடங்கள் ஆகி விட்டது.

அபயங்க்கர் தனது அன்பான, நேர்மறையான பேச்சுக்களால் கவர்கிறார். இவர் கூறுவதை மறுக்க முடியாத அளவுக்கு இவர் கொடுக்கும் வேண்டுகோள் அசத்தல்.

சில விசயங்கள் நமக்கு ஏற்புடையதாக இருக்காது ஆனாலும், கேட்பவர்கள் கேட்கும் முறையில் கேட்டால் நமக்கு மறுக்கத் தோன்றாது அது போல ஒரு கதாப்பாத்திரம்.

வயதான பிறகு கை நடுக்கத்துடன் நடப்பது, பிடிப்பது அபாரமான நடிப்பு. கொஞ்சம் கூட நடிப்பு போலவே இல்லை.

அப்பாவுக்குப் Parkinson பிரச்சனையால் கை நடுக்கம் இருந்தது. எனவே, இதைப்பார்க்கும் போதெல்லாம் அப்பா நினைவு வந்து கண் கலங்கியது.

சந்தியாவாக வருபவர் மிகை நடிப்பில்லாமல் அவ்வளவு அழகாக நடித்துள்ளார். யார் நடிப்புச் சிறந்தது என்று கூறுவதே கடினமாக உள்ளது.

சந்தியாவாக நடித்தவர் நடிப்பில் ஒரு படி மேல் தான். அபயங்க்கர் உடல்நிலை சரியில்லாத போது சந்தியா தவிப்பும், அன்பும், பரிதவிப்பும் கண் கலங்க வைக்கும்.

இப்படத்தில் பல இடங்களில் கண் கலங்கினேன், சில இடங்களில் அழுது விட்டேன்.

ஒருவரையொருவர் புரிந்து அன்பு செலுத்துவது, விட்டுக்கொடுப்பது என்று இது போல வாழ்க்கை வாழனும் என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் ஏங்க வைக்கும்.

அப்பா மீது அபயங்க்கர் மகன் அன்பு கொண்டு இருந்தாலும், இன்னொரு திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக்கொள்ள மாட்டார். அதே போலச் சந்தியா மகள்.

எதனால் எதிர்க்கிறார்கள் என்பதற்கான நியாயமான விளக்கம் இல்லை. அபயங்க்கர் மருமகளாக வருபவர் மாமாக்கு ஆதரவாக இருப்பது ஆறுதல்.

நாடகத்தன்மை

இப்படம் நாடக படமாக்கல் போல உள்ளதை மறுக்க முடியாது ஆனால், திரைப்படத்துக்குண்டான திரைக்கதையில் உள்ளது.

குறிப்பாக ஒளிப்பதிவு படத்தை நாடகம் போலக் காட்டுகிறது.

சந்தியா சிறு வயதிலேயே கணவரை இழந்தவர் 40 வருடங்களாகத் தனி ஒருவராக மகளை வளர்த்தவர் ஆனால், அபயங்க்கர் மனைவி இரு வருடங்களுக்கு முன்பு தான் காலமாகி இருப்பார்.

இரு வருடங்களில் வேறு திருமணம் என்பது குறிப்பாக இந்த வயதில் என்பது கொஞ்சம் ஏற்புடையதாக இல்லை ஆனாலும் அதற்கு அபயங்க்கர் கூறும் காரணம் நியாயமானதாக இருக்கும்.

பல காட்சிகள் ஊகிக்கக்கூடியதாக உள்ளது பலவீனம் ஆனால், காட்சிகளை ரசிக்காமல் இருக்க முடியாது என்பது இதன் பலம்.

யார் பார்க்கலாம்?

அனைவரையும் பார்க்கப் பரிந்துரைக்கிறேன்.

குறிப்பாகத் திருமணமானவர்கள், வயதானவர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என்று தாறுமாறாக வலியுறுத்துகிறேன் 🙂 .

நிச்சயம் உங்கள் மனதை நெகிழச் செய்யும்.

சுயநலம் மிகுந்த தற்போதைய காலத்தில் வயதான பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் கடினமான சூழ்நிலைகளை எதிர் நோக்குகிறார்கள் என்பது கசப்பான உண்மை.

Amazon Prime ல் காணலாம்

Produced by Ashish Ashok Kataria, Asha Ashok Katariya, Ashok Motilal Katariya
Directed by Deepak Prabhakar Mandade
Written by Deepak Prabhakar Mandade
Starring Ashok Saraf, Kishori Shahane
Music by Atul Bhalchandra Joshi
Photography Mangesh Gadekar
Editing B. Mahanteshwar
Release 9 November 2021
Language Marathi

தொடர்புடைய திரை விமர்சனம் & கட்டுரைகள்

Mithunam (தெலுங்கு 2012) | அன்புக்கு இல்லை எல்லை

Sairat [2016 – மராத்தி]

வயதானவர்களின் நிலை என்ன?

“வீடு” தாத்தா

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News, Offers follow 👉🏻 giriblog WhatsApp Channel .

3 COMMENTS

  1. கிரி, படத்தோட கதைக்கரு எனக்கு பிடித்து இருக்கிறது.. ஆனால் இதுவரை நான் மராத்தி மொழி படம் ஏதும் பார்த்ததில்லை.. அதனால் ஒரு சின்ன தயக்கம்.. இந்த தயக்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மலையாள சினிமாவின் மீது இருந்தது.. ஐயப்பனும் கோஷியும் திரைப்படம் என் தயக்கம் முழுவதையும் சுக்கு நூறாக்கி விட்டது..

    உண்மைய சொல்லப்போனால் படத்தை பார்த்து கிட்டத்திட்ட ஒரு வருடம் 8 மாதங்களுக்கு மேலாகியும் அதன் பிரமிப்பிலிருந்து இன்னும் நான் வெளிவரவில்லை.. இந்த ஒரு படத்தோட தாக்கம் தான் என்னை பல மலையாள சினிமாவை இன்னும் பார்க்க வைத்து கொண்டிருக்கிறது..

    இதற்கு முன் மராத்தி மொழியில் ஒரு பாடலை கேட்டு இருக்கிறேன்.. தேசிய விருது வாங்கிய பாடல் (ஹரிஹரன் & ஷ்ரேயா கோஷல்) எப்பா என்ன பாட்டு.. நீங்களும் கேட்டு பாருங்க!!!! செம்மையா இருக்கும்.. பாடலின் அர்த்தம் என்னவென்று ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, பாடலை கேட்டு கொண்டே அர்த்தத்தையும் படித்து கொண்டே பாடலை கேட்பேன்..

    சூப்பரா இருக்கும்.. நல்ல அர்த்தம் உள்ள ஆபாசமிலா ஒரு அழகிய கவிதை போல் இருக்கும்.. ஒரு முறை கேட்டால் மீண்டும் கேட்க ஆர்வத்தை தூண்டும்..படத்தின் பெயர் : Jogwa பாடலின் இணைப்பு கீழே..

    https://www.youtube.com/watch?v=CskdxG5Jwus

  2. சமூகம் என்ன நினைக்கும் என்று வாழ்ந்து மாண்டவர் கோடி

  3. @யாசின்

    “இதுவரை நான் மராத்தி மொழி படம் ஏதும் பார்த்ததில்லை..”

    திரைப்படங்களுக்கு ஏது மொழி யாசின்.. நன்றாக இருந்தால் பார்க்க வேண்டியது தான்.

    சப்டைட்டிலே துணை 🙂 .

    “இந்த ஒரு படத்தோட தாக்கம் தான் என்னை பல மலையாள சினிமாவை இன்னும் பார்க்க வைத்து கொண்டிருக்கிறது”

    இது போல ஏராளமான நல்ல படங்கள் உள்ளது யாசின்.. இதற்கு முன்பும் இருந்தது. உங்களுக்கு பார்க்க வாய்ப்புக்கிடைக்கவில்லையென்று நினைக்கிறேன்.

    “நல்ல அர்த்தம் உள்ள ஆபாசமிலா ஒரு அழகிய கவிதை போல் இருக்கும்.. ”

    பாடல் புரியவில்லை.. கேட்க நன்றாக உள்ளது.

    @விஜயகுமார்

    “சமூகம் என்ன நினைக்கும் என்று வாழ்ந்து மாண்டவர் கோடி”

    உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!