ஹிஜாப் அரசியல்

2
ஹிஜாப் அரசியல்

ர்நாடகாவில் கல்லூரி மாணவிகள் சிலர் ஹிஜாப் அணிந்து வருவோம் என்று ஆரம்பித்தது இன்று இந்தியா முழுக்கப் பிரச்சனையாகி உள்ளது. Image Credit

சீருடை

பள்ளியில், சில கல்லூரிகளில் சீருடை மட்டுமே அணிய வேண்டும், மத ரீதியான அடையாளங்களில் வரக் கூடாது என்று கட்டுப்பாடுள்ளது.

சீருடை கட்டுப்பாடு அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே மாதிரி இருந்தாலும், மத அடையாள கட்டுப்பாடுகள் பள்ளிக்குப் பள்ளி மாறுபடும்.

ஹிஜாப் க்குத் தடை என்பது போலச் சில பள்ளிகளில் திருநீர் வைத்து வருவது, கைகளில் கயிறு கட்டுவதற்குத் தடையுள்ளது.

ருத்திராட்சையைச் சிறுவன் அணிந்து இருந்ததால் பள்ளியில் அனுமதிக்கமாட்டோம் என்று காஞ்சிபுரத்தில் பிரச்சனையானது நினைவிருக்கலாம்.

சீருடை என்பது மாணவர்களிடையே சாதி, மதம், பணக்காரன், ஏழை என்ற ஏற்றத் தாழ்வுகள் இருக்கக் கூடாது என்பதற்காகவே கொண்டு வரப்பட்டது.

மாணவர்களிடையே யாரும் தனித்துத் தெரியக் கூடாது என்பதே இதன் நோக்கம்.

ஹிஜாப் புர்கா பயன்பாடு

நான் படித்த போது பெண்கள் ஹிஜாப், புர்கா அணிவது வழக்கமில்லை.

பெண்களிலும் வயதானவர்கள் மட்டுமே சேட்டுப் பெண்கள் போலப் புடவையைத் தலையில் சுற்றிக்கொள்வார்கள் (1980 / 1990 காலகட்டம்).

2000 க்கு பிறகே புர்கா பயன்பாடு தமிழகத்தில் அதிகரித்தது.

இதற்குக்காரணம் பணிக்காக வளைகுடா நாடுகள் சென்றவர்கள் அங்கே உள்ள கலாச்சாரத்தை இங்கேயும் கொண்டு வந்ததாகக் கூறப்பட்டது.

இது அவர்கள் தனிப்பட்ட விருப்பம். ஹிஜாப், புர்கா அணிந்து கொள்வதைப் பெண்கள் விரும்பினால் அதில் குறை கூற எதுவுமில்லை.

சர்ச்சை

ஆனால், பள்ளிகளில், கல்லூரிகளில் ஹிஜாப், புர்கா அணிவோம் என்று பிரச்சனை செய்வது தவறு. இது மாணவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது.

ஹிஜாப், புர்கா அணிந்தால் நாங்களும் ஷால், தலைப்பாகை அணிவோம் என்று இந்து மாணவ மாணவிகளும் எதிர் குரல் கொடுக்கிறார்கள்.

படிக்கும் வயது எப்போதுமே பக்குவப்பட்ட வயதல்ல. எப்போதுமே எதைச் செய்யக் கூடாது என்று சொல்கிறோமோ அதைத்தான் செய்யத் தோன்றும்.

35 வருடங்களாக இது போலப் பிரச்சனை எதுவும் வந்ததில்லை. கடந்த டிசம்பர் முதலே இப்பிரச்சனை ஆரம்பித்தது. சில மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்துள்ளார்கள் ஆனால், கல்லூரியின் உள்ளே அணிய மாட்டார்கள்

என்று பள்ளி முதல்வர் ருத்ர கவுடா கூறியுள்ளார்.

ஹிஜாப் அரசியல்

இந்து மாணவர்கள் முஸ்லீம் மாணவியிடம் ஜெய்ஸ்ரீராம் என்று கூச்சலிட்டதால், அவரும் அல்லாஹு அக்பர் என்று பதிலுக்குக் கூறிய காணொளி வைரல் ஆகி இந்தியா முழுக்கச் சர்ச்சையாகி விட்டது.

சம்பந்தப்பட்ட மாணவிகள் CFI & PFI அமைப்பின் தூண்டுதலில் இப்பிரச்சனையைச் செய்துள்ளார்கள் என்று Vijay Patel என்பவர் ஆதாரங்களுடன் ட்வீட் போட்டு இருந்தார்.

எப்படித் தொடர்பில் இருந்தார்கள், ட்விட்டர் கணக்கு எப்போது துவங்கப்பட்டது, ஒரே மாதிரி ட்வீட் எப்படி வந்தது, CFI & PFI அமைப்பு தொடர்புக்கான விவரங்கள் என்று screenshot உடன் போட்டு இருந்தது பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது.

இது மாணவிகளை வைத்துத் திட்டமிடப்பட்டுச் செயல்படுத்தப்பட்ட ஒரு Tool Kit சர்ச்சை என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.

கேரளா அரசு ஹிஜாபுக்குத் தடை விதித்த போது முஸ்லிம்கள் அதிகமுள்ள கேரளாவில் எந்தச் சர்ச்சையும் எழாத போது கர்நாடகாவில் மட்டும் ஏன்?

ஒரு முஸ்லீம் அமைப்புச் சம்பந்தப்பட்ட மாணவிக்கு 5 இலட்சம், காங்கிரஸ் MLA ஐஃபோன் வழங்கியது மேலும் சர்ச்சையானது.

முஸ்லீம் மாணவிகளுக்குப் போட்டியாகச் சிலர் இந்து மாணவர்களுக்கு ஷால், தலைப்பாகை கொடுத்த காணொளி வெளியானது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் நீல வண்ண ஷால் உடன் வந்தார்கள்.

முன்பு ஹிஜாப் அவசியம் எனப்பட்டது, பின்னர் ஹிஜாப் தவிர்த்துப் புர்கா அணிந்து வந்தார்கள். தற்போது பள்ளிகளில் தொழுகை என்று பிரச்சனையாகியுள்ளது.

கட்டாயம் அணிய வேண்டும் என்று முஸ்லீம் மாணவிகள் விருப்பப்பட்டால், அவர்கள் மத அமைப்புகள் நடத்தும் மதரசா பள்ளிகளில் இணைந்து கொள்ளலாம். இதை யாரும் தடுக்கப்போவதில்லை, கேள்வி கேட்க முடியாது.

ஹிஜாப் அணிவது அவரவர் உரிமை என்கிறார்கள் ஆனால், ஜம்மு காஷ்மீரில் 499 / 500 மதிப்பெண்கள் எடுத்த 12 ம் வகுப்பு மாணவி அரூசா அணியாததுக்கு அவருக்கும் அவரது பெற்றோருக்கும் கொலை மிரட்டல்கள் விடப்படுவது முரண்.

Wearing or not wearing Hijab doesn’t define one’s belief in their religion. Maybe, I love Allah more than they (trolls) do. I’m a Muslim by heart, not by a hijab.

என்று கூறியுள்ளார்.

கட்டாயமா விருப்பமா?

பள்ளி, கல்லூரி, அலுவலகம் போன்றவற்றில் மத ரீதியான உடைகளுக்கு அனுமதி கொடுக்கக் கூடாது.

நாளடைவில் இதுபோல ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கும் கேட்க ஆரம்பித்து விடுவார்கள். துவக்கத்திலேயே இதை நிறுத்துவதே சரி.

மேலும் இது தொடர்பான சிக்கல்கள், சர்ச்சைகள் எதிர்காலத்தில் தவிர்க்க முடியாததாகி விடும் அப்போது மேலும் கூடுதல் பிரச்சனைகளை கொண்டு வரும்.

சட்டம் அனுமதித்தால் இந்து மாணவர்களும் இதற்குப் போட்டியாகச் செயல்படுவார்கள். இது முடிவில்லா பிரச்சனையாகத் தொடர்ந்து அனைவரையும் நிம்மதியற்று ஆக்கி விடும் என்பது என் தனிப்பட்ட கருத்து.

இது தேவையற்ற பிரச்சனைகளை, வெறுப்பை, பிரிவினையை ஏற்படுத்தும். இது நிச்சயம் எந்த மதத்தினருக்கும் நல்லது அல்ல.

தற்போது ஹிஜாப், புர்கா அரசியலாக்கப்பட்டு விட்டதால், இதுவே ஒரு நாளில் ஓயும் அதுவரை சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

சட்டம் அனுமதித்தால் அணிந்து கொள்ளலாம், இல்லையேல் முடியாது காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள்.

நீதிமன்றம், சட்டம் என்ன கூறுகிறதோ அதைப் பின்பற்றுவதே அனைவருக்கும் நல்லது. ஏற்புடையதாக இல்லையென்றால் மேல்முறையீடு செய்யலாம்.

இது அனைத்து தரப்பினருக்கும் பொருந்தும்.

🛑 To get Blog Article, Finance, UPI, OTT, Tech News follow -–> giriblog WhatsApp Channel (WhatsApp Blog ⭐).

2 COMMENTS

  1. கிரி.. நான் செய்திகளை கூர்ந்து கவனிப்பவன் அல்ல.. ஆனால் கடந்த சில வருடங்களாகவே புது புது பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும், மற்ற மாநிலங்களிலும் செய்திகளில் வந்து கொண்டே இருக்கிறது.. இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில், ஒரு தெருவில் நடக்கும் பிரச்சனை செய்திகள் மூலமாகவும், சமூக வலைதளங்கள் மூலமாகவும் வெகு சீக்கிரம் நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பரவி விடுகிறது..

    இதில் குப்பை செய்திகளும் அடங்கும்.. சில பிரச்சனைகள் தங்களின் சுய லாபத்திற்காக யாரோ கிளப்பி விட்டது போலும், சிலது தானாகவே ஆரம்பித்தது போலும் இருக்கிறது..

    இந்த ஹிஜாப் பிரச்சனையை பொறுத்தவரை யார் காரணம்? அதன் பின்னணி என்ன? என எனக்கு உண்மையில் தெரியவில்லை.. இதை பற்றி தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.. மீடியாவில் பெரிதாக்கப்படும் எல்லா விஷியங்களும் சில நாட்களுக்கு பின் ஒன்றுமில்லாமல் மாறி, மீடியா தனது அடுத்த பிரச்சனையை பற்றி பேச அமைதியாக சென்று விடும்..

    இதில் நாம் கொதித்து ஒன்று ஆக போவதில்லை .. இது தான் நிஜம்.. சட்டம் அனுமதித்தால் அணிந்து கொள்ளலாம், இல்லையேல் முடியாது காரணம், இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு அனைவரும் கட்டுப்பட்டவர்கள். ஏற்று கொள்கிறேன் கிரி..

  2. @யாசின்

    “மீடியாவில் பெரிதாக்கப்படும் எல்லா விஷியங்களும் சில நாட்களுக்கு பின் ஒன்றுமில்லாமல் மாறி, மீடியா தனது அடுத்த பிரச்சனையை பற்றி பேச அமைதியாக சென்று விடும்..”

    மிகச்சரியாக கூறினீர்கள்.

    கட்டுரையில் கூறியுள்ளது போல, அதுவாகவே கொஞ்ச நாளில் அமைதியாகி விடும். எப்படி என்று யாருக்கும் தெரியாது, சம்பந்தப்பட்டவர்களைத் தவிர.

    “இதில் நாம் கொதித்து ஒன்று ஆக போவதில்லை .. இது தான் நிஜம்.”

    ஏற்றுக்கொள்கிறேன். நம் மனதிருப்திக்காக கருத்தை முன் வைக்கலாம் மற்றபடி இதனால் பிரச்சனைகள் தீராது.

    “ஏற்று கொள்கிறேன் கிரி..”

    புரிந்து கொண்டமைக்கு நன்றி யாசின்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!