தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022

4
தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

10 வருடங்களுக்குப் பிறகு உள்ளாட்சி தேர்தல் 2022 நடந்து முடிவுகள் வெளியாகியுள்ளது. வழக்கம் போலச் சுவாரசியமான, அதிர்ச்சியான தகவல்களுக்குப் பஞ்சமில்லை. Image Credit

திமுக

எதிர்பார்த்தது போலவே திமுக பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதுவரை நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் ஆளுங்கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது.

இந்த முறையும் இதே நிலையைத் தமிழகம் தக்க வைத்துள்ளது.

கோவை மாவட்டம் திமுகக்கு மானப்பிரச்சனையாக இருந்தது. எனவே, பரிசுப் பொருட்கள், பணம், அதிகாரத்தைப் பயன்படுத்திக் கள்ள ஒட்டு என்று பல வேலைகளை திமுக செய்து விட்டது.

பணம் கொடுத்துப் பெற்றார்களோ இல்லையோ, திமுக வெற்றி பெற்று விட்டது, அவ்வளோ தான். முடிவு மட்டுமே இங்கே பேசு பொருள்.

ஜெ முதல்வராக வந்த போது நடந்த உள்ளாட்சி (மேயர்) தேர்தலில் (ஆண்டு நினைவில்லை) சென்னையில் நடந்த மிரட்டல்கள், அடாவடிகள், ரவுடி கட்சி என்று கூறப்பட்ட திமுக வையே கதிகலங்க வைத்ததது.

சட்டமன்றத் தேர்தலில் இவர்களை மீறிச் சரியான முடிவு கிடைக்குமா? என்ற பயமே மக்களுக்கு வந்து விட்டது.

அதை ஒப்பிடும் போது தற்போது திமுக செய்த அடாவடிகள் குறைவு தான். எந்த ஆளும் கட்சியாக இருந்தாலும் இது நடக்கவே செய்யும்.

பாஜகவை ஒத்த ஓட்டு பாஜக ன்னு கிண்டல் செய்த திமுகவினருக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக இரணியில் வார்டில் 13 கட்சிகள் கூட்டணி இருந்தும் திமுக வேட்பாளர் ஒரு வாக்கை மட்டுமே பெற்றார்.

ஒத்த ஓட்டு பாஜக என்று கூறிக்கொண்டே இருந்த ஊடகங்கள் திமுக கட்சி பெயரைக் கூறாமல் முன்னாள் கவுன்சிலர் என்று கூறி விசுவாசத்தைக் காட்டுகிறார்கள்.

அதிமுக

எவருமே எதிர்பாராத அளவுக்கு அதிமுக குறைந்த வெற்றியைப் பெற்றுள்ளது. குறைந்த பட்சம் கோவை மாநகராட்சியில் கூடுதல் இடங்களைப் பிடிக்கும் என்று நினைத்தேன்.

எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் சொந்த வார்டிலேயே அதிமுக வெற்றி பெறவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கும் செய்தி.

எதிர்க்கட்சியாகப் பாஜக செயல்பட்ட அளவுக்கு அதிமுக செயல்படவில்லை. எதனால் அதிமுக அலட்சியமாக இருந்தார்கள் என்பது புரியவில்லை.

ஏராளமான சொதப்பல்களைத் திமுக செய்து இருந்தும், அதை மக்களிடையே கொண்டு சேர்த்து வாக்காக மாற்றும் வேலையை அதிமுக செய்யத் தவறி விட்டது.

குறிப்பாகத் தேர்தலுக்குச் சில நாட்கள் முன்பு தான் கொஞ்சம் தீவிரம் காட்டி செயல்பட்டார்கள். இதே நிலையில் திமுக இருந்து இருந்தால், செம அரசியல் செய்து நொறுக்கியிருப்பார்கள்.

ஒன்றுமில்லாத பிரச்சனையையே மிகப்பெரிய பிரச்சனை ஆக்கத்தெரிந்தவர்களுக்கு இது போல லட்டு மாதிரி கிடைத்தால், வெளுத்து வாங்கி இருப்பார்கள்.

அதிமுக இது போன்ற அரசியலை திமுக விடமிருந்து கற்க வேண்டும்.

ஜெ இருந்த போது இதே போல எந்தப் போராட்டத்திலும் கலந்து கொள்ள மாட்டார் ஆனால், ஆளுமை காரணமாக வாக்குகளைப் பெற்று விடுவார்.

ஜெ போல ஆளுமை இவர்களுக்கு இல்லாததால், கூடுதல் உழைப்பு தேவை.

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது செயல்பட்டதில் 25% கூட அதிமுக செய்யவில்லை. அதற்கான பலனைத் தேர்தல் முடிவுகளில் பெற்றுள்ளார்கள்.

பாஜக இருந்ததால் சிறுபான்மையினர் வாக்கு கிடைக்கவில்லை என்று பாஜக கூட்டணியைத் தவிர்த்தார்கள் ஆனால், பாஜக விலகியும் அவர்களுக்குப் பாதமாகியுள்ளது.

அதிமுக Vs திமுக என்று வரும் போது சிறுபான்மையினர் திமுகவைத்தான் தேர்வு செய்கிறார்கள். எனவே, சிறுபான்மையினர் வாக்குக்காகப் பாஜக வை அதிமுக ஒதுக்குவது அவர்களுக்கே நட்டம்.

இதன் பிறகும் அதிமுக போராட்டங்களை முன்னெடுக்காமல், திமுக தவறுகளை மக்களிடையே கொண்டு சேர்க்காமல் அமைதியாக இருந்தால், அவர்களுக்கு எதிர்காலம் சிக்கலே.

முன்னரே கூறியபடி அதிமுக ஒற்றைத்தலைமைக்கு மாறியே ஆக வேண்டும்.

அதிமுக, பாஜக கூட்டணி அமைக்காமல் 2026 தேர்தலில் ஏதாவது அதிசயம் நிகழ்ந்தாலொழிய திமுகவை தோற்கடிக்க முடியாது,

காரணம் திமுக 13 கட்சிகள் கூட்டணியுடன் வலிமையாக உள்ளது. அக்கூட்டணியில் உள்ளவர்களுக்கும் திமுகவை விட்டால் வேறு கதியில்லை.

எனவே, திமுக கொடுப்பதை வாங்கிக்கொண்டு போவதை தவிர அவர்களுக்கு வழியில்லை. திருமாவளவன் மிக மோசமாக அசிங்கப்பட்டும் திமுகவில் இருக்க இதுவே காரணம்.

பாஜக

திமுக போல களத்தில் மகிழ்ச்சியாக இருப்பது பாஜகவினர் தான்.

ஒட்டுமொத்த வாக்குச் சதவீதத்தில் 5.33% வாக்குகளும், போட்டியிட்ட இடங்களில் 12.49% வாக்குகளையும் பெற்றுள்ளது.

அண்ணாமலை தலைமையில் பாஜக 308 இடங்களில் வெற்றியைப் பெற்றுள்ளது.

கூட்டணியிலிருந்து விலகித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதற்குப் பின் 20 நாட்களே இருந்தது.

இதில் அனைத்து இடங்களுக்கும் போட்டியிடுபவர்களைத் தேர்வு செய்ய முடியவில்லை என்றாலும், குறைந்த நாட்களில் முடிந்தவரை (43%) அறிவித்துப் போட்டியிட்டார்கள்.

அதிமுக திமுக போலப் பாஜக கட்சி அடித்தளம் வலுவானது இல்லை. தற்போது தான் ஆரம்பித்துள்ளார்கள், இவர்கள் போல வர வருடங்கள் ஆகும்.

அண்ணாமலை துவக்கத்தில் இருந்தே திமுகவை விமர்சித்து, மக்கள் பிரச்சனைகளை முன் வைத்துப் பேசிப் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததால், அவருக்கு எளிதாக இருந்தது.

எனவே குறைந்த காலம் என்றாலும் அவரால் சமாளிக்க முடிந்தது. முன்னரே திட்டமிட்டுத் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துச் செயல்பட்டு இருந்தால், இன்னும் கூடுதல் இடங்களைப் பெற்று இருக்கலாம்.

கொங்கு பகுதி மட்டுமே பாஜக ஆதரவு அதிகம் என்று இல்லாமல் கன்னியாகுமரி, தென்காசி பகுதிகளிலும் அதிக இடங்களைப் பெற்றுள்ளார்கள்.

திமுகவின் கோட்டையான சென்னையில் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார்கள். மதுரையிலும் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார்கள்.

பாஜக இழப்பதற்கு எதுவுமில்லை. எனவே, அவர்களுக்கு நெருக்கடியில்லை, காத்திருக்க அவர்கள் தயாராக உள்ளார்கள். பாஜக குறி 2031 பொதுத் தேர்தல் தான்.

தனித்துப் போட்டியிட்டதன் மூலம் பலம், பலவீனம் என்னவென்று ஓரளவு தெரிந்து இருக்கும். எனவே, இதையொட்டி தெளிவான திட்டங்களைப் பாஜக வகுக்கலாம்.

பாஜக வெற்றிக்கு ஊடகங்கள் எதுவுமே (பாலிமர் தவிர) முக்கியத்துவம் கொடுக்கவில்லை. பாஜக க்கு பாதகமான செய்திகளை மட்டுமே முன்னிலைப்படுத்தினார்கள்.

அண்ணாமலை பரப்புரை, சமூக வலைத்தளங்கள், WhatsApp வைத்தே பாஜக இந்த வெற்றியைப் பெற்றுள்ளது, மக்களிடையே கொண்டு சென்றுள்ளது.

முன்னரே கூறியபடி எதிர்காலம் திமுக Vs பாஜக தான்.

இதர கட்சிகள்

ஆட்சியமைப்போம் என்று கூறி வரும் பாமக 130 இடங்களைப் பெற்றுள்ளது. தொடர்ந்து குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ள வாக்கினை நம்பியே பாமக உள்ளது.

பாமக இதே போல மட்டுமே எதிர்கால அரசியலைத் தொடர முடியும். ஆட்சியைப் பிடிப்பது என்பது கற்பனையிலும் நடக்காத செயல்.

தேமுதிக 35 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இவர்கள் என்ன திட்டத்தில் இருக்கிறார்கள் என்றே புரியவில்லை!

சீமான் இந்தமுறை தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒவ்வொருமுறையும் அதிகரித்து வந்த வாக்கு வங்கி இந்தமுறை குறைந்து விட்டது.

நாம் தமிழர் கட்சி ஆறு இடங்களைப் பெற்று ஆறுதல் அடைந்துள்ளது.

மக்கள் நீதி மய்யம் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

கமல் பிடிவாதம் பிடிக்காமல், சுய கௌரவத்தை (Ego) விட்டுக் கட்சியைக் கலைத்து விட்டுத் திரைத்துறையில் முழுக் கவனத்தையும் செலுத்துவது அவருக்கும், அவரை நம்பியுள்ளவர்களுக்கும் நல்லது.

தொடர்புடைய கட்டுரை

அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்?

🛑 To get Blog Articles, Finance, OTT, Tech News follow 👉🏻 giriblog WhatsApp Channel .

4 COMMENTS

  1. ஊரில் இருந்து திரும்பிய ஒரு நண்பனிடம் தேர்தல் பற்றியும், எங்கள் ஊரின் ரிசல்ட் பற்றியும் பேசினேன்.. நண்பன் கூறிய சில தகவல்கள் மிகவும் ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது.. தமிழ்நாட்டில் ஒரு சிறிய புள்ளி தான் எங்கள் ஊர் (17 வார்டு மட்டுமே ).. இங்கே இந்த நிலைமை என்றால் மற்ற இடங்களை பற்றி யோசிக்க முடியவில்லை.. தேர்தலுக்கு பின் எல்லோருக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறேன்..நன்றி கிரி..

  2. @யாசின்

    “தேர்தலுக்கு பின் எல்லோருக்கும் நல்லது நடக்கும் என நம்புகிறேன்.”

    யாசின் நீங்க ரொம்ப நல்ல டைப்ன்னு தெரியும்.. ஆனால் இவ்வளோ நல்லவரான்னு வியப்பா இருக்கு 😀

    இவர்களை எல்லாம் இன்னுமா நம்பிட்டு இருக்கீங்க. உங்களுக்கு உண்மையிலேயே அபார நம்பிக்கை தான்.

  3. கிரி , இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பெரிதாக கணக்கில் கொள்ள தேவை இல்லை என்றே நான் நினைக்கிறேன். ஊடகங்கள் தான் இதை பெரிதுபடுத்துகிறது . அது அவர்களின் தொழில். குறைசொல்வதற்கில்லை.

    எதிர்பார்த்ததுபோல் திமுக வெற்றியை குவித்தது. ஆளும் கட்சியின் செல்வாக்கு உள்ளாட்சி தேர்தலில் எப்போதும் இருக்கும். கள்ள ஓட்டு போடுவது , தோல்வி அடைந்தவரை வெற்றி பெற்றவர் என அறிவிப்பது என பல உள்ளடி வேலைகளை பூத் ஏஜெண்ட்களும் உள்ளூரில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் பிரமுகர்கள் செய்வார்கள். பஞ்சாயத்து தேர்தலில் இதை எங்கள் ஊரில் கண்டிருக்கிறேன். வாக்களித்தவர்கள் சதவீதம் மிகக் குறைவு. இதை திமுக இந்த அளவுக்கு கொண்டாடுவதே ஒரு அரசியல் என நினைக்கிறேன்.

    அஇஅதிமுக விற்கு சிறு பின்னடைவுதான் ஆனால் 2024 தேர்தலில் அவர்கள் ஓரளவுக்கு வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறேன். அதிமுக இரட்டை இலை சின்னத்திருக்காக வாக்கு செலுத்தும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.மற்ற கட்சிகள் உட்கட்டமைப்பை பெரிதுபடுத்தும்வரை, திமுக வுக்கு மாற்று அதிமுக தான்.

    தான் சந்தித்த முதல் தேர்தலில், அண்ணாமலை அவர்கள் பாஜக வுக்கு ஓரளவு வெற்றியை பெற்று தந்திருக்கிறார்.பெரும்பாலான இடங்கள் கன்னியாக்குமரியிருந்து பெற்றுருக்கிறார்கள். இன்னும் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கால் பதிக்க தொண்டர்கள் கள பணி செய்யவேண்டும். அண்ணாமலை அவர்களின் வருகைக்கு பிறகு மோடி மேல் கட்டமைக்க படும் வெறுப்பு சற்று மக்களிடம் குறைந்திருக்கிறது என நினைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ட்விட்டர் வழியாகவும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். மத்திய அரசின் திட்டங்களின் கிரெடிட்டை claim செய்து கொள்கிறார்.

    2024 தேர்தலில் தமிழக மக்கள் ஓரளவு தேசிய கட்சிக்கு தான் வாக்களிப்பார்கள் என நினைக்கிறேன்.

    மோடியின் திட்டங்கள்(தண்ணீர் குழாய் இணைப்பு, வீடு கட்டும் திட்டம், விலையில்லா சமையல் எரிவாயு அடுப்பு, முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு வருடம் 6000 மற்றும் பல) மக்களிடம் நேரடியாக சென்று சேர்ந் திருக்கிறது. தமிழ்நாட்டில் வெற்றி பெறுபவருக்கு மத்தியில் கண்டிப்பாக பதவி உண்டு.

    மத்திய அமைச்சரைவயில் அங்கம் வகிக்காமல் இருப்பது திமுக வுக்கு தான் நஷ்டம். மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்து கொண்டிருந்தால் மக்கள் ஒருவகையான சலிப்பு நிலைக்கு சென்று விடுவார்கள். தமிழகத்தில் வெற்றி பெறாமலே பிஜேபி மத்தியில் ஆட்சி அமைக்கமுடியும் என்ற புரிதல் பெரும்பாலான மக்களிடம் தற்போது வந்துள்ளது. தமிழ்நாட்டு அமைச்சர்களின் பங்கு இல்லாமலே பல சட்டங்கள் நிறைவேறி கொண்டிருக்கிறது.பாஜக மத்தியில் இருக்கும் வரை திமுக தமிழ்நாட்டில் மட்டும் தான் அரசியல் செய்ய முடியும்.

  4. @மணிகண்டன்

    மாற்றுக்கருத்தில்லாமல் ஏற்றுக்கொள்கிறேன். இதுவே என்னுடைய கருத்தும்.

    “அஇஅதிமுக விற்கு சிறு பின்னடைவுதான் ஆனால் 2024 தேர்தலில் அவர்கள் ஓரளவுக்கு வெற்றி பெறுவார்கள் என நினைக்கிறேன்.”

    பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே பெரிய வெற்றியை பெற முடியும். இது பாஜக வுக்கும் பொருந்தும்.

    “அதிமுக இரட்டை இலை சின்னத்திருக்காக வாக்கு செலுத்தும் மக்கள் இன்னும் இருக்கிறார்கள்.”

    உண்மையே. இது தலைமுறை மாறினால் மட்டுமே மாறும்.

    “அண்ணாமலை அவர்களின் வருகைக்கு பிறகு மோடி மேல் கட்டமைக்க படும் வெறுப்பு சற்று மக்களிடம் குறைந்திருக்கிறது என நினைக்கிறேன். பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் ட்விட்டர் வழியாகவும் உடனுக்குடன் பதில் அளிக்கிறார். மத்திய அரசின் திட்டங்களின் கிரெடிட்டை claim செய்து கொள்கிறார்.”

    மிகச்சரி.

    திமுக மத்திய அரசுடன் மோதல் போக்கை கையாள்வதால், பல வாய்ப்புகளை தமிழகம் இழந்து கொண்டுள்ளது.

    ஸ்டாலின் அத்தவறை செய்ய மாட்டார் என்று நினைத்தேன் ஆனால், இன்னும் எதிர்க்கட்சி மனநிலையிலேயே இருப்பது ஏமாற்றமளிக்கிறது.

    முதலில் நான் இந்த கமெண்ட் யாசின் போட்டார் என்று நினைத்து பதில் அளித்து விட்டேன் 🙂 .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!